My page - topic 1, topic 2, topic 3

நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் பூச்சி!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன்.

ந்தியாவில் 65 சதவிகித மக்கள் அரிசியை முக்கிய உணவாகக் கொள்கின்றனர். இத்தகைய முக்கியமான நெற்பயிரில் உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகள் மூலம் கடுமையான மகசூல் இழப்பு, அதாவது, 30-40 சதவிகித இழப்பு ஏற்படுகிறது. நெற்பயிரைப் பல்வேறு பூச்சிகள் தாக்கினாலும், குருத்துப் பூச்சியின் தாக்கம் அதிகமாகும். இதைத் தண்டுத் துளைப்பான் என்றும் அழைக்கலாம்.

அறிகுறிகள்

நாற்றங்கால், இளம்பயிர், தூர்க்கட்டும் பருவம், கதிர்கள் உருவாகும் பருவம் ஆகிய நேங்களில் குருத்துப் பூச்சிகள் நெற்பயிரைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றின் தாய் அந்துப் பூச்சிகள், இலைகளின் மேற்பகுதியில் முட்டைகளைக் குவியல் குவியலாக இடும்.

இவற்றிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள், இளம் பயிர்களின் தண்டுகளில் துளையிட்டு உள்ளே சென்று உட்பாகங்களைக் கடித்து உண்பதால், இளம் பயிர்களின் நடுக்குருத்துகள் வாடிக் காய்ந்து விடும். இவற்றின் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் வளர்ச்சிக் குன்றி விடும். தூர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். கதிர்கள் உருவாகும் சூழலில் மணிகள் பால் பிடிக்காமல் வெண் கதிர்களாக மாறுவதால், மகசூல் அதிகளவில் பாதிக்கப்படும்.

இளம் புழுக்கள் மஞ்சளாக, கரும்பழுப்புத் தலை மற்றும் முதுகுடன் காணப்படும். தாய் அந்துப் பூச்சிகள், பளிச் என வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில், முன் இறக்கை நடுவில் கரும் புள்ளியுடன் காணப்படும். சாதாரணமாகப் பெண் அந்துப்பூச்சி இடும் முட்டைக் குவியலில் 50-200 முட்டைகள் இருக்கும்.

பொருளாதாரச் சேதநிலை – சதுர மீட்டருக்கு

இளம் பயிரில் இரண்டு முட்டைக் குவியல்கள் இருத்தல். வளர்ச்சிப் பருவத்தில் பத்து சதத் தூர்களில் நடுக்குருத்துகள் வாடியிருத்தல். மணிகள் பிடிக்கும் போது 2 சதவிகித வெண் கதிர்கள் இருத்தல்.

கட்டுப்பாடு

அறுவடைக்குப் பிறகு தாள்களை மடக்கி உழுவதன் மூலம், புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் அழிக்கலாம். நடவின் போது வாடிய நடுக்குருத்துடன் கூடிய நாற்றுகளைத் தவிர்க்க வேண்டும். நடவுக்கு முன் நாற்றுகளின் நுனியைக் கிள்ளி முட்டைக் குவியல்களை அழிக்கலாம்.

பரிந்துரை செய்யப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களை இடக்கூடாது. ஏக்கருக்கு இரண்டு விளக்குப் பொறிகளை வைத்தும், இருபது இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்தும் தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

பூச்சி விரட்டி

தவிடு 15 கிலோ அல்லது 10 கிலோ அடுப்புச் சாம்பலை, 3-5 லிட்டர் ம.எண்ணெய்யில் கலந்து அதிகாலையில் பயிர்களின் அடிப்புறத்தில் படும்படி தூவலாம். வேப்பம் புண்ணாக்குக் கரைசலைத் தெளிக்கலாம். வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய்யை 1:4 வீதம் நீரில் கலந்து பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் மூன்று முறை தெளிக்கலாம். நொச்சி இலைகளைக் கரைசலாகத் தயாரித்துத் தெளிப்பதன் மூலம், இளம் பருவத்தில் குருத்துப் பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம்.

உயிரியல் முறை

டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி வீதம் எடுத்து, நடவு செய்த 30, 37, 44, 51 ஆகிய நாள்களில் வெளியிடுவதன் மூலம் குருத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இது பூச்சியின் முட்டைப் பருவத்தை அழிக்கவல்லது; இரசாயன முறையைவிட எளியது; சிக்கனமானது; சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதது.

இரசாயன முறை

பூச்சிகளின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையை எட்டும் போது, ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 200 கிராம் அல்லது தயோ குளோபிரிட் 200 மில்லி அல்லது புரோபனோபாஸ் 400 மில்லியைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.


ப.நாராயணன், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, வெம்பாக்கம் வட்டம், திருவண்ணாமலை – 604 410.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks