பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

பயிர்ப் பாதுகாப்பு crop protection

மிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இவ்வகையில், பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மையில், நச்சு மருந்துகளைக் கையாளும் போது, தங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் மேற்கொள்வதில்லை. இதனால், பெரும் பின்விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைத் தெளிக்கும் போது, கையாள வேண்டிய முறைகளைத் தெரிந்து கொண்டு அவற்றைப் பின்பற்ற வேண்டும்.

மருந்துகளைத் தெளிக்குமுன் கவனிக்க வேண்டியவை

நோயாளிகள், உடலில் புண் உள்ளவர்கள், சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் மதுக் குடிப்போரை, மருந்தைத் தெளிக்கவோ, தூவவோ அனுமதிக்கக் கூடாது. மருந்தை அடிப்பதற்கு முன், பறிக்கும் நிலையிலுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களைப் பறித்து விட வேண்டும். தெளிப்புக் கருவிகள் மற்றும் தூவும் கருவிகள் எப்போதும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

எஞ்சியுள்ள தெளிப்பு மருந்தை நான்றாக மூடி வைக்க வேண்டும். இந்த மருந்துகளை ஒரு புட்டியிலிருந்து இன்னொரு புட்டிக்கு மாற்றக் கூடாது. மருந்துப் புட்டிகளில் ஒட்டியிருக்கும் தகவல்களைக் கவனமாகப் படித்து அதன்படி நடக்க வேண்டும். உணவுப் பொருள்களின் அருகிலும், கால்நடைத் தீவனங்களின் அருகிலும் மருந்துகளை வைக்கக் கூடாது.

சமையல் அறை, படுக்கை அறையில் இவற்றைச் சேமித்து வைக்கக் கூடாது. மேலும், இந்த மருந்துகளைக் குழந்தைகள், கால்நடைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். சில்லரையாக வாங்கிய தூள் மருந்து மற்றும் குருணைகளை, காற்றுப் புகாமல் டின்களில் அடைத்து மூடி வைக்க வேண்டும். அவற்றின் மீது மருந்தின் பெயரை எழுதி வைக்க வேண்டும்.

மருந்துகளைத் தெளிக்கும் போது கவனிக்க வேண்டியவை

மருந்தடிக்கும் முன், உடல், தலை, மூக்கைத் துணியால் மூடிக் கொண்டு பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும். எந்த வகைப் பயிருக்கு எந்த வகை மருந்தைத் தெளிப்பது என்று நன்கு கேட்டறிந்து பயன்படுத்த வேண்டும். சரியான ஆலோசனை இல்லாமல் நம் விருப்பம் போலத் தெளிக்கக் கூடாது.

பூச்சிக்கொல்லி மற்றும் பூசணக்கொல்லி மருந்துடன் இணையும் மருந்துகளை அறிந்து பயன்படுத்த வேண்டும். களைக்கொல்லியை அடிக்கப் பயன்படுத்திய தெளிப்பானை, பூசணக்கொல்லி மருந்தைத் தெளிக்கப் பயன்படுத்தக் கூடாது. எக்காரணம் கொண்டும் கைகளால் மருந்தை எடுக்கக் கூடாது; கரண்டியால் எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

சில மருந்து வகைகள் கரையாமல் அடியில் தங்கி விடும். ஆகவே, அத்தகைய மருந்துக் கலவையைக் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். திரவமாக இருந்தாலும் தூளாக இருந்தாலும், சரியான அளவில் மருந்தை எடுத்து, தேவையான நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைப் பயிர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, நாய், கோழி ஆகியவற்றில் காணப்படும் பூச்சி, நோய்களை அழிக்கப் பயன்படுத்தக் கூடாது. மழைக் காலத்தில் மருந்துகளைத் தெளிக்கவோ, தூவவோ கூடாது. காலை அல்லது மாலை நேரத்தில் மருந்தடிப்பது நல்லது. ஒருவரே தொடர்ந்து மருந்தடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மருந்துகளை அடித்துக் கொண்டிருக்கும் போதே, சாப்பிடவோ, புகைப் பிடிக்கவோ, வெற்றிலை போடவோ கூடாது. தூவும் மருந்துகளை, அதிகாலையில் பனிப்பதத்தில் தூவினால் நல்ல பலன் கிடைக்கும். இலைகளில் பனித்துளி இல்லாத போது மருந்தைத் தெளிக்க வேண்டும். மருந்தடிப்பில் பயன்படுத்திய பாத்திரங்களை, மற்ற பயன்பாட்டுக்கு, குறிப்பாக, சமையல் மற்றும் சாப்பிடுவதற்குப் பயன்படுத்தக் கூடாது.

பயிர்கள் முழுவதும் நன்கு படும்படி மருந்தை அடிக்க வேண்டும். கால்நடைகளின் தீவனப் பயிர்களில் படாமல் மருந்தை அடிக்க வேண்டும். ஆறு, ஏரி, குளங்களில் மருந்தைத் தெளிக்கவோ, தூவவோ கூடாது. இதனால், நீரைப் பருக வரும், ஆடு, மாடு, மனிதர்கள் மற்றும் மீன்களுக்கு ஆபத்து ஏற்படும். காற்றுக்கு எதிர் திசையில் நின்று கொண்டு மருந்தைத் தெளிக்க கூடாது.

மருந்தைத் தெளித்தபின் கவனிக்க வேண்டியவை

மருந்து முழுவதையும் பயன்படுத்திய பிறகு, அந்த மருந்துப் புட்டியை உடைத்துப் புதைத்து விட வேண்டும். மருந்தடித்த வயல்களில் ஆடு, மாடுகள் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆறு, குளம், ஏரி, கிணறு, வாய்க்காலில் குளிக்கவோ, கை கால்களைக் கழுவவோ, தெளிப்பானைக் கழுவவோ கூடாது.

பூச்சி, பூசண மருந்துகள் வயல் வரப்புகளில் சிதறியிருந்தால் அவற்றை உடனே மண்ணால் மூடிவிட வேண்டும். மருந்தடித்த வயல்களில் காய்கறி, பழங்களைப் பறிக்கக் கூடாது. மருந்தடித்த பிறகு தெளிப்பானை நீரில் நன்றாகக் கழுவி வைக்க வேண்டும். மருந்து கலந்த விதைகளை உணவில் பயன்படுத்தக் கூடாது.


பயிர்ப் பாதுகாப்பு RAM JEGATHEESH 2

முனைவர் இரா.இராம் ஜெகதீஷ், முனைவர் ஐ.ஜான்சன், முனைவர் ஆ.யுவராஜா, தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading