பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

பயறுவகைப் பயிர் payirvagai

ற்ற பயிர்களைத் தாக்குவதைப் போலவே, பல்வேறு நோய்கள், பயறுவகைப் பயிர்களைத் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இங்கே பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆந்தரக்னோஸ் இலைப்புள்ளி நோய்

நோயின் அறிகுறிகள்: இலைப்புள்ளிகள், செர்க்கோஸ்கோரா இலைப்புள்ளியை விடச் சற்றுப் பெரிதாகக் காணப்படும். இந்நோய், பயிரின் வேரைத் தவிர்த்து எல்லாப் பாகங்களையும் தாக்கும். விதையிலைகளில் கருஞ்சிவப்புப் புள்ளிகள் தோன்றி நாளடைவில் காய்ந்து விடும்.

இலைகளில் செவ்வக வடிவில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றி, பிறகு படர்ந்து இலைக் காம்புகளையும் தாக்கும். நோய் அதிகரித்தால் காய்களில் கருஞ்சிவப்புப் புள்ளிகள் தோன்றும். விதைகள் நிறமாறிக் காணப்படும். நோயுற்ற பாகங்களில் பூசண வித்துகள் தோன்றும். நோயுற்ற செடியிலிருந்து மற்ற செடிகளுக்குக் காற்றின் மூலம் பரவும்.

தடுப்பு முறைகள்: நோயின் அறிகுறி தோன்றியதும், எக்டருக்கு ஒரு கிலோ மாங்கோசெப் அல்லது 250 கிராம் கார்பன்டாசிம் மருந்தைத் தெளிக்க வேண்டும். தேவை ஏற்படின் மீண்டும் ஒருமுறை 14 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இலைத்துரு நோய்

நோயின் அறிகுறிகள்: பயிரின் இளம் பருவத்தில் நோய் தோன்றினால் அதிகளவில் இழப்பு ஏற்படும். நோய் தொற்றிய 8-10 நாட்களில் இலைகளின் அடிப்பாகம் மற்றும் மேல் பாகத்தில் ஆரஞ்சு கலந்த துருப்புள்ளிகளைக் காணலாம். இந்தப் புள்ளிகள், நோய் தோன்றிய 48 மணி நேரத்தில் செம்பழுப்பு யுரிடோக்களைத் தோற்றுவிக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் சுருண்டு விடும். நோய் தாக்கிய இலைகள் காய்ந்து உதிர்ந்து விடுவதால், காய்ப்பு மிகவும் குறைந்து விடும். இதன் பூசண வித்துகள் காற்றின் மூலம் பரவும்.

தடுப்பு முறைகள்: எக்டருக்கு ஒரு கிலோ மாங்கோசெப் அல்லது இரண்டரை கிலோ நனையும் கந்தகத்தைத் தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய்

நோயின் அறிகுறிகள்: இலைகளில் சிறு சிறு வட்டப் புள்ளிகள் தோன்றும். புள்ளிகளின் நடுவில் சாம்பல் நிறமும். அதைச் சுற்றிப் பழுப்பு வளையமும் இருக்கும். இந்தப் புள்ளிகள் நாளடைவில் ஒன்று சேர்வதால் இலைகள் காய்ந்து கருகி விழுந்து விடும். இந்நோய், ஒரு செடியிலிருந்து மற்ற செடிகளுக்குக் காற்றின் மூலம் பரவும்.

தடுப்பு முறைகள்: எக்டருக்கு ஒரு கிலோ மாங்கோசெப் அல்லது 200 கிராம் கார்பன்டாசிம் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய்

நோயின் அறிகுறிகள்: இந்நோயை உருவாக்கும் பூசணம், இலை, இலைக்காம்பு, தண்டு, பூங்கொத்து, பிஞ்சு, காய் முதலிய அனைத்துப் பகுதிகளையும் தாக்கும். நோயுற்ற இலைகளின் மேல் பரப்பிலும், சில சமயம் இலைகளின் கீழ்ப் பரப்பிலும் வெண் துகள்கள்  காணப்படும். நாளடைவில் இப்படிவங்கள் ஒன்றாக இணைந்து, பழுப்பு, கறுப்பு நிறமாக மாறி இலைப்பரப்பு முழுவதையும் மூடி விடும். பாதிக்கப்பட்ட செடி, வளர்ச்சிக் குன்றி வாடி வதங்கி விடும்.

இந்நோய், செடிகளில் பிஞ்சுகள் வந்த பிறகு தோன்றினால், பிஞ்சுகள் காயாக மாறாது. முதிரும் பகுதியில் தென்பட்டால், காய்கள் சிறுத்தும், சுருங்கியும் விடும். நாளடைவில், பாதிக்கப்பட்ட பிஞ்சு, காய்கள் கறுப்பாக மாறி, கீழே விழுந்து விடும். இந்நோய், ஒரு பருவத்தில் இருந்து மற்றொரு பருவத்துக்கு, நோயுற்ற இலைகள் மூலம் பரவும். பொதுவாக, நோயுற்ற செடியிலிருந்து மற்ற செடிகளுக்குக் காற்றின் மூலம் பரவும்.

தடுப்பு முறைகள்: ஐந்து சத வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது மூன்று சத வேப்பெண்ணைய்க் கரைசலை, நோயைக் கண்டதும், பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். அல்லது 10 சத யூகலிப்டஸ் இலைக் கரைசலை, நோய் கண்டதும் மற்றும் பத்து நாட்கள் கழித்தும் தெளிக்கலாம். அல்லது எக்டருக்கு 250 கிராம் கார்பன்டாசிம் அல்லது 2.5 கிலோ நனையும் கந்தகத் தூளைத் தெளிக்கலாம்.

வேரழுகல் நோய்

நோயின் அறிகுறிகள்: நிலம் முழுவதும் அல்லது ஒரு பகுதியில் உள்ள பயிர்கள் திட்டுத் திட்டாகக் காணப்படும். செடிகளைப் பிடுங்கிப் பார்த்தால் வேர்கள் அழுகியிருக்கும். வேர்களின் பட்டை உரிந்து நார் நாராகக் கிழிந்திருப்பது இந்நோயின் முக்கிய அறிகுறியாகும். நோயுற்ற செடியின் தண்டுப் பகுதியில் வெள்ளியைப் பூசியதைப் போன்ற வெண் பூசணம் வளர்ந்திருக்கும்.

தோல் உரிந்த பட்டைகளில் மிகச் சிறிய கரும்புள்ளிகள் பதிந்திருக்கும். பூக்கும் பருவத்தில் நோய் தோன்றினால் காய்கள் முற்றாமல் சுருங்கி விடும். விதைகளின் எடை குறைவதுடன், புரதச்சத்தும் குறைந்து விடும். இந்நோய், மண், விதை, காற்று மற்றும் நீர் மூலம் பரவும்.

தடுப்பு முறைகள்: விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது திரம் வீதம் எடுத்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

உயிரியல் முறை: எக்டருக்கு 2.5 கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை, 50 கிலோ நன்கு மட்கிய தொழுவுரம் அல்லது மணலில் கலந்து, விதைகளை விதைத்த முப்பது நாட்கள் கழித்து இட வேண்டும்.

இரசாயன முறை: ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து, நோயுள்ள இடத்தில் ஊற்ற வேண்டும்.

தண்டு சொறிநோய்

நோயின் அறிகுறிகள்: நெற்பயிரைத் தொடர்ந்து பயிரிடப்படும் உளுந்துப் பயிரின் அடித்தண்டில், வெண்ணிறச் சொறி உருவாகும். இது, பயிரின் நான்காவது வாரத்தில் தோன்றும். இந்தச் சொறி பெரிதாகி, பழுப்புக் கோடுகளைப் போல மேல் நோக்கிப் பரவும். பயிர்கள் குட்டையாக இருக்கும். இலைகள் அடர் பச்சை நிறத்தில், பல நிறங்களாக மாறி, சிறுத்து விடும். இலைகள் திடீரென்று காய்ந்து உதிரும். பூப்பதும் காய்ப்பதும் பெரியளவில் குறையும்.

கட்டுப்பாடு: கோடையில் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பயிர்ச் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்தை இட வேண்டும். நோயுற்ற பயிர்க் குப்பைகளை மண்ணில் புதைத்து எரிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது 2 கிராம் கார்பென்டசிம் அல்லது திரம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டசிம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். எக்டருக்கு 2.5 கிலோ வீதம் பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை எடுத்து, 50 கிலோ மட்கிய எருவில் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

மஞ்சள் தேமல் நோய்

நோயின் அறிகுறிகள்: நோயின் முதல் அறிகுறியாக இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப் புள்ளிகள் காணப்படும். பிறகு, இலை முழுவதும் திட்டுத் திட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும், பச்சையும் கலந்த பகுதிகள் தோன்றும். சில சமயம், நோயுற்ற இலைகள் சிறுத்தும், சுருங்கியும் காணப்படும். நாளடைவில் மஞ்சள் நிறப்பகுதி அதிகமாகிக் கொண்டே வர, சில துளிர் இலைகள் முழுவதும் மஞ்சளாகி விடும்.

நோயுற்ற செடிகளில் காய்ப்புத் தாமதமாகும். குறைவான காய்களே காய்க்கும். மேலும், காய்களும், விதைகளும் மஞ்சளாக மாறவும் கூடும். செடிகளின் இளம் பருவத்தில் நோய் தோன்றினால் மகசூல் முழுமையாகப் பாதிக்கப்படும். பெமிசியா டபாசி வெள்ளை ஈக்களால் இந்நோய் பரவும்.

ஒருங்கிணைந்த நோய்க் கட்டுப்பாடு

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் போராக்ஸ் வீதம் எடுத்து விதைகளை நேர்த்தி செய்து விதைக்கலாம். அல்லது பத்து சத நொச்சி இலைச்சாறு, அதாவது, ஒரு கிலோ விதைக்கு 300 மி.லி. நொச்சியிலைக் கரைசல் வீதம் எடுத்து முப்பது நிமிடம் ஊற வைத்து நிழலில் உலர்த்திய பிறகு, ஒரு கிலோ விதைக்கு 5 மி.லி. இமிடாகுளோபிரிட் வீதம் எடுத்து, நேர்த்தி செய்து விதைக்கலாம்.

கடைசி உழவின் போது ஏக்கருக்கு 60-80 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் எடுத்து அடியுரமாக இடலாம். இதைப் போல, கடைசி உழவின் போது ஏக்கருக்கு 2.5 கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து நிலத்தில் தூவலாம். நிலத்தைச் சுற்றி இரண்டு வரிசையில் மக்காச்சோளத்தைத் தடுப்புப் பயிராக விதைத்தும், ஏக்கருக்கு ஐந்து வீதம் மஞ்சள் ஒட்டு அட்டைகளை வைத்தும், மஞ்சள் தேமல் நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

மஞ்சள் தேமல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை, விதைத்த 40 நாட்கள் வரை பிடுங்கி அழிக்கலாம். விதைத்து முப்பது நாட்களுக்குப் பிறகு, ஒரு சதம் போராக்ஸ் அல்லது 10 சத நொச்சி இலைக் கரைசலைத் தெளிக்கலாம்.

இலைச்சுருள் நோய்

அறிகுறிகள்: மிகச் சிறிய இளம் இலைகளில் பச்சைச் சோகை, நரம்புகள் மற்றும் இலை விளிம்புகளில் தோன்றும். இலைகள் விளிம்பிலிருந்து கீழ்நோக்கிச் சுருளும். சில இலைகள் முறுக்கிக் காணப்படும். இலையின் அடிப்பரப்பில் உள்ள நரம்புகளில் சிவப்புக் கலந்த பழுப்பு நிற மாற்றம் காணப்படும். விதைத்து ஐந்து வாரம் கழிவதற்குள் பயிர்களில் அறிகுறிகள் தோன்றும். செடிகள் வளர்ச்சியின்றிக் குட்டையாக இருக்கும்.

பெரும்பாலான பயிர்களில் நுனியில் காய்வதால், நோய் ஆரம்பித்து 1-2 வாரங்களில் செடிகள் மடிந்து விடும். பயிரின் கடைசிக் காலத்தில் இந்நோய் தாக்கினால், பயிர்களில் இலைகள் சுருண்டோ, முறுக்கியோ காணப்படாது. ஆனால், நரம்புகளில் தெளிவான பச்சைச்சோகை காணப்படும்.

கட்டுப்பாடு: நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை 45 நாட்களுக்குள் நீக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் அசிப்பேட் வீதம் கலந்து தெளிக்கலாம்.


பயறுவகைப் பயிர் DR.T.SENTHILKUMAR 1

த.செந்தில்குமார், கே.நெல்சன் நவமணிராஜ், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை 622 303.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading