பயிர்களைப் பாதுகாப்பதில் பொறிகள் முக்கியப் பங்கு பெறுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கவனிக்க, அவற்றின் தாக்குதலை முன்கூட்டியே அறிய, பெருக்கத்தைத் தெரிந்து கொள்ள மற்றும் கட்டுப்படுத்த விளக்குப்பொறி உதவுகிறது.
ஐந்து ஏக்கருக்கு ஒரு பொறி போதும். மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டும் எரியவிட்டு, அதனால் கவரப்படும் பூச்சிகளை அழிக்க வேண்டும்.
இப்போது சூரியவொளியில் இயங்கும் விளக்குப்பொறி கிடைக்கிறது. இதை ஒருமுறை இயக்கி எரிய விட்டு விட்டால் போதும்;
அது தானாகவே மாலை நேரத்தில் எரியும்; குறிப்பிட்ட நேரத்தில் அணைந்து விடும். தினந்தோறும் இயக்கவும் நிறுத்தவும் ஆள் தேவையில்லை.
மேலும், இதில் பூச்சிகளை ஈர்க்கும் அளவே ஒளி இருப்பதால், அடுத்த நிலத்திலுள்ள பூச்சிகள், இதை நோக்கி வர வாய்ப்பில்லை. இது பல ஆண்டுகள் உழைக்கும்.
இனக்கவர்ச்சிப் பொறி: இயற்கையில் பெண் அந்துப் பூச்சிகள் ஒருவித வேதிப் பொருளைச் சுரக்கும்.
இதன் வாசம் காற்றில் கலக்கும் போது, இதனால் ஈர்க்கப்படும் ஆண் அந்துப் பூச்சிகள், பெண் அந்துப் பூச்சிகளை அடைந்து இனச்சேர்க்கை புரியும்.
இந்த வேதிப் பொருளைச் செயற்கையாகத் தயாரித்து இந்தப் பொறியில் இடப்படுகிறது. இப்பொறியை, ஏக்கருக்கு 5 வீதம் பரவலாக வைக்க வேண்டும்.
இதிலிருந்து வெளிவரும் வாசத்தால் ஈர்க்கப்படும் ஆண் அந்துப் பூச்சிகள், வெளியேற முடியாத வகையில், இனக்கவர்ச்சிப் பொறியில் இணைத்துள்ள நெகிழிப் பையில் விழுந்து விடும்.
பிறகு, அவற்றை எடுத்து அழிப்பதால், அந்துப் பூச்சிகள் பெருகுவது கட்டுப்படும்.
மஞ்சள் நிற ஒட்டுப்பொறி: மஞ்சள் நிறத்தால் பூச்சிகள் அதிகமாக ஈர்க்கப்படும்.
எனவே, வெள்ளை ஈக்களின் நடமாட்டத்தை அறியவும் அழிக்கவும், மஞ்சள் நிற ஒட்டும் அட்டை உதவுகிறது.
இதில், விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் போன்ற மசகைத் தடவி, ஏக்கருக்குப் பத்து இடங்களில் வைக்க வேண்டும்.
அப்போது, வெள்ளை ஈக்கள், இந்த ஒட்டும் பொருளில் பட்டு மீள முடியாமல் அங்கேயே அழிந்து விடும்.
இதனால், வெள்ளை ஈக்களின் பெருக்கமும், பயிர்களைத் தாக்குவதும் கட்டுப்படும்.
முனைவர் இராஜா.ரமேஷ், உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை.
சந்தேகமா? கேளுங்கள்!