நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்கும்படி, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்புப் பருவத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதைப் பயன்படுத்தி, சுமார் 4,300 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி, மூங்கில் புதூர், பெத்ததாளப்பள்ளி, தேவசமுத்திரம், பெரிய முத்தூர், கும்மனூர், கட்டிகானப்பள்ளி, மாதேப்பட்டி, கெங்கலேரி, கூலியம், நெக்குந்தி, அவதானிப்பட்டி ஆகிய கிராமங்களில், இப்போது நிலவும் தட்ப வெப்பநிலை காரணமாக, புகையான் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது.
புகையான் தாக்குதல் உள்ள வயல்களில், புகையான் குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும், நெற்பயிர் தூர்களில், குத்துகளின் அடிப்பகுதியில் நீருக்கு மேல், கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு, தண்டின் சாற்றை உறிஞ்சுவதால், பயிர்கள் முதலில் மஞ்சளாகவும், அடுத்துப் பழுப்பு நிறமாகவும் மாறும். பயிர்கள் வட்டமாகத் தீயில் கருகியதைப் போல இருக்கும்.
இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், அளவுக்கு அதிகமாகத் தழைச்சத்தை இடக்கூடாது. மேலும், தழைச்சத்தை 3-4 தவணைகளாகப் பிரித்து இட வேண்டும். நீர் மறைய நீர் கட்ட வேண்டும். வயலில் உள்ள நீரை வடித்து விட்டு, வெய்யிலும் காற்றும் கிடைப்பதற்கு ஏதுவாக, பயிர்களை மடக்கி இடைவெளி தெரியும் வகையில் வைத்துப் பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும்.
பயிர்கள் பூப்பதற்கு முந்தைய பருவத்தில், நீரை நன்றாக வடித்து விட்டு, தூர்களில் நன்கு படும்படி, ஏக்கருக்கு ஒரு லிட்டர் அசாடிராக்டின் அல்லது 200 கிராம் பை மெட்ரொசின் 50 டபிள்யு.ஜி. அல்லது அரை லிட்டர் பெனோபியூகார்ப் 50% இ.சி. அல்லது அரை லிட்டர் பிப்ரோனில் 5% எஸ்.சி. அல்லது 60 மி.லி. குளோரான்ட்ரேனிலிரோல் 18.5% இ.சி. மருந்தை, 200 லிட்டர் நீரில் தெளிக்க வேண்டும்.
பயிர்கள் பூத்த பிறகு, நீரை வடித்து விட்டு, ஏக்கருக்கு 10 கிலோ கார்பரில் 10% தூள் அல்லது 500 மி.லி. பெனோபியூகார்ப் 50% இ.சி. மருந்தைத் தேவையான மணலில் கலந்து, பயிர்களின் அடிப்பகுதியில் நன்கு படும்படி தூவ வேண்டும். புகையானுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கும் செயற்கை மருந்துகளான பைத்ராய்டுகள், மீத்தைல் பாரத்தியான், குயினால்பாஸ் போன்ற மருந்துகளைத் தவிர்க்க வேண்டும் என்று, நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளும்படியும், தனது செய்திக்குறிப்பு மூலம் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.
சந்தேகமா? கேளுங்கள்!