தாவரங்களில் நுண் சத்துகளின் அவசியம்!

தாவர nunsattukal

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023

தாவரங்களில் வினையியல் பணிகள் சரிவர நடைபெறுவதற்குத் தேவைப்படும் சத்துகள் அத்தியாவசியச் சத்துகள் எனப்படுகின்றன. இந்தச் சத்துகள் சரிவரக் கிடைக்காவிடில், தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி, அதாவது, தாவரங்களின் வளர்ச்சியும் இனப்பெருக்கமும் தடைபடுகின்றன.

இந்த வகையில் 17 சத்துகள் அவசியமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன. அவையாவன: கரிமம், நீரியம், உயிரியம், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம், வெண்காரம், குளோரின், மாலிப்டினம், நிக்கல் ஆகும்.

பயிர்களின் சத்துத் தேவை முழுமையாக நிறைவடையாத சமயங்களில், சத்துக் குறைகள் தோன்றுகின்றன. இதனால், பயிர் வளர்ச்சிக் குறைவு, பச்சையச்சோகை, நிறமாற்றம், இலைகள் காய்தல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. தாவரங்களில் சத்துகள் நகர்ந்து செல்லும் திறனைப் பொறுத்து, அவற்றின் இளம் பாகங்கள் அல்லது முதிர்ந்த பாகங்களில் அறிகுறிகள் தென்படுகின்றன.

தோட்டக்கலைப் பயிர்களில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி மகசூலின் தரத்தை மேம்படுத்த, முறையான சத்து மேலாண்மை அவசியமாகிறது. பயிர்களுக்கான சத்துகளைப் பேரூட்டங்கள், நுண் சத்துகள் என இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

இவற்றில், பேரூட்டங்களான தழை, மணி, சாம்பல் ஆகியவற்றை, இரசாயன உரங்களான யூரியா, டி.ஏ.பி., சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் மற்றும் கலப்புரங்கள் மூலம் பயிர்களுக்கு அளிக்கலாம். இப்படியிருந்தும், நமது விளைநிலங்கள் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்துச் சத்துகளின் பற்றாக்குறையுடன் தான் காணப்படுகின்றன.

நுண் சத்துகளான துத்தநாகம், இரும்பு, போரான் ஆகிய சத்துகளும் பெரும்பாலான நிலங்களில் பற்றாக்குறையாகவே உள்ளன. இம்மாதிரியான நிலங்களில் பாதிக்குப் பாதி மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

குறிப்பாகக் காய்கறிப் பயிர்களில் இவற்றின் தாக்கம் அதிகமாகவே உணரப்படுகிறது. மேலும், அதிகப்படியான பேரூட்ட உரங்களின் பயன்பாடு, பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு ஆகியவற்றால் உற்பத்திச் செலவும் அதிகமாகி விடுகிறது. முறையான உர மேலாண்மையைக் கையாள்வதன் மூலம், குறிப்பாக, நுண் சத்துகளைச் சரியான நேரத்தில் அளிப்பதன் மூலம், காய்கறிப் பயிர்களில் விளைச்சல் மற்றும் தரம் அதிகமாவதுடன், செடிகளில் பூச்சி, நோய்களுக்கான எதிர்ப்புத் திறனும் வளர்ந்து விடுகிறது.

நுண் சத்துகளின் செயல்பாடும் முக்கியத்துவமும்

இந்திய நிலங்களில் விளையக்கூடிய சுமார் 40-60 சதம் வரையிலான பயிர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நுண்சத்துகளின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. எனவே, காய்கறிப் பயிர்களில் நுண்சத்து மேலாண்மை என்பது, மகசூலையும் தரத்தையும் அதிகப்படுத்த அவசியமாகிறது. பொதுவாகக் காய்கறிப் பயிர்களுக்குத் துத்தநாகம், இரும்பு, போரான் ஆகிய நுண்சத்துகள் மிகவும் அவசியம்.

காய்கறிப் பயிர்களுக்குத் தேவையான பேரூட்டங்களைப் பரிந்துரைப்படி கொடுக்கும் விவசாயிகள், நுண் சத்துகளை முறையாக அளிப்பதில்லை. நுண் சத்துகளைப் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்குக் காரணம். அதனால், சிலவகை நுண் சத்துகளையும் அவற்றின் அவசியம் குறித்தும் இங்கே காணலாம்.

துத்தநாகம்

பயிர் வளர்ச்சியுடன் நேரடித் தொடர்புடையது துத்தநாகம். அதனால், இது பயிர்களுக்கு மிகவும் அவசியம். இந்தச் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டால், பயிர்கள் வளர்ச்சிக் குன்றிக் காணப்படும். இலை நரம்புகளின் இடையேயான பகுதி வெளிர் நிறத்தில் இருக்கும். இவற்றைப் போக்கத் துத்தநாகம் அடங்கிய  நுண்ணுரத்தை, நிலத்தில் இடலாம் அல்லது இலைவழியாக அளிக்கலாம்.

மணிச்சத்தைக் கொடுக்கும் சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி. உரங்களை அதிகளவில் நிலத்தில் இட்டால், இந்த உரங்கள் மண்ணிலுள்ள துத்தநாகத்துடன் வினை புரிந்து, இந்தத் துத்தநாகத்தைப் பயிர்களுக்குக் கிடைக்க விடாமல் செய்து விடும். எனவே, இந்த உரங்களைப் பரிந்துரைக்கப்படும் அளவில் மட்டுமே இட வேண்டும்.

துத்தநாகக் குறை தோன்றும் சூழ்நிலைகள்

மணற்பாங்கான மண்ணில் துத்தநாகம் குறைவாகக் காணப்படும். 7.5க்கு மேல் கார அமிலத் தன்மையுள்ள களர் நிலத்தில் இருக்கும் பயிர்களுக்குத் துத்தநாகம் கிடைப்பது குறைகிறது. நிலத்தைச் சமப்படுத்தும் போது நிலத்திலுள்ள மேல்மண்ணை அகற்றினால் துத்தநாகமும் அகன்று விடும்.

அடிமண்ணைக் காட்டிலும் மேல்மண்ணில் இரண்டு மடங்கு துத்தநாகம் உள்ளது. இயற்கையாகவே மண்ணில் அதிகளவில் நிறைந்திருக்கும் மணிச்சத்து அல்லது மண்ணில் அதிகமாக இடப்படும் மணிச்சத்தானது, துத்தநாகத்தைப் பயிர்களுக்குக் கிடைக்க விடாமல் செய்து விடுகிறது.

இரும்பு

தாவரங்களில் உள்ள பச்சையத்தைத் தயார் செய்வதற்காக நடக்கும் ஒளிச்சேர்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்துப் பற்றாக்குறை இருக்கும் தாவரங்களின் இலைகள் பச்சையம் குறைந்து வெண்மை அல்லது வெளிர் மஞ்சளாகத் தோற்றமளிக்கும். இதைப் போக்கா விட்டால் பெருமளவில் மகசூல் இழப்பு உண்டாகும்.

இரும்புச்சத்துக் குறை தோன்றும் சூழ்நிலைகள்

மணற்பாங்கான மண்ணில் இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கும். சுண்ணாம்பு நிறைந்த மண்ணில் இரும்புச்சத்தின் கரையும் தன்மை குறைவாக இருக்கும். கரிமச்சத்து அதிகமுள்ள மண்ணில் இரும்புச்சத்தின் கரையும் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். அதனால், இம்மண்ணிலிருக்கும் இரும்புச்சத்தானது பயிர்களுக்குப் போதிய அளவில் கிடைப்பதில்லை.

அமிலத்தன்மை அதிகமுள்ள மண்ணில் அதிகளவில் கரைந்துள்ள துத்தநாகம், மாங்கனீஸ், தாமிரம் அல்லது நிக்கல் போன்றவை, இரும்புச்சத்தைப் பயிர்கள் கிரகிக்க விடாமல் செய்து விடுகின்றன. எனவே, மண்ணில் இரும்புச்சத்து அதிகளவில் கரைந்திருந்தாலும் அது பயிருக்குக் கிடைப்பதில்லை.

போரான்

காய்கறிப் பயிர்களின் பூக்களில் மகரந்தங்கள் உருவாகவும், மகரந்தக் குழல்கள் நன்கு வளர்ந்து சிறப்பாகக் கருவுறவும் போரான் சத்து அவசியம். போரான் சத்துக் குறைவதால், முறையான கருவுறுதல் நிகழாமல், பூக்களும் பிஞ்சுகளும் உதிர்ந்து விடுகின்றன.

காய்கறி நுண்ணூட்டக் கலவை

காய்கறிப் பயிர்களுக்கு ஏற்படும் நுண்ணூட்டக் குறைகளைப் போக்க, இப்பயிர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட காய்கறி நுண்ணூட்டக் கலவையைப் பயன்படுத்தலாம். இது, துத்தநாகம், இரும்பு, போரான், மாங்கனீஸ், தாமிரம் ஆகிய நுண்சத்துகளைக் கொண்டதாகும்.

இக்கலவையை நிலத்தில் இடுவதை விட, இலைவழியாகத் தெளித்தால் பயிர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும். நிலத்தில் இடுவதற்கு அதிகளவில் நுண்ணூட்டம் தேவைப்படும். இலைவழியாகத் தெளிக்கக் குறைந்தளவே போதும்.

நுண்ணூட்டக் கலவையை நிலத்தில் இட்டால், பயிர்கள் இதைக் குறைந்தளவே எடுத்துக் கொள்கின்றன. பெருமளவிலானவை நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்று விடுவதனாலும், மண்ணரிப்பாலும் வீணாகி விடுகின்றன. ஆனால், இலைவழியாகக் குறைந்தளவே தெளித்தாலும் அதன் பெரும்பகுதி, பயிர்களுக்குக் கிடைத்து விடும்.

தெளிக்கும் காலம்

காய்கறிப் பயிரின் வயதைப் பொறுத்துத் தெளிக்கும் காலம் மாறுபடும். ஐம்பது நாட்களுக்குக் குறைவான வாழ்நாட்களைக் கொண்ட பயிர்களுக்கு, விதைத்த 10-15 நாட்களுக்குள் ஒருமுறை மட்டும் தெளித்தால் போதும். ஐம்பது நாட்களுக்கு மேல் வாழ்நாட்களைக் கொண்ட பயிர்களுக்கு மாதம் ஒருமுறை வீதம் அறுவடை வரையில் தெளிக்கலாம்.

பரிந்துரை அளவு

தக்காளி, வெங்காயம், மரவள்ளிக்கு ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம், கத்தரி, மிளகாய்க்கு ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம், வெண்டை, அவரை, தட்டைப் பயறுக்கு 3 கிராம், பாகல், புடல், பீர்க்கு, சுரை, பரங்கி, பூசணிக்கு ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் என்னுமளவில் காய்கறி நுண்ணூட்டக் கலவையைக் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்குத் தேவையான 

தெளித்திரவத் தயாரிப்பு

தெளித்திரவத்தைத் தயாரிக்க 200 லிட்டர் நீருடன் பரிந்துரைக்கப்பட்ட அளவு காய்கறி நுண்ணூட்டக் கலவையைக் கரைத்து, அதில் 20 எலுமிச்சைப் பழங்களைப் பிழிந்து விட வேண்டும். பின்னர், இக்கரைசலில் நாம் குளிக்கப் பயன்படுத்தும் 30 மில்லி ஷாம்புவை ஊற்றி நன்கு கலந்து தெளிக்கலாம்.

இந்தக் கலவையைக் காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும். தெளித்த பின் 24 மணி நேரத்துக்கு மழையில்லாமல் இருப்பது நல்லது. காய்கறி நுண்ணூட்டக் கலவையின் சிறந்த செயல் திறனுக்கு, இதனுடன் பூச்சிக்கொல்லி, பூசணக்கொல்லி என எதையும் கலக்கக்கூடாது. நுண்ணூட்டக் கலவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


தாவர kathiravan e1630179750738

ஜெ.கதிரவன், தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், காரைக்கால், புதுச்சேரி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading