My page - topic 1, topic 2, topic 3

மஞ்சளைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

ரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி பரவலாக உள்ளது. இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இவற்றைத் தகுந்த உத்திகள் மூலம் கட்டுப்படுத்தினால், நல்ல மகசூலை எடுக்கலாம்.

பூச்சிகள்

தண்டுத் துளைப்பான்: இதனால் தாக்குண்ட போலித் தண்டுகளின் இலைகள் மஞ்சளாக மாறிக் காய்ந்து விடும்.

புழுக்கள் போலித் தண்டுகளைக் குடைந்து, கழிவை வெளியே தள்ளும். குருத்து இலைகள் வாடியும், மஞ்சளாக மாறியும் இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: மாதம் ஒருமுறை, மாலத்தியான் 0.1 சதக் கரைசலை, ஜூலை முதல் அக்டோபர் வரை தெளிக்க வேண்டும்.

தண்டுத் துளைப்பான் விரும்பி உண்ணும், ஆமணக்கு, மாதுளை, பலா, இஞ்சி போன்றவை, மஞ்சள் தோட்டத்தின் அருகில் இருக்கக் கூடாது.

கிழங்கு செதில் பூச்சி: இதனால் தாக்குண்ட செடிகள் வாடும். வெண் செதில் பூச்சிகள், குருத்துகளிலும், கிழங்குகளிலும் இருக்கும். கிழங்குகள் சுருங்கி விடும்.

கட்டுப்படுத்துதல்: செதில் பூச்சிகள் தாக்கிய கிழங்குகளைச் சேமிக்கக் கூடாது. இப்பூச்சிகள் தாக்கிய இலைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

தரமான, பூச்சிகளற்ற கிழங்குகளை நட வேண்டும். விதைக் கிழங்குகளை 0.075 சத குவினால்பாஸ் கரைசலில் 20-30 நிமிடம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி நட வேண்டும்.

நன்கு மட்கிய ஆட்டெரு அல்லது கோழியெருவை நிலத்தில் இட வேண்டும். இதைத் தொடர்ந்து, டைமீத்தோயேட் மருந்தை மண்ணில் கலக்க வேண்டும்.

இலைச் சுருட்டுப்புழு: இந்தப் புழு, இலைகளை மடித்து அதற்குள் இருந்து கொண்டு இலைகளைத் தின்னும்.

இதைக் கட்டுப்படுத்த, 0.1 சத கார்பரில் கரைசல் அல்லது 0.05 சத டைமீத்தோயேட் கரைசலைத் தெளிக்கலாம்.

இலைப்பேன்: இது, இலையின் சாற்றை உறிஞ்சுவதால், நுனியிலிருந்து சுருண்டு வரும் இலை, கடைசியில் காய்ந்து விடும்.

இதைக் கட்டுப்படுத்த, 0.025 சத குவினால்பாஸ் கரைசல் அல்லது 0.07 சத பென்தியான் அல்லது பசாலோன் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

நூற்புழு: இதன் தாக்குதல், செம்மண் கலந்த மணற்சாரி இடங்களில் தென்படும்.

நூற்புழு தாக்கிய பயிரில் விரலியோட்டம் தடைப்பட்டு, ஆங்காங்கே வேர்ப்பாகம் முடிச்சு போல் வீங்கி இருக்கும்.

வேருக்குள் சென்று உண்பதால், சத்துகள் மற்றும் நீரை உறிஞ்சுவது குறைந்து, இலைகள் மஞ்சளாகி வாடி விடும்.

இப்புழு, மஞ்சளைப் போல, புகையிலை, மிளகாய், கத்தரி, வாழை, கனகாம்பரம் ஆகிய பயிர்களையும் தாக்கும். எனவே, இவற்றை ஊடுபயிராக இடக்கூடாது.

கட்டுப்படுத்துதல்: தொழுவுரம், கம்போஸ்ட், வேப்பம் புண்ணாக்கு மற்றும் கரும்பாலைக் கழிவை இட்டால், நூற்புழுக்களின் தாக்கம் குறையும்.

செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுக்கள் கட்டுப்படும். கடைசி உழவின் போது, எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும்.

யூரியாவை இடும் போது மீண்டும் ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும்.

நட்ட ஐந்தாவது மாதத்தில், எக்டருக்கு 35 கிலோ கார்போ பியூரான் குருணையைச் செடிகளைச் சுற்றி 2-3 செ.மீ. தள்ளி இட வேண்டும்.

பின்பு, மணலால் மூடி பாசனம் செய்ய வேண்டும். மஞ்சளுக்கு மாற்றுப் பயிராக, நெல், கரும்பு, சோளம், மக்காச் சோளம் போன்றவற்றை, சுழற்சி முறையில் பயிரிடலாம்.

நோய்கள்

கிழங்கழுகல் நோய்: முதலில், பாதிக்கப்பட்ட இலைகளின் நுனியும் ஓரமும் மஞ்சளாக மாறும். பிறகு, இலை முழுவதும் மஞ்சளாகி, கடைசியில் இலைத் தண்டும் பாதிக்கப் படுவதால், இலைகள் வாடித் தொங்கும்.

நோய் தீவிரமானால், இளங் குருத்தும் பாதிக்கப்படும். வேரின் வளர்ச்சிக் குன்றி விடும்.

மஞ்சள் கிழங்கு வளர்வதும் பாதிப்பதால், முடிவில் காய்ந்து பழுப்பு நிறமாகி விடும். நோயுற்ற கிழங்குகளில் நீர்க்கசிவு இருக்கும்.

பழுப்பு நிறம், கரும்பழுப்பு நிறமாக மாறி விடும். இந்நிலையில், செடியை இலேசாகத் தொட்டாலும் கையோடு வந்து விடும்.

இந்நோய், ஒரு செடியிலோ அல்லது பல செடிகளிலோ தோன்றும்.

கட்டுப்படுத்துதல்: எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது 2.5 கிலோ அல்லது சூடோமோனாஸ் புளூரசன்சை,

ஐம்பது கிலோ மட்கிய தொழுவுரத்தில் கலந்து 15 நாட்கள் நிழலில் வளர விட்டு, கடைசி உழவின் போது இட வேண்டும்.

நோயற்ற, தரமான விதைக் கிழங்குகளை, 0.25 சத காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது 0.2 சத சூடோமோனாஸ் புளூரசன்ஸ் கரைசலில், 30 நிமிடம் நனைத்து நட வேண்டும்.

நோயுள்ள நிலத்தில் இருந்து, நோயற்ற நிலத்துக்குப் பாசனம் செய்யக் கூடாது. நீரும் நிலத்தில் தேங்கக் கூடாது.

நோயுற்ற தண்டைச் சுற்றி 1 சத போர்டோ கலவை அல்லது 0.25 சத காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது 0.1 சத மெட்டலாக்ஸ் கரைசலை, வேர்ப்பகுதி நனைய ஊற்ற வேண்டும். நூற்புழுக்கள் அதிகமானால் கிழங்கழுகல் அதிகமாகும்.

எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கைச் சீராக இட வேண்டும்.

இலைப்புள்ளி நோய்: இலையின் மேற்பரப்பில், சிறிய பழுப்புப் புள்ளிகள் தோன்றி, பிறகு ஒன்றாக இணைந்து பெரிதாகி, இலைகளைக் கருகச் செய்யும்.

கட்டுப்படுத்துதல்: நோயுற்ற இலைகளின் புள்ளிகள், ஆயிரக்கணக்கில் பூசண வித்துகளுடன் இருப்பதால், அந்த இலைகளை அகற்றி எரித்துவிட வேண்டும்.

நோயைக் கண்டதும் 0.25 சத மான்கோசெம் கரைசல் அல்லது 0.1 சத கார்பென்டசிம் கரைசல் அல்லது 0.25 சத காப்பர் ஆக்சி குளோரைடு கரைசலைத் தெளிக்க வேண்டும்.

நோயின் தீவிரத்தைப் பொறுத்து, 2-3 முறை 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இலைத்தீயல் நோய்: இதனால், இலைகளின் இரு பக்கமும் வட்டமான அல்லது ஒழுங்கற்ற பழுப்புப் புள்ளிகள் தோன்றும்.

பிறகு, கரும் பழுப்பு நிறமாகி, இப்புள்ளிகளின் அளவு பெரிதாகும். இந்நோய் இளம் இலைகளைப் பெருமளவில் பாதிப்பதால் அவை முதிராமலே காய்ந்து கருகி விடும்.

நோய் தீவிரமாக இருக்கும் நிலம், தீய்ந்து போனதைப் போலத் தெரியும். விளைச்சல் அதிகளவில் பாதிக்கப்படும்.

கட்டுப்படுத்துதல்: நோயுற்ற இலைகளைக் கிள்ளியெடுத்து எரித்து விட வேண்டும்.

மேலும், நோயைக் கண்டதும், 0.25 சத மான்கோசெம் கரைசல் அல்லது 0.1 சத கார்பென்டசிம் அல்லது 0.25 சத காப்பர் ஆக்சி குளோரைடு கரைசலைத் தெளிக்க வேண்டும்.

இதை, நோயின் தீவிரத்தைப் பொறுத்து, 2-3 முறை 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.


முனைவர் சி.உஷாமாலினி, முனைவர் செந்தமிழ்ச்செல்வி, தோட்டக்கலைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks