மண்ணில், மண்புழுக்கள், கரையான்கள், மரவட்டைகள், பூரான்கள் என்று பலவும் உள்ளன. இவற்றில், கரையானைப் பற்றிய தவறான கருத்து ஒன்று உண்டு.
அதாவது, கரையான் செடிகளைத் தின்று விடும் என்பது. அதனால், கரையானைக் கொல்வதற்கு டன் கணக்கில் நிலத்தில் நஞ்சைக் கொட்டி வருகிறோம்.
ஆனால், உண்மையில் கரையான்கள், இறந்த தாவரங்களை மட்டுமே உண்ணும்.
உயிருள்ள செல்களை உண்ணும் வாயமைப்பு கரையானுக்குக் கிடையாது.
செல்லுலோஸ் என்னும் தாவரங்களின் இறந்த உடற் பொருளை அரைத்து உண்ணும் வகையில் தான் கரையானின் வாயமைப்பு உள்ளது.
கரையான், கரப்பான் பூச்சிக் குடும்பத்துக்கு நெருக்கமானது. எறும்புகளைப் போல் கூட்டமாக வாழும்.
கூட்டுக் குடும்பமாக இணைந்து வாழும். இதனால் தனித்து வாழ இயலாது.
கரையான்கள் இல்லா விட்டால் இந்த உலகம் முழுவதும் குப்பை மேடாக மாறியிருக்கும்.
காடுகளில் விழுந்து காய்ந்து கிடக்கும் மரங்கள், இலைகள், காய்ந்த சருகுகள் என, அனைத்து மட்கும் பொருள்களையும் கரையான்கள் தின்னும்.
அதாவது, மறுசுழற்சி செய்து இந்த பூமியை உயிரோட்டம் மிக்கதாக வைக்கும்.
கரையான்களிலும் இராஜா இராணிகள் உண்டு. இவர்கள் தான் வேலைக்கார கரையான்களை உருவாக்குவர்.
இந்த வேலையாட்களில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவின் வேலை, உணவைத் தேடுவது மற்றும் கொண்டு வந்து சேர்ப்பது.
மற்றொரு பிரிவின் வேலை, படைவீரர்களாக இயங்கிக் கூட்டத்தைக் காப்பது.
கூட்டு வாழ்க்கை நடத்தும் கரையான்கள் வேளாண்மையில், மண்வளப் பணியில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
அதாவது, மண்ணில் துளையிட்டுக் காற்றோட்டத்தை ஏற்படுத்தும். மண்ணுக்குள் நீர் இறங்க உதவும்.
கரையான் புற்றுமண், உடல் நலத்தில் முக்கியப் பங்கை வகிக்கிறது. மண் குளியல் எனப்படும், இயற்கை மருத்துவ சிகிச்சைக்கு அடிப்படை இந்தப் புற்றுமண் தான்.
கோழிகளுக்கு, குறிப்பாக இளம் குஞ்சுகளுக்குக் கரையான்கள் மிகச் சிறந்த தீனி.
ஒரு பானையில் கிழிந்த சாக்கு, துணிகளைப் போட்டு, கொஞ்சம் சாண நீரையும் ஊற்றித் தரையில் கவிழ்த்து வைத்தால்,
ஒரு வாரத்தில் பானைக்குள் ஏராளமான கரையான்கள் உருவாகி விடும். இவற்றை உண்ணும் கோழிக் குஞ்சுகள் மிக வேகமாக வளரும்.
தொகுப்பு: பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!