சம்பா நெல் சாகுபடி!

நெற்பயிர்

காவிரி டெல்டா பகுதியில் சம்பா நெல் சாகுபடி தீவிரமாக இருக்கும். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரைக் கொண்டு, சம்பா நெல் சாகுபடியைச் செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக இருப்பார்கள்.

எனவே, சம்பா நெல் சாகுபடியில் மகசூலைப் பெறுவதற்கான உத்திகளைப் பார்க்கலாம்.

இரகங்கள்

காவிரி டெல்டா பகுதியில், 135-140 நாட்களில் விளையும், வெள்ளைப் பொன்னி,

155-160 நாட்களில் விளையும், CR Sub 1009 என்னும் பொன்மணி,

130-135 நாட்களில் விளையும், ஆடுதுறை 38,

145-148 நாட்களில் விளையும், ஆடுதுறை 44,

135 நாட்களில் விளையும், ஆடுதுறை 46,

155-160 நாட்களில் விளையும், ஆடுதுறை 51,

135 நாட்களில் விளையும், BPT 5204,

125-130 நாட்களில் விளையும் திரூர்க் குப்பம் 13, ஆகிய இரகங்களைச் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யலாம்.

நடவு வயல் தயாரிப்பு

களிமண் நிலம் மற்றும் அதிக அங்ககப் பொருள்கள் உள்ள நிலம் சாகுபடிக்கு உகந்தது. கார அமிலத் தன்மை 5.5-6.5 வரை இருக்க வேண்டும்.

முதலில், நிலத்தில் நீரைப் பாய்ச்சி எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது 6.25 டன் தழைகளை இட வேண்டும்.

உழுவதற்கு முன் 500 கிலோ ஜிப்சத்தை இட வேண்டும். எலி, பாம்பு போன்றவை வராமல் இருக்க, நிலத்தைச் சுற்றியும், வரப்புகளையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, 2.5 செ.மீ. அளவில் நீரைத் தேக்கித் தொழியடிக்க வேண்டும்.

நடவுக்கு முன், எக்டருக்குப் பத்துப் பொட்டலம் வீதம் அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை எடுத்து, 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மணலில் கலந்து நடவு வயலில் இட வேண்டும்.

உயிர் உரங்கள்: ஒரு எக்டர் நடவுக்கான நாற்றுகளைப் பறித்து, ஐந்து பொட்டலம் அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா, 40 லிட்டர் நீர் வீதம் கலந்த கரைசலில், 15-30 நிமிடங்கள் நனைத்து நட வேண்டும்.

நடவுமுறை: நடுத்தர வயதுள்ள பயிருக்கு 20×10 செ.மீ., நீண்டகாலப் பயிருக்கு 20×15 செ.மீ., ஒற்றை நாற்று முறையாக இருந்தால் 25×25 செ.மீ இடைவெளி அவசியம்.

குத்துக்கு 2-3 நாற்றுகளை 3 செ.மீ. ஆழத்தில் நட வேண்டும். நட்ட 7-10 நாட்கள் கழித்து, வயலில் ஆங்காங்கே இடைவெளி இருந்தால், மீண்டும் அங்கே நடவு செய்து, சரியான பயிர் எண்ணிக்கை, பேணப்பட வேண்டும்.

உர நிர்வாகம்: எக்டருக்கு, அனைத்து இரகங்களுக்கும் 150:50:50 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும்.

இவற்றில், தழை மற்றும் சாம்பல் சத்தை, அடியுரம், தூர் பிடிக்கும் பருவம், குலை தள்ளும் பருவம், கதிர் தோன்றும் பருவம் என, நான்கு சம பாகங்களாகப் பிரித்து இட வேண்டும். மணிச்சத்து முழுவதையும் அடியுரமாகவே இட வேண்டும்.

களை நீக்கம்: நடவு செய்த மூன்றாம் நாளில், எக்டருக்கு 2.5 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது 1.3 லிட்டர் அனிலோபாஸ் வீதம் எடுத்து, 50 கிலோ மணலில் கலந்து, வயலில் சிறிது நீரை நிறுத்திச் சீராகத் தூவ வேண்டும்.

நீரை இரண்டு நாட்களுக்கு நிலத்தில் இருந்து வடிக்கக் கூடாது. 45 ஆம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.

களைக் கொல்லியை இடாத நிலையில், நடவு செய்த 15 மற்றும் 45 ஆம் நாள் கைக்களை வேண்டும்.

நீர் நிர்வாகம்: நடவு வயலை முறையாகத் தொழியடித்தல் மற்றும் நிலத்தைச் சீராகச் சமன்படுத்தல் மூலம் நீரைச் சிக்கனம் செய்யலாம்.

நடவின் போது 2 செ.மீ. நீரைப் பாய்ச்சி, அதை 7 நாட்களுக்குப் பராமரிக்க வேண்டும். பயிர்கள் தூர் கட்டிய பிறகு, அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப, 2.5-5 செ.மீ. நீரை நிறுத்த வேண்டும்.

அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் பாசனத்தை நிறுத்திவிட வேண்டும்.

நேரடி நெல் விதைப்பு

நீர்த் தட்டுப்பாடு மற்றும் ஆற்றில் நீர் வரத் தாமதம் ஏற்படும் நிலையில், நாற்றங்காலை அமைக்க முடியாத நிலையில், நேரடி நெல் விதைப்பு மிகவும் ஏற்றது.

இவ்வகையில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் நேரடி நெல் விதைப்பைச் செய்யலாம். இதற்கு, 160-165 நாட்களில் விளையும், பொன்மணி இரகம் சிறந்தது.

நிலம் தயாரித்தல்: கட்டி இல்லாமல் நிலத்தை நன்கு உழுது, களைகளை அகற்ற வேண்டும்.

நடவு வயல் தயாரிப்பைப் போல, சேற்றுழவு செய்ய வேண்டும். வயலில் தேங்கும் நீர் வடிவதற்கு ஏதுவாக, மூன்று மீட்டர் இடைவெளியில், 15 செ.மீ. அகலத்தில் வடிகால்களை அமைக்க வேண்டும். இப்படிச் செய்தால் விதைகள் நன்றாக முளைக்கும்.

விதைப்பு: எக்டருக்கு தேவைப்படும் 60 கிலோ விதைகளை, நடவு முறைக்குச் செய்வதைப் போல, முளைக்கட்ட விட்டு, நிலத்தில் இலேசான நீரை நிறுத்திச் சீராகத் தூவ வேண்டும்.

பின்செய் நேர்த்தி: விதைத்த 14 முதல் 21 நாட்களில், பயிர்கள் கூடுதலாக இருந்தால் கலைத்து விட வேண்டும்.

இடைவெளி உள்ள இடங்களில், புதிய நாற்றுகளை நட்டு, பயிர் எண்ணிக்கை, பேணப்பட வேண்டும்.

களை நீக்கம்: எக்டருக்கு 1.5 லிட்டர் பிரிடிலா குளோர் களைக்கொல்லி வீதம் எடுத்து, 50 கிலோ மணலில் கலந்து, விதைத்த எட்டாம் நாள், வயலில் இலேசாக நீரை நிறுத்திச் சீராகத் தூவ வேண்டும்.
பிறகு, விதைத்த 45 நாளில், கைக்களை எடுக்க வேண்டும்.

உரம் மற்றும் பாசனம்: நடவு வயலில் செய்வதைப் போலவே, நேரடி நெல் விதைப்பு வயலிலும், உரம் மற்றும் பாசனத்தைப் பின்பற்ற வேண்டும்.

அறுவடை: 80-85 சதம் நெல் மணிகள் காய்ந்து, வைக்கோல் நிறத்துக்கு மாறும் போது அறுவடை செய்ய வேண்டும்.

இயந்திரம் அல்லது ஆட்கள் மூலம் அறுவடை செய்து, பதர்களை நீக்கி, 12 சதம் ஈரப்பதம் வரும் வரை நன்றாக உலர்த்தி, சணல் சாக்குகளில் சேகரிக்க வேண்டும்.


நெல் V.ARAVINDH

முனைவர் வி.அரவிந்த், தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், காரைக்கால்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading