தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

தக்காளி tomato

ழை, பணக்காரர் பேதமின்றி எல்லா வீடுகளிலும் தினமும் சமையலில் பயன்படுவது தக்காளி. சோலானேசியெ குடும்பத்தைச் சேர்ந்த செடியினம்.

புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உண்டு. தக்காளியில், நியாசின், பி6 ஆகிய உயிர்ச் சத்துகள், மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்றவை உள்ளன.

இத்தகைய பயன்களைக் கொண்ட தக்காளிப் பயிரை, பல்வேறு நோய்கள் தாக்குவதால் மகசூல் குறைந்து வருமான இழப்பு ஏற்படுகிறது.

எனவே, தக்காளிப் பயிரைத் தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

நாற்றழுகல்

தக்காளி நாற்றழுகல், விதை முளைக்கு முன் மற்றும் முளைத்த பிறகு என, இரு நிலைகளில் ஏற்படுகிறது.

முளைப்புக்கு முந்தைய நிலையில், முளைக் குருத்து முற்றிலும் அழுகி விடும். முளைத்த பிறகு, இளம் தண்டுகள் மென்மையாக, தொய்ந்து இருக்கும். இறுதியில், நாற்றின் தலை கீழே விழுந்து விடும்.

கட்டுப்படுத்துதல்

மேட்டுப்பாத்தி அல்லது குழித்தட்டு நாற்றங்காலை அமைக்க வேண்டும். பாசனம் மற்றும் வடிகால் வசதியைச் சரியாக அமைக்க வேண்டும்.

2 சத காப்பர் ஆக்ஸி குளோரைடு கரைசலை, மண் நனையத் தெளிக்க வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது 3 கிராம் திரம் வீதம் எடுத்து, விதையுடன் நன்கு கலந்து விதைக்க வேண்டும்.

முன்பருவ இலைக்கருகல்

பூசணம் தாக்குவதால் இலைகளில் புள்ளிகள் ஏற்பட்டுக் கருகத் தொடங்கும். இந்நோயால், முற்றிய இலைகளில் சிறிய கறுப்புக் காயங்கள் காணப்படும்.

பிறகு, புள்ளிகள் பெரிதாகி வளையங்களாக மாறும். தக்காளிப் பழத்திலும் இந்தக் காயங்களும் வளையங்களும் ஏற்படும்.

கட்டுப்படுத்துதல்

நிலத்திலுள்ள தாவரக் கழிவுகளை அகற்றி அழிக்க வேண்டும். பயிர்ச் சுழற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். 0.2 சத மேங்கோசெப் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

ஃபுசேரியம் வாடல் நோய்

செடியின் அடியிலைகள் மஞ்சளாக மாறி உதிரத் தொடங்கும். இளம் இலைகள் கருகி சில நாட்களில் இறந்து விடும். இலைகளும் இலைக் காம்பும் உதிரத் தொடங்கும். நோயின் தீவிர நிலையில், வாஸ்குலர் அமைப்பு பழுப்பு நிறமாக மாறும்.

கட்டுப்படுத்துதல்

பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும். இத்தகைய செடிகளைச் சுற்றியுள்ள மண்ணை, 0.1 சத கார்பென்டாசிம் கலவையில் நனைக்க வேண்டும்.

சுழற்சி முறையில் நெல், சோளம், கம்பு போன்ற தானியங்களைப் பயிரிட வேண்டும்.

செப்டோரியா இலைப்புள்ளி நோய்

இலைகளில் சாம்பல் நிறத்தில் சிறியளவில் வட்டப் புள்ளிகள் இருக்கும். இவற்றைச் சுற்றிக் கறுப்பாக இருக்கும்.

கட்டுப்படுத்துதல்

பாதிக்கப்பட்டு உதிர்ந்த இலைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேன்கோசெப் அல்லது டைத்தேன் எம் 45 மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

பாக்டீரிய வாடல் நோய்

தக்காளிப் பயிரைத் தாக்கும் கடுமையான நோய்களில் இதுவும் ஒன்றாகும். நிலத்தில் அதிக ஈரப்பதம் இருப்பது மற்றும் மண்ணின் வெப்பநிலை, இந்நோய்க்கு ஏதுவாக உள்ளது. இதனால், வளரும் செடிகள் விரைவாக, முழுமையாக வாடி விடும்.

நோய்க்கிருமி, தண்டு நாளங்களின் திசுக்களை மஞ்சள் பழுப்பு நிறமாக மாறச் செய்யும்.

பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டிச் சுத்தமான நீரில் மூழ்கச் செய்தால், வெள்ளைக் கீற்றைப் போல, பாக்டீரியா வெளியே வரும். இது, காயங்கள், மண் மற்றும் இதர வழிகளில் பரவும்.

கட்டுப்படுத்துதல்

சேதம் ஏற்படாமல் நாற்றுகளை நட வேண்டும். மக்காச்சோளம், தட்டைப்பயறு மற்றும் கேழ்வரகு, கத்தரி ஆகியவற்றை, சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்.

0.2 சத காப்பர் ஆக்ஸி குளோரைடு கரைசலை, நோயுற்ற செடிகளைச் சுற்றி ஊற்றினால், தொடக்க நிலையிலேயே இந்நோயைக் கட்டுப் படுத்தலாம்.

பாக்டீரிய இலைப்புள்ளி

பாதிக்கப்பட்ட இலைகளில் சிறியதாக, பழுப்பு நிறமாக, வட்டப் புள்ளியைச் சுற்றிலும் மஞ்சள் நிற வட்டம் தோன்றும். நோயுறும் முற்றிய இலைகள் உதிர்ந்து விடும்.

பச்சைக் காய்களில் ஒழுங்கற்ற காயங்கள் தோன்றும். இவை வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். பழுத்த பழங்கள் இந்நோயால் பாதிக்கப் படுவதில்லை.

கட்டுப்படுத்துதல்

நோயற்ற விதை மற்றும் செடிகளைப் பயன்படுத்த வேண்டும். பயிர்க் கழிவுகளை அகற்ற வேண்டும்.

1:1000 வீதம் மெர்குரிக் குளோரைடில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். பத்து நாட்கள் இடைவெளியில் 100 பிபிஎம் அக்ரிமிசின்-100 -ஐ மூன்று முறை தெளிக்க வேண்டும்.

தேமல் நோய்

பாதிக்கப்பட்ட செடி வளர்ச்சிக் குன்றி வெளிர் பச்சை நிறமாக மாறும். இந்நோய், வைரசால் பாதிக்கப்பட்ட இலைகளை அல்லது தாவரப் பகுதிகளைத் தொட்டு விட்டு, மற்ற தாவரங்களைத் தொடுவதால் பரவுகிறது.

கட்டுப்படுத்துதல்

பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழிப்பதன் மூலம், பாதிக்கப்படாத செடிகளைப் பாதுகாக்க முடியும்.


தக்காளி A.MAHARANI scaled e1710484090310

அ.மகாராணி, ம.அம்மான், இமயம் வேளாண்மைக் கல்லூரி, துறையூர், திருச்சி – 621 206. கு.நர்மதா, அரவிந்தர் வேளாண்மைக் கல்லூரி, திருவண்ணாமலை – 606 751.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading