My page - topic 1, topic 2, topic 3

நிலக்கடலையில் கூடுதல் மகசூலுக்கு உதவும் ஜிப்சம்!

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நிலக்கடலை அதிகம் பயிரப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் எளிய சில உத்திகளைக் கடைப்பிடித்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம் என, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

“நிலக்கடலையை விதைப்பதற்கு முன், அடியுரமாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 35 கிலோ டி.ஏ.பி., 40 கிலோ பொட்டாஷ் வீதம் கடைசி உழவுக்கு முன் இட வேண்டும். மேலும், ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை, கடைசி உழவுக்குப் பிறகும், விதைப்பதற்கு முன்னும் இட வேண்டும்.

இப்படி, ஜிப்சத்தை இடாத நிலையில், மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது, மானாவாரி நிலக்கடலை சாகுபடியில், விதைத்த நாளிலிருந்து 40 முதல் 75 நாட்களுக்குள்ளும், இறவை சாகுபடியில், 40 முதல் 45 நாட்களுக்குள்ளும், ஏக்கருக்கு 160 கிலோ வீதம் செடிகளின் வேருக்கு அருகில் ஜிப்சத்தை இட்டு மண்ணை அணைக்க வேண்டும். இத்துடன், ஏக்கருக்கு 4 கிலோ போராக்சையும் கலந்து இட்டால், பயிர்கள் சீராக வளரும்.

நிலக்கடலைப் பயிருக்கு ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணுரக் கலவையை மூன்று வாணலி மணலில் கலந்து மேலுரமாகத் தெளித்தால், தேவையான அனைத்து நுண் சத்துகளையும் பயிர்கள் குறைவின்றி எடுத்துக் கொண்டு செழித்து வளரும். கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஜிப்சம், நுண்ணூட்டக் கலவை, ஜி.எஸ்.டி. நீங்கலாக 50 சத மானியத்தில் கிடைக்கும். இவற்றை அனைவரும் வாங்கி நிலக்கடலைக்கு இட்டுப் பயன் பெறலாம்’’ என்றார். 

நிலக்கடலைக்கு ஜிப்சம் இட வேண்டியதன் அவசியம் குறித்து வேளாண்மை அலுவலர் பிரியா தெரிவித்ததாவது:

“நிலக்கடலை பயிரின் சிறப்பு என்னவெனில், இது, வெளியில் பூத்து மண்ணுக்குள் காய்க்கும் பயிராகும். நிலக்கடலையின் பூ கருவுற்ற பிறகு அதன் ஊசியானது நிலத்தில் இறங்கிக் காயாக மாறும். இந்த நேரத்தில் ஜிப்சத்தை இட்டால், மண்ணின் கடினத்தன்மை நீங்கி இலகு தன்மை அடைவதுடன், கருவுற்ற பூவின் ஊசி அரும்பு முனை உடையாமல் எளிதில் மண்ணுக்குள் இறங்கி அனைத்துப் பூக்களும் காய்களாக மாறி அதிக மகசூலைப் பெற உதவும்.

ஒற்றைக் காய்கள் இல்லாமல் இரு விதைக் காய்களாக உருவாக ஜிப்சம் உறுதுணை செய்வதால், ஏக்கருக்கு 20 சதம் வரை அதிக மகசூலைப் பெறலாம். ஜிப்சத்தில் உள்ள கால்சியச் சத்து, காய்கள் நல்ல முதிர்ச்சியுடன் உருவாகவும், பொட்டு திடமாக உருவாகவும் உதவும். சல்பர் சத்து, அதிக எண்ணெய்ச் சத்துடன் கூடிய தரமான மணிகளைக் கொண்ட நிலக்கடலை உருவாக உதவுவதுடன், பூச்சி மற்றும் நோயிலிருந்து பயிரைக் காப்பாற்றும்.  

ஜிப்சம், மண்ணை இலகுவாக்கிப் பொலபொலப்பாக வைப்பதால், நிலத்தில் மழைநீரை நன்கு சேமிக்கலாம். மேலும், அறுவடையின் போது காய்கள் அறுபட்டு மண்ணுக்குள் நின்று விடாமல் முழுமையாகக் கிடைக்கும். எனவே, விவசாயிகள் சிறப்பான மகசூலைப் பெறலாம்’’ என்றார்.


பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks