தென்னை மரத்தைப் பலவிதமான பூச்சிகள் தாக்கிச் சேதப்படுத்துகின்றன. அவற்றுள் முக்கியமானது சிவப்புக் கூன்வண்டு. இதனால் தாக்கப்பட்ட மரங்கள் திடீரென ஒடிந்து விழுந்து விடும்.
தாக்குதல் அறிகுறிகள்
வெள்ளைப் புழுவானது இளந்தண்டுப் பகுதியைத் துளைத்து உள்ளே சென்று தண்டின் சோற்றுப் பகுதியைத் தின்று வேகமாக வளரும். ஆகவே, தண்டின் சோற்றுப் பகுதியில் துளைகளாக இருக்கும். புழுக்கள் உள்ளே சென்ற சிறிய துளை வழியே சிவப்பு நீர் வழிந்து காய்ந்து பிசினைப் போல மாறிவிடும்.
மரத்தில் ஓட்டைகளும், அந்த ஓட்டைகள் வழியே திசுக்களைத் தின்ற பிறகு வெளியே தள்ளப்பட்ட மர நார்களும் காணப்படும். பலமற்ற இந்த நிலையில் மரத்தின் கொண்டைப்பகுதி எளிதாக முறிந்து விழுந்து விடும். மரத்தின் தண்டுப் பகுதியில் கூர்ந்து கவனித்தால், புழுக்களின் இரைச்சல் கேட்கும். தாக்குதல் அதிகமாகும் நிலையில், மரத்தின் உட்புற ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறும். அத்துடன் கொண்டை முறிந்து விடுவதால் மரமானது பட்டு விடும்.
பூச்சியை அடையாளம் காணுதல்
முட்டை, நீள்வட்டமாக வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த முட்டைகள், துளைகள், காயம்பட்ட இடங்களில் மற்றும் தண்டின் தாக்கப்பட்ட இடுக்குகளில் இடப்படும். புழுக்கள், லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவற்றுக்குக் கால்கள் இருக்காது. குட்டையாக, சதைப்பற்றுடன் நடுவில் தடித்தும், ஓரங்களில் சற்றுக் குறைந்தும் காணப்படும்.
புழுக்கள், தண்டின் உட்பகுதியில் கூட்டை அமைக்கும். தின்று கழித்த நார் மற்றும் சக்கையை இணைத்து, நீண்டு உருண்ட கூட்டை இந்தப் புழுக்கள் அமைக்கும். வளர்ந்த வண்டு, சிவப்புக் கலந்த பழுப்பு நிறத்தில், முதுகில் ஆறு புள்ளிகளுடன் இருக்கும். ஆண் வண்டுகள் நீண்ட துதிக்கையைப் போன்ற மூக்குடன், வாய்ப்பகுதியில் அடர்ந்த உரோமங்களுடன் இருக்கும்.
கட்டுப்படுத்துதல்
உழவியல் முறைகள்: இடி தாக்கிய மரங்கள் மற்றும் தீவிர நோய் மற்றும் காண்டாமிருக வண்டு தாக்கிய மரங்கள், கூன் வண்டுகளின் வாழ்விடம் என்பதால், அருகிலிருக்கும் மரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த மரங்களை வெட்டித் தீயிட்டு அழிக்க வேண்டும்.
தண்டுப்பாகத்தில் வெட்டினால் வண்டுகள் முட்டையிட ஏதுவாகும். இதைத் தடுக்க, பச்சை ஓலைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தேவை ஏற்பட்டால், தண்டிலிருந்து 120 செ.மீ. விட்டுவிட்டு ஓலைகளை நீக்க வேண்டும். இதனால், புழுக்கள் எளிதில் துளையிட்டு உள்ளே செல்வதைத் தடுக்கலாம்.
இரசாயன முறை: தண்டில் துளைகள் இருப்பின் அவற்றைத் தார் அல்லது சிமெண்ட் பூச்சு மூலம் அடைத்து விட வேண்டும். காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் மணல் மற்றும் வேப்பங்கொட்டைப் பொடியை 2:1 வீதம் கலந்து மட்டை இடுக்குகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வைத்து, சிவப்புக் கூன்வண்டுகள் முட்டையிடுவதைத் தடுக்க வேண்டும்.
இயந்திர முறை: தென்னை ஓலைப்பொறி: கரும்புச்சாறு 2.5 கிலோ, ஈஸ்ட் மாத்திரை 5 கிராம், அசிட்டிக் அமிலம் 5 மி.லி., நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலை மட்டைத் துண்டுகள் போடப்பட்ட பானைகளை, தென்னந்தோப்பில் ஏக்கருக்கு 30 வீதம் வைத்து, கூன் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
கவர்ச்சிப்பொறி: பொரோலியூர் கவர்ச்சிப் பொறியை எக்டருக்கு ஒன்று வீதம் வைத்துப் புழுக்களைக் கண்காணிக்க வேண்டும். 40-50 நாட்களுக்கு ஒருமுறை, பொறிகளில் உள்ள கவர்ச்சி மருந்தை மாற்ற வேண்டும். கூன் வண்டுகள் தாக்குதலுக்கு உள்ளான மரங்களை, தோப்பிலிருந்து அகற்றி விட வேண்டும்.
பா.உஷாராணி, கு.செல்வராணி, செல்வி ரமேஷ், வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!