உரம் தயாரிக்க உகந்த அப்டா சந்தைக் கழிவு!

சந்தைக் கழிவு chennai koyambedu waste

ய்வுச் சுருக்கம்: தரம் பிரிக்கப்பட்ட மட்கும் பழம் மற்றும் காய்கறிச் சந்தைக் கழிவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயொமினரலைசர் என்னும் நுண்ணுயிர்களை வைத்து, விரைவாக மட்க வைக்கும் தொழில் நுட்பம் மூலம் மட்க வைக்கப்பட்டது.

மட்கிய பிறகு 2 மி.மீ. கண் சல்லடையில் சலித்தெடுத்து வயலில் இட்டு, டிபிஎஸ்5 என்னும் நெல் இரகத்தைப் பயிரிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில், மட்கிய சந்தைக்கழிவு உரத்தை மட்டும் இட்ட வயல் மண்ணில் உயிரியல் தன்மைகள் உயர்ந்து காணப்பட்டன.

தொழுவுரத்துடன் பரிந்துரைக்கப்பட்ட இரசாயன உரத்தைக் கலந்து இட்ட வயலில் நெற்பயிர் நன்கு வளர்ந்து வைக்கோல் விளைச்சல் மட்டும் அதிகமாக இருந்தது. ஐந்து டன் மட்கிய சந்தைக் கழிவுடன் பரிந்துரை செய்யப்பட்ட இரசாயன உரத்தை இட்ட வயலில் தானிய விளைச்சல் அதிகமாக இருந்தது.

தானிய எடையும் கூடுதலாக இருந்தது. இதிலிருந்து, எக்டருக்கு 12 டன் தொழுவுரத்தை அடியுரமாக இடுவதற்குப் பதிலாக, சந்தைக் கழிவை, விரைவாக உரமாக்கும் தொழில் நுட்பத்தில் மட்க வைத்து, 5 டன் இட்டாலே நல்ல மகசூல் பெறலாம் என அறியப்படுகிறது.

தினசரி சந்தை

நகரங்களில் உள்ள தினசரி சந்தைகளில், உழவர் சந்தைகளில், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கப்படுகின்றன. கிராமங்களில் இருந்து வரும் விவசாயிகள் இந்தச் சந்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் கொண்டு வரும் விளை பொருள்களை நகரங்களில் வாழும் மக்கள், தங்கள் உணவுத் தேவைக்காக வாங்கிச் செல்கின்றனர்.

இவர்கள் வாங்கியது போக மீதமுள்ள தரமற்ற மற்றும் விற்காத காய்கறிகள், இலைதழைகள் கழிவுகளாக உருவாகின்றன. இவற்றைச் சந்தையிலேயே போட்டு விட்டுச் செல்கின்றனர்.

இதனால் உருவாகும் குப்பைக் குவியலால் சகிக்க இயலாத வாடையும், சுகாதாரக் கேடும் உண்டாகின்றன. கொசுக்கள், எலிகள் போன்றவை பெருக, நோய்க் கிருமிகள் உருவாக, இந்தக் குப்பைக் குவியல் காரணமாக அமைவதால், சுற்றுச்சூழல் கெடுவதுடன், பிளேக், டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் நிலையும் ஏற்படுகிறது.

மழைக் காலத்தில் சந்தையின் நிலை மேலும் மோசமாகி, மழைநீர், கழிவுநீராக மாறி, சந்தை வளாகத்தில் தேங்கி நிற்கும் நிலை ஏற்படலாம். இதனால், நுகர்வோரும் வணிகர்களும் சந்தைக்கு வரவே தயங்கும் நிலை உருவாகும்.

இந்தச் சந்தைக் கழிவுகளைச் சரியாகப் பயன்படுத்தாமல், நகராட்சிக் கழிவுகளுடன் கொட்டும் போது இட நெருக்கடி ஏற்படும். இப்படி, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கழிவு மேலாண்மை என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அப்டா சந்தை என்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் வாழைத்தார்கள், அன்னாசிப் பழங்கள் போன்றவற்றை விற்கவும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த சந்தையாகும். இங்கே சில்லறை வணிகமும், மொத்த வணிகமும் நடக்கும்.

இந்தச் சந்தையிலிருந்து ஆண்டுக்குக் குறைந்தது 1,200 டன் கழிவுகள் உருவாகும். இவை, நகரக் கழிவுகளுடன் சேர்த்துக் கொட்டப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் மறுசுழற்சிக்கு முடியாத பிளாஸ்டிக் மற்றும் உலோகங்கள் இருப்பதாலும், விரைவாக மட்குவதில்லை என்பதாலும், விவசாயிகளால் இவற்றைப் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, இந்தச் சந்தைக் கழிவுகளை மட்க வைத்து நெல்லுக்கு உரமாகப் பயன்படுத்த முடியுமா என்னும் நோக்கில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பொருள்கள் மற்றும் முறைகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் சிறப்பாக இயங்கி வரும் திருப்பதிசாரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், இந்தச் சந்தைக் கழிவை, விரைவாக மட்க வைக்கும் தொழில் நுட்பம் மூலம் மட்க வைக்கும் ஆராய்ச்சியை நான், 2016-17 ஆம் ஆண்டில் மேற்கொண்டேன். இதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயொமினரலைசர் என்னும் உயிரினம் கொண்டு 2020 இல் மட்க வைக்கப்பட்டது.

இதில், மட்காத கழிவைப் பிரித்து விட்டு, 2 மி.மீ. சல்லடையில் சலித்து, வயலில் இட்டு டிபிஎஸ்5 இரக நெல்லைப் பயிரிட்டு ஆய்வு செய்யப்பட்டது. கீழ்க்கண்ட சோதனைக் கூறுகள் கடைப்பிடிக்கப்பட்டன. சோதனை-1 இல்,ஏதும் இடப்படாத கட்டுப்பாட்டு பாத்தி. சோதனை-2 இல், எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து முழுவதும்.

சோதனை-3 இல், எக்டருக்கு மட்கிய 5 டன் சந்தைக்கழிவு. சோதனை-3 இல், மட்கிய சந்தைக்கழிவு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து முழுவதும். சோதனை-4 இல், மட்கிய சந்தைக்கழிவு மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தில் 75 சதம். சோதனை-5 இல், மட்கிய சந்தைக்கழிவு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் 50 சதம்.

முடிவுகளும் விளக்கங்களும்

மட்கிய சந்தைக்கழிவை மட்டும் இட்ட வயல் மண்ணில் உயிரியல் தன்மைகள், அதாவது, பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஏக்டினோமைசீட்டுகள் உயர்ந்து காணப்பட்டன. மட்கிய சந்தைக்கழிவை இட்டு, டி.பி.எஸ்-5 இரக நெல்லைப் பயிரிட்டு, அறுவடைக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட மண்ணின் உயிரியல் தன்மைகள் குறித்த விவரங்கள்:

சோதனை 1: மொத்த பாக்டீரியா(X106 CFU/ml) 8. மொத்தப் பூஞ்சை(X104 CFU/ml)5. மொத்த ஆக்டினொமைசீட்டு (X101 CFU/ml) 6.

சோதனை 2: மொத்த பாக்டீரியா 15. மொத்தப் பூஞ்சை 20. மொத்த ஆக்டினொமைசீட்டு 12.

சோதனை 3: மொத்த பாக்டீரியா 28. மொத்தப் பூஞ்சை 25. மொத்த ஆக்டினொமைசீட்டு 16.

சோதனை 4: மொத்த பாக்டீரியா 22. மொத்தப் பூஞ்சை 22. மொத்த ஆக்டினொமைசீட்டு 19.

சோதனை 5: மொத்த பாக்டீரியா 26. மொத்தப் பூஞ்சை 20. மொத்த ஆக்டினொமைசீட்டு 21.

சோதனை 6: மொத்த பாக்டீரியா 23. மொத்தப் பூஞ்சை 25. மொத்த ஆக்டினொமைசீட்டு 20.

SEd: 0.8, 1.5, 1.8. CD: 1.7, 3.2, 3.7.

தொழுவுரமும் பரிந்துரைக்கப்பட்ட இரசாயன உரமும் கலந்து இடப்பட்ட வயலில், நெற்பயிர் நன்கு வளர்ந்து வைக்கோல் மகசூல் மட்டும் அதிகமாக இருந்தது. மட்கிய சந்தைக்கழிவு 5 டன்னும், பரிந்துரை செய்யப்பட்ட இரசாயன உரமும் இடப்பட்ட வயலில், தானிய விளைச்சல் கூடியதுடன், தானிய எடையும் அதிகமாக இருந்தது.
மட்கிய சந்தைக்கழிவை ஒரு எக்டரில் இட்டு, டி.பி.எஸ்-5 இரக நெல்லைப் பயிரிட்ட வயலில் பதிவு செய்யப்பட்ட தானிய மற்றும் வைக்கோல் மகசூல் விவரம்:

சோதனை 1: 3.6 டன் தானியம், 4.5 டன் வைக்கோல்.

சோதனை 2: 5.5 டன் தானியம், 8.5 டன் வைக்கோல்.

சோதனை 3: 4.4 டன் தானியம், 5.5 டன் வைக்கோல்.

சோதனை 4: 5.8 டன் தானியம், 8.0 டன் வைக்கோல்.

சோதனை 5: 5.6 டன் தானியம், 7.8 டன் வைக்கோல்.

சோதனை 6: 5.4 டன் தானியம், 7.0 டன் வைக்கோல்.

SEd: 0.09, 0.50, CD: 0.20, 1.10.

இதிலிருந்து, எக்டருக்கு 12 டன் தொழுவுரத்தை இடுவதற்குப் பதிலாக, பழம் மற்றும் காய்கறிச் சந்தைக் கழிவை, விரைவாக உரமாக்குதல் தொழில் நுட்ப உதவியுடன் மட்க வைத்து, எக்டருக்கு 5 டன் வீதம் இட்டாலே நல்ல மகசூல் பெறலாம் என அறியப்பட்டது.

மேலும், வேலையில்லாப் பட்டதாரிகள் இந்தக் கழிவுகளை உரமாகத் தயாரித்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரத்துக்கு உட்பட்டு விற்பனை செய்யலாம். மேலும், இக்கழிவை மண்புழு உரமாகவும் தயாரிக்கலாம்.


சந்தைக் கழிவு DR C PRABHAKARAN 1

முனைவர் சி.பிரபாகரன், உதவிப் பேராசிரியர், மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி- 620 027.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading