My page - topic 1, topic 2, topic 3

இரட்டிப்பு இலாபம் தரும் ஊடுபயிர்கள்!

ருவநிலை மாற்றம், போதிய மழையின்மை, வறட்சி, கட்டுபடியாகாத விலை போன்ற காரணங்களால், விவசாயத்தில் ஒரு தேக்க நிலை, விவசாயிகளின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி இல்லாமை ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது.

அதனால், ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்புப் போன்ற விவசாயத் துணைத் தொழில்களை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

இவற்றைப் போல, முக்கியப் பயிர்களுக்கு இடையில் ஊடுபயிர் செய்வதும், விவசாயிகளுக்குக் கை கொடுக்கும் உத்தியாகும். முதன்மைப் பயிருடன் குறுகிய வயதுள்ள பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடும் போது, முதன்மைப் பயிரில் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுகட்டி, இரட்டிப்பு இலாபம் அடைய முடியும்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை ஒரே நேரத்தில், ஒரே நிலத்தில், ஒரே பருவத்தில் விளைவித்தால் அது ஊடுபயிர் முறை என அழைக்கப்படும். இதன் மூலம் இடைப்பட்ட நிலப்பரைப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கூடுதல் இலாபம் பெற முடியும்.

ஊடுபயிரின் வகைகள்

கலப்புப் பயிர்: ஊடுபயிரை வரிசையாக இடாமல், ஒன்றாகக் கலந்து விதைப்பது, கலப்பு ஊடுபயிர் ஆகும். உதாரணமாக, சோளம், கம்பு, கொள்ளு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வரிசையில்லாமல் பயிரிடலாம்.

வரிசை ஊடுபயிர்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஊடுபயிர்களை வரிசையாகப் பயிரிடுவது, வரிசை ஊடுபயிர் முறையாகும். உதாரணமாக, கம்பு அல்லது குதிரைவாலி சாகுபடியில், துவரை, மொச்சை, தட்டைப்பயறு போன்றவற்றை வரிசையாகப் பயிரிடலாம்.

அகன்ற வரிசை ஊடுபயிர்: மண்ணரிப்பைத் தடுப்பதற்காகப் பயிரிடப்படுவது அகன்ற வரிசை ஊடுபயிர் முறையாகும். இம்முறையில், முதன்மைப் பயிருக்கு எந்தச் சேதமும் இருக்காது.

தொடர் ஊடுபயிர்: ஒரு பயிரை அறுவடை செய்வதற்கு முன், அந்த நிலத்தில் அடுத்த பயிரை முன்கூட்டியே பயிரிடுவது தொடர் ஊடுபயிர் முறையாகும். உதாரணமாக, தஞ்சை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நெல் அறுவடை முடிவதற்கு முன்பே, அந்த நிலத்தில் பாசிப்பயறு மற்றும் உளுந்தை விதைத்து விடுகின்றனர்.

சாகுபடி முறைகள்

குளிர்காலப் பயிர்கள்: கரும்பு + பயறு வகைகள். தீவனச்சோளம் + தட்டைப்பயறு.

கோடைக்காலப் பயிர்கள்: கம்பு + துவரை. கம்பு + கொள்ளு + தட்டைப்பயறு.

மக்காச்சோளம் + உளுந்து + மொச்சை + காராமணி. தென்னை மரங்கள் + வாழை. தேயிலை + சில்வர் ஓக் + மிளகு.

பல்லடுக்கு சாகுபடி: மாறுபட்ட உயரமுள்ள பயிர்களை ஒரு நிலத்தில், ஒரே பருவத்தில் பயிரிடும் முறைக்கு, பல்லடுக்கு சாகுபடி முறை என்று பெயர்.

உதாரணமாக, தென்னைக்கு ஊடே கோக்கோ, மிளகு, அன்னாசி, கீரையைப் பயிரிடுதல். இம்முறையில், சூரியவொளி, நீர், சத்துகள் பகிர்வு போன்றவற்றில் பயிர்களுக்கு இடையே போட்டி இருக்காது.

இந்த சாகுபடி முறையில் மிளகு படர்வதற்குத் தென்னை போன்றவை துணையாக இருக்கும். சூரியவொளி மற்றும் காற்றிலுள்ள தழைச்சத்தை எடுத்துக் கொள்வதில் வேர்ப் பகுதிகளில் ஒன்றின் மீது மற்றொன்று ஆக்கிரமிப்புச் செய்வதில்லை.

இம்முறையில், பல்வேறு நிலைகளில் கிடைக்கும் சூரியவொளி முழுவதும் பண்ணைக்குப் பயன்படுவதால் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஓராண்டு, ஈராண்டு, பல்லாண்டுத் தாவரங்களை ஊடுபயிராக அல்லது கலப்புப் பயிராக இடுவதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் இலாபம் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் கலப்புப் பயிர் அல்லது ஊடுபயிர் சாகுபடி, கால நிலைகள், பாசனவசதி மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்தே அமைகிறது.

பயறு வகைகளில் இருந்து மனித வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு புரதச் சத்துகள் கிடைக்கின்றன. ஆனால், இன்று பெரும்பாலான இடங்களில் பயறு சாகுபடி பெருமளவில் குறைந்து வருகிறது.

இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஊடுபயிர் முறையில் இவற்றை உற்பத்தி செய்வது எளிது. பயறு வகைகளை ஊடுபயிராக இடுவதன் மூலம், காற்றிலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தி, பயிர்களுக்கு அளிப்பதுடன் மண் வளத்தையும் காக்கலாம்.

ஆமணக்கு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவுக்கு முக்கியப் பங்குண்டு. ஆமணக்கை ஊடுபயிராக வளர்த்தால், எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம். ஆறு வரிசை நிலக்கடலை ஒரு வரிசை ஆமணக்கு வீதம் ஊடுபயிராக இடலாம்.

மக்காச்சோளத்தில் தட்டைப் பயற்றை ஊடுபயிராக இட்டால், அதற்குத் தேவையான சூரியவொளி அறுபது நாட்களும் கிடைக்கும். தட்டைப்பயறு அறுவடைக்குப் பிறகு மக்காச்சோளத்துக்குத் தேவையான சூரியவொளி நன்கு கிடைக்கும்.

ஈரப்பதம் மற்றும் சத்துகள்

முதன்மைப் பயிர்களும் ஊடுபயிர்களும் வெவ்வேறு வகையான வேரமைப்பைக் கொண்டிருப்பதால், நீருக்கான போட்டி இருப்பதில்லை. சோளத்தில் உளுந்தை ஊடுபயிராக இடும் போது, சோளத்துக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதற்கு, கூடுதலாக உரங்களை இடுகிறோம்.

இவற்றைக் குறைப்பதற்கு, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்தால், ஒன்றுக்கொன்று சத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும்.

ஊடுபயிர் மூலம் பூச்சிக் கட்டுப்பாடு

ஒரே பயிரை வளர்க்காமல் பல்வேறு பயிர்களைப் பயிரிடுவதன் மூலம், பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம். இந்தப் பயிர்கள் கவர்ச்சிப் பயிராகவும் பயன்படும்.

இவை பூச்சிகளைக் கவர்ந்து, முக்கியப் பயிரைப் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.

துவரை மற்றும் பாசிப்பயறு சாகுபடியில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், தத்துப்பூச்சி மற்றும் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

பருத்தி மற்றும் சூரியகாந்தியை 20:1 வீதம் பயிரிட்டால், பருத்தியைத் தாக்கும் பச்சைத் தத்துப் பூச்சியின் தாக்கம் குறையும்.

பருத்தியில் பச்சைப்பயறு, உளுந்து மற்றும் துவரையை ஊடுபயிராக இட்டால், பருத்தியில் பூச்சிகளின் தாக்கத்தைப் பெருமளவில் குறைக்கலாம்.

சோளத்துடன் அவரையை 4:1 வீதம் பயிரிட்டால், சோளத்தைத் தாக்கும் தண்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

நிலக்கடலை மற்றும் கம்பை 6:1 வீதம் பயிரிட்டால், நிலக்கடலையில் சுருள் பூச்சிகள் தாக்குவதைப் பெருமளவில் குறைக்கலாம்.

மக்காச்சோளத்துடன் நிலக்கடலையைச் சேர்த்துப் பயிரிட்டால், 65% தழைச்சத்து, அடுத்த ஆண்டில் முதன்மைப் பயிருக்கு எளிதாகக் கிடைக்கும்.

மக்காச் சோளத்தில் தட்டைப்பயற்றைப் பயிரிட்டால் 60% தழைச்சத்தும், துவரையைப் பயிரிட்டால் 65% தழைச்சத்தும், அடுத்த ஆண்டில் எளிதில் கிடைக்கும்.


முனைவர் வி.அரவிந்த், வேளாண்மை அறிவியல் நிலையம், காரைக்கால்.

க.திவ்யா, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர். முனைவர் சு.திருமேனிநாதன், வேளாண்மை அறிவியல் நிலையம், மாதூர், ஐதராபாத்.

முனைவர் நா.சா.சுடர்மணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks