My page - topic 1, topic 2, topic 3

தென்னையைத் தாக்கும் வேர் வாடல் நோய்!

தென்னை மரம், பூலோகக் கற்பக விருட்சம், மரங்களின் சொர்க்கம், வாழ்க்கை மரம் என்று பல பெயர்களில் சிறப்பாக அழைக்கப் படுகிறது.

இது, அரிகேசியே குடும்பத்தைச் சேர்ந்த மரம். தேங்காய் உற்பத்தித் திறனில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதன் உற்பத்தித் திறன் எக்டருக்கு 10,345 காய்கள் வீதம் உள்ளது.

தமிழகத்தில் சுமார் 4.65 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி உள்ளது. இதன் மூலம் 6917.46 மில்லியன் தேங்காய்கள் கிடைக்கின்றன. உற்பத்தித் திறன் எக்டருக்கு 14,873 காய்கள் வீதம் உள்ளது.

தென்னை மூலம் நமக்குப் பல்வேறு பொருள்கள் கிடைக்கின்றன. சக்தியும் புத்துணர்வும் அளிக்கும் இளநீர், தேங்காய் எண்ணெய், தென்னை நார், எரிபொருளாகும் ஓடு,

கூரையாகும் ஓலை மற்றும் கட்டுமானத்தில் பயன்படும் மரம் என்று பல வகைகளில் தென்னை உதவுகிறது.

இத்தகைய தென்னையை, கேரள வாடல் நோய் தாக்கி வருகிறது. இந்நோய், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் 1882 இல் தோன்றியது.

தற்போது தமிழ்நாட்டில் கேரளத்தை ஒட்டியுள்ள, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நோயால் மரங்கள் சாகா விட்டாலும், மரங்கள் மெதுவாகச் சோர்வை அடைவதால், காய்ப்பும் தரமும் குறைந்து வருகின்றன. இந்நோய், எல்லா வயது மரங்களையும், வீரிய ஒட்டு மற்றும் நாட்டு மரங்களையும் தாக்கும்.

இது, ஒரே திசையில் பரவும் நோயல்ல. அதாவது, மூன்று ஆண்டுகளில் 1-4 கிலோ மீட்டர் வரை மட்டுமே பரவும்.

இளம் மரங்களைத் தாக்கினால், பூக்கும் காலம் தள்ளிப் போகும்; இலையழுகல் நோயும் ஏற்பட்டு, காய்ப்புக் குறைந்து விடும்.

இந்நோய் தொடக்க நிலையில், 35 சதவீத இழப்பையும், முற்றிய நிலையில் 85 சதவீத இழப்பையும் ஏற்படுத்தும்.

நோய் அறிகுறிகள்

கேரள வேர்வாடல் நோயின் அறிகுறிகளைத் தொடக்க நிலையில் கண்டறிவது மிகவும் கடினம். காரணமே இல்லாமல் குரும்பைகள் அதிகமாக உதிர்தல் இதன் முதல் அறிகுறி.

பின்பு, ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன், ஓலை மடல்களின் ஓரங்கள் கருகி கீழ்நோக்கி வளைந்து இருக்கும். இது, மனிதனின் விலா எலும்பைப் போல இருக்கும்.

ஓலை மடல்களில் கருகிய பகுதி, அதிகக் காற்று அல்லது மழையின் போது, மரத்திலிருந்து உதிர்ந்து விடுவதால், குச்சிகள் மட்டும் நீட்டிக் கொண்டிருக்கும்.

இந்த இரு அறிகுறிகளும் நோய் முற்றிய மரங்களில் அதிகமாகத் தெரியும். இளங் குருத்துப் பகுதியைத் தாக்கி அழுகச் செய்யும்.

குருத்து ஓலையிலும் இலையழுகல் அறிகுறி தென்படும். மேலும், பூங்கொத்துகள் கருகுதல் மற்றும் வேரழுகல் இந்நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

பரவும் விதம்

கேனடிடேடஸ் பைட்டோ பிளாஸ்மா என்னும் நுண்ணுயிர் மூலம் உருவாகும் இந்நோய், கண்ணாடி இறக்கைப் பூச்சிகள் மற்றும் தத்துப் பூச்சிகள் மூலம் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

இந்நோய், பிற மரங்களுக்குப் பரவுவதைத் தவிர்க்க, ஆண்டுக்குப் பத்துக் காய்களுக்கும் குறைவாகக் காய்க்கும் மரங்கள், காய்களே இல்லாத வகையில் நோயுற்ற மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

நோயெதிர்ப்புத் திறனுள்ள சௌகாட் பச்சைக் குட்டை, மலேயன் பச்சைக் குட்டை, சௌகாட் பச்சைக் குட்டை மற்றும் மேற்குக் கடற்கரை நெட்டையில் இருந்து பெறப்பட்ட வீரிய ஒட்டு இரகங்களைப் பயிரிட வேண்டும்.

தென்னந் தோப்பில் அடிக்கடி களைக் கொல்லியைத் தெளிக்கக் கூடாது. இதைத் தொடர்ந்து செய்தால், மண்வளம் பாதிப்பதுடன், மரங்களின் வளர்ச்சியும், எதிர்ப்பு சக்தியும் குறையும்.

வட்டப் பாத்தியில் தென்னை மட்டைகளைக் கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும்.

நீர் வசதியுள்ள பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை, நிலம் முழுதும் நீரைப் பாய்ச்சும் முறை வழக்கத்தில் உள்ளது.

இதனால், பாசன நேரம் கூடுவதுடன், களைகள் மற்றும் நோய்க் கிருமிகள், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு, நீரினால் பரவும் வாய்ப்பு ஏற்படும்.

அத்துடன் நீரில் கரையும் சத்துப் பொருள்கள், ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு அடித்துச் செல்லப் படுவதால், எல்லா மரங்களுக்கும் சீரான அளவில் சத்துகள் கிடைக்காது.

மேலும், சத்துப் பொருள்கள் நீரில் கரைந்து வேருக்குக் கீழே சென்று விடுவதால், பயிருக்குக் கிடைக்காது.

இதனால் மண்வளமும் குறையும். ஆகவே, நிலமெங்கும் பாசனம் செய்யும் முறையைத் தவிர்க்க வேண்டும்.

நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். கோடையில் வாரம் ஒருமுறை, மரத்துக்கு 250 லிட்டர் நீர் வீதம் பாய்ச்ச வேண்டும்.

பசுந்தாள் உரங்களான தட்டைப்பயறு, சணப்பை, கலப்ப கோணியம், தக்கைப் பூண்டு ஆகியவற்றை, வட்டப் பாத்திகளில் அல்லது தோப்பு முழுவதும் வளர்த்து, பூக்குமுன், மடக்கி உழுதுவிட வேண்டும்.

தென்னையின் வயதுக்கு ஏற்ப, வாழை, மிளகு, கோகோ, மஞ்சள், இஞ்சி, கிழங்கு வகைகள், அன்னாசி, காபி, ஜாதிக்காய், மரவள்ளி போன்ற பயிர்களை ஊடுபயிராக இட்டு, வருவாயைப் பெருக்கலாம்.

மரத்துக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 கிலோ, யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாஷ், 1 கிலோ மெக்னீசியம் சல்பேட், 0.5 கிலோ துத்தநாக சல்பேட் வீதம் எடுத்து, இரு பாகமாகப் பிரித்து, தொழுவுரத்தில் கலந்து ஆண்டுக்கு இருமுறை இட வேண்டும்.

மரத்துக்கு, தொழுவுரம் 5 கிலோ, டிரைக்கோ டெர்மா விரிடி 100 கிராம், பேசில்லஸ் 100 கிராம் வீதம் எடுத்துக் கலந்து, மூன்று மாத இடைவெளியில் ஆண்டுக்கு நான்கு முறை இட வேண்டும்.

மேலும், இக்கலவையை இட்டு ஒரு மாதம் கழித்து, ஒவ்வொரு முறையும் மரத்துக்கு 75 கிராம் காப்பர் சல்பேட்டை இட வேண்டும். இதன் மூலம் நோயின் தீவிரத்தை வெகுவாகக் குறைக்கலாம்.

மரத்துக்கு, அசோஸ் பைரில்லம் 100 கிராம், பாஸ்போ பாக்டீரியா 100 கிராம், வேர் உட்பூசணம் 50 கிராம் வீதம் எடுத்து, தொழுவுரத்தில் கலந்து ஆண்டுக்கு இருமுறை இட வேண்டும்.

மரத்துக்கு, 40 மி.லி. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத் தென்னை டானிக் வீதம் எடுத்து, 160 மில்லி நீரில் கலந்து, ஆண்டுக்கு இருமுறை வேரில் கட்ட வேண்டும். இதனால், தென்னையில் எதிர்ப்பு சக்தியும், காய்ப் பிடிப்புத் திறனும் மேம்பட்டு மகசூல் பெருகும்.

நோயைப் பரப்பும் பூச்சிகளான கண்ணாடி இறக்கைப் பூச்சி மற்றும் தத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த, 250 கிராம் வேப்பம் புண்ணாக்குத் தூளை, 200 கிராம் மணல் அல்லது பிப்ரோனில் 0.3 ஜி-யை, 1:1 வீதம் கலந்து, குருத்தின் அடிப்பகுதியில் இட வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மில்லி டைமீத்தாயேட், 1 மில்லி ஒட்டும் திரவம் வீதம் கலந்து, ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

இலையழுகல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த, மரத்துக்கு, ஒரு லிட்டர் நீர், 5 மில்லி ஹெக்ச கோனசோல் வீதம் கலந்து, 45 நாட்கள் இடைவெளியில் குருத்துப் பகுதியில் ஊற்ற வேண்டும்.

எட்டு லிட்டர் நீரில் 2 லிட்டர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கோகோகானைக் கலந்து, வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும். இதை மாதம் ஒருமுறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இத்தகைய நோய் மேலாண்மை முறைகளைப் பின்பற்றினால், மண்வளம் காத்து, எதிர்ப்பு சக்தியைப் பெருக்கி, கேரள வாடல் நோயிலிருந்து தென்னை மரங்களைக் காக்கலாம்.


முனைவர் கு.கவிதா, முனைவர் சா.நஸ்ரின் ஹசன், முனைவர் ஆ.செல்வராணி, முனைவர் தே.ஷோபா, வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பதிசாரம், கன்னியாகுமரி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks