மலைப்பகுதியில், மளமளவென விளையும் சாமைப் பயிர். வறட்சியைத் தாங்கி வளரும் இப்பயிர், குறுகிய காலத்தில் நல்ல விளைச்சலைத் தரும். தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ முப்பதாயிரம் எக்டர் பரப்பில் சாமை விளைகிறது. அதிலும், ஜவ்வாது மலை விவசாயிகளின் வாழ்வாதாரமே இந்தச் சாமை தான். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பல்வேறு முயற்சிகளால் இப்பகுதியில் கோ.4 சாமை இரகம் உழவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் அமோக மகசூலையும் தந்திருக்கிறது.
பொதுவாக, ஆடிப் பட்டத்தில் தான் சாமையை மானாவாரியில் விதைப்பார்கள். ஆனால், ஜவ்வாது மலை விவசாயிகள் நல்ல மழை பெய்தால், வைகாசிப் பட்டத்திலேயே விதைத்து விடுகின்றனர்.
ஏ.டி.எல்.1 சாமையின் சிறப்புகள்
இதன் வயது 85-90 நாட்களாகும். அதிக மகசூலைத் தரவல்லது. வறட்சியைத் தாங்கி வளரும். கரிப்பூட்டை, இலையுறை அழுகல் ஆகிய நோய்களைத் தாங்கி வளரும். சாயாது. கதிர்கள் ஒரே சமயத்தில் சீராக முதிரும். எந்திரம் மூலம் அறுவடை செய்யலாம். அரிசி 66.3 சதம் கிடைக்கும். சத்தான தானியம். கால்நடைகள் விரும்பி உண்ணும் வகையில் இதன் தட்டை சுவையாக இருக்கும்.
பருவம்: மானாவாரி: ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம்
தமிழகத்தில் சாமை தனிப் பயிராகவே பயிரிடப்படுகிறது. மலைப் பகுதிகளில் துவரை, அவரை, பேயெள், சோளம், கடுகு ஆகியவற்றுடன் கலப்புப் பயிராக விதைக்கப்படுகிறது. இந்த வழக்கம் மலைவாழ் மக்களிடம் உள்ளது. இவ்வாறின்றி, சாமையை, துவரை அல்லது அவரை அல்லது பேயெள் அல்லது கடுகுடன் 8:2 வீதம் ஊடுபயிராக விதைப்பது அதிகப் பலனைத் தரும்.
நிலம் தயாரித்தல்
முந்தைய பயிர் அறுவடைக்குப் பின் நிலத்தை உழவு செய்தால் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கலாம். எனவே, சித்திரை, வைகாசி மாதங்களில் இறக்கைக் கலப்பை அல்லது மரக்கலப்பையால் இரண்டு முறை, நன்கு ஆழமாக உழ வேண்டும். விதைப்பதற்கு முன்பு, மறுபடியும் ஒருமுறை உழுது நிலத்தைச் சமன் செய்ய வேண்டும். சாமை விதை மிகச் சிறியதாக இருப்பதால் அது முளைத்து வெளிவர 5-7 நாட்களாகும்.
விதை மற்றும் நிலத்தை நல்ல முறையில் தயார் செய்தால் தான் களைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையும். மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும். விதைகள் நன்கு முளைத்து வரும். மேலும், 2-3 முறை இடையுழவு செய்வதால் களைகள் கட்டுப்படும். நிலம் நல்ல காற்றோட்டமாக, பயிர் செழித்து வளர்வதற்கு ஏற்ற பதத்தில் இருக்கும்.
விதையளவு, இடைவெளி, விதைப்பு முறை
பொதுவாகச் சாமையானது, கை விதைப்பு முறையில் தூவப்படுகிறது. இதற்கு எக்டருக்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும். ஆனால், இம்முறையில் பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்காது. வரிசையில் விதைக்க எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். கொர்ரு அல்லது விதைப்பான் மூலம் வரிசையாகவும், அதிகப் பரப்பிலும், மண் ஈரம் காயும் முன் விதைக்கலாம். விதைகளை 2.5 செ.மீ. ஆழத்தில், வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ., பயிருக்குப் பயிர் 7.5 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
விதைநேர்த்தி
இலையுறை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் வீதம் கலக்கலாம். குருத்து ஈயைக் கட்டுப்படுத்த, ஒரு விதைக்கு 4 மி.லி. குளோரிபைரிபாஸ் 25 இசி அல்லது பாசலோன் 35 இசி வீதம் கலக்கலாம். மேலும், எக்டருக்குத் தலா மூன்று பொட்டலம் அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டீரியா வீதம் கலந்து விதைக்க வேண்டும்.
உர நிர்வாகம்
கடைசி உழவுக்கு முன், நன்கு மட்கிய தொழுவுரத்தை, எக்டருக்கு 5 டன் வீதம் இட வேண்டும். மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். இல்லா விட்டால், எக்டருக்கு 40:20:20 கிலோ தழை மணி சாம்பல் ஆகிய சத்துகள் தேவைப்படும். இவற்றில், மணி மற்றும் சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும்.
தழைச்சத்தில் பாதியை அடியுரமாகவும், மீதியை இரண்டாகப் பிரித்து, விதைத்த 25-30 மற்றும் 40-45 நாட்களில் மேலுரமாகவும் இட வேண்டும். பருவமழை சரியாக இல்லையெனில், மேலுரமாக இடுவதற்காக எடுத்து வைத்துள்ள தழைச்சத்து முழுவதையும் ஈரம் இருக்கும் போது ஒரே தடவையில் இட்டு விடலாம்.
களை நிர்வாகம்
வரிசை விதைப்புச் செய்திருந்தால் 2-3 முறை இடையுழவு செய்த பிறகு, ஒருமுறை கைக்களை எடுக்க வேண்டும். கை விதைப்பு முறையில் இடையுழவு செய்ய இயலாது. அதனால், இரண்டு முறை கைக்களை எடுக்க வேண்டும்.
பயிர்களைக் களைதல்
முதல் களை எடுத்ததும் அல்லது விதைத்த இருபதாம் நாளில், வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ., பயிருக்குப் பயிர் 7.5 செ.மீ. இடைவெளியில் பயிர்களைக் கலைக்க வேண்டும். அந்தப் பயிர்களைக் கொண்டு பயிர்கள் இல்லாத இடங்களில் நடவு செய்யலாம்.
மண் மற்றும் ஈரப்பதத்தைக் காத்தல்
பொதுவாக, சாமை மானாவாரிப் பயிராகவே இடப்படுகிறது. இதில், நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமெனில், மண்ணையும் அதன் ஈரத்தையும் பாதுகாப்பது அவசியம். இதற்கு, முந்தைய பயிர் அறுவடை முடிந்த பிறகு, அந்த நிலத்தை உழ வேண்டும். அல்லது கோடையுழவு செய்ய வேண்டும். நிலச் சரிவுக்குக் குறுக்கில் உழ வேண்டும். நிலச் சரிவுக்கு ஏற்ப, 10-12 மீட்டர் இடைவெளியில் தடுப்பு வரப்புகளை அமைக்க வேண்டும். 3.3-4.0 மீட்டர் இடைவெளியில் ஆழச்சால்களைப் போட வேண்டும்.
நீர்
சாமைப் பயிர் நன்கு வளர்வதற்கு 300-350 மி.மீ. மழை தேவைப்படுகிறது. விதைக்கவும், விதைகள் முளைக்கவும் ஈரப்பதம் அவசியம். மேலும், பயிர்கள் பூக்கும் போதும், பால் பிடிக்கும் போதும் மண்ணில் போதிய ஈரப்பதம் அவசியம் இருக்க வேண்டும். தேவையான அளவு ஈரப்பதம் மண்ணில் இல்லையெனில், பண்ணைக் குட்டைகளில் சேமிக்கப்பட்ட மழைநீரைப் பயன்படுத்த வேண்டும். இந்நீரைத் தெளிப்பான் மூலம் பயிர்களுக்குத் தர வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
இலையுறை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, புடைப் பருவத்தில், எக்டருக்கு ஒரு கிலோ மாங்கோசெப் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும். குருத்து ஈக்களைக் கட்டுப்படுத்த, விதைத்த 15 நாளில், எக்டருக்கு 250 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 இசி வீதம் எடுத்துத் தெளிக்கலாம்.
அறுவடை, மகசூல், சேமிப்பு
தாள் மஞ்சளாகவும், கதிர்கள் பழுப்பு நிறமாகவும் மாறியதும் அறுவடை செய்யலாம். பிறகு, கதிர்களைக் களத்தில் காய வைத்து அடித்து, தானியங்களைப் பிரித்து, நன்றாகக் காய வைத்துச் சுத்தம் செய்து, சாக்குப் பைகள் அல்லது பல்வேறு வகையான சேமிப்புக் கலன்களில் சேமிக்க வேண்டும். இதுவரை கூறிய முறைகளில், உயர் விளைச்சல் இரகங்களைப் பயிரிட்டால், எக்டருக்குச் சுமார் 1,587 கிலோ தானியமும், 3,000-4,000 கிலோ தட்டையும் கிடைக்கும்.
சந்தை நிலவரம்
ஒரு கிலோ சாமை 35-40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தற்போது, சாமை மற்றும் பிற குறு தானியங்களில் உள்ள சத்துகள் மற்றும் அவற்றின் நன்மைகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இதன் தேவை மேலும் கூடும் என்பதால், சாமையின் விலை மேலும் உயரும். எனவே, உழவர் பெருமக்கள் சாமையை அதிகளவில் பயிரிட்டுப் பயன் பெறலாம்.
ஜவ்வாதுமலை விவசாயிகள் அனைவரும் ஒரே நேரத்தில் சாமையை விதைத்து அறுவடை செய்கிறார்கள். இதனால், சாமை விற்பனையில் சிக்கல் ஏதுமில்லை என்றாலும், சரியான முறையில் தானியத்தை அடித்துக் காய வைத்து, தரம் பிரித்து, மூட்டைகளில் இட்டு, தரகர்களைத் தவிர்த்து, ஒரு குழுவாக விற்பனைக்குக் கொண்டு வந்தால், மேலும் அதிக இலாபம் பெறலாம். சாமையைப் போலவே அதன் வைக்கோலுக்கும் நல்ல விலை கிடைப்பது இதன் சிறப்பாகும்.
சுமார் 85-90 நாட்களில் விளையும் ஏ.டி.எல்.1 இரகச் சாமையை, ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரியில் விதைத்தால், அடுத்து வரும் பனியிலேயே விளையக் கூடிய, கொள்ளு போன்ற பயறுவகைப் பயிரை இரண்டாம் போகமாக விதைத்து, கூடுதல் வருமானத்தைப் பெறுவதுடன், மண் வளத்தையும் கூட்டலாம்.
முனைவர் ஆ.தங்க ஹேமாவதி, உதவிப் பேராசிரியர்,
பயறுவகைத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம். கோயம்புத்தூர்.
முனைவர் அ.நிர்மலகுமாரி, பேராசிரியர் மற்றும் தலைவர்,
சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல்.
சந்தேகமா? கேளுங்கள்!