My page - topic 1, topic 2, topic 3

எளிய முறையில் பசுந்தீவன உற்பத்தி!

ஹைட்ரோ போனிக் என்பது, மண்ணே இல்லாமல் நீரை மட்டும் கொண்டு, தட்டுகளில் தீவனத்தை உற்பத்தி செய்வதாகும்.

இம்முறை மூலம் மிகக் குறைந்த இடத்தில் பசுந் தீவனத்தை உற்பத்தி செய்யலாம்.

பசுமைக் குடிலில் அடுக்கு முறையில், பிளாஸ்டிக் தட்டுகளில் மக்காச்சோள விதைகளைப் பரப்பி, தெளிப்பான் மூலம் நீரைத் தெளித்து, பசுந் தீவனத்தை உற்பத்தி செய்யலாம்.

தேவையான பொருள்கள்: பசுமைக்குடிலை அமைப்பதற்கான வலை,

தட்டுகளை அடுக்கப் பயன்படும் மூங்கில் அல்லது இரும்பு ரேக்,

85 சதம் முளைப்புத் திறனுள்ள மக்காச்சோள விதைகள்,

துளையுள்ள நெகிழித் தட்டுகள்,

நீர்த் தெளிப்பான்.

செய்முறை: மக்காச்சோள விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.

அடுத்து, கோணிப் பையில் 24 மணிநேரம் இட்டு, நீரைத் தெளித்து முளைக்கட்ட வேண்டும்.

அடுத்து, முளைக்கட்டிய விதைகளை நெகிழித் தட்டுகளில் பரப்ப வேண்டும்.

அடுத்து, தெளிப்பான் மூலம் தினமும் ஐந்து முறை நீரைத் தெளித்து வர வேண்டும்.

விதைகளை இட்ட முதல் இரண்டு நாள்களுக்கு, நெகிழித் தட்டுகளில் ஈரத் துணியை மூடுவதன் மூலம் ஈரப்பதத்தைப் பாதுகாக்க முடியும்.

இப்படிச் செய்யும் போது, 9 நாட்களில் முக்கால் அடி உயரத்தில் தீவனம் வளர்ந்து விடும். இப்போது அறுவடை செய்யலாம்.

இந்த முறையில், ஒரு கிலோ விதைகளில் இருந்து 4 கிலோ பசுந் தீவனத்தை உற்பத்தி செய்யலாம்.

இவ்வகையில், ஒரு கிலோ தீவனத்தை உற்பத்தி செய்ய ரூ.4.25-4.50 ஆகும்.

தீவனம் அளிக்கும் முறை: இந்தத் தீவனத்தை வேருடன் எடுத்துச் சற்று உலர வைத்து ஆடு மாடுகளுக்குத் தரலாம்.

கறவை மாட்டுக்கு 10-15 கிலோ, ஆட்டுக்கு, 1.5-2 கிலோ வீதம் தரலாம். ஒரு கிலோ விதையில் இருந்து கிடைத்த பசுந் தீவனத்தை, கறவை மாட்டுக்குத் தருவதன் மூலம், 15 சத அடர் தீவனத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

பயன்கள்: நகர்ப் புறங்களில் 1-2 மாடுகள் அல்லது 3-4 ஆடுகளை வளர்ப்போர் மற்றும் நிலம் இல்லாதோர்க்கு இந்த முறை மிகவும் ஏற்றது.

இது, சத்தும் சுவையும் மிகுந்த பசுந்தீவனமாக இருப்பதால், பாலில் கொழுப்புத் தன்மை கூடும். இனப்பெருக்கக் குறைகள் குறையும்.

நிலத்தில் ஒரு கிலோ பசுந்தீவன உற்பத்திக்கு, 60-70 லிட்டர் நீர் வேண்டும். ஆனால், இம்முறையில் 2.5 லிட்டர் நீர் மட்டும் போதும்.

எனவே, நீரின் பயன்பாடு குறையும். எளிய வேலை என்பதால், வீட்டிலுள்ள பெண்களைக் கொண்டே பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும்.


மரு.ச.குணசேகரன், உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks