My page - topic 1, topic 2, topic 3

முந்திரி சாகுபடி!

முந்திரி

முந்திரி அதிக வருமானம் தரும் தோட்டப் பயிராகும். இதன் தாவரப் பெயர் அனகார்டியம் ஆக்ஸி டென்டேல். அனகார் டேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.

இதிலிருந்து கிடைக்கும் முந்திரிக் கொட்டை உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் முக்கியப் பொருளாகும்.

முந்திரிப் பழம் பல்வேறு பொருள்களைச் செய்யப் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் முந்திரி பரவலாக உள்ளது.

மண் மற்றும் தட்பவெப்பம்

எல்லாவகை மண்ணிலும் பயிரிடலாம். சற்று மணல் சார்ந்த செம்பொறை மண் மிகவும் ஏற்றது. வடிகால் வசதி வேண்டும்.

களர் உவர்த் தன்மை இருக்கக் கூடாது. வறட்சியைத் தாங்கி வளரும். ஆண்டுக்கு 50-250 செ.மீ. மழை பெய்யும் இடங்களிலும் நன்கு வளர்ந்து பலன் கொடுக்கும்.

இரகங்கள்

வி.ஆர்.ஐ. 1, வி.ஆர்.ஐ. 2, வி.ஆர்.ஐ. 3, வி.ஆர்.ஐ. 4, வி.ஆர்.ஐ (CW) எச் 1, வென்குர்லா 4, வென்குர்லா 7, பப்பட்லால் 8. ஜூன்-டிசம்பர் பருவம் முந்திரி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.

கன்று உற்பத்தி

ஒட்டுக் கட்டுதல், இளந்தண்டு ஒட்டு முறையில் கன்றுகளை உற்பத்தி செய்யலாம். இவற்றில், இளந்தண்டு ஒட்டுமுறை மிகவும் சிறந்தது. அதிக மகசூலைத் தரும். எக்டருக்கு 200 கன்றுகள் தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2-3 முறை புழுதியாக உழுது, ஏழு மீட்டர் இடைவெளியில், 45 செ.மீ. நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுக்க வேண்டும்.

பிறகு, குழிக்கு 10 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் எடுத்து மேல் மண்ணுடன் கலந்து குழிகளில் இட வேண்டும். அடுத்து, குழிகளின் நடுவில் கன்றுகளை நட வேண்டும்.

அடர் நடவு

முந்திரியை அடர்நடவு முறையில் பயிரிடலாம். 5×4 மீட்டர் இடைவெளியில் நடுவதற்கு, எக்டருக்கு 500 கன்றுகள் தேவைப்படும். மரங்களின் வடிவத்தைச் சீரமைக்க, ஜூலை, ஆகஸ்ட்டில் கவாத்து செய்ய வேண்டும்.

உரமிடல்

ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பரில் உரமிட வேண்டும். கிழக்குக் கடலோரப் பகுதியில் மரத்துக்கு 1000: 125: 250 கிராம் வீதம், தழை, மணி, சாம்பல் சத்து தேவைப்படும்.

இந்த உரங்களில் பாதியை, ஜுன், ஜுலையிலும், அடுத்த பாதியை, அக்டோபர் நவம்பரிலும் இட வேண்டும்.

பாசனம்

பொதுவாக முந்திரி மானாவாரியில் பயிரிடப்படுகிறது. அதிக மகசூலைப் பெற, பூக்கும் பருவம் முதல் அறுவடை வரை, வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். நிலத்தைக் களையில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஊடுபயிர்

முந்திரி காய்ப்புக்கு வரும் வரை, பெய்யும் மழையைப் பயன்படுத்தி, நன்கு உழுது, நிலக்கடலை, பயறு வகைகள் மற்றும் சிறுதானியப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

கவாத்து

மரங்களில் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிட வேண்டும். ஆண்டுதோறும் காய்ந்து போன கிளைகளை வெட்டிவிட வேண்டும்.

இதனால், வெய்யிலும், காற்றோட்டமும் நன்கு மரங்களுக்குக் கிடைக்கும். மேலும், ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழே முளைக்கும் தளிர்களை, அவ்வப்போது கிள்ளிவிட வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு: பூச்சிகள்

தண்டுத் துளைப்பான்: இது, முந்திரியைத் தாக்கும் முக்கியப் புழுவாகும். இப்புழு நன்றாகக் காய்க்கும் மரத்தையே சேதப்படுத்தும். இதன் தாக்குதல் அடிமரத்தில் ஆண்டு முழுவதும் இருக்கும்.

அடிமரத்தில் இருக்கும் சிறு துளைகள், அவற்றின் வழியே வெளிவரும் பிசின் போன்ற திரவம் மற்றும் புழு கடித்துப் போட்ட சக்கை, சேத அறிகுறிகள் ஆகும். இதனால், இலைகள் உதிர்ந்து மரம் காய்ந்து மொட்டையாகி விடும்.

கட்டுப்படுத்துதல்: முதலில் தோப்புச் சுத்தமாக இருக்க வேண்டும். தாக்கப்பட்ட மரங்களை அகற்ற வேண்டும்.

கார்பரில் 50 சத நனையும் தூள் 0.1 சத கரைசலை, மரத்தில் ஒரு மீட்டர் உயரம் வரை தடவ வேண்டும்.

மழைக்கு முன், மார்ச், ஏப்ரலிலும், அடுத்து, மழை பெய்து நின்றதும் நவம்பரிலும், மரத்தின் அடியில் இருந்து மூன்றடி உயரம் வரை, 1:2 வீதம் கலந்த தார்: ம.எண்ணெய்க் கலவையைப் பூச வேண்டும்.

அல்லது 5 சத வேப்ப எண்ணெய்யை, ஜனவரி பிப்ரவரி, மே ஜூன் மற்றும் செப்டம்பர் அக்டோபரில் அடிமரத்தில் பூச வேண்டும்.

ஆரம்பம் மற்றும் நடுத்தரத் தாக்குதல் உள்ள மரங்களுக்கு, நெகிழிப் பையில் 10 மில்லி மானோ குரோட்டாபாஸ் மருந்துடன் 10 மில்லி நீரைக் கலந்து மாலை வேளையில் வேரில் கட்ட வேண்டும்.

மரத்திலிருந்து ஏழடித் தொலைவில் வெட்டினால், பென்சில் அளவுள்ள வேர்கள் கிடைக்கும். இவற்றில் நல்ல வேரில் மருந்துப் பையைக் கட்ட வேண்டும்.

மரங்களில் இருக்கும் புழுக்களை நீக்கி விட்டு, ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி குளோர் பைரிபாஸ் வீதம் கலந்த கலவை அல்லது 5 சத வேப்ப எண்ணெய்யால் துளைகளை நனைக்க வேண்டும்.

தேயிலைக் கொசு: இதைக் கட்டுப்படுத்த, தழைப் பருவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி பேசலான் 35 EC வீதம் கலந்த கலவையைத் தெளிக்க வேண்டும்.

மொட்டு விடும் பருவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பரில் 50 WP வீதம் கலந்த கலவையையும், கொட்டை உருவாகும் பருவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மேனோ குரோட்டோபாஸ் வீதம் கலந்த கலவையையும் தெளிக்க வேண்டும்.

வேர்த் துளைப்பான்: இதைக் கட்டுப்படுத்த, 5 மில்லி மானோ குரோட்டாபாஸ் 5 மில்லி நீர் வீதம் கலந்த கலவையை, புழுக்கள் உண்டாக்கிய துளைகளில் இரண்டு முறை ஊற்ற வேண்டும்.

இலைத் துளைப்பான்: பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழிக்க வேண்டும். 5% வேப்பங் கொட்டைக் கரைசலை, மரங்கள் துளிர்க்கும் போதும், பூக்கும் போதும் தெளிக்க வேண்டும்.

நோய்கள்

நுனிக் கருகல் அல்லது இளஞ் சிவப்புப் பூசண நோய்: நோயுற்ற கிளைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அந்த இடத்தில் 1 சத போர்டோ கலவை அல்லது ஏதாவது தாமிரப் பூசணக்கொல்லி மருந்தைத் தடவிவிட வேண்டும்.

ஆந்தராக்னோஸ்: பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழிக்க வேண்டும். துளிர் விடும் பருவத்தில் 1 சத போர்டாக்ஸ் கலவையுடன், பெரஸ் சல்பேட்டைக் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

ஒட்டுக் கன்றுகள் நட்ட மூன்றாம் ஆண்டிலேயே காய்ப்புக்கு வந்து விடும். மார்ச்-மே காலத்தில் அறுவடை செய்யலாம்.

நன்கு பழுத்த பழங்களில் உள்ள கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, வெய்யிலில் 2-3 நாட்கள் நன்கு உலர்த்த வேண்டும். மரத்துக்கு 3-4 கிலோ மகசூல் கிடைக்கும்.

மரங்களைப் புதுப்பித்தல்

வயதான மற்றும் குறைந்த மகசூல் தரும் முந்திரி மரங்களைப் புதுப்பித்துக் காய்க்க வைக்கலாம்.

இதற்கு, தரையிலிருந்து 1-3 மீட்டர் உயரத்தில் மரங்களை வெட்டிவிட வேண்டும். பிறகு, அவற்றில் வரும் தளிர்களில் இளந்தளிர் ஒட்டு மூலம் புதிய ஒட்டுகளை வளர்த்தால் நாளடைவில் வளர்ந்து மகசூலைத் தரத் தொடங்கும்.


PB_K ARUN KUMAR

கா.அருண்குமார், ஆராய்ச்சி மாணவர், தோட்டக்கலைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை – 641 003.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks