வாழைத்தார் பாதுகாப்பு உறைகள்!

வாழை Banana Fruit Protection Cover

செய்தி வெளியான இதழ்: 2017 மே.

வாழையில் மாவுச்சத்தும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. வாழை, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகளின் சிறந்த மூலமாகும். அறுவடைக்கு முந்தய செயல் முறைகள், பழத்தின் வெளிப்புறத் தோற்றத்தையும் விற்பனைத் தரத்தையும் அதிகளவில் அதிகரிக்கின்றன.

போட்டி மிகுந்த ஏற்றுமதி சந்தைகளில், வாழைப்பழத் தோலின் தோற்றம், மிகவும் முக்கியமானது. இந்தத் தோற்றத்தைப் பாலி எத்திலீன் என்னும் பொருளால் ஆன வாழைத்தார் உறை வழங்குகிறது. விற்பனைத் தரத்தையும் மகசூலையும் பெருக்குவதே, உறையிடுதலின் முக்கிய நோக்கம். ஆகவே, இந்த உறைகளின் பயன்பாடு, வாழை விவசாயிகளிடம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில், பழ உற்பத்தியில் மாம்பழத்துக்கு அடுத்த இடத்தை வாழை பெறுகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் அதிகப் போஷாக்குள்ள பழம் என்பதால், இதன் பயன்பாடு அதிகளவில் உள்ளது. வாழைப்பழமாக நேரடியாகவும், வாழைக்காயாகச் சமைத்தும் உண்ணப்படுகிறது. எளிதில் செரிக்கக்கூடிய கொழுப்பற்ற பழமாகும்.

வணிகர்களின் முக்கியத் தேவை, சீரான அளவுள்ள, ஒத்த நிறமுள்ள, புள்ளிகளற்ற தோலுள்ள பழங்களாகும். பல்வேறு வகையான இயந்திரக் காயங்களாலும், பூச்சிகளின் சேதத்தாலும், மென்மையான பழத்தோலில் ஏற்படும் மாற்றங்களால், நல்ல தரமுள்ள பழங்களை, சந்தைகளுக்கு வழங்க இயலாமல் போகிறது. காற்றும் பூச்சிகளுமே தோல் சேதமாவதற்கான முக்கியக் காரணிகளாகும்.

உலகம் முழுவதுமுள்ள வாழை விவசாயிகளுக்கு எப்போதும் உள்ள முக்கியமான அச்சுறுத்தல் காற்றாகும். காற்றானது, பல்வேறு வழிகளில் பழத்தின் மேற்புறத்தோலைச் சேதமடையச் செய்கிறது. காற்றால் அடித்து வரப்படும் தூசு, குப்பை போன்றவை, மென்மையான தோலின் மீது படும் போது செல்கள் சேதமாகின்றன. அதனைத் தொடர்ந்து பழங்களிலும் கீறல்கள் விழுகின்றன. வளர்ந்து வரும் வாழைக் குலையின் மேல், அருகிலிருக்கும் இலைகள் மற்றும் இலைக்காம்புகள் காற்றினால் உரசும் போது, தோலில் கணிசமான அளவில் சேதம் ஏற்படுகிறது.

இதைப்போல, பழத்தோல் சிதைவதற்குப் பூச்சிகளின் தாக்கமும் காரணமாக உள்ளது. பூச்சிகளின் தாக்கம் நிறைந்துள்ள பகுதிகளில், சேதமில்லாத பழங்களைப் பெறுவது மிகவும் கடினமாகும். அறுவடைக்கு முன் ஏற்படும் பூச்சிகளின் தாக்கம், பழங்களின் விற்பனைத் தரத்தைக் குறைப்பதால், குறிப்பிடத்தக்க அளவில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

தொன்மையான செயல்முறை

தாருக்கு உறையிடுதல் என்பது, தொன்மையான செயல் முறையாகும். பழைய வாழை இலைகளைக் கொண்டு முதிர்வடையும் நிலையில் இருக்கும் குலைகளை மூடி வைக்கும் பழக்கம், பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இன்று பாலி எத்திலீன் உறைகள் உலகளவில் வாழை உற்பத்திப் பகுதிகளில் பயன்படுகின்றன. பல நிறங்களில் இவ்வுறைகள் இருப்பினும், வாழை உற்பத்தியில் பயன்படுபவை நீலநிற உறைகள் மட்டுமே.

சமீபத்திய ஆண்டுகளில், நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களுடன், ஒரு பகுதியில் சில்வர் பூச்சைக் கொண்ட உறைகள் பயன்படுகின்றன. வெவ்வேறு வண்ண உறைகள் குலை முதிர்வை மதிப்பீடு செய்ய உதவுகின்றன. உறைகளின் மீதுள்ள சில்வர் பூச்சு, சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயனளிக்கிறது.

தார் உறையானது பழத்தின் மேற்புறத்தில் ஏற்படும் பலவகைத் தாக்கங்களான, காற்று, இலை மற்றும் இலைக்காம்பு உரசல், தூசு, சூரியஒளி, பறவைக் கொத்தல் மற்றும் அறுவடை நேரங்களில் கையாளுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. பூச்சிகளின் தாக்குதலில் இருந்து குறிப்பிடத் தகுந்த அளவு விடுபெற, மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற உடனே வாழைக்குலையை உறையால் மூடிவிட வேண்டும்.

அறுவடைக்குப் பின் ஏற்படும் ஆந்தரக்நோஸ் நோயின் தாக்கம், உறையிடப்பட்ட குலைகளில் சிறிதளவே ஏற்படும். விற்பனைத்தரம் மற்றும் மகசூலை அதிகப்படுத்துவதே உறையிடுதலின் நிகர விளைவாகும், முக்கிய நோக்கமாகும்.

வாழைத்தார் உறைகள் மெல்லிய நெகிழியால், அதாவது குறைந்த அடர்த்தியுள்ள 5 முதல் 40 மைக்ரான் வரையுள்ள பாலி எத்திலீனால் உருவாக்கப் படுகின்றன. சராசரியாக இது 81.3 முதல் 91.4 செ.மீ., அதாவது, 32 முதல் 36 அங்குல அகலத்திலும், 1 முதல் 1.5 மீட்டர், அதாவது, 3.3 முதல் 5 அடி நீளத்திலும் இருக்கும். வாழைத்தார் உறைகள் பொதுவாக வெள்ளை மற்றும் வெளிர் நீலத்தில் இருக்கும்.

இந்த நெகிழி மீது, சூரிய வெப்பத்தை எதிரொளிக்கும் வகையில், சில்வர் பூச்சுப் பூசப்பட்டு இருக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பரிந்துரை செய்யப்படும் வாழைத்தார் உறையானது வேறுபடும். துளையற்ற, அடர்த்தியான உறைகள், குளிரான மிதவெப்ப மண்டலப் பகுதிகளுக்கு மிகவும் ஏற்றவை. இதேபோல் வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு, உறையின் உள்ளே வெப்பத்தை உருவாக்கும் வகையிலான உறைகள் ஏற்றவை.

துளையற்ற, அடர்த்தியான உறைகள், அவற்றினுள்ளே அதிக வெப்பத்தையும், ஈரப்பதத்தையும் உருவாக்கும். அடர்த்தியற்ற, துளையுள்ள உறைகள் காற்றோட்டத்திற்கு வசதியாக உள்ளதால், வெப்ப மண்டலப் பகுதிகளுக்குச் சிறந்தவையாகும்.

துளையுள்ள வாழைத்தார் உறையின் வடிவமானது, பயிரிடப்படும் இடங்களுக்கு ஏற்ப வேறுபடும். பொதுவாக வெப்ப மண்டலங்களில் பயன்படுத்தப்படும் வாழைத்தார் உறைகள், ஊசித் துளைகளை, அதாவது, 0.47 செ.மீ. அளவுள்ள துளைகளையும், மற்றும் 1.27 செ.மீ. அளவுள்ள துளைகளையும் கொண்டிருக்கும்.

நன்மைகள்

அதிக மகசூல், குறிப்பாகப் பெரிய அளவுள்ள பழங்கள் கிடைக்கும். ஒத்த அளவுள்ள பழங்கள் உருவாகும். இயந்திரச் சேதங்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும். பழங்களின் புறத்தோற்றம் நன்றாக இருக்கும்.

உறையிடும் காலம்

பூக்காம்பிலை விழுந்து, அனைத்துச் சீப்புகளிலும் விரல்கள் மேல்நோக்கிச் சுருளும் போது, வாழைக்குலையை உறையால் மூட வேண்டும். இந்தநிலை உருவாக 2-3 வாரங்களாகும். வெவ்வேறு நிற உறைகளை மஞ்சரிக் காம்பில் இட வேண்டும். உறையிடுதலில் இருந்து இரண்டு மாதத்தில் வாழைக்குலை அறுவடைக்குத் தயாராகி விடும்.

உறையிடும் முறை

வாழைத்தார் உறையானது தகுந்த அகலத்துடன் தொடர்ச்சியாக ஒரு குழலைப் போலப் புனையப் பெற்றிருக்கும். இக்குழலை 1 முதல் 1.5 மீட்டர் நீளத்துக்கு, அதாவது, குலையின் நீளத்துக்கு ஏற்ப வெட்ட வேண்டும். குலையின் அடிப்பாகம் வழியாக உறையைச் செலுத்தி, குலையின் முதல் சீப்புக்கு மேல் நன்கு கட்டிவிட வேண்டும்.

குலையின் கீழ்ப்பாகத்தில் உறையைக் கட்டாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். மேலும், உறையின் அடிப்பாகம் குலையின் கடைசிச் சீப்பிலிருந்து 6 அங்குலத்துக்குக் கீழாக இருக்குமாறு வைக்க வேண்டும். குலையில் 7 சீப்புகளுக்கு அதிகமாக இருப்பின், ஆண் பூமொட்டை நீக்கிவிட வேண்டும். இதனால், குலையின் எடை அதிகரிப்பதுடன் நல்ல பழங்களும் கிடைக்கும்.

வாழைத்தார்களைப் பலவகையான இயற்கைத் தாக்கங்கள் மற்றும் பூச்சிகளிடமிருந்து இந்த உறைகள் காக்கின்றன. இதனால், நல்ல புறத்தோற்றம், சீரான முதிர்ச்சி மற்றும் பழுத்தல், தரமுள்ள தோல், ஒத்த அளவுள்ள பழங்கள் ஆகியன கிடைக்கப் பெறுவதால், இவற்றின் பயன்பாடானது வாழை விவசாயிகளுக்கு மிகுந்த நன்மையைப் பயக்கும்.


முனைவர் ம.இராஜசேகர், க.கோவிந்தன், சா.வி.கோட்டீஸ்வரன், துல்லியப் பண்ணைய மேம்மபாட்டு மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 641 003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading