செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட்.
குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலை நிறுத்தி, வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரிய வகையைச் சார்ந்தது. இது, நீரில் தனியே மிதந்து வாழும் பெரணி வகைத் தாவரமாகும். இந்த அசோலா, தாவரத்தினுள் இருந்து செயல்பட்டு, தழைச்சத்தை நிலைப்படுத்தும், அனபீனா எனப்படும் ஒருவகை நீலப்பச்சைப் பாசியாகும்.
நெல் வயல்களில் இதன் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், பல ஆண்டுகளாக ஆசிய கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. அசோலா, தன் உயிர்ம நிலையில் 0.2-0.3 சத தழைச்சத்தையும், உலர் நிலையில் 3.5 சத தழைச்சத்தையும் கொண்டுள்ளது.
அசோலாவில் ஏழு சிற்றினங்கள் உள்ளன. அவற்றில், இந்தியாவில் பரவலாக இருப்பது அனபீனா பின்னேட்டா ஆகும். நெல் உற்பத்தியைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்று தழைச்சத்து. அனபீனா அசோலா என்னும் சயனோ பாக்டீரிய வகையைச் சார்ந்த நீலப்பச்சைப் பாசியானது, அசோலா பின்னேட்டா என்னும் பெரணி வகைத் தாவர இலைகளில் உள்ள குழிகளில் தங்கி, இணைந்து செயல்பட்டு, தழைச்சத்தை நிறுத்துகிறது.
அசோலாவின் தனித்தன்மை
அசோலா, இந்தப் புவியிலேயே மிகவும் தனித்தன்மை மிக்க தாவரம். ஏனெனில், இது வளர்வதற்கு மண் தேவையில்லை. மேலும், மிக வேகமாக வளரும் தன்மையுள்ள அசோலா, 2-3 நாட்களில் இரண்டு மடங்காகப் பெருகும். காற்று வெளியில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை நிலை நிறுத்தி, தழைச்சத்துச் சார்ந்த பொருள்களை உருவாக்குவதால், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்கும்.
மண்வளம் மற்றும் உற்பத்தித் திறன் உயர்வில் அசோலா
தழைச்சத்தை நிலை நிறுத்துவதோடு, பலவகை நன்மைகளை நெற்பயிருக்குத் தருகிறது. அடர்த்திமிகு அசோலா நெல் வயலில் அடர்ந்து பரவி, களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். அசோலா எளிதில் சிதைவதால் தழை, மணி மற்றும் இதர சத்துகள் நெல் வயலுக்குக் கிடைக்கின்றன. எனவே, பயிர்கள் அவற்றை எளிதில் எடுத்துக் கொள்ளும்.
சாம்பல் சத்துக் குறைவாக உள்ள மண்ணில், நெற்பயிரைக் காட்டிலும், சாம்பல் சத்தைக் கிரகித்துக் கொள்ளும் தன்மையுள்ளது அசோலா. எனவே, அசோலா சிதைவுறும் போது, சாம்பல் சத்து எளிதாக நெற்பயிருக்குக் கிடைக்கும். மண் வளத்தை நீண்ட காலத்துக்கு மேம்படுத்தி வைப்பதில் இதன் பங்கு மகத்தானது. அங்ககச் சத்தை மண்ணுக்குத் தருவதுடன், அங்ககக் கரிமம் மற்றும் சத்துகளைத் தந்து, மண்வளத்தை மேம்படுத்தும்.
அசோலா, ஆலைக் கழிவு நீரிலுள்ள குரோமியம், காப்பர், துத்தநாகம் போன்ற கடின உலோகங்களை நீக்கும். எனவே, நச்சுமிகு கடின உலோகங்களை நீக்குவதில் உயிர்வழிக் காரணியாகச் செயல்படுகிறது. அசோலா மண்ணை முழுதாக மூடி விடுவதால், சூரிய ஒளி நீருக்குள் புகுவது குறையும். இதனால், நெல் வயலில் ஆவியாதல் மூலம் ஏற்படும் தழைச்சத்து இழப்பும் குறையும்.
இது, மண்ணில் அமில காரத்தன்மை உயராமல் தடை செய்யும். இதற்கு, பயிர் வளர்ச்சி ஊக்கிகளை அளிக்கும் தன்மை உள்ளதால், பயிரின் தரம் உயரும். இரட்டைப் பயிராக, நெல்லுடன் சேர்த்து அசோலாவை வளர்த்தால், மீத்தேன் வெளிப்பாடு குறைவதுடன், நெல் மகசூல் அதிகமாகும்.
அசோலாவை இடும் முறை
அசோலாவை, ஊடுபயிராக அல்லது பசுந்தாள் உரப்பயிராக இடலாம். ஊடுபயிராக இடும் போது, நெல் நடவு முடிந்து 78 நாட்களுக்குப் பிறகு அசோலாவை மிதித்து விட்டால், அதிகளவில் தழைச்சத்தை அளிக்கும்.
தனிப் பயிராக இடும் போது, வயலில் மிதித்து விடுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் நீரை வெளியேற்ற வேண்டும். அசோலா, விதைகளை உற்பத்தி செய்வதில்லை. உடல் இனப்பெருக்கம் மூலம் பெருகுகிறது. எனவே, ஆண்டு முழுவதும் உயிருள்ள அசோலாவை, ஒரு தொட்டியில் அல்லது சிறு குட்டையில் வளர்க்க வேண்டும். வளர்ப்பிடம் 4-5 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம், 0.5 மீட்டர் ஆழம் உடையதாக இருக்க வேண்டும். இப்பரப்பில், 250-500 கிராம் அசோலாவை இட வேண்டும்.
அசோலா வளர்ப்பு முறை
2×1 மீட்டர் நீள, அகலம், 20 செ.மீ. உயரமுள்ள இரும்பு அல்லது சிமெண்ட் அல்லது நெகிழித் தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தட்டு வளர்ப்பு முறை: அசோலா அதிகமாகத் தேவையெனில், அளவைக் கூட்டிக் கொள்ளலாம். தட்டில், நன்கு சலித்த 5-6 கிலோ மண்ணை நிரப்ப வேண்டும். அதில், 5-6 செ.மீ. அளவில் நீரை விட்டு நன்கு கலக்க வேண்டும். பிறகு அதில், 300-400 கிராம் ராக் பாஸ்பேட்டைத் தூவ வேண்டும். அதன் மேல் அசோலாவைத் தூவ வேண்டும். பிறகு, அந்தத் தட்டை வெய்யில் படுமாறு வைக்க வேண்டும். நன்கு மலர்ந்து தடித்து வளர்ந்த பிறகு நீர் விடுவதை நிறுத்த வேண்டும்.
நாற்றங்கால் வளர்ப்பு முறை: நெல் நாற்றங்கால் பரப்பில் பாதியை அசோலா வளர்ப்புக்கு ஒதுக்க வேண்டும். அதை 20×2 மீட்டர் பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 250 கிராம் ராக் பாஸ்பேட் வீதம் இட்டு நீரை விட வேண்டும். ராக் பாஸ்பேட்டை இட்ட 10 நாட்கள் கழித்து, 8-10 செ.மீ. அளவுக்கு நீரை விட வேண்டும்.
முனைவர் த.உதயநந்தினி, முனைவர் வைஷ்ணவி, முனைவர் ச.சங்கமித்ரா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 641 003.
சந்தேகமா? கேளுங்கள்!