My page - topic 1, topic 2, topic 3

பருத்தி சாகுபடி!

ருத்தி மிக முக்கிய வணிகப் பயிராகும். வேளாண்மை சார்ந்த தொழில் துறையில் முன்னிலை வகிக்கும் முக்கியமான பயிர் பருத்தி.

இந்தியாவில் மலைப் பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் பரவலாகப் பருத்தி விளைகிறது.

தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

உலகளவில் இந்தியா, 25% பருத்தி சாகுபடிப் பரப்பை, 9% உற்பத்தியைக் கொண்டுள்ளது. நவீனத் தொழில் நுட்பங்கள் தான் இதற்குக் காரணம். அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இரகங்கள்

கோ.17: இதன் வயது 135 நாட்கள். மகசூல் எக்டருக்கு 24 குவிண்டால். அடர் நடவுக்கு உகந்தது. பக்கக் கிளைகள் இல்லாதது. இயந்திர அறுவடைக்கு ஏற்றது. அக்டோபர் மாதத்தில் பயிரிடலாம்.

எஸ்.வி.பி.ஆர்.4: அக்டோபர் மாதத்தில் பயிரிடலாம். எக்டருக்கு 18 குவிண்டால் பருத்தி கிடைக்கும். சிறந்த நார்ச்சத்தைக் கொண்ட உயர்தர மத்திய இழைப் பருத்தி.

நிலம் தயாரித்தல்

பருத்தி நீளமான வேருள்ள பயிராகும். எனவே, நிலத்தை நன்கு ஆழமாக உழ வேண்டும்.

மண்ணின் கீழடுக்குக் கட்டியாக இருந்தால், உளிக்கலப்பை மூலம் 0.5 மீட்டர் இடைவெளியில் எதிர் எதிர் திசையில் உழ வேண்டும்.

பருத்தி சாகுபடி நிலங்களை, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஆழமாக உழ வேண்டும். பிறகு, நாட்டுக் கலப்பை மூலம் நான்கு முறை உழ வேண்டும்.

நன்கு புழுதியாக, பயிர்க் கழிவுகள் நிலத்தின் மேல் இல்லாமல் நிலத்தைத் தயாரிக்க வேண்டும்.

இயற்கை உரமிடல்

கடைசி உழவின் போது, எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்தை இட வேண்டும்.

அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை 2 கிலோ வீதம் சேர்த்து அடியுரமாக இட வேண்டும். இதனால், பயிரின் வேர்த் தொகுப்பில் சத்துகள் அதிகளவில் கரைந்து, பயிருக்குக் கிடைக்கும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. வீதம், 70% வணிகக் கந்தக அமிலம் கொண்டு, அமில விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இதனால், விதைகளின் மேலுள்ள துசும்புகள், பூச்சியின் முட்டைகள், நோய்க் கிருமிகள் அழிந்து, விதையுறை மென்மையாகி, விதைகள் நன்கு முளைக்கும்.

நுண்ணுரம் இடுதல்

பூக்கள் அதிகமாக வரவும், காய்கள் உருவாகவும் நுண்ணுரம் முக்கியம். எக்டருக்கு 12.5 கிலோ நுண்ணுரத்தை நிலத்தில் இட வேண்டும்.

நுண் சத்தைச் சரியான அளவில் கொடுக்க, 1:10 என்னும் விகிதத்தில் நுண்ணுரம் மற்றும் தொழுவுரம் கலந்து, 60% ஈரப்பதத்தில் ஒரு மாதம் சேமித்து வைக்க வேண்டும்.

இந்த 60% ஈரப்பதம் என்பது, கலவையை எடுத்துப் பிழிந்தால், அதிலிருந்து நீர் வரக்கூடாது. பொலபொல என்றும் இருக்கக் கூடாது. பிட்டைப் போல இருக்க வேண்டும். இதனால், நுண்ணுரமும் தொழுவுரமும் உடனடியாகப் பயிருக்குக் கிடைக்கும்.

பார்கள் அமைத்தல்

வீரிய ஒட்டு இரகங்கள் எனில், 90 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து, 45 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.

இரகங்கள் எனில், 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து, 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.

விதையளவும் நடவும்

எம்.சி.யு.7, எஸ்.வி.பி.ஆர் போன்ற இரகங்கள் எனில், எக்டருக்கு 7.5 கிலோ விதைகள் தேவை. வீரிய ஒட்டு இரகங்கள் எனில், 2 கிலோ விதைகள் தேவை.

இந்த விதைகளை 3 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். இரகங்கள் எனில், குத்துக்கு இரண்டு விதையும், வீரிய ஒட்டு இரகங்கள் எனில், குத்துக்கு ஒரு விதையும் போதும்.

விதைத்த பத்து நாளில், முளைக்காமல் இருக்கும் இடங்களில் புதிய விதைகளை ஊன்ற வேண்டும்.

களை மேலாண்மை

களைகளைக் குறைக்க, பசுந்தாள் உரங்கள் மற்றும் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக இடலாம். இதனால், களைகள் குறைவதுடன் மண்வளமும் அதிகமாகும்.

எக்டருக்கு 3.3 லிட்டர் பென்டி மெத்தலின் அல்லது 2.2 லிட்டர் புளு குளோரலின் களைக் கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து, பருத்தியை விதைத்த 3-5 நாட்களில் தெளிக்க வேண்டும்.

பிறகு, 45 நாளில் ஒருமுறை கைக்களை எடுத்து மண்ணை அணைக்க வேண்டும்.

உரமிடுதல்

பருத்திச் செடிகள் சத்துகளை அதிகமாக எடுக்கும். எனவே, தகுந்த முறையில் சரியான அளவில் உரங்களை இட வேண்டும். இந்த உரங்கள் மண்ணின் அமைப்பைப் பொறுத்து மாறுபடும்.

எனவே, மண் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்ப, உரங்களை இட வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், எக்டருக்கு 90-120 கிலோ யூரியா, 350-400 கிலோ சூப்பர் பாஸ்பேட், 120-150 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.

அடியுரமாக இட்டது போக மீதமுள்ள 50% யூரியா மற்றும் 50% பொட்டாசை 45 நாளில் களை எடுக்கும் போது மேலுரமாக இட வேண்டும். சூப்பர் பாஸ்பேட் முழுவதையும் அடியுரமாகவே இட்டு விட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்

பருத்திச் செடிகள் மொக்குகளை விடும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 40 மி.லி. அசிட்டிக் அமிலம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

முதல் தெளிப்பு முடிந்து ஒரு மாதம் கழித்து, இரண்டாம் முறை தெளிக்க வேண்டும். இதனால், பூக்கள் உதிர்வது குறைந்து காய்கள் அதிகமாக உருவாகும்.

நுனிக் கிள்ளுதல்

தழைச்சத்தை அதிகமாக இட்டால், செடிகள் அதிகமாக வளர்ந்து, பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும். மேலும், பூ, காய்கள் குறைவாக இருக்கும்.

இவற்றைச் சரி செய்ய, 75-80 நாட்களில், 15 ஆவது கணுவில், 10 செ.மீ. அளவுக்கு நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இதனால், பக்கக் கிளைகள் அதிகமாகி, காய்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

மேலும், காய்கள் நன்கு திரட்சியாக வளர, 2% டிஏபி கரைசலை, 45 மற்றும் 75 நாளில் தெளிக்க வேண்டும்.

பசனம்

விதைப்பு நீரும், விதைத்த மூன்றாம் நாளில் உயிர் நீரும் தர வேண்டும். மண்ணின் தன்மை, கால நிலைக்கு ஏற்ப, 15-20 நாட்கள் இடைவெளியில் நீரைப் பாய்ச்ச வேண்டும்.

பூக்கள் பூக்கும் காலம், காய்கள் உருவாகும் காலத்தில், பாசனம் செய்வது மிகவும் முக்கியம்.

நீர்ப் பற்றாக்குறை இருந்தால், விடுசால் பாசனம் மற்றும் மாற்றுசால் பாசன முறையில் நீரை விடலாம்.

அறுவடை

விளையும் பருத்தியை முறையாக அறுவடை செய்து தரம் பிரித்துச் சேமித்து வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

நன்கு வெடித்த பருத்தியை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். சரியாக வெடிக்காத பருத்தியை அறுவடை செய்தால், பிரிப்பதற்குச் சிரமமாக இருப்பதுடன், அதன் தரமும் குறைந்து போகும்.

காலை பத்து மணிக்கு முன் அல்லது 4 மணிக்குப் பின் பருத்தியை அறுவடை செய்ய வேண்டும்.

அதிக வெய்யிலில் பருத்தியை அறுவடை செய்தால், தூசி, சருகுகள் பருத்தியில் ஒட்டிக் கொண்டு அதன் தரத்தைக் குறைத்து விடும்.


பொ.மகேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு), சி.சபரிநாதன், எம்.அருண்ராஜ், வேளாண்மை அறிவியல் மையம், தேனி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks