நடவுக் கரும்பு அறுவடைக்குப் பிறகு, அடிக்கட்டையில் இருந்து துளிர்த்து வரும் கரும்பு, மறுதாம்புக் கரும்பு எனவும், கட்டைக் கரும்பு எனவும் அழைக்கப்படும். உலகில் கரும்பு சாகுபடி செய்யும் அனைத்து நாடுகளிலும், கட்டைப்பயிர் சாகுபடி இருந்து வருகிறது. தமிழகத்தில் கரும்பு சாகுபடியில் உள்ள மொத்தப் பரப்பில் 40-50 சதவீதம் மறுதாம்பு சாகுபடி ஆகும். ஆனால், மொத்தக் கரும்பு உற்பத்தியில், கட்டைக் கரும்பு விளைச்சல் சுமார் 30 சதவீதம் ஆகும்.
நடவுக் கரும்புக்கும், மறுதாம்புக் கரும்புக்குமான மகசூல் இடைவெளி சுமார் 20 சதமாகும். அதிக மகசூல் இழப்பின்றி, அதிகச் சர்க்கரைச் சத்துடன் 2-3 முறை, மறுதாம்புப் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்சமயம் சொட்டுநீர் மற்றும் துல்லிய சாகுபடி முறையில், ஆறு முறை, கட்டைப் பயிர்களை, மகசூல் இழப்பின்றிச் செய்ய முடியும்.
மறுதாம்புக் கரும்பு சாகுபடியின் அனுகூலங்கள்
நிலத்தை உழுது பார்கள் பிடிக்க ஆகும் செலவு, நேரம் முற்றிலும் குறையும். விதைக் கரணைச் செலவு மற்றும் நடவுச் செலவு முற்றிலும் இல்லை. மறுதாம்புக் கரும்பு ஒரு மாதம் முன்னதாக அறுவடைக்குத் தயாராகி விடும். இதனால், கரும்பின் வயதில் ஒரு மாதம் குறைகிறது. மறுதாம்புப் பயிரில் கிளைப்புகள் அதிகமாக இருப்பதாலும், கரும்பின் வளர்ச்சி சீராக இருப்பதாலும் கரும்புச் சாற்றின் தரம் உயருகிறது. கட்டைப் பயிரைச் சிறப்பாகப் பராமரித்தால், நடவுப் பயிரை விட, கரும்பு மகசூலும், சர்க்கரை மகசூலும் அதிகமாகக் கிடைக்கும்.
மறுதாம்பில் அதிக மகசூலுக்கான உத்திகள்
கட்டைக் கரும்பில் அதிக மகசூலுக்கான பராமரிப்பு முறைகளை, நடவுப் பயிரில் இருந்தே தொடங்க வேண்டும். குறிப்பாக, நடவுப்பயிர் இரகம், நல்ல முளைப்புத் திறன், கிளைப்புத் திறன் உள்ளதாக இருக்க வேண்டும்.
டிசம்பர் – ஜனவரியில் வரும் முன்பட்டக் கரும்பு நடவுக்கு ஏற்ற இரகங்கள்
த.வே.ப.க.கரும்பு சி.7, கோ.க.23, கோ.க.24, கோ.கு. 95076, கோ.கு.94077, கோ.க.90063, கோ.94008, கோ.94012, கோ.உ.94101, கோ.உ.95101, கோ.99004, கோ.அ.99082 மற்றும் கோ.அ. 92081.
பிப்ரவரி – மேயில் வரும் நடு மற்றும் பின்பட்டக் கரும்புக்கு ஏற்ற இரகங்கள்
த.வே.ப.க.கரும்பு சி.8, கோ.86032, கோ.கு.5, கோ.கு.93076, கோ.97009, கோ.உ.92102, கோ.85019 மற்றும் கோ.க.99061.
ஜூன் – செப்டம்பரில் வரும் சிறப்புப் பட்டத்துக்கு ஏற்ற கரும்பு இரகங்கள்
முன்பட்ட நடவுக்கு ஏற்ற அனைத்து இரகங்களும், சிறப்புப் பட்டத்துக்கு ஏற்றவை.
நடவுக் கரும்பை, குறித்த காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். வயது கடந்து அறுவடை செய்தால், கரும்பு உயரமாக வளர்ந்து சாய்ந்து விடும். இதனால், நரி, எலி, அணில்களால் பாதிப்பு ஏற்படும். கரும்பு சாய்ந்து விடுவதால், போதியளவில் வெய்யிலும், காற்றும் உள்ளே புக முடியாது. மேலும், எளிதாக உள்ளே சென்று பாசனம் செய்ய முடியாததால், கரும்பு காய்ந்து விடும். இதனால், மறுதாம்புக் கரும்பு துளிர் விடுவது பாதிக்கப்படும். எனவே, நடவுப் பயிரில் தோகைகளை உரித்தும், விட்டம் கட்டியும், கூடிய வரை, சாயாமல் பாதுகாக்க வேண்டும்.
நன்றாகப் பாசனம் செய்து பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். மேலும், அறுவடை சமயத்தில், நிலத்தில் நீர்த் தேங்கி இருந்தால், கரும்புக் கட்டைகள் அழுகி விடும். இதனால், மறுதாம்புப் பயிரில் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். எனவே, நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மறுதாம்புப் பயிரின் வேர்கள், நடவுக் கரும்பின் வேர்களை விட, சுமார் 15 செ.மீ. உயரத்தில் மண்ணில் மேலாக இருக்கும். வேர்கள் ஆழமாகச் செல்லாததால், பாசனத் தட்டுப்பாடு இருந்தால், மறுதாம்புப் பயிர் வறட்சியால் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க, நடவுக் கரும்பை, 20-30 செ.மீ. ஆழமுள்ள பார்களில் நடவு செய்ய வேண்டும்.
நடவுக் கரும்பை அறுவடை செய்யும் போது, நில மட்டத்தில் அல்லது அதற்குக் கீழே வெட்டுவதால், மறுதாம்புக் கரும்பு முளைப்புகள் கட்டையின் அடியில் இருந்து ஒரே சீராகத் துளிர்த்து வர வாய்ப்புள்ளது.
அறுவடைக்குப் பிறகு கட்டைப் பயிரில் கவனிக்க வேண்டியவை
நடவுக் கரும்பு அறுவடை முடிந்ததும், இயந்திரம் மூலம் தோகைகளைப் பொடியாக்கி, நன்கு பாசனம் செய்ய வேண்டும். பாசனம் செய்வதில் தாமதம் இருப்பின், கட்டைத் துளிர்ப்புக் குறையும். காய்ந்த தோகைகளை வயலிலேயே எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், நிலத்தின் மேல் மட்டத்தில் உள்ள கரும்பு வேர்கள் வெந்து விடும். மேலும், தோகைகளை எரித்தால் மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படும். தழைச்சத்தும் கந்தகச் சத்தும் வாயுவாக மாறி, காற்றில் கலந்து விடும். ஆகவே, தோகைகளை வயலில் எரிக்கக் கூடாது.
மறுதாம்பு வேர்களில் இருந்து கொழுந்துகள் தோன்றாமல், வெற்றிடங்கள் நிறைய ஏற்படும். வெற்றிடங்கள் அதிகமாக இருந்தால், பயிர் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படும்.
கட்டை சீவுதல்
நடவுப் பயிரை அறுவடை செய்த ஒரு வாரத்தில், சரியான ஈரப்பதத்தில் கூரிய மண்வெட்டி மூலம், பாருக்கு 5 செ.மீ. தாழ்வாக, மண்ணுடன் சேர்த்து, கட்டைகளைச் சீவ வேண்டும். இது, கட்டைகளின் அடிப்பாகத்தில் உள்ள பருக்கள் முளைக்கவும், ஆழமாக வேர்ப் பிடித்து, கரும்பு சாயாமல் இருக்கவும் உதவும். மணற்சாரி நிலத்தில் உள்ள கட்டைகளைச் சீவுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், கட்டைகள் பெயர்த்துக் கொண்டு மேலே வந்து விடும். கட்டைகள் பெயராத வகையில் சீவ வேண்டும். அல்லது கரும்பை அறுவடை செய்யும் போதே, கோடாரியால் ஆழமாக வெட்டி, மேல் மண்ணை மட்டும் லேசாகச் சீவி, பார்களைச் சீரமைக்கலாம்.
கட்டைகளைச் சீவுவதற்கு முன், எக்டருக்கு 250 கிராம் கார்பென்டசிம் வீதம் எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து, சால் மேடுகளில் தெளிக்க வேண்டும். இதனால், வளரும் பயிர்களை, நோய்த் தாக்குதலில் இருந்து காக்கலாம்.
கங்கு அறுத்தல்
கட்டைகளைச் சீவிய பிறகு, கரும்புப் பார்களின் இருபுறக் கரைகளை, மண்வெட்டி அல்லது நாட்டுக் கலப்பை மூலம் உடைத்து விட வேண்டும். இதற்குக் கங்கு அறுத்தல் என்று பெயர். இந்த வேலையைக் கட்டைக் கரும்பில் அவசியம் செய்ய வேண்டும். ஏனெனில், மறுதாம்புப் பயிரில், துளிர்த்த பயிர்கள் வேர்ப் பிடிக்கும் வரை, நடவுக் கரும்புக் கட்டைகளின் வேர்களைச் சார்ந்தே நிற்கும்.
அறுவடை முடிந்த கரும்புக் கட்டைகளின் வேர்களுக்கு வயதாகி விடுவதால், இளம் வேர்களைப் போல, வீரியமாக நீரையோ, தாவரச் சத்துகளையோ உறிஞ்சும் தன்மை அவற்றுக்கு இருக்காது. எனவே, பழைய வேர்கள் அழிந்து, விரைவில் புதிய வேர்கள் பிடிக்க, கரும்புப் பார்களின் இருபுறக் கரைகளை உடைத்து மண்ணை இலகுவாக்க வேண்டும். இப்படிச் செய்தால், மறுதாம்புப் பயிரின் வேர்கள் நன்கு வளர்ந்து, சிறப்பாகச் செயல்படும்.
கட்டைகளைச் சீவ, கங்குகளை அறுக்க, டிராக்டரால் இயங்கும் கருவி உள்ளது. இதனால், ஒரு ஏக்கரில் சுமார் ஒரு மணி நேரத்தில், குறைந்த செலவில், கட்டைகளைச் சீவி, கங்குகளை அறுக்க முடியும்.
போக்கிடம் நிரப்புதல்
மறுதாம்புக் கரும்பு விளைச்சல் குறைவதற்கு முக்கியக் காரணம், பல இடங்களில் கட்டைகள் துளிர்க்காமல் நிறைய இடைவெளி இருப்பது தான். இதைத் தவிர்க்க, நடவுப் பயிரிலேயே அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு, முளைப்புத் திறனுள்ள விதைக் கரணைகளை நடுவது அவசியம். கட்டைகள் சரியாகத் துளிர்க்காமல், ஒரு அடிக்கு மேல் இடைவெளி இருந்தால், கங்குகளை அறுத்து அடியுரம் இடுமுன், வெற்றிடங்களை நிரப்ப வேண்டும். கட்டைகள் அதிகமாக இருக்கும் பகுதியில் உள்ள கட்டைகளை, மண்ணுடன் எடுத்துப் போக்கிடங்களில் நடலாம்.
அல்லது முளைத்த கரணைகளை நடலாம். அதாவது, கரும்பு அறுவடைக்கு ஒரு மாதம் இருக்கும் போதே, மேட்டுப்பாத்தி அமைத்து ஒருபருக் கரணைகளை நேர்த்தி செய்து நட்டு, பூவாளி மூலம் தினமும் மாலையில் நீரைத் தெளித்து, நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். இவற்றை, வேர்கள் அறுந்து விடாமல் எடுத்து வெற்றிடங்களை நிரப்ப வேண்டும்.
அடியுரமிடுதல்
மறுதாம்புக் கரும்புக்கு, நடவுக் கரும்பைப் போலவே அடியுரம் இடுதல் வேண்டும். எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது 25 டன் கம்போஸ்ட் அல்லது 25 டன் ஆலை அழுக்கை இட வேண்டும். மணிச்சத்து 63 கிலோவையும் அடியுரமாக இட்டு மண்ணில் கிளறி விட வேண்டும். கட்டைகளைச் சீவி, கங்குகளை அறுத்து, பாசனம் செய்வதற்கு முன், சால்களின் ஓரத்தில் அடியுரத்தை இட வேண்டும்.
மேலுரமிடுதல்
நடவுப் பயிருக்கு இடுவதைப் போல் இல்லாமல், மறுதாம்புக் கரும்புக்கு விரைவாக மேலுரத்தை இட வேண்டும். எக்டருக்கு 275 கிலோ தழைச்சத்து மற்றும் 113 கிலோ சாம்பல் சத்தை, மூன்று பாகங்களாகப் பிரித்து, கட்டைகளைச் சீவிய, 20, 50 மற்றும் 70 நாளில் இட வேண்டும். மறுதாம்புப் பயிருக்கு, தழைச்சத்தை எடுத்துக் கொள்ளும் திறன் குறைவு. ஆனால், நாம் யூரியாவைத் தான் தழைச்சத்தாக இடுகிறோம். இந்தச் சூழலில், 5 கிலோ யூரியாவுக்கு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் கலந்து, ஒருநாள் வைத்திருந்து இட்டால், இந்த யூரியா வீணாகாமல் பல நாட்கள் நிலைத்திருந்து, சிறிது சிறிதாகப் பயிருக்குக் கிடைக்கும்.
கரும்புக்குத் தரும் எல்லா உரங்களையும், குழி முறையில் இடுவது சிறந்தது. பயிருக்கு 10 செ.மீ. தூரத்தில் 10 செ.மீ. ஆழத்தில் குழியெடுத்து, அதில் உரத்தை இட்டு மண்ணால் மூடிப் பாசனம் செய்ய வேண்டும். இதனால், உரம், வெய்யிலால் ஆவியாவது தவிர்க்கப்படும். மேலும், இந்த உரத்தைக் களைகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் குறையும்.
நுண்ணுயிர் உரமிடல்
அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகிய நுண்ணுயிர் உரங்களை, எக்டருக்கு 10 கிலோ வீதம் எடுத்து, 125 கிலோ கம்போஸ்ட் எருவில் கலந்து, அடியுரமாக அல்லது முதல் மேலுரம் இட்ட ஒரு வாரம் கழித்து இடலாம். இந்த உரங்களை, செயற்கை உரங்களுடன் கலக்காமல் தனியாக இட வேண்டும். அசோஸ் பயிரில்லம், பயிர் வேர்களைச் சுற்றியுள்ள மண் பகுதியில் இருந்து கொண்டு, காற்றிலுள்ள தழைச்சத்தை ஈர்த்துப் பயிர்களுக்குக் கொடுக்கும். பாஸ்போ பாக்டீரியா, மண்ணிலுள்ள மணிச்சத்தைக் கரைத்து, பயர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும்.
இரும்புச்சத்துப் பற்றாக்குறை
இரும்புச்சத்துப் பற்றாக்குறை இருந்தால், மறுதாம்புக் கரும்புத் தோகைகள் வெளுத்து வளர்ச்சிக் குறைந்து காணப்படும். இதைச் சரி செய்ய, எக்டருக்கு 5 கிலோ அன்னபேதி உப்பை, 500 லிட்டர் நீரில் கரைத்து, கட்டைகளைச் சீவிய, 10-15 நாட்களில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஒருமுறை தெளித்த பின்பும், பயிர் வெளுப்பு நீங்காத நிலையில், 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை, எக்டருக்கு 2 கிலோ அன்னபேதி உப்பு, 5 கிலோ யூரியா, 2.5 கிலோ ஜிங்க் சல்பேட்டை, 500 லிட்டர் நீரில் கரைத்துத் தெளித்தால், தோகைகள் பச்சையாகச் செழித்து வளரும்.
கரும்பு பூஸ்டர்
கரும்பு, அதிக வளர்ச்சி, நீண்ட கணுக்கள், அதிக மகசூல் மற்றும் வறட்சியைத் தாங்கி வளர, த.வே.ப.க. கரும்பு பூஸ்டர் என்னும் வளர்ச்சி ஊக்கியை, கட்டைகளைச் சீவிய, 45, 60 மற்றும் 75 நாளில், எக்டருக்கு 2.5 கிலோ, 4 கிலோ மற்றும் 5 கிலோ வீதம் எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம், மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
களைக் கட்டுப்பாடு
வேலையாட்கள் சரியான நேரத்தில் கிடைக்காதது மற்றும் அதிகக் கூலியால், தற்போது விவசாயிகள் களைக் கொல்லிகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். இன்றைய நவீன விவசாயத்தில் களைக்கொல்லிகளின் பங்கு அதிகம். இவற்றின் பயனை முழுதாகப் பெற, சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான முறையில் தெளிக்க வேண்டும். எந்தக் களைக்கொல்லி என்றாலும், மண்ணில் ஓரளவு ஈரம் இருக்க வேண்டும்.
கரும்பில், தேர்திறன் உள்ள களைக்கொல்லி மற்றும் தேர்திறன் அற்ற களைக்கொல்லியைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். தேர்திறன் களைக்கொல்லி என்றால், கரும்புப் பயிரைப் பாதிக்காமல், களைகளை மட்டும் கொல்லக் கூடியது. கரும்பில், அகன்ற இலை அல்லது பூண்டு வகைக் களைகள் அதிகமுள்ள இடங்களில், அட்ரசின் என்னும் களைக்கொல்லியை, எக்டருக்கு 2.5 கிலோ வீதம் எடுத்து, கட்டைகளைச் சீவி, முதல் நீர் விட்ட மூன்றாம் நாள், களைகள் முளைக்கு முன், கைத்தெளிப்பானில் தெளிக்க வேண்டும்.
இதைத் தெளித்த பிறகு, அறுகு மற்றும் கோரை தென்பட்டால், தேர் திறன் அற்ற களைக்கொல்லியான கிளைப்போசெட் என்னும் திரவ மருந்தைத் தெளிக்க வேண்டும். கோரை முளைத்து 3-4 இலைகள் வரும் போது, இந்தக் களைக் கொல்லியை, ஒரு லிட்டர் நீருக்கு 10 மி.லி. மற்றும் 10 கிராம் அம்மோனியம் சல்பேட் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம், கரும்பில் படாமல், களைகளில் தெளிக்க வேண்டும். இதைச் செய்து 15-20 நாட்களில், கோரைக்கிழங்கு மற்றும் அறுகம்புல்லின் வேரும் தண்டும், முற்றிலும் காய்ந்து மடிந்து விடும்.
கொடிவகைக் களைகள், கரும்பில் பார்களை அணைத்த பிறகு வளரத் தொடங்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, கடைசியாக மண் அணைத்த பிறகு, எக்டருக்கு 2.5 கிலோ வீதம் அட்ரசின் களைக்கொல்லியை எடுத்து 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது, அகன்ற இலைக் களைகளை, சுமார் 40 நாட்கள் முளைக்க விடாமல் கட்டுப்படுத்தும்.
பின்பு தோன்றும் கொடிவகைக் களைகள் ஒரு அடி வளர்ந்த பிறகு, அவற்றைக் கட்டுப்படுத்த 2,4-டி அமைன் திரவக் களைக்கொல்லி, ஒரு லிட்டர் நீருக்கு 7 மி.லி., மெட்ரிபூசின் களைக்கொல்லி 4 கிராம் மற்றும் ஒட்டும் திரவம் 1 மி.லி. வீதம் கலந்து, கொடிவகைக் களைகள் நனையும் வகையில் தெளிக்க வேண்டும். இந்தக் களைக்கொல்லி, கரும்புப் பயிரில் பட்டாலும், பயிருக்குப் பாதிப்பு இருக்காது.
நீர் நிர்வாகம்
நடவுப் பயிரைப் போலவே, மறுதாம்புக் கரும்புக்கும் சீரிய முறையில், நீர் நிர்வாகம் செய்ய வேண்டும். மண்வகை மற்றும் வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப, பாசனம் மாறுபடும். கரும்பில் தூர் வெடிக்கும் பருவம் மற்றும் வளர்ச்சிப் பருவத்தில், நீர் அதிகமாகத் தேவைப்படும். முதிர்ச்சிப் பருவத்தில் குறைவான நீரே போதும். தூர் வெடிக்கும் பருவத்தில், பயிர்கள் லேசாக வாடும் நிலையை உருவாக்க வேண்டும். இந்தப் பருவத்தில் பாசன இடைவெளியைக் கூட்டலாம். இதனால், வேர்கள் நீரைத் தேடி ஆழமாக ஊடுருவிச் செல்லும். அதோடு தூர்களும் அதிகமாக வெடிக்கும். தொடர்ந்து நீரைப் பாய்ச்சினால், வேர்கள் திறனற்று, பக்கவாட்டில் பரவி, பின் பருவத்தில் வறட்சியைத் தாங்கும் சக்தியை இழந்து விடும்.
மண் வகைக்கு ஏற்ப, தூர்கள் வெடிக்கும் போது, 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை, அதிக வளர்ச்சிப் பருவத்தில் 7 நாட்களுக்கு ஒருமுறை, முதிர்ச்சிப் பருவத்தில் 8 முதல் 14 நாட்களுக்கு ஒருமுறை, பாசனம் செய்ய வேண்டும்.
பின்செய் நேர்த்திகள்
நடவுக் கரும்புக்குச் செய்வதைப் போலவே, மறுதாம்புக் கரும்புக்கும், தோகை உரித்தல், விட்டம் கட்டுதல் போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். மறுதாம்புக் கரும்பின் 4 மற்றும் 5 மாதங்களில், காய்ந்த தோகைகளை நீக்க வேண்டும். தோகைகளை நீக்கினால், இலைகளில் தங்கி, சாற்றை உறிஞ்சிச் சேதம் விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும், தோகைகளை நீக்கினால் பருக்கள் முளைக்காது. கணுக்களில் வேர்கள் தோன்றாது. இடைக்கணுப் புழுக்களின் தாக்குதல் குறையும். நிலத்துக்குள் சென்று பாசனம் செய்ய, விட்டம் கட்ட எளிதாக இருக்கும்.
அறுவடை
மறுதாம்புக் கரும்பானது, நடவுக் கரும்பை விட ஒரு மாதம் முன்னதாகவே அறுவடைக்கு வந்து விடும். கரும்பின் முழுப் பயனையும் அடைய, முதிர்ச்சி அடைந்ததும் அறுவடை செய்ய வேண்டும். உரிய காலத்தில் அறுவடை செய்யாமல், காலம் தாழ்த்தி அறுவடை செய்தால், கரும்பு மகசூலும், சர்க்கரைச் சத்தும் குறையும். மறுதாம்புக் கரும்பை, நில மட்டத்தில் அல்லது சற்றுக் கீழே வெட்டி எடுக்க வேண்டும்.
மறுதாம்புக் கரும்பில் நல்ல மகசூலுக்கான பத்துக் கட்டளைகள்
- நடவுக் கரும்பில் சரியான இரகத்தைத் தேர்ந்தெடுத்தல்.
- நடவுக் கரும்பில் பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல்.
- உரிய காலத்தில் நடவுக் கரும்பை அறுவடை செய்தல்.
- நடவுக் கரும்புத் தோகைகளை நொறுக்கி, நிலத்திலேயே மட்கச் செய்தல்.
- நில மட்டத்துக்குச் சற்றுக் கீழே வெட்டி, அறுவடை செய்தல்.
- கலப்பை அல்லது மண்வெட்டி அல்லது இயந்திரம் மூலம், கட்டைகளைச் சீவி, கங்குகளை அறுத்தல்.
- முளைத்த கரணைகளை நட்டு, வெற்றிடங்களை நிரப்புதல்.
- தேவையான உரம் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் சரியான காலத்தில் செய்தல்.
- அறுவடை முடிந்ததில் இருந்தே முறையாகப் பாசனம் செய்தல்.
- களையெடுத்தல், மண் அணைத்தல், தோகை உரித்தல், விட்டம் கட்டுதல் ஆகிய வேலைகளை, நடவுக் கரும்பில் செய்வதைப் போலவே, உரிய நேரத்தில் செய்தல்.
முனைவர் மு.சண்முகநாதன், இணைப் பேராசிரியர், பயிர் இனப்பெருக்கத்துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!