உலகளவில் விளையும் முக்கியத் தானியப் பயிர்களில் மக்காச் சோளமும் ஒன்றாகும். உணவாக, தீவனமாக மட்டுமின்றி, எண்ணெய், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், எத்தனால், உயிர் காக்கும் மருந்துகள், நிறமிகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருள்கள் உற்பத்திக்கான மூலப் பொருளாகவும் மக்காச் சோளம் விளங்குகிறது.
இதனால், உழவர்கள் மத்தியில் மக்காச் சோளம் இலாபந்தரும் பயிராகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியளவில் மக்காச்சோள உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. இதைக் கூட்ட வேண்டுமாயின், நவீன சாகுபடி உத்திகளை விவசாயிகள் கையாள வேண்டும்.
உற்பத்திக் குறைவுக்கான காரணங்கள்
அதிகப் பரப்பில் மானாவாரிப் பயிராகவே பயிரிடுதல். குறைவாக அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகமாக மழை பெய்தல். பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் வறட்சி ஏற்படுதல்.
மானாவாரி நிலங்களில் போதுமான சத்துகளை இடத் தவறுதல். விதைப்புக் காலத்தில், தரமான மற்றும் வீரிய ஒட்டு விதைகள் கிடைக்காமல் போதல். வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக் கூலி.
மானாவாரி மக்காச்சோள சாகுபடிக்கான நவீனத் தொழில் நுட்பங்கள் மற்றும் விதை உற்பத்தி முறைகளைக் கையாள்வதில் போதிய விழிப்புணர்வு இல்லாமை.
அவற்றைச் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யாமை. மக்காச் சோளத்துக்குக் குறைந்தளவு விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தாலும், அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாமை.
பருவம்
மக்காச்சோளத்தை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் பருவமழைக் காலத்தில் விதைக்கலாம்.
தென்மேற்குப் பருவமழை பெய்யும் பகுதிகளில் ஆடிப் பட்டத்திலும், தென் தமிழகக் கரிசல் பகுதியில் வடகிழக்குப் பருவமழை பெய்யும், புரட்டாசி, ஐப்பசியிலும் விதைக்கலாம்.
பாசன வசதி இருந்தால், ஓராண்டில் மூன்று போகமும் பயிரிடலாம்.
வீரிய ஒட்டுவகை விதை உற்பத்திக்கு, தமிழ்நாட்டின் பருவ நிலையைக் கருத்தில் கொண்டு, ஆனி ஆடியில், அதாவது, ஜூன் ஜூலையில், மார்கழிப் பட்டமான டிசம்பர் ஜனவரியில் விதைப்பது ஏற்றது.
ஏனெனில், இந்தப் பருவங்களில், பயிர்கள் பூக்கும் போது, மழை பெய்யாமல், நல்ல வெய்யில் பயிருக்குக் கிடைப்பதால், தரமான, அதிகமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.
நிலம்
கரிசல் மண், செம்மண், மணல் மற்றும் வண்டல் கலந்த இருமண் நிலங்கள் என, தமிழகத்தின் பெரும்பகுதி நிலப்பரப்பில் மக்காச்சோளம் விளையும்.
நீர்த் தேங்காத வகையில், நிலத்தில் நல்ல வடிகால் வசதி, மண்ணின் கார, அமிலத் தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும்.
நிலத்தைப் புழுதியாக உழுத பிறகு சரிவுக்குக் குறுக்காக, 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்.
அதிக மழையால் தேங்கும் நீரை வடிக்கும் வகையில், மற்ற வேலைகளைச் செய்யும் வகையில், பார்களுக்குக் குறுக்கே 5-6 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.
பின்பு, 5-6 பார்களைக் கொண்ட பாத்திகளைக் கட்ட வேண்டும்.
மேலும், 8×5 மீட்டர் அளவில் சரிவுக்குக் குறுக்கே வரப்புகளைக் கட்டிப் பகுதிப் பாத்திகளாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
இதனால், நிலத்தில் மழைநீரை நேரடியாகச் சேமிக்கவும், வறட்சிக் காலத்தில் பண்ணைக் குட்டை நீர் மூலம் பயிரைப் பாதுகாத்து மகசூலைப் பெருக்கவும் முடியும். மழைநீர்த் தேங்கா வகையில் நிலம் சமமாக இருக்க வேண்டும்.
இரகத் தேர்வு
ஆடிப்பட்டம் (ஜூலை, ஆகஸ்ட்): இரகம்: கோ.1. வயது: 90-95 நாட்கள். கோ.எச்.எம்.4, 5, 6. வயது: 105-110 நாட்கள்.
புரட்டாசிப் பட்டம் (செப்டம்பர், அக்டோபர்): இரகம்: கோ.1. வயது: 90-95 நாட்கள். கோ.எச்.எம்.4, 5, 6. வயது: 105-110 நாட்கள்.
விதைப்பு
தரமும் நல்ல முளைப்பும் கொண்ட, சான்று பெற்ற விதைகளை, வரிசைக்கு வரிசை 45 செ.மீ. அல்லது 45 செ,மீ. இடைவெளியில் அமைத்த பார்களின் பக்கவாட்டில், 20 செ.மீ. இடைவெளியில், 4-5 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும்.
இரக விதைகளைக் குழிக்கு 2-3 வீதமும், வீரிய ஒட்டு விதைகளைக் குழிக்கு ஒன்று வீதமும் ஊன்ற வேண்டும்.
இவ்வகையில், மானாவாரியில் விதைக்க, எக்டருக்கு 20 கிலோ ஒட்டு விதைகளும், 25 கிலோ இரக விதைகளும் தேவைப்படும்.
45×20 செ.மீ. இடைவெளியில் 1,11,000 பயிர்கள் அல்லது சதுர மீட்டருக்கு 10-12 பயிர்கள் இருக்க வேண்டும்.
விதை நேர்த்தி்
விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களில் இருந்து பயிரைக் காக்க, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைகளில் இருந்து வீரியமான நாற்றுகள் கிடைக்க, தழைத்சத்தைச் சேமிக்க, எக்டருக்கு 600 கிராம், அதாவது, மூன்று பொட்டல அசோஸ் பயிரில்லத்தை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
உர நிர்வாகம்
மக்காச்சோளப் பயிர், நிலத்தில் இடும் சத்துகளை அதிகளவில் கிரகித்து வளர்ச்சியை வெளிப்படுத்தும்.
ஆயினும், பயிரின் தேவை மற்றும் நிலத்தில் உள்ள சத்துகளின் அளவை ஈடுகட்டும் வகையில் உரங்களை இட வேண்டும்.
குறைவான சத்துகளைப் பயிருக்கு அளித்தால், சரியான வளர்ச்சியின்றி மகசூல் இழப்பு ஏற்படும். மேலும், நில ஆதாரச் சத்துகளை எடுத்துக் கொள்வதால் மண்வளம் பாதிக்கப்படும்.
உரமிடும் முறை: உரங்களை ஒரே தடவையில் இடாமல், அடியுரம், மேலுரம் என மூன்று தடவைகளில் இடுவது மிகவும் நல்லது.
இதனால், சத்துகள் வீணாகாமல், குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளில் பயிருக்குக் கிடைக்கும்; ஊட்டப் பயன்பாட்டுத் திறன் அதிகமாகும்.
மானாவாரியில், மணற்சாரி நிலமெனில், எக்டருக்கு 60:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும்.
களிமண் நிலமெனில், 40 கிலோ தழைச்சத்தும், 20 கிலோ மணிச்சத்தும் தேவைப்படும். இவற்றை, அடியுரம், மேலுரமாகப் பிரித்து இட வேண்டும்.
அடியுரம்: பரிந்துரை செய்த அடியுரத்தை நன்கு கலந்து, விதை வரிசையில், விதையை விட 2.5-7.5 செ.மீ. இடைவெளியில், விதையை விட 2.5-5 செ.மீ. ஆழத்தில் இட வேண்டும்.
மேலுரம்: பயிரின் மேலும் அல்லது தண்டுக்கு மிக அருகிலும் இடக்கூடாது. தண்டிலிருந்து 15 செ.மீ. இடைவெளி விட்டு உரத்தை இட்டதும், 4 செ.மீ. ஆழத்தில் நன்றாகக் கலந்துவிட வேண்டும். இதனால், தழைச்சத்தின் பயன் அதிகமாகும்.
களை நிர்வாகம்
விதைத்த மூன்றாம் நாள் எக்டருக்கு 500 கிராம் அட்ரசின் களைக் கொல்லியை, 900 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பின்பு 20-25 நாட்களில் கை அல்லது கருவி மூலம் களைகளை நீக்க வேண்டும். களைக் கொல்லியை இடும் போது நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும்.
மானாவாரியில் விதைப்பின் போது இருக்கும் நல்ல ஈரத்தில் அல்லது புழுதி விதைப்பாக இருந்தால், மழை பெய்து ஈரம் கிடைத்ததும் களைக் கொல்லியை இட வேண்டும்.
விதைத்த 20-25 நாட்களில், முதல் களையும், தேவைப்பட்டால். 45 நாட்களில் ஒரு களையும் எடுக்கலாம்.
மக்காச்சோளப் பயிரை நாற்பது நாள் வரையில் களையின்றிப் பராமரிப்பது அவசியமாகும்.
நீர் நிர்வாகம்
பயிர் நன்கு வளர, பாசனமும் வடிகால் வசதியும் முக்கியம். நீர்த் தேங்கியுள்ள நிலத்தில் மக்காச்சோளம் நன்கு வளராது.
மானவாரியில் மழைநீர்ச் சேமிப்பு முறைகளைக் கடைப்பிடித்தாலும், கனத்த மழைக்குப் பிறகு, வரப்புகளை வெட்டி விட்டு, தேங்கும் நீரை மிக விரைவாக வடியச் செய்ய வேண்டும்.
மேலும், வடிகால்களை அமைத்து, அதிகப்படியான நீரை வடித்துவிட வேண்டும். வடிகால் வசதியில்லா நிலம் மக்காச்சோள சாகுபடிக்கு ஆகாது.
பயிர்ப் பாதுகாப்பு
பூச்சிகள்: மக்காச் சோளத்தில் தண்டைத் தாக்கும் பூச்சிகள், கதிரைத் தாக்கும் பூச்சிகள், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இலைகளைத் தின்னும் பூச்சிகள் என, 25-க்கும் மேற்பட்ட பூச்சிகள் உள்ளன.
அவற்றில், குருத்து ஈ, தண்டுத் துளைப்பான், அமெரிக்கன் படைப்புழு, கதிர்த் துளைப்பான், சாற்றை உறிஞ்சும் பூச்சி, வெட்டுப்புழு போன்றவை பெருஞ் சேதத்தை உண்டாக்கும்.
குருத்து ஈ- அத்ரிகோனா ஓரியன்டாலிஸ்: முட்டையிலிருந்து வெளிவரும் புழு, இலையுறைக்கும் தண்டுக்கும் இடையில் துளைத்து நடுக்குருத்தைத் தின்னும்.
இந்த ஈ வெள்ளை நிறத்தில் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, இமிடா குளோப்பிரிட் பூச்சிக் கொல்லியில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
அறுவடை முடிந்ததும் மக்காச்சோளத் தட்டைகளை உழுதுவிட வேண்டும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மீன் இறைச்சிப் பொறியை, எக்டருக்கு 12 வீதம் வைத்து, குருத்து ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
5 சத வேப்பங் கொட்டைச் சாறு அல்லது 1 சத நீம் அசால் வீதம் தெளிக்கலாம்.
சேதம் அதிகமானால், எக்டருக்கு 500 மில்லி மீத்தைல் டெமட்டான் 25 இசி அல்லது டைமீதோயேட் 30 இசி மருந்தைத் தெளிக்கலாம்.
தண்டுத் துளைப்பான்- கைலோ பார்டெலஸ்: முட்டையிலிருந்து வெளிவரும் புழு, தண்டைக் குடைந்து உள்ளே சென்று சேதப்படுத்தும்.
தாக்குதல் ஒரு மாதத்தில் அல்லது பயிரின் இளம் பருவத்தில் இருந்தால் நுனிக் குருத்து காய்ந்து விடும்.
வளர்ந்த பயிரில் நடுநரம்பைக் குடைந்து செல்வதால், அந்நரம்பு சிவப்பாக மாறி விடும். இலைகளில் சன்னலைப் போன்ற துளைகள், அடித்தண்டில் புழுத் துளைகள் இருக்கும்.
இதனால், பயிர்கள் திறனின்றி, குறைந்த மணிகள் உள்ள கதிர்களைக் கொடுக்கும்.
இளம் புழுக்கள், பழுப்புக் கலந்த மஞ்சள் நிறத்திலும், தலை அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, அவரை அல்லது தட்டைப் பயறை 4:1 வீதம் விதைக்கலாம்.
அறுவடைக்குப் பின் மக்காச்சோள நிலத்தை உழுதால், கூட்டுப் புழுக்கள் அழிந்து விடும்.
அமெரிக்கன் படைப்புழு- ஸ்போடாப்டரா ப்ரூஜுபெடா: இந்தப் படைப் புழுவின் தாய் அந்துப்பூச்சி, ஒரே இரவில் 100 கிலோ மீட்டர் வரை பறக்கும்.
25-30 நாட்கள் மட்டுமே வாழும் இப்பூச்சி, தன் வாழ்நாளில் 1,500- 2,000 முட்டைகளை இடும்.
இளம் புழுக்கள், குருத்துப் பகுதியைத் தாக்கி அழிக்கும். புழுப்பருவத்தில் இலைகள் முழுவதையும் தின்று விடும்.
ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்
படைப்புழுவைக் கட்டுப்படுத்த, ஆழமாக உழ வேண்டும். கடைசி உழவின் போது, எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும்.
பத்து வரிசைக்கு ஒரு வரிசையை விதைக்காமல் விட்டுவிட வேண்டும். தட்டைப்பயறு, சூரியகாந்தி மற்றும் எள்ளை, வரப்புப் பயிராகவும், உளுந்து, பாசிப்பயறை ஊடுபயிராகவும் இட வேண்டும்.
இரண்டு எக்டருக்கு ஒரு விளக்குப்பொறி வீதம் வைத்து, அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
இனக்கவர்ச்சிப் பொறியை வைத்து, கதிர்த் துளைப்பானைக் கண்காணிக்க வேண்டும்.
பத்து லிட்டர் நீருக்கு 20 மில்லி அசாடிராக்டின் 1% இ.சி. அல்லது 20 கிராம் தையோடிகார்ப் 75% அல்லது 4 கிராம் எமாமெக்டின் பென்சோயேட் 5% மருந்து வீதம் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
நோய் நிர்வாகம்
அடிச்சாம்பல் நோய்- பெரினோஸ் கிலிரோஸ்போரா சொர்கி: இந்நோய்க் காரணி, மக்காச்சோள இலைகளில் நீளமான மஞ்சள் கோடுகளை உருவாக்கும்.
இலைகளின் இருபுறமும் இருக்கும் வெண்பூசண விதை, இரவில் காற்று மூலம் மற்ற பயிர்களுக்குப் பரவும்.
நோயுற்ற பயிர்கள் வலுவிழந்து, கணுக்களின் இடைவெளி குறைந்து குட்டையாக இருக்கும்.
மழை மற்றும் குளிர் காலத்தில் மட்டுமே இந்நோய் பரவும், காற்றில் ஈரப்பதம் மிகும் போது, இந்நோயின் தாக்கமும் மிகும்.
கட்டுப்படுத்துதல்: அதிகளவில் தாக்குண்ட பயிர்களைப் பிடுங்கி அழிக்க வேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் மெட்டாலக்ஸில் (ஏப்ரான் 35 எஸ்டி) வீதம் எடுத்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
10 மற்றும் 25 நாளில், மெட்டாலக்ஸில் எம்இசட் 0.2% மருந்தைத் தெளிக்க வேண்டும்.
இலைக்கருகல் நோய்- ஹெல்மின்தோஸ் போரியம் மெய்டிஸ்: இந்நோய்க் காரணி, பயிர்களின் கீழுள்ள இலைகளை முதலில் தாக்கிய பிறகு மேல் இலைகளில் பரவும்.
முதலில் தோன்றும் வட்ட, நீள்வட்ட மஞ்சள் புள்ளிகள் நாளடைவில் பெரிதாகி, பழுப்பு நிறத்தில் மாறி விடும். பின்பு, இப்புள்ளிகள் ஒன்று சேர்வதால் இலைகள் கருகி விடும்.
கட்டுப்படுத்துதல்: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கேப்டான் அல்லது திரம் வீதம் எடுத்து, நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
எக்டருக்கு 1,250 கிராம் மேன்கோசெப் அல்லது 1,000 கிராம் கேப்டான் வீதம் எடுத்துத் தெளிக்கலாம்.
துருநோய்- பக்சினியா சொர்கி: இந்நோய், இலைகளின் இரு பக்கமும், வடிவம் மற்றும் நிறத்தில் துரு போன்று காணப்படும், தாக்கம் அதிகமானால், இலைகள் செம்பழுப்பு நிறத்தில் தெரியும்.
கட்டுப்படுத்துதல்: புளியாரை என்னும் களைச் செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். தாக்கம் மிகுந்தால், எக்டருக்கு 1,250 கிராம் மேன்கோசெப் மருந்தைத் தெளிக்க வேண்டும்.
அஸ்பெர் ஜில்லஸ் அழுகல்- அஸ்பெர் ஜில்லஸ் பிளாவஸ் & அஸ்பெர் ஜில்லஸ் பெரசிட்டிகஸ்: இந்நோய், முற்றிய மக்காச்சோள மணிகளை மட்டும் தாக்கும்.
மணிகளில் கறுப்புத் துகள்கள் இருக்கும். மேலும், மணிகள் அப்போலாக்சின் என்னும் நச்சுப் பொருளை உருவாக்கும்.
எனவே, இந்த மணிகளை நல்ல விதைகளில் கலக்கக் கூடாது. இதைக் கட்டுப்படுத்த, மணிகள் முற்றும் போது ஈரப்பதம் இருக்கக் கூடாது.
அறுவடை
பயிரின் வயதை வைத்தும், கீழ்க்கண்ட அறிகுறிகளை வைத்தும் அறுவடை செய்யலாம்.
கதிரின் மேல் தோல் பழுத்துக் காய்ந்து விடும். விதைகள் கடினமாகவும், காய்ந்தும் இருக்கும். இறவையில் எக்டருக்கு 7-8 டன், மானாவாரியில் 4-5 டன் மக்காச்சோளம் கிடைக்கும்.
முனைவர் கு.சத்தியா, முனைவர் அ.நிர்மலகுமாரி, முனைவர் மா.இராஜேஷ், முனைவர் கி.ஆனந்தி, முனைவர் வெ.மணிமொழிச் செல்வி, சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!