தீவனக் கம்புப் பயிர், சத்தும் சுவையும் மிகுந்தது. இதைப் பசுந்தீவனம், உலர் தீவனம், ஊறுகாய்ப் புல் என, பல வகைகளில், கால்நடைகளுக்குத் தரலாம்.
பாதியளவில் பூக்கும் நிலையில் இதை அறுவடை செய்தால், 7-10 சதம் கச்சாப் புரதம், 56-64 சதம் நடுநிலை நார்ச்சத்து, 38-41 சதம் அமிலநிலை நார்ச்சத்து,
33-34 சதம் செல்லுலோஸ், 18-23 சதம் ஹெமி செல்லுலோஸ் ஆகிய சத்துகள் கிடைக்கும். சோளத்தை விட வறட்சியைத் தாங்கி வளரும்.
இரகங்கள்
கோ 8: இதன் வயது 45-50 நாட்கள். எக்டருக்கு 25-30 டன் பசுந்தீவனம் கிடைக்கும். இந்தியா முழுவதும் சாகுபடி செய்யலாம். இது ஒரே முறை அறுவடை இரகம்.
ஜெயின்ட் பாஜ்ரா: இந்த இரகம் 1980 ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. பல அறுவடைக்கு ஏற்ற இரகம். எக்டருக்கு 50-75 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
எப்.பீ.சி. 16: இந்த இரகம் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சாகுபடி செய்ய ஏற்றது. இது பல அறுவடைக்கு ஏற்ற இரகம்.
இந்தத் தீவனத்தில் குறைந்தளவில் ஆக்சலேட்ஸ் என்னும் நச்சுப் பொருள் உள்ளது. எக்டருக்கு 75-80 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
இராஜ் பாஜ்ரா சாரி 2: இதை, இந்தியா முழுவதும் சாகுபடி செய்யலாம். எக்டருக்கு 30-45 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
இலைகளில் தோன்றும் நோய்கள் மற்றும் பெரும்பாலான பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் உள்ளது. இது ஒரே முறை அறுவடை இரகம்.
எப்.எம்.எச். 3: இந்த இரகம், 50-55 நாட்களில் பூக்கும். 90-95 நாட்களில் முதிர்ச்சி அடையும்.
பல அறுவடைச் சூழலில் எக்டருக்கு 75 டன் தீவனம் கிடைக்கும். ஒரு அறுவடையில் 36 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
ஜி.எப்.பி. 1: இந்த இரகம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சாகுபடி செய்ய ஏற்றது.
அவிகா பாஜ்ரா சாரி: இந்த இரகம் 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எக்டருக்கு 36.7 டன் பசுந்தீவனம், 8.8 டன் உலர் தீவனம், 1,000 கிலோ தானியம் கிடைக்கும்.
நரேந்திர சாரா பாஜ்ரா 2: இதை, களர் மண்ணில் சாகுபடி செய்யலாம்.
எ.பி.எப்.பீ 2: குறுகிய காலத்தில் அறுக்கலாம். எக்டருக்கு 25 டன் பசுந்தீவனம், 5.5 டன் உலர் தீவனம் கிடைக்கும். கோடையில் பலமுறை அறுவடைக்கு ஏற்றது.
பருவம்
தீவனக் கம்பை இறவைப் பயிராக, ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.
தென்மேற்குப் பருவமழை பெய்யும் பகுதிகளில் ஜுலை இரண்டாம் வாரத்தில் பருவமழை தொடங்கும் போதும்,
வடகிழக்குப் பருவமழை பெய்யும் பகுதிகளில், அக்டோபர், நவம்பரிலும் விதைக்கலாம்.
கோடையில் மார்ச் முதல் ஏப்ரல் இரண்டாம் வாரம் வரையில் விதைக்கலாம்.
மண்
எல்லா வகை மண்ணிலும் இதைப் பயிரிடலாம். மணல் கலந்த வண்டல் மண் சிறந்தது.
அமிலம் மிகுந்த மண்ணில் வளராது. மண்ணின் கார அமில அளவு, 6.5-7.5 இருப்பது நல்லது.
நிலம் தயாரித்தல்
சட்டிக் கலப்பையால் ஒருமுறை, கொத்துக் கலப்பையால் ஒருமுறை உழுது நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.
பின்பு 30 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். நிலத்தில் நீர்த் தேங்காமல் இருக்க, போதிய வடிகால் வசதி வேண்டும்.
விதையளவு
எக்டருக்குப் பத்து கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது அப்ரான் அல்லது மெட்டலாக்சில் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
அடுத்து, 24 மணிநேரம் வைத்திருந்து விதைத்தால், விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும்.
மேலும், 3 பொட்டலம் அசோஸ்ப யிரில்லம், 3 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.
இதனால், இப்பயிருக்கு இடும், தழை மற்றும் மணிச்சத்தை 15-20 சதம் குறைத்துக் கொள்ளலாம்.
விதைப்பு
வரிசைக்கு வரிசை 30 செ.மீ., பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
விதை சிறிதாக இருப்பதால் 1.5-2.0 செ.மீ ஆழத்தில் மேலாக விதைக்க வேண்டும்.
உர நிர்வாகம்
நிலத்தை உழுமுன், எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.
எக்டருக்கு 17 கிலோ தழைச்சத்தைத் தரும் 37 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்தைத் தரும் 43 கிலோ டி.ஏ.பி.,
12 கிலோ சாம்பல் சத்தைத் தரும் 20 கிலோ பொட்டாசையும் அடியுரமாக இட வேண்டும்.
விதைத்த 30 நாளில் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்தைத் தரும் 54 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.
துத்தநாகச் சத்துக் குறையுள்ள மண்ணுக்கு அடியுரமாக, விதைத்த பின் எக்டருக்கு 20 கிலோ துத்தநாக சல்பேட்டை இட்டால் பசுந்தீவன மகசூலைக் கூட்டலாம்.
மானாவாரியில் பயிர்கள் தூர் கட்டும் போது ஒருமுறை, பூக்கும் முன்பு ஒருமுறை, 0.2 சத யூரியா அல்லது 0.1 சத தையோயூரியா கரைசலைத் தெளித்து, பயிரை வறட்சியில் இருந்து காக்கலாம்.
களை நிர்வாகம்
விதைத்த முதல் 30 நாட்கள் வரை களைகள் இருக்கக் கூடாது. தனித் தீவனக் கம்புப் பயிரில், விதைத்த 15 நாளில், 30 நாளில், களையெடுக்க வேண்டும். களைக் கொல்லியைத் தவிர்ப்பது நல்லது.
பாசனம்
மண் மற்றும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து, பத்து நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும்.
ஜுலை மாதம் விதைக்கும் பயிருக்கு, தென்மேற்குப் பருவமழை பெய்வதைப் பொறுத்து, 1-2 முறை பாசனம் செய்யலாம்.
கோடையில் சாகுபடி செய்தால், 4-5 முறை பாசனம் செய்ய வேண்டி இருக்கும்.
ஊடுபயிர்
தீவனத் தட்டைப்பயறு இரகங்களான கோ. 5 அல்லது கோ. (எப்.சி.) 8-ஐ, இரண்டு வரிசைக்கு ஒரு வரிசையில் விதைத்தால், சத்தான பசுந்தீவனம் கிடைக்கும்.
மானாவாரியில் இத்துடன், துவரை, பச்சைப்பயறு, கொத்தவரை மற்றும் கொள்ளையும் பயிரிடலாம்.
பயிர்ப் பாதுகாப்பு
இப்பயிருக்குப் பெரியளவில் பாதுகாப்பு எதுவும் தேவையில்லை. இருப்பினும், அடிச்சாம்பல், தண்டு ஈக்கள், வெள்ளை வேர்ப் புழுக்கள் தாக்கலாம்.
அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, ரிடோமில் 25 W.P. பூசணக்கொல்லி மருந்தை, 0.01 சதம் வீதம், விதைத்த 20-25 நாளில் தெளிக்கலாம்.
சுழற்சி முறையில் பயிரிடுவதன் மூலமும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி வேப்பெண்ணய் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.
வெள்ளை வேர்ப் புழுவைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு போரேட் 10ஜி அல்லது குனைல்பாஸ் 5ஜி குருணை மருந்தை, விதைக்கும் போது பாத்திகளில் இடலாம்.
தண்டு ஈயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு கார்போ பியூரான் 125 மி.லி. வீதம் தெளிக்க வேண்டும்.
அறுவடை
ஒரே அறுவடை இரகத்தை, பூக்கும் போது, அதாவது, விதைத்து 55-60 நாட்களில் தீவனத்துக்காக அறுவடை செய்யலாம்.
பல அறுவடை இரகத்தை, விதைத்த 45-50 நாட்களில் முதல் தடவையும், பின்பு 30 நாட்கள் இடைவெளியில் தீவனத்துக்காக அறுவடை செய்யலாம். எக்டருக்கு 30-50 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
முனைவர் அ.சோலைமலை, சோ.மனோகரன், சஞ்சீவ் குமார், கோ.பாஸ்கர், சு.தாவீது, எ.முருகன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி – 628 501.
சந்தேகமா? கேளுங்கள்!