My page - topic 1, topic 2, topic 3

சிறுதானிய சாகுபடி வாய்ப்புகளும் சவால்களும்!

ந்த 2023 ஆம் ஆண்டை உலகச் சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்து உள்ளது. உலக மக்கள் தொகையில் கோடிப் பேர் இன்றளவும் சிறுதானியங்களை முக்கிய உணவாக உண்டு வருகின்றனர்.

இந்தியாவில் 12.45 மில்லியன் எக்டரில் 15.53 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. இதில், 3.74 சதம் தமிழகத்தின் பங்களிப்பாகும்.

2020-21 ஆம் ஆண்டில், இந்தியா 29.97 மில்லியன் டாலர் மதிப்புக்குச் சிறுதானியப் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் உலகளவில் சிறுதானிய ஏற்றுமதி 380 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

உலகளவில் சிறுதானிய ஏற்றுமதியில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியாவில் சிறுதானிய உற்பத்தியில் இராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்னும் குறள் மறை கூறுவதைப் போல, நோயை அறிந்து, அதன் காரணம் அறிந்து, அதனைப் போக்கும் முறைகளைக் கண்டறிந்து, நோயைக் களைய வேண்டும்.

நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் உடல் நலத்துடன் நலமாக வாழ்ந்தார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம், அவர்கள் உடல் உழைப்புடன், சிறுதானியங்கள் உள்ளிட்ட பலவிதத் தானியங்களை உணவில் பயன்படுத்தி வந்தார்கள்.

ஆனால், இப்போது உடல் உழைப்பும் குறைந்து விட்டது. முரண்பட்ட உணவுப் பழக்க வழக்கத்தால், தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் போன்றவையும் அதிகரித்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டில் 194 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது, 2025 ஆம் ஆண்டில் 333 மில்லியனாக உயரும் என்று கூறப்படுகிறது.

இதைப் போல, 300 மில்லியன் மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் தான். எனவே, இந்தியாவில் சிறுதானிய உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சிறுதானிய உற்பத்தியில் சாதகமான நிலை

கடுமழை அல்லது நீர்ப் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் சரிவு, இரசாயன உரங்களால் மண்வளம் கெடுதல் போன்றவற்றால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைகிறார்கள். இந்நிலையில், அனைத்துக் கால நிலைகளையும் தாங்கி வளரும் சிறு மற்றும் குறுந் தானியங்கள் சாகுபடி ஏற்றவையாக உள்ளன.

தமிழகத்தில் மிகக் குறைவாக மழை பெய்யும் தர்மபுரி, விருதுநகர், மதுரை மற்றும் கொல்லிமலை, ஜவ்வாது மலை போன்ற மலைப் பகுதிகளில் சிறுதானியங்கள் அதிக மகசூலைக் கொடுக்கின்றன.

நெல் விளைவதற்கு 1,500 மி.மீ. நீர் தேவை. ஆனால், சிறுதானியங்கள் விளைய 400 மி.மீ. நீரே போதுமானது. பனிவரகு போன்ற குறுந் தானியங்கள் பனியிலேயே வளர்ந்து விளையக் கூடியது.

உரம் போன்ற இடுபொருள்கள் மிகக் குறைவாகவே தேவைப்படும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலால், ஒரு ஏக்கரில் நெல்லைப் பயிரிட ஆகும் செலவில், நான்கு ஏக்கரில் சிறுதானியங்களைப் பயிரிடலாம்.

சிறுதானியங்கள் குறைவான நாட்களில், 90 நாட்களில் விளைந்து அறுவடைக்கு வந்து விடும். அதிக வெப்பம் மற்றும் சாதகமற்ற கால நிலையிலும் சிறு, குறு தானியங்கள், விளைந்து விடும் திறன் மிக்கவை. விவசாயிகளின் பொருளாதாரத்தில் சிறுதானிய சாகுபடி பெரும்பங்கு வகிக்கிறது. குறைந்த உற்பத்திச் செலவில் அதிக வருமானம் ஈட்டலாம்.

இந்தத் தானியங்களில் உடல் நலத்துக்குத் தேவையான தாதுகள், புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் உயிர்ச் சத்துகள் மிகுந்துள்ளன. இவற்றில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை, பிற தானியங்களில் இருப்பதை விட அதிகமாக உள்ளன.

இத்தகைய சாதகமான காரணங்கள் இவற்றைப் பயிரிடுவதற்கு உகந்தனவாக இருந்தாலும், அதிக உற்பத்தியை எடுப்பதில் சில சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன.

சிறுதானிய சாகுபடியில் உள்ள சவால்கள்

பெரும்பாலான சிறு மற்றும் குறுந் தானியங்களை, மானாவாரி மற்றும் வளம் குறைந்த நிலங்களில் சாகுபடி செய்வதால், இவற்றின் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது.

சிறு தானியங்களைப் பயிரிடும் விவசாயிகள், மிகக் குறைவான சத்துகளையே இந்தப் பயிர்களுக்கு இடுகிறார்கள். அதிக விளைச்சலைத் தரும் இரகங்களைப் பயிரிடாமல், குறைந்த விளைச்சலைத் தரக்கூடிய நாட்டு இரகங்களைப் பயிர் செய்கிறார்கள்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிறுதானியப் பயிர்கள் துறை, அத்தியந்தலில் உள்ள சிறுதானிய மகத்துவ மையம் ஆகியவற்றில் இருந்து, கேழ்வரகு, தினை, சாமை, பனிவரகு ஆகியவற்றில் புதிய இரகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இவற்றை விதைத்தால் அதிக உற்பத்தியைப் பெற முடியும். ஆனால், இவற்றைப் பற்றியும், புதிய தொழில் நுட்பங்களைப் பற்றியும் விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.

பாசன வசதியுள்ள இடங்களில் நெல், பயறு வகைகள் மற்றும் பணப் பயிர்களையே விவசாயிகள் பயிரிடுவதால், சிறு தானியங்களின் மொத்த உற்பத்திக் குறைந்து விடுகிறது. சிறுதானிய சாகுபடிக்கு மானிய உதவிகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. சிறுதானியங்களின் விற்பனை விலையும் குறைவாக உள்ளது.

மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதைப் பற்றிய விழிப்புணர்வும் விவசாயிகளிடம் போதியளவில் இல்லை. இந்த சேவையைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வழங்கி வருகிறது. சிறு தானியங்களைப் பதனிடும் இயந்திரங்கள் மற்றும் அவை கிடைக்கும் இடங்களைப் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை.

இவற்றைக் களைவதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள், மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் இதர வேளாண்மைக் கல்லூரிகள் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றன.

இவற்றின் சேவையை உழவர்கள் பயன்படுத்திக் கொண்டு, சிறுதானிய உற்பத்தியை இரண்டு மடங்காகவும், இலாபத்தை மூன்று மடங்காகவும் உயர்த்தி, வாழ்வில் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும்.

சிறுதானியங்களின் மருத்துவக் குணங்கள்

சிறுதானியங்களில், பைட்டோ இரசாயனங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப் பொருள்கள் அதிகளவில் உள்ளன. இவற்றில் உள்ள நார்ச்சத்து, உடல் பருமனைக் குறைக்கிறது. இவற்றில் குறைவாக இருக்கும் கிளைசிமிக் இன்டேக்ஸ், இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகாமல் இருக்க உதவுகிறது.

சிறு தானியங்களில் உள்ள பாஸ்பரஸ், எலும்புகளை பலமிக்கதாக ஆக்குகிறது. இரும்புச்சத்து, பெண்களுக்கு இரத்தச்சோகை வராமல் தடுக்கிறது. இவற்றில் அதிகளவில் உயிர்ச் சத்துகள் உள்ளன. இவை, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றன.


Pachaiboomi_VENKADALAKSHMI

முனைவர் க.வேங்கடலெட்சுமி, முனைவர் ச.நக்கீரன், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks