தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

தென்னங்கன்று COCONUT SEEDS

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர்.

யிரம் தென்னை மரங்களை வைத்திருப்பவன் அரசனுக்குச் சமமாவான் என்பது பழமொழி. நீர் வசதியும் நல்ல நிலவசதியும் அமைந்து விட்டால் வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஏனெனில், தென்னை மூலம் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் பண மதிப்புள்ளவை. நீர்வசதி, நிலவசதியுடன் நல்ல காய்ப்பைத் தரும் கன்றுகளைத் தேர்வு செய்வதும், தென்னையில் அதிக மகசூலுக்கு மிக முக்கியம். தரமான தென்னங் கன்றுகளை உற்பத்தி செய்வது குறித்து விளக்குகிறது இந்தக் கட்டுரை.

தென்னை நாற்றங்கால் தொழில் நுட்பத்தில் மிகவும் அடிப்படையானது விதைத் தேங்காய்த் தேர்வாகும். தென்னை பல்லாண்டுப் பயிர் என்பதால், விதைகளைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. ஏழிலிருந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் தென்னை சீரான காய்ப்புக்கு வரும்.

எனவே, தரமான கன்றுகளை நடவில்லை யென்றால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வருத்தப்பட வேண்டியிருக்கும். அதுவரைக்கும் அந்தத் தென்னை மரங்களுக்குச் செய்த செலவும் காலமும் வீணாகப் போய் விடும். அதனால், தென்னை சாகுபடியில், தாய்மரத் தேர்விலிருந்து கடைசி வரைக்கும், முறையான சாகுபடி நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தாய் மரத்தின் பண்புகள்

சரியான தாய் மரத்தைத் தேர்வு செய்தாலே 50 சதவீதக் காய்ப்புத் திறனை அதிகரிக்க முடியும். தாய்மரம் நேராக, நெருக்கமான ஓலைத் தழும்புகளைக் கொண்டிருக்க வேண்டும். மரத்தில், 30-40 விரிந்த ஓலைகள் இருக்க வேண்டும். ஓலைகள் நீளமாக இருந்தால் குலைகளைத் தாங்காது. எனவே, ஓலையின் நீளம் 6 மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது.

இந்தப் பண்புகளைக் கொண்ட 25லிருந்து 60 வயது வரையுள்ள மரங்களில் இருந்து விதைத் தேங்காய்களை எடுக்கலாம். 11-12 மாத வளர்ச்சியுள்ள காய்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மானாவாரி தென்னந் தோப்புகளில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும், பாசனத் தோப்புகளில் எல்லாப் பருவத்திலும் விதைக் காய்களைத் தேர்வு செய்யலாம்.

விதைத் தேங்காயின் பண்புகள்

விதைத் தேங்காய் நீரில் செங்குத்தாக மிதந்தால் அது தரமான காய். மட்டையை உரித்த பிறகு 650-750 கிராம் எடை இருக்க வேண்டும். வாடல் நோய், ஈரியோபைட் சிலந்தி பாதிக்காத மரங்களில் இருந்து விதைக் காய்களை எடுக்க வேண்டும். தாய் மரங்களில் உள்ள முதிர்ந்த காய்களை வெட்டி, 15 நாள் வரை வெய்யிலில் உலர வைக்கும் போது, உரிமட்டையின் நிறம் மாறி எடை குறையும். அதற்குப் பிறகு, 15 நாள் நிழலில் வாட வைத்து நடவு செய்தால், சீரான முளைப்பு வரும்.

தென்னங்கன்று நாற்றங்கால் அமைவிடம்

தென்னை நாற்றங்காலை அமைப்பதற்கு, மணற்பாங்கான சமதள நிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தகைய இடத்தில் நடவு செய்தால், கன்றுகளைப் பிடுங்கும் போது பாதிப்பு ஏற்படாது. நீரும் தேங்கி நிற்காது. கரையான் பாதிப்பும் அதிகம் இருக்காது. நாற்றங்கால் அமையவுள்ள இடம் திறந்த வெளியாக இருப்பது நல்லது. தென்னந் தோப்பில் அல்லது 50 சதவீதம் நிழலுள்ள இடத்தில், நிழல் வலைக்குள் பதியன் போடலாம். நிழல் அதிகமுள்ள இடங்களைத் தவிர்ப்பது நல்லது.

தென்னங்கன்று நாற்றங்கால் அமைப்பு

அந்தடி அகலம் மற்றும் இடத்தின் அமைப்புக்கு ஏற்ப, 50-100 அடி நீளமுள்ள பாத்திகளை அமைக்க வேண்டும். இரண்டு பாத்திகளுக்கு இடையே 1.5 அடி அகலத்தில் வாய்க்கால் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் ஐந்து வரிசையில் விதைக் காய்களை விதைக்க வேண்டும். விதைக் காய்களை, சிலர் செங்குத்தாகவும், சிலர் படுக்கை வசமாகவும், சிலர் சாய்வாகவும் நடவு செய்கிறார்கள்.

சாய்வாகவும், படுக்கை வசத்திலும் நடும் காய்களில் வரும் தூர், தொடக்கத்தில் பெரிதாகத் தெரிந்தாலும், ஓராண்டுக் கன்றாக வளர்ந்த பிறகு, கன்றுகளின் வீரியத்தில் எந்த மாற்றமும் இல்லை. செங்குத்தாக நடும் காய்கள் போக்குவரத்துக்கு வசதியாக இருப்பதால், செங்குத்து விதைப்பே சிறந்தது.

மணற்பாங்கான நாற்றங்காலுக்கு ஒருநாள் விட்டு ஒருநாளும், மற்ற நாற்றங்காலுக்கு வாரம் இருமுறையும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வடிகால் வசதி சரியாக இல்லாமல் நீர்த் தேங்கினால், காய்கள் முளைப்பதும், கன்றுகள் வளர்வதும் பாதிக்கப்படும்.

நெகிழிப் பைகளில் நாற்று உற்பத்தி

நெகிழிப் பைகளிலும் தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். இதற்கு, 500 கேஜ் தடிமன், 60×40 செ.மீ. அளவுள்ள கறுப்பு நெகிழிப் பைகளைப் பயன்படுத்தலாம். இந்தப் பைகளில், மண், மணல், மட்கிய எரு மூன்றையும் சமமாகக் கலந்து நிரப்பிக் காய்களை நடலாம். தென்னைநார்க் கழிவை மட்டுமே வைத்தும் நாற்றுகளை உருவாக்கலாம்.

நெகிழிப் பைகளில் நாற்றுகளை உருவாக்க, முதலில், நிலத்தில் முதல்நிலை நாற்றங்காலை அமைத்து, விதைக் காய்களை நெருக்கமாக விதைக்க வேண்டும். அதில் முளைத்த வித்துகளை எடுத்து நெகிழிப் பைகளில் நடலாம். அதாவது, முளைத்த வித்துகளை நெகிழிப் பைகளில் செங்குத்தாக வைத்து, காயைச் சுற்றியுள்ள பகுதியை, நன்றாக அழுத்திவிட வேண்டும்.

தென்னங்கன்று பராமரிப்பு

விதைத்து ஆறு மாதத்தில் முளைத்து வராத காய்களை அகற்றிவிட வேண்டும். முளைத்த பிறகு, செதில் பூச்சி, சிலந்தி போன்றவற்றின் தாக்குதல் இருந்தால், டைமெத்தோயேட் பூச்சிக் கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 5 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். எறும்பு, கரையான் பாதிப்பு இருந்தால், குளோரிடான் 5% தூளை நாற்றங்காலில் தூவி விடலாம்.

தென்னை நாற்றுத் தேர்வும் நடவும்

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, தரமான தென்னங் கன்று, முளைவரும் போதே நல்ல வளர்ச்சியுடன் இருக்கும். நடவு செய்த 10-12 மாத தென்னங்கன்று 6-8 இலைகளைக் கொண்டதாகவும், ஒன்பது மாதத் தென்னங்கன்று குறைந்தது 4 இலைகளைக் கொண்டதாகவும் இருப்பது அவசியம்.

நடவுக் கன்றின் தண்டுப்பகுதி 10-12 செ.மீ. பருமன் இருக்க வேண்டும். சீக்கிரமாக இலை விரியக்கூடிய தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். மந்தமான வளர்ச்சி, வளைந்து மெலிந்த தண்டுகளைக் கொண்ட கன்றுகளை நடக்கூடாது.

நாற்றங்காலில் உள்ள தென்னங் கன்றுகளை, மண்வெட்டி அல்லது கடப்பாரை மூலம், மண்ணை இளக்கி, கன்றுகளை மெதுவாக எடுக்க வேண்டும். மட்டையைப் பிடித்து இழுக்கக் கூடாது. நெட்டை வகைக் கன்றுகளை, நாற்றங்காலில் இருந்து எடுத்த பத்து நாட்களுக்குள்ளும், குட்டை வகைக் கன்றுகளை இரண்டு நாட்களுக்குள்ளும் நடுவது நல்லது.

தென்னங் கன்றுகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு போகும் போது, வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு நீரை விட வேண்டும். நெகிழிப் பைகளில் இருக்கும் கன்றுகளின் வேர்கள் வெளியே வளர்ந்திருந்தால் அதை வெட்டி விடலாம்.

தென்னைக்கான மண்வகை

வளமான மண்ணைத் தேர்வு செய்து தென்னையை நட வேண்டும். செம்மண், வண்டல் மண், சரளை மண், கடற்கரை மணல் போன்றவற்றில், தென்னை நன்றாக வளர்ந்தாலும், செம்மண் மற்றும் வண்டல் மண்ணே, தென்னை சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. தென்னை சாகுபடி நிலத்தின் மண்ணின் ஆழம் 3-5 அடி வரை இருக்க வேண்டும்.

நீரைத் தேக்கி வைக்கும் தன்மையும் இருக்க வேண்டும். அமிலத்தன்மை 5-8 வரை இருக்க வேண்டும். மண்ணின் ஆழம் ஒரு மீட்டருக்குக் குறைவான நிலத்தில் தொடக்கத்தில் நன்றாக வளர்ந்தாலும், பிறகு வளர்ச்சிக் குன்றி விடும்.

நடவு முறைகள்

தோப்பாக உருவாக்க நினைத்தால், சதுர, செவ்வக, முக்கோண வடிவங்களில் நடவு செய்யலாம். முறையான இடைவெளியில் குழிகளைப் பறித்து நடவு செய்வது அவசியம். நெருக்கி நட்டால், மரத்துக்கு வெளிச்சம் கிடைப்பது குறையும். அதனால் சூரிய ஒளிக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு அதிக உயரமாகவும் ஒல்லியாகவும் மரங்கள் வளரும்.

இந்த மரங்கள் விடும் பாளைகளில், பெண் பூக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். சதுர முறையில் 7.5 மீட்டர் இடைவெளியில் ஏக்கருக்கு 70 தென்னங் கன்றுகளை நடலாம். செவ்வக வடிவத்தில் வரிசைக்கு வரிசை 9 மீட்டர் இடைவெளியும் கன்றுக்குக் கன்று 6.5 மீட்டர் இடைவெளியும் விட்டு ஏக்கருக்கு 68 கன்றுகளை நடலாம்.

முக்கோண முறையில் 7.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யும் போது, அடுத்த வரிசையில் முதல் வரிசையின் இரண்டு கன்றுகளுக்கு மத்தியில் கன்று வருகிற மாதிரி 7.5 மீட்டர் இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும். இந்த முறையில் ஏக்கருக்கு 82 கன்றுகளை நடலாம்.

குழியெடுத்தல்

தென்னை நடவுக்கு, 3 அடி ஆழம், நீளம் மற்றும் உயரமுள்ள குழிகளை எடுத்து, 2 அடி ஆழம் வரை மேல் மண்ணையும், மட்கிய எருவையும் கலந்து நிரப்ப வேண்டும். இந்த 2 அடிக்குள் தென்னங் கன்றின் காய் பதிகின்ற மாதிரி நடவு செய்து, சுற்றியுள்ள மண் நன்றாக இறுகுமாறு காலால் மிதித்துவிட வேண்டும். மேல்மண் தரமாக இல்லையெனில், செம்மண் அல்லது வண்டல் மண்ணைப் பயன்படுத்தலாம்.

தென்னங் கன்றுகளைப் பாதுகாத்தல்

புதிதாக நடவு செய்த கன்றுகள் காற்றில் அசையாமல் இருந்தால், சீக்கிரமே புது வேர்கள் வரும். அதனால், காயின் பக்கவாட்டில் இருக்கும் மண்ணில் மூன்றடி நீளமுள்ள குச்சியை ஊன்றி, கயிற்றால் குச்சியையும் தென்னங் கன்றையும் சேர்த்துக் கட்ட வேண்டும். கன்று வெய்யிலால் பாதிக்கப்படாமல் இருக்க, குழியைச் சுற்றிப் பனையோலையை ஊன்றி, நிழல் கிடைக்கச் செய்யலாம்.

கோடைக் காலத்தில் நடவு செய்யும் போது, சணப்பு விதைகளைத் தென்னங்கன்றைச் சுற்றி விதைத்தால் அவை வளர்ந்து தென்னங் கன்றுகளுக்கு நிழலைக் கொடுக்கும். மேலும், இரண்டு மாதம் கழித்துப் பாத்தியிலேயே கொத்திப் போட்டு மண்ணுக்கு உரமாக்கலாம்.

கன்று தூர்க்கட்டி வளரும் வரை, குழியில் அதிகமாக மண் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிக் குழிகளில் நடுவதால் மரத்தின் பருத்த அடிப்பாகம் மண்ணுக்குள் இருக்கின்ற மாதிரி செய்வதற்கு ஏதுவாகும். அதனால், மரம் உறுதியாக நிற்கும். புயல் காற்றினால் மரம் பாதிக்காமல் இருக்கும்.

நீர்த் தேங்கியுள்ள இடங்களில் மேடைப்பாத்தி அமைத்து நடவு செய்யலாம். அதன்பிறகு, ஆண்டுதோறும் அந்த மேடையை அகலப்படுத்தி வர வேண்டும். இரண்டு வரிசைக்கு இடையில் வடிகால் அமைப்பை ஏற்படுத்தி, நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தென்னங்கன்றுகளை நடவு செய்து சில நாட்கள் வரை, பூவாளி அல்லது குடத்தைக் கொண்டு நீரை ஊற்றலாம். வேர் பிடிக்கத் தொடங்கியதும் வாய்க்கால் வழியாக நீரைப் பாய்ச்சலாம். இப்படிப் பாய்ச்சும் போது நீரில் அடித்து வரும் மண், கன்றின் அடிப்பாகத்தை மூடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால், வளரும் கன்றுகளைக் கிருமிகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றலாம்.


தென்னங்கன்று kathiravan e1630179750738

ஜெ.கதிரவன், தோட்டக்கலைத் தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், வாலிகண்டபுரம், பெரம்பலூர் – 621 115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading