குதிரைவாலி வறட்சியைத் தாங்கி வளர்வதால் மானாவாரிப் பயிராகப் பயிரிடப்படுகிறது. நீர்த் தேங்கும் ஆற்றுப் படுகையிலும் ஓரளவு வளரும்.
மணல் கலந்த களிமண் நிலத்தில் நன்கு வளரும். கற்கள் நிறைந்த மண் மற்றும் சத்துகள் குறைந்த மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல.
வெப்பம் மற்றும் வெப்பம் சார்ந்த கால நிலையில் நன்கு வளரும். மற்ற பயிர்களைக் காட்டிலும் மாறுபட்ட தட்ப வெப்ப நிலைகளைத் தாங்கி வளரும்.
இதைத் தானியப் பயிராக, தீவனப் பயிராக வளர்க்கலாம்.
தமிழ்நாட்டில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல்,
தேனி, இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் குதிரைவாலி பரவலாக விளைகிறது.
இதில், மற்ற தானியங்களுக்கு இணையான சத்துகளுடன், நூறு கிராம் குதிரைவாலியில் 12.5 மி.கி. வீதம் இரும்புச் சத்தும் உள்ளது.
புரதம் 40 சதம் உள்ளது. ஏழைகளின் உணவாக விளங்கும் குதிரைவாலி, ஆல்கஹால் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
ஜூலை, ஆகஸ்ட்டில் வரும் ஆடியிலும், செப்டம்பர், அக்டோபரில் வரும் புரட்டாசியிலும்,
அதிக விளைச்சலைத் தரும், கோ1, கோ2, வி.எல்.29 போன்ற இரகங்களை மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யலாம்.
நிலத்தை மூன்று முறை புழுதியாக உழுது, களைகள் இல்லாமல் தயாரிக்க வேண்டும். பிறகு, 3×3 மீட்டர் அளவுள்ள பாத்திகளை அமைக்க வேண்டும்.
கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 5-10 டன் மட்கிய தொழுவுரம் வீதம் எடுத்து, அடியுரமாக இட வேண்டும்.
பிறகு, 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்தை, விதைப்பின் போது இட வேண்டும்.
அடுத்து, 20-25 நாட்கள் கழித்து, 20 கிலோ தழைச்சத்தை மேலுரமாக, ஈரத்தைப் பயன்படுத்தி இட வேண்டும்.
விதைகளை நேரடியாகத் தூவி விதைக்கலாம். இதற்கு, எக்டருக்கு 12.5-15 கிலோ விதைகள் தேவைப்படும்.
அல்லது 3×3 மீட்டர் அளவுள்ள பாத்திகளில், வரிசைக்கு வரிசை 25 செ.மீ. இடைவெளியில் கோடு போட்டு வரிசையாக விதைத்து மண்ணால் மூடி விடலாம்.
இதற்கு, எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும்.
மெத்தைலோ பாக்டீரியம்
நன்மை செய்யும் நுண்ணுயிர்களில் ஒன்றான மெத்தைலோ பாக்டீரியம், பயிர்களின் இலைப் பரப்பில், வேர்ப் பகுதியில் மற்றும் பயிருக்கு உள்ளேயும் வாழ்கிறது.
இந்த பாக்டீரியம், மெத்தனாலைக் கரிம உணவாகக் கொண்டு, இலை வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்யும்.
இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இது, பிபிஎப்எம் என்று அழைக்கப்படும். இது, இலைவழி திரவ நுண்ணுயிர் உரமாகப் பயன்படுகிறது.
மேலும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளை, இலைச் செல்களின் மேற்பரப்பு மற்றும் பயிரின் ஏனைய பாகங்களின் உள்ளேயும் உற்பத்தி செய்து, பயிர் வளர்ச்சியை
ஊக்கப்படுத்தும்.
நல்ல திறனுள்ள மெத்தைலோ பாக்டீரிய இராசிகளைப் பயிர்களில் தெளித்தால், அவை இலைகளின் மேற்பரப்பில் வளர்ந்து பல்வேறு நன்மைகளைச் செய்யும்.
பிபிஎப்எம், எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற திரவ நுண்ணுயிர் உரமாகும்.
இதை இலை வழியாக அல்லது விதைகள் மூலம், பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யலாம்.
பிபிஎப்எம், பயிர்களுக்கு ஜியோடின், ஐ.ஏ.ஏ போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளைக் கிடைக்கச் செய்கிறது.
விதைநேர்த்தி
தேவையான குதிரைவாலி விதைகளை, 50 மி.லி. பிபிஎப்எம் திரவ நுண்ணுயிரில் நன்கு கலந்து, 5-10 நிமிடம் நிழலில் உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும்.
இலைகளில் தெளித்தல்
காலை அல்லது மாலையில் 1-2 சத பிபிஎப்எம் திரவ நுண்ணுயிரை நீரில் கலந்து,
அதாவது, 10 லிட்டர் நீருக்கு 100-200 மி.லி. வீதம் கலந்து இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
பயிர்களில் பூ மற்றும் கதிர் உருவாகும் நேரத்தில், அல்லது 30-45 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
நன்மைகள்
மெத்தைலோ பாக்டீரியத்தில் விதை நேர்த்தி செய்வதால், முளைப்புத் திறன், விதைகளின் வீரியம் மற்றும் நாற்றுகளின் வளர்ச்சி அதிகமாகும்.
இதை, வளர்ந்த அல்லது வளரும் பயிர்களில் தெளித்தால், பயிர்களின் வளர்ச்சி மற்றும் இலைகளின் பச்சையத் தன்மை அதிகமாகும்.
பூ மற்றும் கதிர் உருவாகும் காலம் குறையும். மகசூல் 10 சதம் கூடும்.
மேலும், கதிர்கள் மற்றும் விதைகளின் தன்மை, நிறம், தரம் மற்றும் பருமன் கூடும். இதைத் தொடர்ந்து தெளித்து வந்தால், பாசன எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்துக் கொள்ளலாம்.
இந்த பாக்டீரியத்தை, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் வேர்களுக்கு அளிக்கலாம். வறட்சிப் பயிர்களில் மற்றும் நல்ல வளர்ச்சியில் உள்ள பயிர்களிலும் தெளிக்கலாம்.
பயன்படுத்தும் முறை
இத்துடன் ஒட்டும் திரவம் அல்லது அரிசிக் கஞ்சியைச் சேர்க்கத் தேவையில்லை. ஆனால், முக்கியமான இரண்டு குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது, மற்ற இரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லியில் கலந்து தெளிக்கக் கூடாது.
இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிப்பதற்கு, 7-10 நாட்களுக்கு முன்பு அல்லது பின்பு தான் இதைப் பயன்படுத்த வேண்டும்.
களை நிர்வாகம், பயிர்களைக் களைதல்
விதைத்த 18 நாளில் ஒருமுறையும், 45 நாளில் ஒருமுறையும் களைகளை அகற்ற வேண்டும்.
முதல் களையை எடுத்து 2-3 நாட்களில் பயிர்களைக் களைந்து, தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
நோய்கள்
பூசணக் காளான் நோய்: இதைக் கட்டுப்படுத்த, நோயுற்ற பயிர்களைப் பிடுங்கி அகற்ற வேண்டும். தரமான விதைகளை விதைக்க வேண்டும்.
கரிப்பூட்டை நோய்: இதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 2.5 கிராம் அக்ரோசன் வீதம் கலந்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
55 டிகிரி செல்சியஸ் வெந்நீரில் 7-12 நிமிடங்கள் வைத்தும் விதைக்கலாம்.
துருநோய்: இதைக் கட்டுப்படுத்த, 2 கிலோ டைத்தேன் எம்.45 மருந்தை 1,000 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
நன்கு விளைந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து களத்தில் காய வைத்துத் தானியத்தைப் பிரிக்க வேண்டும்.
பிறகு, காற்றில் தூற்றித் தூசிகளை நீக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு சத மெத்தைலோ பாக்டீரியத்தில் விதை நேர்த்தி மற்றும் ஒரு சதக் கரைசலைத் தெளித்தல் போன்ற மேம்பட்ட உத்திகளைக் கையாண்டதில்,
குதிரைவாலிப் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளர்ந்து அதிக மகசூலைத் தருவது அறியப்பட்டது.
இந்த உத்திகளால், எக்டருக்கு 1,000-1,200 கிலோ தானியம், 2,000-2,800 கிலோ தீவனம் கிடைக்கும்.
முனைவர் இரா.பூர்ணியம்மாள், சொ.பிரபு, ஜெ.கண்ணன், தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம், தேனி – 625 604.
சந்தேகமா? கேளுங்கள்!