பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு, 17-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. உலகின் மொத்த மரவள்ளி உற்பத்தியில் 20 சதவீதத்துடன், நைஜீரியா முதன்மை வகிக்கிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில், குறிப்பாக, கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரத்தில், அதிகளவில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
இவற்றில் தமிழ்நாடு, உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்து இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மரவள்ளிக் கிழங்கு ஆராய்ச்சிக்கு என, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மரவள்ளி, வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த தட்பவெப்ப நிலையில், நன்கு வளரக் கூடியது. பொதுவாக, வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. முள்ளுவாடி 1, மரவள்ளி ஒய்.டி.பி.1, ஒய்.டி.பி.2, ஸ்ரீஅதுல்யா, ஸ்ரீகாவேரி போன்றவை, முக்கிய இரகங்கள் ஆகும்.
மரவள்ளியில் உர மேலாண்மைஅடியுரமாக இடும் வேப்பம் புண்ணாக்கு, மண்ணில் மரவள்ளிக்குத் தீமை செய்யும் வகையில் வளரும் பூச்சிகளுக்கும், நுண்ணுயிரிகளுக்கும் எதிராகச் செயல்படும். எனவே, மண்ணில் பூச்சிகளின் பெருக்கம் தடுக்கப்படும். எனவே, மானாவாரி சாகுபடியில், யூரியாவை இடும் போது, 10 கிலோ யூரியாவுக்கு 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் கலந்து அடியுரமாக இட வேண்டும். 165 கிலோ சூப்பர் பாஸ்பேட், 85 கிலோ பொட்டாசையும் அடியுரமாக இட வேண்டும். பிறகு, 100 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட வேண்டும். இதனால், மரவள்ளிக் கிழங்கின் மகசூல் சிறப்பாக இருக்கும்.
மரவள்ளியில், தழை, மணி மற்றும் சாம்பல் சத்துடன், நுண் சத்துகளும் அவசியம். மரவள்ளியில், தழைச்சத்துப் பற்றாக்குறையால், முதிர்ந்த இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். இலை நுனி வெளிரி, இலை முழுவதும் பரவும். சாம்பல் சத்துப் பற்றாக்குறையால், இலை நுனி மற்றும் இலை ஓரங்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறிக் கருகும். பிறகு, இலை முழுவதும் கருகி உதிர்ந்து விடும்.
இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துப் பற்றாக்குறையால், இலைகள் வெளியில் பச்சை நிறமாக அல்லது மஞ்சள் நிறமாக மாறும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் இரும்பு சல்பேட், 5 கிராம் துத்தநாக சல்பேட், 20 கிராம் யூரியா வீதம் கலந்து, நடவு செய்த, 60, 75 மற்றும் 90 நாட்களில், பயிரின் மீது தெளிக்க வேண்டும்.
மரவள்ளி பூஸ்டர்
மேலும், மரவள்ளியில் ஏற்படும் நுண்சத்துப் பற்றாக்குறையைச் சரி செய்ய, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், மரவள்ளி பூஸ்டரை வெளியிட்டுள்ளது.
+ இந்த பூஸ்டரை, ஏக்கருக்கு 5 கிலோ வீதம் எடுத்து, நடவு செய்த, 2, 3 மற்றும் 4-ஆம் மாதத்தில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம், நுண்சத்துப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தலாம்.
+ இதன் மூலம், 20 சதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும்.
+ இந்த மரவள்ளி பூஸ்டரை, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.