My page - topic 1, topic 2, topic 3

விதைகளைச் சேமிப்பது எப்படி?

வேளாண்மையில், விதை உற்பத்தியில் எத்தகைய கவனம் தேவையோ அதேயளவு கவனம், அடுத்த விதைப்புப் பருவம் வரை விதைகளைச் சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. தரமான விதை உற்பத்தி என்பது, விதைகளை விதைப்பதில் தொடங்கி, நன்கு பராமரித்து நல்வித்தாக அறுவடை செய்தலில் முடியும். ஏனெனில், அறுவடை செய்த விதைகளை மறு பருவத்தில் விதைக்கும் வரை அவற்றின் வீரியத் தன்மை மற்றும் முளைப்புத் தன்மையைப் பாதுகாத்தல் மிகவும் அவசியமாகும்.

விதைகள், விற்பனைக்காக, அடுத்த தேவைக்காக, ஆதார வித்துகளாக, மரபியல் தொகுப்பாகச் சேமித்து வைக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தி நிறுவனங்கள், விதைகள் சேமிப்புக்கு என, தனியாகக் கிடங்குகளை அமைத்து, விதைகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கின்றன. இந்தக் கிடங்குகளில் வெளிப்புறத் தட்ப வெப்ப நிலைகளால் விதைகளில் மாற்றம் ஏற்படா வகையில், கருவிகள் மூலம் வெப்ப நிலையை உருவாக்கி, நெடுநாட்களுக்கு விதைகள் சேமிக்கப்படுகின்றன. 

விதைகள் சேமிப்பும் அவற்றின் நிலைகளும்

இயற்கைச் சேதத்தால் அல்லது பூச்சி, பூசணங்களால் அல்லது சுற்றுச்சூழல் காரணமாக, தன்மை மற்றும் தரம் குன்றி விடாமல் இருக்கவே, விதைகள் மிகவும் கவனமாகச் சேமிக்கப்படுகின்றன. பொதுவாக, விதைகள் சேமிப்பு என்பது, விதைகள் செடியிலிருக்கும் போதே தொடங்கி விடுகிறது. விதைகள், ஆறு நிலைகளில் சேமிக்கப்படுகின்றன. அவையாவன:

பயிரில் வினையியல் முதிர்ச்சி அடைந்ததிலிருந்து அறுவடை செய்யும் வரை.  அறுவடை செய்ததிலிருந்து கலன்களில் விதைகளைப் பதப்படுத்துவது வரை.  விதைச் சேமிப்புக் கிடங்கில் சேமிப்புக் காலம் வரை. சேமிப்புக் கிடங்கிலிருந்து போக்குவரத்துச் சாதனங்களில் விதைகளை மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லும் வரை. சில்லறை விற்பனைக் கூடத்தில். பண்ணை வீடுகளில் அல்லது விதைக்கும் முன் விவசாயிகளிடத்தில். இவற்றில் ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தவில்லை என்றாலும், விதைகளின் தரம் குறைந்து, சாகுபடியின் போது மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

விதைகளின் சேமிப்புத் திறனை நிர்ணயிக்கும் காரணிகள்

விதைகளின் சேமிப்புத் திறன் பயிருக்குப் பயிர் மாறுபடும். எனினும், இங்கே கூறப்பட்டுள்ள பொதுவான காரணிகளில் சீரான கவனம் இருந்தால் விதைகளின் சேமிப்புத் திறன் அதிகமாகும்.

விதைகளின் வகைகள்: சேமிப்புத் திறனைப் பொறுத்து, நீண்ட காலச் சேமிப்புத் திறனுள்ள ஆர்த்தோடாக்ஸ் விதைகள், குறுகிய காலச் சேமிப்புத் திறனுள்ள ரீகால்சிரன்ட் விதைகள் என, இரு வகையாக விதைகளைப் பிரிக்கலாம். ரீகால்சிட்ரன்ட் விதைகளின் ஈரத்தன்மை குறையும் போது முளைப்புத் திறன் குன்றும். பலா, ரப்பர், ஓக், மா விதைகள் குறுகிய காலச் சேமிப்புத் திறனுள்ள விதைகளாகும்.

சேமிப்புத் திறனைப் பொறுத்து, ஆர்த்தோடாக்ஸ் விதைகளை, சிறந்த சேமிப்புத் திறனுள்ள விதைகள் (வெண்டை, தானியங்கள், பயறு வகைகள்), மிதமான சேமிப்புத் திறனுள்ள விதைகள் (பருத்தி, சோளம், கோதுமை), குறைந்த சேமிப்புத் திறனுள்ள விதைகள் (சோயா மொச்சை, வெங்காயம், எண்ணெய் வித்துகள்) என, மூன்று வகையாகப் பிரிக்கலாம். இந்த விதைகளின் இரசாயன வேற்றுமைகளே இதற்குக் காரணம்.

மரபியல் காரணிகள்

பயிர் இரகங்களைப் பொறுத்தும் சேமிப்புத் திறன் வேறுபடும். ஏனெனில், ஒவ்வொரு இரகமும் தனித்தனிப் பண்புகளைக் கொண்டிருக்கும். இதைப் போல, இந்தச் சேமிப்புத் திறனானது சாதாரண மற்றும் வீரிய இரகங்களுக்கு இடையேயும் வேறுபடும்.

விதைக் காரணிகள்

விதைகளின் மரபியல் தன்மைகளைத் தவிர, விதைகளின் தரம் மற்றும் குணங்களும், விதைகளின் சேமிப்புக் காலத்தை நிர்ணயிக்கும். அதாவது, நெல் விதைகளில் விதை உறையின் மேலுள்ள உமியைப் போன்ற அமைப்புகள், விதைகளில் பூசணத் தாக்குதல் வராமல் தடுத்து, விதைகளின் வாழ்நாட்களை நீட்டிக்கும். மேலும், கடின உறையுள்ள விதைகளை நீண்ட காலம் சேமிக்கலாம்.

விதைகளைக் கையாளும் போது அவற்றில் ஏற்படும் காயங்களும் சேமிப்புத் திறனைப் பாதிக்கச் செய்யும். மிகச் சிறிய விதைகளில் காயங்கள் அதிகமாக நிகழ்வதில்லை. ஆனால், பீன்ஸ், லைமா பீன்ஸ், சோயா மொச்சை போன்ற பெரிய விதைகளில் காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதைப் போல, உருண்டை வடிவ விதைகளை விட, தட்டை வடிவ விதைகளில் காயங்கள் குறைவாக ஏற்படுவதால், இவற்றை நெடுங்காலம் சேமிக்கலாம்.

சேமிப்புக்காக விதைகளை எடுத்துச் செல்லும் போது இருக்கும் அவற்றின் தரமும், விதைச் சேமிப்பின் தன்மையை நிர்ணயிக்கும். ஏனெனில், அறுவடை முடிந்து, உலர வைத்தல், சுத்திகரித்தல், தரம் பிரித்தல் போன்ற பல நிலைகளைக் கடந்து தான் விதைகள் சேமிப்புக்கு வருகின்றன. அந்த நிலைகளில், இயந்திரங்கள் அல்லது வேறு காரணங்களால் விதைகளின் நிறம், வடிவம் மற்றும் எடையில் பாதிப்பு ஏற்படலாம். இத்தகைய விதைகள் சேமிப்புக்கு ஏற்றவையல்ல. ஏனெனில், இவற்றின் சேமிப்புத்திறன் மெதுவாகக் குறைந்து கொண்டேயிருக்கும். எனவே, இவற்றை நெடுநாட்கள் சேமிக்க முடியாது.

ஈரப்பதத்தைப் பொறுத்தும் விதைகளின் சேமிப்புத் திறன் மாறுபடும். சேமிப்பில் உள்ள விதைகளில் ஈரப்பதம் மிகுந்தால், அவற்றின் சேமிப்புக் காலம் குறையும். அதாவது, ஈரப்பதத்தால் விதைகளின் மேல் பூசணங்கள் வளர்ந்து சேமிப்புத் திறனைக் குறைக்கும். அதேநேரம் ஈரப்பதம் நான்கு சதத்தை விடக் குறைந்தாலும் முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.

பத்து சத ஈரமுள்ள தானிய விதைகளை, 12-18 வரை மாதங்கள் சேமித்து வைக்கலாம். காற்றுப்புகாத கலன்களில் இந்த விதைகளின் ஈரப்பதம் 5-8 சதம் இருப்பது மிகச் சிறந்தது. எனவே, தகுந்த ஈரப்பதம் வரும் வரை விதைகளை நன்கு உலர வைத்து, பாதுகாப்பான முறையில் சேமிப்பது, விதைகளின் தரம் குறையாமல் இருக்க வழி வகுக்கும்.

பொதுவாக, விதைகள் குறிப்பிட்ட ஈரப்பதத்தை குறிப்பிட்ட வளிமண்டல ஒப்பு ஈரப்பதச் சூழ்நிலை மற்றும் வெப்ப நிலையைக் கொண்டிருக்கும். இந்த ஈரப்பதம் கூடினால் அல்லது வெப்பநிலை குறைந்தால், விதைகளின் சேமிப்புத் திறன் அல்லது ஆயுள் திறன் குறையத் தொடங்கி விடும்.

ஆகவே, விதையின் ஈரப்பதம் மற்றும் வெப்பத்தைக் குறைப்பது, விதைகளை நீண்ட காலம் சேமிப்பதற்குச் சிறந்த வழியாகும். விதையின் ஈரத்தை 1% குறைக்கும் போது, முளைப்புத்திறன் இரு மடங்கு கூடும் எனப் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அதைப் போல, வெப்பத்தை 5 டிகிரி செல்சியஸ் குறைக்கும் போதும், முளைப்புத்திறன் இரு மடங்காகக் கூடும்.

புறக்காரணிகள்

சேமிப்பின் போது பிராண வாயுவின் அழுத்தம் அதிகமானால் முளைப்புத் திறன் காலம் குறையும். நைட்ரஜன், கரியமில வாயுக்களின் அளவு கூடும் போது, முளைப்புத் திறன் அதிகமாகும். அதைப் போல, பாக்டீரியாக்கள், பூசணங்கள், பூச்சிகள், எலிகள் மற்றும் பறவைகள் அனைத்தும், ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் ஒப்பு ஈரப்பதத்தில் நெடுநாட்கள் வாழக் கூடியவை. சேமிப்புக் கிடங்கில் இத்தகைய தட்ப வெப்ப நிலை இருந்தால், இந்த உயிரிகளால் விதைகள் பாதிக்கப்பட்டு, முளைப்புத் திறனை இழக்கும். எனவே, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விதைச் சேமிப்பு மேலாண்மை

விதைகளின் சேமிப்புப் பலவாறு பாதிக்கப்படுவதால், சேமிப்புக் காலத்தில் விதைகளின் தரத்தைப் பாதுகாத்தல் அவசியம். இம்மேம்பாடு, கொள்கலன் தேர்வு, சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு, விதை நேர்த்தி என்னும் மூன்று முறைகளில் அடங்கும். சேமிப்புக் கொள்கலன்கள், ஈரப்பதத்துடன் கூடிய காற்றுப் புகும் பை, காற்று மற்றும் ஈரப்பதம் புகாத பை, காற்றுப் புகாத மற்றும் ஈரப்பதம் புகும் பை என மூன்று வகைப்படும்.

ஈரப்பதத்துடன் கூடிய காற்றுப் புகும் பை: இவ்வகைக் கொள்கலனில், வெளிக்காற்றின் ஈரப்பதம், விதைகளின் ஈரப்பதம் ஆகிய இரண்டுக்கும் இடையில் பரிமாற்றம் நடக்கும். வெளிக்காற்றின் ஈரப்பதத்தைப் பொறுத்து, விதைகளின் ஈரப்பதம் வேறுபடும். துணிப்பை, சாக்குப்பை போன்றவை இவ்வகையில் அடங்கும். ஈரப்பதம் மிகுந்த மற்றும் குறுகியகாலச் சேமிப்புக்கு உரிய விதைகளை, இவ்வகைக் கொள்கலன்களில் சேமிக்கலாம். ஆனால், இவ்வகையில், எலி மற்றும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

காற்று மற்றும் ஈரப்பதம் புகாத பை: இதில், வெளிக்காற்றின் ஈரப்பதத் தாக்குதல் இருப்பதில்லை. விதையின் ஈரப்பதம் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே இருக்கும். எடுத்துக்காட்டு: சீல் செய்யப்பட்ட அலுமினிய உருளை, டின் போன்றவை. ஈரப்பதம் குறைந்த மற்றும் நீண்டகாலம் சேமிக்கக் கூடிய விதைகளை, இத்தகைய கொள்கலன்களில் சேமிக்கலாம்.

காற்றுப் புகாத மற்றும் ஈரப்பதம் புகும் பை: இதில், காற்றுப் புகுவதில்லை. ஆனால், நீண்ட காலச் சேமிப்பில், காற்றின் ஈரப்பதப் பரிமாற்றம் நடைபெறும். இதனால், விதைகளின் ஈரப்பதத்தில் பெரிய மாற்றம் ஏற்படாது  என்றாலும், ஓரளவு மாறுபட வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டு: நெகிழிப் பைகள், அலுமினிய உறைகள். மத்திய காலத்தில், மத்திய ஈரப்பதத்தில் உள்ள விதைகளை இவ்வகையில் சேமிக்கலாம்.

பைகளின் அடர்வு அதிகமாக அதிகமாக, காற்று மற்றும் ஈரப்பதம் புகும் தன்மையும் குறையும். மேலும், எவ்வகைக் கொள்கலன் என்றாலும், அது நிறைய (Complete fill) விதைகளை இட்டுச் சேமிக்க வேண்டும். ஏனெனில், வெற்றிடம் இருந்தால் அங்கே காற்று நிரம்பி, விதைகளின் ஈரப்பதத்தைப் பாதிக்கச் செய்யும்.

விதைச் சேமிப்புக்கிடங்கு பராமரிப்பு

கிடங்கு தூய்மையாகவும், உலர்ந்தும் இருக்க வேண்டும். விதைப் பைகளை நேரிடையாகத் தரையில் இடக்கூடாது. மரப்பலகைகளின் மேல் தான் அடுக்க வேண்டும். அடுக்கும் உயரம் 6-8 பைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வெவ்வேறு விதைக் குவியல்களைத் தனித்தனியே வைக்க வேண்டும். மாலத்தியான் 50 இ.சி. மருந்தை 1:300 இராசயனம் : நீர் வீதம் கலந்து, ச.மீ.க்கு 5 லிட்டர் வீதம் தெளிக்க வேண்டும். அல்லது 0.25 சத நுவான் மருந்தை, 100 கன சதுர மீட்டருக்கு ஒரு லிட்டர் வீதம் எடுத்துக் கிடங்கில் தெளிக்க வேண்டும்.

வாராவாரம் மருந்துகளை மாற்றித் தெளித்தல் நல்ல பலனைத் தரும். ஒரு கன சதுர மீட்டர் குவியலுக்கு 3 கிராம் அலுமினிய பாஸ்பைட் வீதம் எடுத்துச் செலுத்த வேண்டும். இது, வருமுன் காக்கும் நடவடிக்கையாக அல்லது சிறியளவில் தாக்கியுள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதாக அமையும். மாதம் ஒருமுறை விதைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். விதை ஆய்வு முடிவின்படி, ஈரப்பதத்தை நீக்க, சூரிய ஒளியில் விதைகளை உலர்த்த வேண்டும். இப்படிச் செய்வது, கிருமி மற்றும் பூச்சித் தாக்குதலை நீக்கும்.

தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு, புதிய விதைக் குவியல்களை, பழைய குவியல்களிலிருந்து தள்ளி வைக்க வேண்டும். பூசணக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லியை, அதாவது, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம், 200 மி.கி. கார்பரில் வீதம் எடுத்து, இரண்டையும் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு குவியலையும் அவசியம் பார்வையிட வேண்டும். ஒருமுறை காற்றோட்ட வசதியை அதிகரிக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பைகளை மாற்றி அடுக்க வேண்டும்.

சாக்குப் பைகளுக்குப் பதிலாக நெய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பயன்படுத்தினால், விதைகளின் வாழ்நாள் அதிகமாகும். பூச்சிக் கொல்லிகள், பூசணக் கொல்லிகள், உரங்கள் மற்றும் தேவையற்றதை விதைகளுடன் சேமிக்கக் கூடாது. ஒவ்வொரு குவியலுக்கும் குறியீடு இட்டு, தகுந்த ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும். ஒரு ஏக்கர் அல்லது ஒரு எக்டர் அளவிலான விதைப் பைகளைச் சேமிப்பது, எளிதாகக் கையாளவும், பார்வையிடவும் வசதியாக இருக்கும்.

விதைநேர்த்தி

விதைகள் நெடுநாட்கள் கெடாமலும் தரமாகவும் இருக்க, அவற்றை நேர்த்தி செய்து சேமிக்க வேண்டும். இதற்கு, சேமிப்புக்கு முன், ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 2 கிராம் திரம் வீதம் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். இதற்குப் பதிலாக, விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோனேரினேற்றம் என்பது, கால்சிய ஆக்ஸிகுளோரைடு, அதாவது, பிளீச்சிங் பொடியையும், கால்சிய கார்பனேட்டையும் சமமாகக் கலந்து, காற்றுப்புகாத புட்டியில் ஒருவாரம் வைத்திருந்து, பிறகு அதிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் வீதம் எடுத்து விதைநேர்த்தி செய்வதாகும்.

இடைக்கால விதை நேர்த்தி

இது, சேமிப்பில் உள்ள விதைகளை 5-6 மாதங்கள் கழித்து, இரசாயனக் கரைசலில் ஊற வைத்து எடுத்து உலர வைப்பதாகும். இதனால், விதைகளின் சேமிப்புத் திறன் கூடும். இவ்வகையில், நெல், கம்பு, சோளம் போன்ற விதைகளை நேர்த்தி செய்யலாம். அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 36 மி.கி. டை-சோடியம் பாஸ்பேட் வீதம் எடுத்துக் கலந்து கரைசலைத் தயாரிக்க வேண்டும். இந்தக் கரைசல் இரண்டு பங்குக்கு, ஒரு பங்கு விதைகள் வீதம் கலந்து ஆறு மணி நேரம் ஊற வைத்து, பிறகு நிழலில் உலர்த்த வேண்டும்.


முனைவர் ச.கவிதா,

முனைவர் வே.மனோன்மணி, விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை,

முனைவர் ஆ.தங்கஹேமாவதி, தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks