My page - topic 1, topic 2, topic 3

மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

மா சாகுபடி

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட்.

முக்கனிகளில் முதலில் இருப்பது மாம்பழம். இது, முதன் முதலில் தெற்காசிய நாடுகளில் தோன்றி, இன்று உலகம் முழுவதும் தட்ப வெப்ப நாடுகளில் அதிகளவில் விளைகிறது. உலகளவில், மாம்பழ உற்பத்தியில் தென்னிந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மேலும், உள்நாட்டில் பதப்படுத்திய மாம்பழப் பொருள்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் நல்ல வருவாயை ஈட்டித் தருகின்றன.

நம் நாடு பழங்காலம் முதல் இன்று வரை மா சாகுபடிப் பரப்பிலும், உற்பத்தியிலும் முன்னிலை வகித்தாலும், உற்பத்தித் திறனில் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியாவை விடப் பின்தங்கியே உள்ளது. இதற்குக் காரணம், பழ உற்பத்தியில் தோன்றும் இடர்களைச் சரியான முறையில் கட்டுப்படுத்தத் தவறுவதே ஆகும்.

இவற்றில், மாம்பழத்தில் தோன்றும் நோய்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நோய்கள் மட்டும் அறுவடைக்குப் பிறகு 14 சதவீதச் தேசத்தை விளைவிக்கும். இந்த நோய்களுக்கான காரணிகள் பெரும்பாலும், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் ஆகும்.

மாம்பழத்தைத் தாக்கும் பூசண நோய்கள்

ஆன்த்ராக்நோஸ் – கொலட்டோட்ரைக்கம் கிளியோஸ்போராய்ட்ஸ்

இது, பரவலாக உலகம் முழுவதும் அனைத்து மாம்பழ இரகங்களையும் தாக்கி, பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நம் நாட்டில் நீலம் மற்றும் பெங்களுரா இரகங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.

நோய் அறிகுறிகள்: இலை, தண்டு, பூ மற்றும் பழம் என, அனைத்துப் பாகங்களிலும் காணப்படும். குறிப்பாக, பழங்களின் மேற்பரப்பில் கரும்புள்ளி தோன்றி, நாளைடைவில் பழம் முழுவதும் பரவி, பழங்களை விரைவாக அழுகச் செய்யும். பாதிக்கப்பட்ட காய்கள் கனியாகும் போது, நோயுற்று இருப்பதைத் தெளிவாகக் காணலாம். குறிப்பாக, குளிர் காலத்தில் நோயின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.

பரவுதல்: இலைச் சருகுகளில் இந்நோயின் பூசண வித்துகள் தங்கியிருந்து, காற்றின் மூலம் பரவி, வளர்ந்து வரும் இளம் இலைகளையும், காய்களையும் தாக்கும். இதன் தாக்குதலுக்கு உள்ளான காய்களில் நோய் அறிகுறிகள், அறுவடைக்கு முன்பே தோன்றும். ஆனால், காய் பழமாகும் போது, பாதிப்பு வெகு அதிகமாக இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: அறுவடைக்கு முன்: பூக்கள் பூக்கும் போது, முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை 0.1 சத கார்பன்டாசிம் அல்லது 0.1 சத குளோராதலானில் பூசணக் கொல்லியை, அறுவடைக்கு 15 நாள் முன்பு வரை தெளிக்க வேண்டும்.

அறுவடைக்குப் பின்: அறுவடை செய்த பழங்களை 24 மணி நேரத்தில் 52 சென்டிகிரேடு வெப்ப நிலை வெந்நீரில் 5 நிமிடம் ஊற வைத்து எடுத்து, 0.1 சத கார்பன்டாசிம் கரைசலில் ஊறவிட வேண்டும். பிறகு, பழங்கள் சேதம் ஆகாத வகையில் நன்கு கழுவி உலர்த்திப் பதப்படுத்த வேண்டும்.

அல்லது வெந்நீரில் நன்கு கழுவிய பழங்கள் மீது அமோனியா சல்பர் டை ஆக்சைடு அல்லது கார்பன் டை ஆக்சைடு வாயுவை, பாதுகாப்பான முறையில் செலுத்தினால், பழ அழுகலைக் கட்டுப்படுத்தலாம்.

தண்டமுகல் நோய் – லேசிடிப்ளோடியா தியோப்ரோமே

நோய் அறிகுறிகள்: இந்நோய்ப் பூசணம், அறுவடை செய்த பழக்காம்பின் வழியே பழத்துக்குள் சென்று சேதம் செய்யும். இதனால், முதலில் பழக்காம்பின் அருகே உள்ள தோல் கறுப்பாக மாறிவிடும். பிறகு, இந்தக் கரும்பகுதி விரிந்து 2-3 நாட்களில் முழுப் பழத்தையும் கறுப்பாக்கி அழுகச் செய்து விடும். குறிப்பாக, குளிர் காலத்தில் இதன் பாதிப்பும் பரவலும் அதிகமாக இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: நன்கு முதிராத காய்களை அறுவடை செய்யக் கூடாது. அறுவடை செய்த பழங்களை, 52 சென்டிகிரேடு வெந்நீரில் நேர்த்தி செய்து, 0.1 சத கார்பன்டாசிம் மற்றும் 55 மி.லி. ப்ரோக்லோராசை, 100 லிட்டர் நீரில் கலந்து பழங்களை முக்கி எடுக்க வேண்டும்.

தண்டு மென்னழுகல் நோய் – டிப்லோடியா நாட்டலென்சிஸ்

நோய் அறிகுறிகள்: இந்நோய்ப் பூசணம், 80 சத ஈரப்பதம் மற்றும் 25-31 சென்டிகிரேடு வெப்ப நிலையில் வேகமாகப் பரவிப் பழங்களை அழுகச் செய்யும். முதலில் பழக்காம்பை ஒட்டியுள்ள தசைப்பகுதியை அழுகச் செய்யும். பிறகு, மிக விரைவாகத் தசைப்பகுதி முழுவதும் பரவி அழுகச் செய்வதால், பழம் மென்மையாக மாறிவிடும்.

கட்டுப்படுத்துதல்: அறுவடை செய்த பழங்களை வெந்நீரில் கழுவி, 6 சத போராக்ஸ் கரைசலில் 3 நிமிடம் ஊற வைத்து எடுத்து உலர்த்த வேண்டும். அறுவடைக்கு 15 நாட்கள் முன்னதாக 0.1 சத கார்பன்டாசிம் அல்லது மேங்கோசெப்பைத் தெளிக்க வேண்டும்.

கரும்புள்ளி அழுகல் நோய் – அஸ்பர்ஜில்லஸ் நைஜர் மற்றும் போமாப்சிஸ் மாஞ்சிபெரே

நோய் அறிகுறிகள்: முதலில் பழத்தின் அடிப்பகுதி மஞ்சள் நிறமாக மாறும். பிறகு, இது பரவி, ஒழுங்கற்ற சாம்பல் நிறப் புள்ளிகளாக மாறி அழுகத் தொடங்கும். மேலும், அழுகிய பகுதி அமுங்கி மென்மையாகி விடும். இதன் மேற்பரப்பில் கரும் பூசணம் வளர்ந்திருக்கும். இது, பெரும்பாலும் அறுவடையின் போது ஏற்படும் காயங்கள் மூலம் விரைவாகப் பரவும்.

கட்டுப்படுத்துதல்: அறுவடைக்கு முன், 0.2 சத பினோமில் மற்றும் 0.3 சத காப்பர் ஆக்சிகுளோரைடைத் தெளிக்க வேண்டும். அறுவடைக்குப் பின், 1,500 பி.பி.எம். பினோமில் அல்லது 0.1 சத கார்பன்டாசிம் கரைசலில் பழங்களை முக்கியெடுக்க வேண்டும்.

பழுப்புப் புள்ளி அழுகல் நோய் – பெஸ்டலோசியா மாஞ்சிபெரே

நோய் அறிகுறிகள்: முதிர்ந்த காய்களில் சிறிய பழுப்புப் புள்ளிகள் தோன்றும். அவற்றின் நடுப்பகுதி வெண்சாம்பல் நிறத்தில் இருக்கும். நாளடைவில் அப்புள்ளிகள் இணைந்து பழம் முழுவதும் பரவிச் சுருங்கி விடும்.

கட்டுப்படுத்துதல்: இந்நோய் பெரும்பாலும் 20-25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், மழைக் காலத்திலும் அதிகமாகப் பரவும். எனவே, அந்த நேரங்களில் மழை விட்ட பின் 0.2 சத சல்பர் கரைசல் மற்றும் 0.2 சத சினப்பை நன்கு கலந்து காய்களில் தெளிக்க வேண்டும்.

பாக்டீரிய அழுகல் நோய் – சூடோமோனாஸ் மாஞ்சிபெரே இன்டிகா

நோய் அறிகுறிகள்: இந்நோய், அறுவடைக்கு முன்னும், பின்னும் தோன்றும். அறுவடைக்கு முன் பாதிக்கப்பட்ட காய்கள் அடர் பழுப்புப் புள்ளிகளுடன் நீர் ஊறிக் காணப்படும். நாளடைவில் காய்கள் வளர்ச்சிக் குன்றி அழுகி விழுந்து விடும். அறுவடைக்குப் பிறகு பாதிப்புக்கு உள்ளான பழங்கள், பழுப்பு நிறத்தில் அழுகி இருக்கும். தோல் பகுதியில் வெடிப்புகள் தோன்றும். பிறகு, பழம் முழுவதும் நீர் ஊறிச் சுருங்கி விடும். மழையுடன் கூடிய பலத்த காற்றில், இந்நோய் மிக வேகமாகப் பரவும்.

கட்டுப்படுத்துதல்: அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன், 200-300 பி.பி.எம். ஸ்ரெப்டோ சைக்ளின் மருந்தைத் தெளிக்க வேண்டும். அறுவடைக்குப் பின், பழங்களை வெந்நீரில் நன்கு கழுவி எடுத்து, 200 பி.பி.எம். அக்ரிமைசின் 100 என்னும் மருந்தில் முக்கி எடுக்க வேண்டும்.

ஏற்றுமதிக்கான தேவைகள்

நோய்த் தாக்குதல் மற்றும் அறுவடையின் போது காயப்பட்ட பழங்களை, முற்றிலும் நீக்கிவிட வேண்டும். வெப்ப ஆவி மற்றும் வெந்நீரில் நேர்த்தி செய்த பழங்கள் ஏற்றுமதிக்கு ஏற்றவை.

பழச் சேமிப்புக் கூடங்களையும், பெட்டிகளையும் 0.02 சத குளோரின் அல்லது 2 சத ஃபார்மலின் மூலம் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். அறுவடைக்குப் பிறகு தோன்றும் நோய்களைத் தக்க நேரத்தில் கண்டறிந்து களைய வேண்டும். இல்லையேல், இந்நோய் மிக வேகமாகப் பரவி, பெருத்த சேதத்தை விளைவிக்கும்.


சு.சுகுணா, முனைவர் வி.ம.சீனிவாசன், முனைவர் பி.கார்த்திக், தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர், சீ.பார்த்தசாரதி, தாவர நோயியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks