மத்திய அமெரிக்காவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பழமரம் சப்போட்டா. இது, சமவெளியில் பயிரிட ஏற்றது.
இதை, தென்கிழக்கு மெக்சிகோ, கௌதமாலா, பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில், சிக்கிள் என்னும் சூவிங்கம் தயாரிப்புக்காக வளர்க்கிறார்கள்.
கனியாத காய்கள் மற்றும் பட்டையில் இருந்து கிடைக்கும் பால் போன்ற பிசின், காற்றில் உலர்ந்து திடப்பொருளாக மாறுகிறது. இதுவே, சிக்கிள் தயாரிப்பின் மூலப் பொருளாக விளங்குகிறது.
காய்கள் உவர்ப்பாகவும், கனிகள் இனிப்பாகவும் இருக்கும். ஜாம், ஜெல்லி தயாரிக்கவும், வணிக நோக்கில் குளுக்கோஸ் மற்றும் பெக்டின் தயாரிக்க, சப்போட்டா பழங்கள் பயன்படுகின்றன.
நூறு கிராம் சப்போட்டா பழத்தில், 21.4 கிராம் சர்க்கரை, 0.7 கிராம் புரதம், 2.6 கிராம் நார்ச்சத்து மற்றும் சுண்ணாம்பு, மணிச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி-யும் உள்ளன.
காசநோய்க்கு ஆளாகியுள்ள அனைத்து வயதினருக்கும் சப்போட்டா பழம் நல்ல உணவாகும்.
பருவ நிலை
தரிசு மற்றும் உவர் நிலத்தில் பயிரிட ஏற்ற சப்போட்டாவை, விவசாயிகள் விரும்பிப் பயிரிட்டு வருகிறார்கள்.
கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் வரையுள்ள இடத்திலும், வறட்சி மற்றும் ஈரப்பகுதியிலும் நன்கு வளரும். கடலோரப் பகுதிக்கு மிகவும் ஏற்றது.
ஆண்டுக்கு 1250-2500 மி.மீ. மழை பெய்யும் பகுதிகளில் சிறப்பாகப் பயன் தரும். 750 மி.மீ. மழையுள்ள பகுதிகளிலும் பயிரிடலாம். வெப்பநிலை 11-34 டிகிரி சென்டிகிரேட் இருப்பது ஏற்றது.
மண்
சப்போட்டா எல்லா மண்ணிலும் செழிப்பாக வளரும். நல்ல வடிகால் வசதியுள்ள மண் ஏற்றது. மண் கண்டம் குறைந்தது ஆறடியாவது இருக்க வேண்டும்.
ஆழமான வண்டல் மண் கலந்த நிலம் மிகவும் ஏற்றது. மேலும், சப்போட்டா ஓரளவு உப்புத் தன்மையுள்ள நிலம், உப்புத் தன்மையுள்ள பாசன நீரைத் தாங்கி வளரும்.
இரகங்கள்
கோ. 1: இது, கிரிக்கெட் பால், ஓவல் ஆகிய இரண்டு இரகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட கலப்பினம்.
பழங்கள் நீண்டு முட்டையைப் போல, 125 கிராம் எடையில் இருக்கும். சதைப்பற்றுக் கருஞ்சிவப்பு நிறத்தில் ருசியாக இருக்கும்.
கோ. 2: இது, பாராமாசி என்னும் வகை மூலம் உருவாக்கப் பட்டது. பழங்கள் உருண்டும், 112-168 கிராம் எடையிலும் இருக்கும். மென்மையான சதைப்பற்று மற்றும் சாறு நிறைந்து காணப்படும்.
பெரியகுளம் 1: இது, குத்தி என்னும் இரகத்தில் இருந்து உருவாக்கப் பட்டது. மரங்கள் குட்டையாக இருக்கும். பழங்கள் முட்டையைப் போல, 88-120 கிராம் எடையில் இருக்கும். சிறந்த மகசூலைத் தரும்.
பெரியகுளம் 2: இது, குத்தி, கீர்த்தபர்த்தி ஆகிய இரகங்களின் கலப்பாகும். ஒரு மரம் 1,500-2,000 பழங்களைத் தரும்.
கோ.1, 2, பெரியகுளம் 1 ஆகியவற்றை விட, இதன் பழங்கள் பெரியளவில், நீளவடிவில் இருக்கும். பழங்களின் சராசரி எடை 95 கிராம் ஆகும்.
பெரியகுளம் 3: இது, குத்தி, கிரிக்கெட் பால் ஆகியவற்றின் கலப்பினம். மரங்கள் பெரியளவில் படராமல், செங்குத்தாக வளர்வதால், நெருக்கமாக நடுவதற்கு ஏற்ற இரகம்.
கொத்துக் கொத்தாகக் காய்க்கும். பழம் பெரிதாக முட்டையைப் போல இருக்கும். எக்டருக்கு 14 டன் மகசூல் கிடைக்கும்.
பெரியகுளம் (எஸ்) 4: இது, பெரியகுளம் 1 இரகத்தில் இருந்து அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் உருவாக்கப் பட்டது. அதிகமாகப் படராது.
ஒரு மரம் நூறு கிலோ பழங்களைத் தரும். பழம் நீள் உருண்டை வடிவில் கெட்டியாக இருக்கும். சதைப்பகுதி இளம் பழுப்பு நிறத்தில் கவர்ச்சியாக இருக்கும்.
கரையும் திடப்பொருள் 24-25%. பழத்தில் 2-3 விதைகள் இருக்கும்.
பெரியகுளம் 5: இது, விருதுநகரில் இருந்து இயற்கையான தன் மகரந்தச் சேர்க்கை மூலம் உருவாக்கப் பட்டது. அடர் நடவுக்கு உகந்தது. கொத்துக் கொத்தாகக் காய்க்கும். பழங்கள் முட்டையைப் போல இருக்கும்.
ஒவ்வொரு மரமும் சுமார் 120 கிலோ பழங்களைத் தரும். எக்டருக்கு 18.70 டன் மகசூல் கிடைக்கும். கரிசல் மண் மற்றும் வறட்சிப் பகுதிக்கு ஏற்றது.
டி.எச்.எஸ். 1: வீரிய ஒட்டு இரகமான இது, காளிப்பட்டி, கிரிக்கெட் பால் ஆகிய இரகங்கள் மூலம் உருவாக்கப் பட்டது. கர்நாடக மாநிலம் தார்வார் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப் பட்டது.
பழம், வட்ட மற்றும் நீள்வட்டமாக இருக்கும். சதைப்பகுதி மென்மையாக, கரையும் சர்க்கரை நிறைந்து, இளமஞ்சள் நிறத்தில், 150 கிராம் எடையில் இருக்கும்.
டி.எச்.எஸ். 2: இதுவும் காளிப்பட்டி, கிரிக்கெட் பால் இரகங்களின் கலப்பில் உருவாக்கப்பட்ட ஒட்டு இரகமாகும். அதிக மகசூலைத் தரும். பழம் வட்டமாக 180 கிராம் எடையில் இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். இனிப்புச் சுவை மற்ற இரகங்களை விடக் கொஞ்சம் குறைவாக இருக்கும்.
இனப்பெருக்கம்
தொடக்கக் காலத்தில் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டது. இதனால், மெதுவான வளர்ச்சி, குண மாறுதல்கள், மரங்கள் உயரமாக வளர்தல், காய்ப்புக்கு நீண்ட காலமாதல் போன்ற சிக்கல்கள் எழுந்தன.
எனவே, விதையில்லா இனப்பெருக்க முறைகள் நடைமுறைக்கு வந்தன. விண் பதியன், தொட்டிப் பதியன் போன்றவை, மராட்டியம், குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் சிறப்பாகப் பயன்படுகின்றன.
ஒட்டுக் கட்டுதல் மிகவும் சிறந்த முறை. இதில், நெருக்கு ஒட்டுக் கட்டும் முறை, கடந்த 40 ஆண்டுகளாக நடப்பில் உள்ளது.
இதில் பயன்படும் வேர்ச் செடிக்கு முக்கியப் பங்குண்டு. பாலா அல்லது வட இந்திய கிர்னி என்னும் இனமே இதற்கு மிகவும் ஏற்றது.
நடவு
நிலத்தை 3-4 முறை நன்கு உழுது, 8×8 மீட்டர் இடைவெளியில், 60x60x60 செ.மீ. நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுத்துச் சில நாட்கள் ஆறப்போட வேண்டும்.
பிறகு, மட்கிய தொழுவுரம் மற்றும் மேல் மண்ணைக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். மழைக் காலத்தில் தான் செடிகளை நட வேண்டும்.
காற்றில் ஆடிச் சேதமாவதைத் தடுக்க, செடிகளுக்கு இருபுறமும் குச்சிகளை ஊன்றிக் கட்டிவிட வேண்டும்.
வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தை மட்டும் வளர்க்கக் கூடாது. ஏனெனில், மகரந்தச் சேர்க்கை நல்ல முறையில் நடந்து, நல்ல மகசூல் கிடைக்க, குறைந்தது 2-3 சப்போட்டா மரங்கள் இருக்க வேண்டும்.
பாசனம்
நடவுக்குப் பிறகு சில நாட்கள் வரை, 2-3 நாட்களுக்கு ஒரு முறையும், அடுத்து, 4-5 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்யலாம்.
ஓராண்டுக்குப் பிறகு, 10-15 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்யலாம். சப்போட்டா மரம் நன்கு வறட்சியைத் தாங்குவதால், மானாவாரிப் பயிராகவே வளர்க்கலாம்.
உரமிடல்
கன்றுகளை நடும் போது இரசாயன உரம் எதையும் இடத் தேவையில்லை. ஓராண்டுக்குப் பின், கன்று ஒன்றுக்கு 200 கிராம் தழைச்சத்து, 200 கிராம் மணிச்சத்து, 250 கிராம் சாம்பல் சத்து வீதம் இட வேண்டும்.
மூன்றாம் ஆண்டில் 400: 400: 500 கிராம் வீதம் இட வேண்டும். நான்காம் ஆண்டில் 600: 600: 750 கிராம் வீதம் இட வேண்டும். ஐந்தாம் ஆண்டில் 800: 800: 1000 கிராம் வீதம் இட வேண்டும்.
ஐந்து ஆண்டுக்குப் பிறகு, ஒரு கிலோ தழைச்சத்து, ஒரு கிலோ மணிச்சத்து, 1.5 கிலோ சாம்பல் சத்து வீதம் இட வேண்டும்.
மேலும், 30-50 கிலோ வீதம் மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். பாசன வசதியுள்ள பகுதிகளில் இந்த உரங்களை, கோடையில் ஒருமுறை, மழைக் காலத்தில் ஒருமுறை என, இரண்டாகப் பிரித்து இடலாம். இதனால், கன்றுகள் சீராக வளரும்; உரம் வீணாதல் தடுக்கப்படும்.
பின்செய் நேர்த்தி
ஒட்டுப் பகுதிக்குக் கீழே தழைக்கும் வேர்ச் செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
தரையிலிருந்து சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் பிரியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மரத்தில் கிளைகள் சீராகப் பரவி இருக்க வேண்டும்.
சப்போட்டா மரத்துக்குக் கவாத்து தேவையில்லை. உயரமாக வளரும் தண்டுகள் மற்றும் அடர்ந்து நிழல் தரும் கிளைகளை நீக்க வேண்டும்.
ஊடுபயிர் சாகுபடி
தொடக்க ஆண்டுகளில், மர வரிசைகளுக்கு நடுவே காய்கறிப் பயிர்களை, பப்பாளி போன்ற குறுகியகாலப் பழப் பயிர்களைப் பயிரிட்டு, வருவாயைப் பெருக்கலாம்.
பயிர்ப் பாதுகாப்பு
பூச்சிகள்: தண்டுத் துளைப்பான்: இதன் வண்டுகள், மரப் பட்டைகளில், வட்டமாகத் துளைகளை இட்டு உள்ளே சென்று, திசுக்களைத் தின்று சேதப்படுத்தும்.
துளைகள் வழியே வெளிவந்து கிடக்கும் மரத்துகள்கள் மூலம் இதன் தாக்குதலை அறியலாம்.
துளைக்கு அருகிலுள்ள காய்ந்த பட்டைகளை வெட்டிப் பார்த்தால், துளைப்பானின் இருப்பிடத்தை அறியலாம்.
கட்டுப்பாடு: கடினமான கம்பியைத் துளைக்குள் விடுவது மற்றும் பெட்ரோலில் அல்லது ம.எண்ணெய்யில் நனைத்த பஞ்சால் துளையை மூடி, அதன் மேல் ஈர மண்ணைப் பூசுவதால், வண்டுகள் மூச்சுத் திணறி மடிந்து விடும்.
செதில் பூச்சி: இது இலைப்பரப்பில், நடு நரம்பின் பக்கவாட்டுப் பகுதியில், கொழுந்தில், சாற்றை உறிஞ்சிச் சேதப்படுத்தும்.
இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டைமீத்தயேட் வீதம் கலந்து, 2-3 முறை தெளிக்க வேண்டும்.
இலைச் சுருட்டுப்புழு: இது, இள மொட்டுகள், இலைகள் மற்றும் இளம் காய்களை உண்டு சேதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, 0.15 சத கார்பரில் மருந்தைத் தெளிக்க வேண்டும்.
மாவுப்பூச்சி: இது, இலைகளின் அடிப்பரப்பில், பழக்காம்பின் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி விட்டு, சர்க்கரைப் பாகைப் போன்ற திரவத்தைப் பெருமளவில் சுரக்கும்.
இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டைமீத்தோயேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
பூ மொட்டுகளை உண்ணும் பூச்சி: இது, பூக்கள் மற்றும் பூ மொட்டுகளை சேதப்படுத்தி, அவற்றை உதிரச் செய்யும். இதனால், 88 சதப் பூக்கள் உதிர்ந்து விடும்.
இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டைமீத்தோயேட் வீதம் கலந்து, 2-3 முறை தெளிக்க வேண்டும்.
பட்டையை உண்ணும் பூச்சி: இது, மரப்பட்டையைத் துளைத்துச் சென்று சேதத்தை ஏற்படுத்தும். சேதமான பகுதியில் இதன் எச்சம் ஒட்டியிருக்கும்.
இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டைமீத்தோயேட் வீதம் கலந்து, 1-2 முறை தெளிக்க வேண்டும்.
நோய்கள்: இலைப்புள்ளி நோய்: இலையின் மத்தியில் வெள்ளையாக, அதைச் சுற்றி இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில், கணக்கற்ற சிறு பகுதிகள் தோன்றும். அண்மையில் இந்நோயின் தாக்கம் மிகுந்துள்ளது.
கட்டுப்பாடு: மாதம் ஒருமுறை என, 0.2 சத டைத்தேன் எம். 78 மருந்தை 2-3 முறை தெளிக்க வேண்டும்.
கோ. 1, கிரிக்கெட் பால் ஆகிய இரகங்கள் இந்நோயை எதிர்த்து வளரும். கோ. 2, காளிப்பட்டி ஆகிய இரகங்கள் இந்நோயைத் தாங்கி வளரும்.
கரும்பூசண நோய்: இது, செதில் பூச்சிகள் மற்றும் மாவுப் பூச்சிகள் சுரக்கும் தேன் போன்ற திரவத்தில் வளரும் கரும் பூசணத்தால் ஏற்படும் நோய். இது, மகரந்தச் சேர்க்கைத் திறனைப் பாதித்து, காய்களைச் சிதைக்கும்.
கட்டுப்பாடு: ஒரு கிலோ மைதாவை 5 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, அதில் ஒரு லிட்டர் எடுத்து, நான்கு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இக்கரைசல் உலர்ந்து செதில் செதிலாக உரியும் போது, கரும் பூசணமும் உதிர்ந்து விடும். மேலும், 18 லிட்டர் நீரில் 40 கிராம் ஜினப் மருந்தைக் கரைத்தும் தெளிக்கலாம்.
கிளைகள் சரிதல்
தென்னிந்தியா, மராட்டியம் குஜராத் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் இந்நோயால், கிளைகள் சரிவதால், காய்ப்பிடிப்பு மற்றும் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும்.
இந்தக் கிளைகள், சிறிய, வறண்ட, கடினமான, சுருங்கிய காய்களைக் காய்க்கும். இதைக் கட்டுப்படுத்த, மழைக்காலம் முடிந்ததும், 500 முதல் 1000 பி.பி.எம். பாஸ்பாரிக் அமிலத்தை, 1-2 முறை தெளிக்க வேண்டும்.
அறுவடை
சப்போட்டா, ஆண்டுக்கு இருமுறை காய்க்கும். ஏப்ரல்- ஜூலை பருவத்திலும், செப்டம்பர்- நவம்பர் பருவத்திலும் காய்க்கும். இந்தப் பழ முதிர்ச்சியை அறிவது சற்றுக் கடினம்.
மற்ற பழங்களைப் போல இதில் நிற மாற்றம் ஏற்படுவது இல்லை. ஆயினும், தோலிலுள்ள சிறிய கருந் துகள்கள் மறைந்து, பளபளப்பாக இருக்கும். பழத்தை நகத்தால் கீறிப் பார்த்தால், உள்ளே, மித மஞ்சளாக இருக்க வேண்டும்.
பால் வடியக் கூடாது. பழத்தின் அடிப்பக்கம் உள்ள முள் போன்ற நுனி, எளிதில் பிரிந்து வரும்.
பழத்தோலின் சொரசொரப்பு மாறி மென்மையாகும். வயதைப் பொறுத்து ஒரு மரம் 1000-1500 பழங்களைத் தரும். நட்ட மூன்றாம் ஆண்டிலிருந்து மகசூல் கிடைக்கும்.
முனைவர் சி.இராஜமாணிக்கம், முனைவர் ஆ.பியூலா, முனைவர் வே.சுவாமிநாதன், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.
சந்தேகமா? கேளுங்கள்!