My page - topic 1, topic 2, topic 3

பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல்!

லகப் பருத்தி உற்பத்தியில், 67 சதம் ஆசிய நாடுகளில் நடக்கிறது. இந்தியாவில் 120.69 இலட்சம் எக்டரில் விளையும் பருத்தி மூலம், ஆண்டுக்கு 170 கிலோ எடையுள்ள 55-60 இலட்சம் பேல் பஞ்சு கிடைக்கிறது.

இந்தியாவின் பருத்தி உற்பத்தித் திறன் எக்டருக்கு 510 கிலோவாக உள்ளது. ஆனால், உலகளவில் பருத்தி உற்பத்தித் திறன் எக்டருக்கு 613 கிலோவாக உள்ளது.

இந்திய பருத்தி சாகுபடி, மானாவாரியில் அதிகமாக நடப்பதும், விதைப்பு முதல் அறுவடை வரை, பல்வேறு பூச்சிகள் தாக்கிச் சேதம் செய்வதும், பருத்தி உற்பத்தித் திறன் குறைவுக்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் 1.28 இலட்சம் எக்டரில் சாகுபடி நடைபெறுகிறது. இதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் 6.00 இலட்சம் பேல் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் பருத்தி உற்பத்தித் திறன் எக்டருக்கு 613 கிலோவாகும்.

உலகம் முழுவதும் பயிரிடப்படும் பருத்தி வகைகளை, 1,326 பூச்சி மற்றும் சிலந்திச் சிற்றினங்கள் தாக்குகின்றன.

இந்தியாவில், 162 பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்குகின்றன. அவற்றில், தத்துப்பூச்சி அசுவினி, வெள்ளை ஈ, இலைப்பேன், புள்ளிக் காய்ப்புழு மற்றும்

முள் காய்ப்புழு, பச்சைக் காய்ப்புழு, இளஞ் சிவப்புக் காய்ப்புழு, புரொட்டீனியாப் புழு, தண்டுக் கூன்வண்டு ஆகியன முக்கியமானவை.

இந்தியாவில், பூச்சிகளின் தாக்குதலால் மட்டும் சுமார் 18 சதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

ஆண்டுக்குச் சுமார் 4,800 மெட்ரிக் டன்னுக்கும் மேலான பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தினாலும், இந்தப் பூச்சிகளால் ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்படுகிறது.

இத்தகைய பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபட, பூச்சி மருந்துகளைத் தெளிப்பதை மட்டுமே விவசாயிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

நம் நாட்டில், சுமார் 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை, பருத்தி விவசாயிகள் தெளிக்கின்றனர்.

இவ்வகையில், பருத்தியின் 150-180 நாட்களில், 15-20 முறை, பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றனர்.

பருத்தியில் பச்சைக் காய்ப்புழு பாதுகாப்புக்கு மட்டும் 75 சதப் பூச்சி மருந்துகள் பயன்படுகின்றன.

இதற்கு மட்டும் ஓராண்டில் 300-500 கோடி ரூபாய், அதாவது, பருத்தியில் பயன்படும் மொத்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளில் 35 சதம் செலவிடப் படுகிறது.

பச்சைக் காய்ப்புழு

வாழ்க்கைச் சரிதம்: இப்புழுவின் ஒவ்வொரு பெண் அந்துப் பூச்சியும் 300-500 வெளிர் மஞ்சள் நிற முட்டைகளை இளம் தளிர் இலைகளின் மேற்பரப்பில் அல்லது குருத்து, சப்பை மற்றும் இளங் காய்களில் தனித் தனியாக இடும்.

முட்டைகளில் இருந்து 2-4 நாட்களில் வெளிவரும் இளங் கரும் புழுக்கள், சப்பை, பூ, மொட்டு மற்றும் காய்களைத் தின்று, 12-18 நாட்களில் முழுமையாக வளரும்.

பச்சை, பழுப்பு, ஆரஞ்சு, மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறங்களில் இப்புழுக்கள் இருக்கும்.

ஒரு புழு 30-35 சப்பைகளை அல்லது பூக்களைச் சேதப்படுத்தும். வளர்ந்த புழுக்கள் மண்ணுக்குள் அல்லது காய்ந்த இலைச் சருகுகளில் கூட்டுப் புழுக்களாக மாறி, 10-12 இரகங்களில் அந்துப் பூச்சிகளாக வெளிவரும்.

இந்த அந்துப் பூச்சிகள், சற்றுப் பெரியளவில் உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் வெல்வெட் போன்ற செதில்களால் மூடப்பட்டு இருக்கும்.

முன் இறக்கைகள் சாம்பலும் பழுப்பும் கலந்த நிறத்தில் கரும் புள்ளிகளுடன் இருக்கும். பின் இறக்கைகள் வெளிர் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

பெண் அந்துப் பூச்சியின் முன் இறக்கையில் பழுப்புத் திட்டுகளும், ஆண் அந்துப் பூச்சியின் முன் இறக்கையில் பச்சைத் திட்டுகளும் இருக்கும். அந்துப் பூச்சிகள் 9-10 நாட்கள் உயிர் வாழும்.

சேத அறிகுறிகள்: புழுக்கள் சப்பைகளை, காய்களைத் துளைத்துத் தின்று சேதப்படுத்தும். சப்பை, பூ, மொட்டுகளில், குறிப்பாக மகரந்தம் மற்றும் சூல் பைகளைத் தின்னும்.

பூவும் பிஞ்சும் அதிகமாகத் தோன்றும் அக்டோபர்- டிசம்பர் காலத்தில், இப்புழுக்கள் நிறைய இருக்கும். தலைப் பகுதியை உள்ளே விட்டு, காயைக் குடைந்து தின்னும்.

தலைப்பகுதி, காய்க்கு உள்ளேயும், உடல் பகுதி வெளியேயும் இருக்கும். சில சமயங்களில் புழுக்கள் காய்களுக்குள் இருக்கும். இவற்றால் தள்ளப்பட்ட கழிவைக் கொண்டு இதை அறிந்து கொள்ளலாம்.

இந்தப் புழுக்களால் ஏற்படும் துளைகள் பெரிதாக, வட்டமாக இருக்கும். சப்பை, பூக்கள் இல்லாத போது இலைகளைத் தின்னும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: குறைந்த இடைவெளியில் நடுதல், செடிகள் நெருக்கமாக இருத்தல், தேவைக்கு அதிகமாகத் தழைச்சத்து உரங்களை இடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

துவரை அல்லது சம்பங்கி அல்லது வெண்டையைப் பொறிப்பயிராக வளர்த்தால், பச்சைப் புழுவின் அந்துப் பூச்சிகள், பருத்தியில் அதிகமாக முட்டை இடுவதைத் தவிர்க்கலாம்.

மேலும், பொறிப் பயிரில் இருக்கும் புழுக்களை எளிதில் கண்டறிந்து அழிக்கலாம்.

பருத்திச் செடிகள் 80-90 நாட்கள் வளர்ந்த பின், நுனியைக் கிள்ளி விட்டால், பச்சைக் காய்ப்புழு முட்டையிடுதல் வெகுவாகக் குறையும். மேலும், பக்கக் கிளைகள் நீண்டு, பூக்கள் மற்றும் காய்கள் அதிகமாகி மகசூல் கூடும்.

எக்டருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறி வீதம் வைத்து, அந்துப் பூச்சிகளின் வருகை மற்றும் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.

புழுக்களைக் கொத்தித் தின்னும் பறவைகளின் வருகையை ஊக்கப்படுத்த, T வடிவ மரக்கிளைகளை எக்டருக்கு 5-10 வீதம் பருத்தி வயலில் நட்டு வைக்க வேண்டும்.

நன்கு வளர்ந்த புழுக்களை, காலை 6 மணி முதல் 10 மணி வரை, கையால் பொறுக்கி அழிக்கலாம்.

அந்துப்பூச்சி முட்டையிடுவதைத் தவிர்க்க, 5 சத வேப்ப விதைச் சாற்றை, செடிகள் பூக்கும் பருவத்தில், அதாவது, 45-75 நாட்களில் தெளிக்கலாம்.

முட்டைகள் அதிகமாகத் தெரிந்தால் அவற்றை அழிக்கக் கூடிய புரபநோபாஸ் 0.1% (குராக்ரான்) அல்லது தையோடிகார்ப் 0.08% (லார்வின்) மருந்தைத் தெளிக்கலாம்.

காய்ப் புழுக்களை முட்டைப் பருவத்தில் கட்டுப்படுத்த, டிரைக்கோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணியை, எக்டருக்கு 1.5 இலட்சம் வீதம் விட வேண்டும்.

புழுக்களை இளம் பருவத்திலேயே அழிக்க என்.பி.வி. நச்சுயிரியை, எக்டருக்கு 500 புழு சமன் (Larval equivalent) வீதம் எடுத்து, 2.5 கிலோ சர்க்கரைக் கரைசலில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும்.

இப்பூச்சியின் பொருளாதாரச் சேத நிலையைக் கணக்கிட்டு, அதாவது, ஒரு செடிக்கு ஒரு முட்டை அல்லது இரண்டு செடிக்கு ஒரு புழு அல்லது 5 சத சப்பை, பூ, காய்கள் தாக்கப்பட்டு இருந்தால்,

சரியான பூச்சிக் கொல்லியை, சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான முறையில் தெளிக்க வேண்டும்.

தொடர்ந்து ஒரே வகையான பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்காமல், மாறுபட்ட பூச்சி மருந்துகளை அல்லது

எக்டருக்கு (ஸ்பயினோசாப்) ட்ரேசர் 45 எஸ்.சி. 160 மி.லி. அல்லது (இள்டாக்சகார்ப்) அவன்த் 14.5 எஸ்.சி. 500 மி.லி. அல்லது

(இமாமெக்டின் பென்சோயேட்) புரோக்ளைம் 5 எஸ்.ஜி 200-220 கிராம், அல்லது தையோடிகார்ப் லார்வின் 75 டபுள்யு.பி 1 கிலோ வீதம் தெளிக்கலாம்.

பூச்சி மருந்துகளை, காலை அல்லது மாலையில் தெளிப்பதே சரியான முறை. விசைத் தெளிப்பாn மூலம் தெளித்தால், மருந்துக் கரைசல் வெளிவரும் துளையை இரண்டில் வைத்துத் தெளிக்க வேண்டும்.

இதனால், மருந்துக் கரைசல் வீணாகாமல் சீராகச் சென்று இலைகளின் மேலும் கீழும் பனி போல் ஒட்டிக் கொள்ளும்.


முனைவர் கு.கோவிந்தன், சி.சிவக்குமார், பி.சி.பிரபு, ப.பரசுராமன், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி – 635 112.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks