கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்பை sugarcane 1

ரும்புப் பயிரைப் பலவகை நோய்கள் தாக்குவதால், கரும்பு மகசூலும், சர்க்கரைக் கட்டுமானமும் கணிசமாகக் குறைகின்றன.

பூசணக் கிருமிகள் மூலம் உண்டாகும் நோய்களால் கரும்பில் அதிகளவில் சேதம் ஏற்படுகிறது.

விதைக் கரணைகள் மூலம் நோய்கள் அதிகளவில் பரவுகின்றன. இவற்றால் பெரும்பாலும் கரும்பின் தண்டுப் பகுதியே பாதிக்கப்படும்.

செவ்வழுகல் நோய்

நோய் அறிகுறிகள்: மூன்றாவது அல்லது நான்காவது இலை முதலில் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

தோகைகள் கீழிருந்து மேலாகக் காயும். கரும்புத் தண்டின் தோலில் அழுக்குப் பழுப்பு நிறத் திட்டுகள் அல்லது நீலநிறக் கோடுகள் தெரியும்.

கணுப்பகுதி சுருங்கி விடும். அடிக்கணுவில் வேர்க் கண்ணை மூடியுள்ள மெல்லிய தோல் சிதைந்து விடும்.

நோயுற்ற கரும்பைப் பிளந்து பார்த்தால் உட்பகுதி சிவப்பாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு இடையிடையே கரும்பின் நீளவாக்கில், வெண் திட்டுகள், வட்டப்புள்ளி அல்லது பட்டை வடிவம் தென்படும்.

கணுவுக்கு அருகே கரும்பின் நடுவில் சிறு குழிகளும், அவற்றுக்கு இடையில் சாம்பல் அல்லது கரும் பூசணமும் காணப்படும். கரும்பைப் பிளந்தால் சாராய நெடி வீசும்.

நோய் பரவும் விதம்: இந்நோய், Colletotrichum falcatum என்னும் பூசணத்தால் ஏற்படும்.

இந்நோய் தாக்கிய கரும்பை விதைக் கரணைகளாக நட்டால் அதிகமாகப் பரவும்.

கரும்பின் அடிக்கட்டைகள், பாசனம், மழை, காற்று மூலமும் இந்நோய் பரவும்.

இப்பூசண வித்துகள், வேர்க் கண்கள், பருக்கள், வளர்ச்சி வட்டம், துளைகள் மற்றும் தோகை வடுக்கள் மூலமும்;

இடைக் கணுவில் ஏற்படும் வெடிப்புகள், காயங்கள், துளைகள் மூலமும் உள்ளே சென்று கரும்பைத் தாக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: இந்நோய்க்கு மிதமான எதிர்ப்பு சக்தியுள்ள கோ. 86249, கோ.க. 22, கோ.க. 25, கோ.கு. 6, கோ. 0212, கோ.க. 13339 ஆகிய கரும்பு இரகங்களை நடலாம்.

நோயற்ற மற்றும் இரகத் தூய்மையுள்ள விதைக் கரணைகளை நட வேண்டும்.

செவ்வழுகல் நோய்க்குப் பொருளாதாரச் சேதநிலை பூஜ்ஜியம் என்பதால், கரும்பு நாற்றங்காலில் ஒரு தூரோ

அல்லது ஒரு கரும்போ நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அந்த நாற்றங்காலில் இருந்து விதைக் கரணைகளை எடுக்கவே கூடாது.

வெட்டுப் பாகம் சிவப்பாக உள்ள, துளைகள் உள்ள, சுருங்கிய கணுக்கள் உள்ள கரணைகளை நடக் கூடாது.

ஒரு ஏக்கருக்கான கரணைகளை, கார்பென்டாசிம் 50 சதம் நனையும் தூள் 50 கிராம், ஒரு கிலோ யூரியாவை 100 லிட்டர் நீரில் கலந்த கலவையில் 15 நிமிடம் ஊற வைத்து நட வேண்டும்.

நோயுற்ற கரும்பைத் தூருடன் பிடுங்கி எரித்து விட வேண்டும்.

இந்தத் தூர் இருந்த இடம் மற்றும் அதைச் சுற்றி, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்த கலவையை நன்கு ஊற்ற வேண்டும்.

நோய் தாக்கிய கரும்புள்ள நிலத்தை அறுவடைக்குப் பிறகு, கட்டைப் பயிர் சாகுபடிக்கு விடவே கூடாது.

செவ்வழுகல் நோயுள்ள பகுதி அல்லது நிலம் வழியாக, நோயற்ற கரும்புத் தோட்டத்துக்குப் பாசனம் செய்யக் கூடாது.

செவ்வழுகல் நோயுள்ள கரும்புக்கு, கிளைப்பு மற்றும் வளர்ச்சிப் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை,

முதிர்ச்சிப் பருவத்தில் 25 நாட்களுக்கு ஒருமுறை என, நீரைக் குறைத்துப் பாய்ச்சினால் நோயின் தீவிரம் குறையும்.

அறுவடைக்குப் பிறகு கரும்புத் தோகைகளை எரிக்கக் கூடாது என்பதே பொதுவான கருத்து.

ஆனால், செவ்வழுகல் நோய் தாக்கிய கரும்பை அறுவடை செய்த பிறகு, அந்த நிலத்திலுள்ள தோகைகளைச் சீராகப் பரப்பி எரித்துவிட வேண்டும்.

நோயுற்ற கரும்பு நிலத்தில், ஒருமுறை மாற்றுப் பயிராக நெல்லைப் பயிரிட்டு விட்டு மீண்டும் கரும்பை நடலாம்.

கரிப்பூட்டை நோய்

இந்நோயால் தாக்கப்பட்ட கரும்பின் குருத்து கருஞ் சாட்டையைப் போல இருப்பதால், இது கரிச்சாட்டை அல்லது கரிப்பூட்டை எனப்படுகிறது.

இதனால் கரும்பு மகசூலும், சர்க்கரைக் கட்டுமானமும் குறையும்.

நோய் அறிகுறிகள்: கரும்புக் குருத்தில் தோகைக்குப் பதிலாகக் கருஞ்சாட்டை வடிவம் தென்படும். தொடக்கத்தில் மெல்லிய வெண்தோல் இதை மூடியிருக்கும்.

இந்தச் சாட்டை முதிரும் போது, இந்தத் தோல் சிதைந்து, கரித்தூளைப் போன்ற பூசண வித்துகள் காற்றில் பரவும். இந்தச் சாட்டை 25-150 செ.மீ. நீளமிருக்கும்.

இந்தச் சாட்டைகள் கரும்பில் தோன்று முன், கரும்பு வளர்ச்சி இல்லாமல் மெலிந்து இருக்கும். இடைக் கணுக்கள் நீண்டிருக்கும்,

தோகைகள் நீளமும், கனமும் குறைந்து, விறைப்பாக, ஓரளவு செங்குத்தாக இருக்கும். கிளைப்புகள் அதிகமாக இருக்கும்.

இவையாவும் மெலிந்து புதரைப் போல் இருக்கும். இந்நோய், இளம் பயிரை விட, சட்டைப் பயிரை அதிகமாகத் தாக்கும்.

நோய் பரவும் விதம்: இந்நோய், Sporisorium scitamineum என்னும் பூசணத்தால் ஏற்படும். இந்நோயுள்ள விதைக் கரணைகள் மூலம் அதிகமாகப் பரவும்.

முளைக்கும் பருக்கள் மூலம் பூசண விதைகள் உள்ளே சென்று வளரத் தொடங்கும்.

பருக்கள் முளைத்து வளரும் போது, இந்தப் பூசணம் திசுக்களில் வளர்ந்து கரும்புக் குருத்தில் கருஞ் சாட்டையை உண்டாக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயெதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களை நட வேண்டும். நோயற்ற நாற்றங்காலில் இருந்து விதைக் கரணைகளை எடுத்து நட வேண்டும்.

சாட்டையில் உள்ள பூசண வித்துகள் காற்றில் பறக்காமல் இருக்க, இந்தச் சாட்டைகளைக் கோணிப் பையில் நுழைத்து ஒடித்து எரித்து விட வேண்டும்.

நோயுற்ற தூர்களை அகற்றி விட வேண்டும். கரிப்பூட்டை 10 சதத்துக்கு மேல் இருந்தால், கட்டைப் பயிருக்கு விடக் கூடாது.

ஏனெனில், கட்டைப் பயிரில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். விதைக் கரணைகளை 50 டிகிரி செல்சியஸ் நீராவியில் ஒரு மணி நேரம் பதப்படுத்தி நட்டால், இந்நோயைத் தடுக்கலாம்.

வாடல் நோய்

நோய் அறிகுறிகள்: நோயுற்ற குருத்துத் தோகைகள் முதலில் மஞ்சளாக மாறும். பிறகு முற்றிலும் காய்ந்து விடும்.

ஒரு தூரிலுள்ள ஒரு கரும்பு அல்லது அனைத்துக் கரும்புகளும் வாடி விடும். கரும்பைப் பிளந்து பார்த்தால், இளஞ் சிவப்பு அல்லது இளம் ஊதா நிறத்தில் இருக்கும்.

உட்பாகம் படகைப் போன்ற குழி வடிவத்தில் இருக்கும்.

நோய் பரவும் விதம்: இந்நோய் Fusarium sacchari என்னும் பூசணத்தால் தோன்றும். மண் மூலமும் விதைக் கரணைகள் மூலமும் பரவும்.

காற்று, மழை மற்றும் பாசனநீர் மூலமும் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயற்ற மற்றும் இரகத் தூய்மையுள்ள நாற்றங்காலில் இருந்து விதைக் கரணைகளை எடுத்து நட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கான கரணைகளை, கார்பென்டாசிம் 50 சத நனையும் தூள் 50 கிராம் மற்றும் ஒரு கிலோ யூரியாவை, நூறு லிட்டர் நீரில் கலந்து, அந்தக் கலவையில் 15 நிமிடம் ஊற வைத்து நட வேண்டும்.

நோயுற்ற கரும்பைத் தூருடன் அகற்றிவிட வேண்டும். இந்தத் தூர் இருந்த இடம் மற்றும் அதைச் சுற்றி,

ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்த கலவையை நன்கு ஊற்ற வேண்டும்.

பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடித்தால், நிலத்திலுள்ள இப்பூசணத்தின் அளவைக் குறைக்கலாம்.

குருத்தழுகல் நோய்

நோய் அறிகுறிகள்: கரும்புக் குருத்துத் தோகையும், அதன் உறையும் சேரும் இடத்துக்குச் சற்று மேலுள்ள தோகை வெளுத்துக் காணப்படும். பிறகு, தோகைகள் அழுகி விடும்.

தோகையின் அடிப்பாகம் குறுகலாக, மஞ்சளாக இருக்கும். எனவே, கரும்பானது தோகைகள் இல்லாமல் மொட்டையாக நிற்கும்.

சில சமயங்களில் குருத்து இலைகள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு, புதுக் குருத்தை வெளிவர விடாமல் தடுத்து விடும். கரும்பில் குறுக்காக ஏணிப் படிகளைப் போலப் பள்ளங்களும் காணப்படும்.

நோய் பரவும் விதம்: இந்நோய் Fusarium moniliforme என்னும் பூசணத்தால் ஏற்படும்.

இந்தப் பூசண வித்துகள் காற்றில் பரவுவதால், ஓரிடத்தில் இருந்து அடுத்த இடத்துக்குப் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் மேன்கோசெப் வீதம் கலந்த கலவையை, நோயின் வேகத்தைப் பொறுத்து மூன்று முறை தெளிக்க வேண்டும்.

துரு நோய்

பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் கொப்புளங்களைப் போன்ற புள்ளிகள் தோகைகளின் இரு பக்கமும் காணப்படும்.

பிறகு, இவை ஒன்றாக இணைந்து தோகை முழுவதும் பரவும் போது, அந்தத் தோகைகள் தீயில் கருகியதைப் போலத் தெரியும்.

தோகையில் புள்ளிகள் துருப் பிடித்ததைப் போலத் தெரியும். நோய் தீவிரமானால் இளம் பயிர்கள் காய்ந்து விடும்.

இந்நோய், காற்று மூலம் பரவும். புல் வகைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: கட்டுக்கோப்பு சாகுபடி முறை, சரியான உரம் மற்றும் நீர் நிர்வாகம் இந்நோயைப் பெரிதும் குறைக்கும்.

களைகளைக் கட்டுப்படுத்தினால் இந்நோயின் தீவிரம் வெகுவாகக் குறையும். நோயுள்ள பகுதியில், ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேன்கோசெப் வீதம் கலந்த கலவையைத் தெளிக்கலாம்.

மஞ்சள் தோகை நோய்

நோய் அறிகுறிகள்: பாதிக்கப்பட்ட கரும்புத் தோகையின் நடு நரம்பின் பின்பகுதி மஞ்சளாக இருக்கும். சில நேரம் ஊதா நிறத்திலும் இருக்கும்.

பிறகு, தோகைகளின் இயல்பான நீளமும் அகலமும் குறைந்து விடும். தோகைகள் நுனியில் இருந்து காயத் தொடங்கும்.

தோகைகள் வளர்ச்சிக் குன்றிக் கொத்தாகக் காணப்படும். இடைக் கணுக்களின் நீளம் குறைந்து விடும்.

நோய்த் தாக்கம் அதிகமானால், கரும்புகள் வளராமல் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

நோய் பரவும் விதம்: இந்நோய் ScYLV என்னும் நச்சுயிரியால் ஏற்படும். நோயுற்ற கரும்பை விதைக் கரணைகளாக நடுவதால் இந்நோய் பரவுகிறது. மேலும், கரும்பைத் தாக்கும் இலைப்பேன்கள் மூலமும் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: உரம் மற்றும் பாசனம் சரியாக இருக்க வேண்டும்.

கரும்புக் குருத்துப் பகுதியில் இருந்து, திசு வளர்ப்பு முறையில் தயாரித்த நோயற்ற நாற்றுகளை நட்டால் இந்நோயின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.

புல் தண்டு நோய்

நோய் அறிகுறிகள்: கரும்புத் தூரில் ஒரு கிளைப்பில் உள்ள குருத்துத் தோகைகள் வெள்ளையாக, அதற்குக் கீழுள்ள தோகைகள் பச்சையாக இருக்கும்.

நோயுற்ற தூர்களில் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் தோகைகளுடன், அளவுக்கு அதிகமான கிளைப்புகள் மெலிந்த சிம்புகளைப் போல இருக்கும்.

கரும்பின் வளர்ச்சிக் குன்றி விடும். கரும்புகளில் பக்கப் பருக்கள் அடியிலிருந்து மேல் நோக்கி முளைக்கும். இதனால், கரும்பானது புதரைப் போலத் தெரியும்.

நோய் பரவும் விதம்: இந்நோய், பைட்டோ பிளாஸ்மா என்னும் நோய்க் கிருமியால் தோன்றும்.

நோயுற்ற கரும்பை, விதைக் கரணைகளாக நடுவதால் தான் இந்நோய் பரவுகிறது.

மேலும், கரும்பைத் தாக்கும் கருநிற நாவாய்ப்பூச்சி மூலமும், இந்நோய் நல்ல கரும்புக்குப் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: புல் தண்டு நோய் ஒரு சதத்துக்கும் குறைவாக உள்ள கரும்புத் தோட்டத்தில் இருந்து விதைக் கரணைகளை எடுக்க வேண்டும்.

நோயுற்ற தூரை வேருடன் பிடுங்கி அகற்ற வேண்டும். நடவுக் கரும்பில் இந்நோயின் தாக்குதல் 15 சதத்துக்கு மேலிருந்தால், அந்த நிலத்தில் கட்டைப் பயிருக்கு விடக் கூடாது.

விதைக் கரணைகளை 50 டிகிரி செல்சியஸ் நீராவியில், ஒரு மணி நேரம் பதப்படுத்தி நட்டால் இந்நோயைத் தடுக்கலாம்.


கரும்பை DR V RAVICHANDRAN 2 scaled e1710836989973

முனைவர் வே.இரவிச்சந்திரன், முனைவர் மு.சண்முகநாதன், கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர் – 607 001.

முனைவர் ஜெ.ஜெயக்குமார், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, திருச்சி – 620 009.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading