கால்நடை வளர்ப்புச் செலவில், தீவனச் செலவு 60-70 சதமாகும். பாலை அதிகமாகத் தரும் பசுக்களை வளர்ப்போர் அடர் தீவனத்தைத் தான் பெரிதும் நம்பி உள்ளனர்.
இதனால், செலவு மிகுந்து வருவாய் குறைகிறது. இதற்கான முக்கியத் தீர்வு பசுந்தீவனத்தைத் தருவது தான்.
பசுந்தீவன வகைகள்: தானிய வகையில் மக்காச் சோளம், சோளம், கம்பு, இராகி, ஓட்ஸ், தினை, சாமை போன்றவை அடங்கும்.
பயறு வகையில், குதிரை மசால், வேலிமசால், காராமணி, அவரை, கொத்தவரை, நரிப்பயறு, சணப்பு, கொள்ளு, சங்கு புஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, சென்ட்ரோ, டெஸ்மோடியம் போன்றவை அடங்கும்.
புல் வகையில், நேப்பியர், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல், எருமைப்புல், நீரடிப்புல், பாராப்புல், ரோட்ஸ்புல், ஆஸ்திரேலிய புல், கொழுக்கட்டைப் புல், நீலக் கொழுக்கட்டைப் புல், மார்வல் புல், ஊசிப்புல் மற்றும் தீனாநாத் புல் போன்றவை சேரும்.
மர இலைத் தீவனங்களாக, அகத்தி, சுபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காய்ப் புளி, ஆச்சா, முருங்கை, கல்யாண முருங்கை, அரசு, வாகை, வேம்பு, மலைவேம்பு, வெள்வேல், கருவேல்,
சீமைக் கருவேல், குடைவேல், ஆல், அத்தி, பலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை, முசுக்கொட்டை, வேங்கை, நாவல், மஞ்சக்கடம்பு, நெல்லி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
புல் வகையில் கினியாப்புல் நிழலைத் தாங்கி வளரும். தென்னந் தோப்பில் இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
இதற்குக் கோ-1 இரகம் ஏற்றது. எக்டருக்கு 2.5 கிலோ விதை அல்லது 66,000 வேர்க் கரணைகள் தேவைப்படும்.
பத்து நாட்களுக்கு ஒருமுறை, சூழலைப் பொறுத்துப் பாசனம் தரலாம். முதல் அறுவடையை 60-75 நாட்களிலும், அடுத்து 40-45 நாள் இடைவெளியில், ஆண்டுக்கு 7-8 அறுவடைகளைச் செய்யலாம். எக்டருக்கு 150 டன் தீவனம் கிடைக்கும்.
பயறு வகையில் நிழலில் வளரும் டெஸ்மோடியத்தை, தென்னந் தோப்பில் வளர்க்கலாம். மானாவாரியில் வைகாசி ஆனி மற்றும் புரட்டாசி ஐப்பசியில் பயிரிடலாம்.
எக்டருக்கு 10 கிலோ விதை தேவை. 50 சதம் பூக்கும் போது அறுக்க வேண்டும். ஆண்டுக்கு மூன்று முறை அறுக்கலாம்.
சதுப்பு நிலத்தில் பேராகிராஸ் என்னும் நீர்ப்புல் அல்லது எருமைப் புல்லை வளர்க்கலாம். கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் பாயும் இடத்திலும் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
எக்டருக்கு 40 ஆயிரம் தண்டுகள் தேவை. 50×50 செ.மீ. இடைவெளி வேண்டும். வாரம் ஒருமுறை பாசனம் தேவை.
நிலம் ஈரமாகவே இருக்க வேண்டும். மூன்று மாதத்தில் முதல் அறுவடையைச் செய்யலாம். அடுத்து 30 நாளுக்கு ஒருமுறை அறுக்கலாம்.
தமிழ்நாட்டில் பயனற்றுக் கிடக்கும் உவர் நிலத்தில் தீவனப் பயிர்களை வளர்த்தால், ஏக்கருக்கு 20-25 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
உவர் நிலத்தில் சீமைக் கருவேல், கினியாப்புல், வேலிமசால் மற்றும் நீர்ப்புல், அமில நிலத்தில் கருவேல், முயல்மசால், தட்டைப்பயறு, கினியாப்புல் மற்றும் மக்காச் சோளம்,
தரிசு நிலத்தில் சூபாபுல், அகத்தி, நீர்த் தேங்கிய நிலத்தில் நீரடிப்புல் எனப் பயிரிடலாம்.
முனைவர் அ.யசோதா, பேராசிரியை, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.
சந்தேகமா? கேளுங்கள்!