நாம் தினமும் உணவில் சேர்க்கும் கீரைகளில் சத்தும் சுவையும் மிகுந்தது பாலக்கீரை. இது, கீரை வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், மூலிகைச் செடிகளில் ஒன்று என்று, சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்களைப் பற்றிப் பார்ப்போம்.
பாலக்கீரை பயன்கள்
+ பாலக்கீரையில் வைட்டமின் ஏ-யும், இரும்புச் சத்தும் அதிகமாக உள்ளன.
+ போலிக் அமிலம் நிறைந்த இந்தக் கீரை, கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் ஏற்றது.
+ மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே நிறைந்த பாலக்கீரை, எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருக்க உதவுகிறது.
+ இந்தக் கீரை, இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
சாகுபடி
+ பாலக்கீரையில் பல இரகங்கள் இருந்தாலும், பூசா பாலக், பூசா ஜோதி, பூசா ஹிட் ஆகிய இரகங்கள் குறிப்பிடத் தக்கவை.
+ பாலக்கீரை சாகுபடிக்கு, நல்ல மண்ணும் மணலும், சற்றே அமிலம் கலந்த இருமண், செம்மண் நிலங்கள் ஏற்றவை.
+ பாலக்கீரையை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். ஆனால், மழைக்காலத்தில் இதன் சாகுபடியைத் தவிர்ப்பது நல்லது.
+ சாகுபடி நிலத்தை, 2-3 முறை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரம் வீதம் இட்டுப் பரப்பி, சமப்படுத்த வேண்டும்.
+ மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றையும் இடலாம்.
+ அடுத்து, நீர் வசதிக்கு ஏற்ப, தேவையான அளவில் பாத்திகளை அமைக்க வேண்டும்.
+ எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். இவற்றைப் பாத்திகளில், 10×20 செ.மீ. இடைவெளியில் கோடுகளைக் கிழித்து ஊன்ற வேண்டும்.
+ ஊன்றியதும் பாசனம் செய்ய வேண்டும். மூன்றாம் நாள் உயிர்நீர் விட வேண்டும். பிறகு, மண்வாகைப் பொறுத்தும், ஈரத்தன்மையைப் பொறுத்தும் பாசனம் செய்யலாம்.
+ களைகளால் கீரைச் செடிகள் பாதிக்கப்படாமல் இருக்க, சரியான நேரத்தில் களைகளை நீக்க வேண்டும்.
+ இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, காலை நேரத்தில் தெளிக்கலாம்.
+ ஜீவாமிர்தக் கரைசலைப் பாசனநீரில், மாதம் இருமுறை கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
+ கீரைகளில் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், நொச்சி, பிரண்டை, சோற்றுக் கற்றாழைக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
+ இதற்கு, நொச்சி, பிரண்டை, சோற்றுக் கற்றாழையைச் சமமாக எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இந்தக் கரைசல் தயாராகி விடும்.
+ இதைப் பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை
விதைத்த முப்பது நாளிலிருந்து இலைகளைப் பறிக்கலாம். இப்படி, 6-8 முறை அறுவடை செய்யலாம். செடிகள் பூப்பதற்கு முன், இலைகளைப் பறித்து விட வேண்டும்.
முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.