வெண்டைக்காய் சாகுபடியில் நோய்க் கட்டுப்பாடு உத்திகள்!

vendai

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020

மது நாட்டில் காய்கறிப் பயிர்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பலவகை நிலங்களில் விளைகின்றன. இந்தப் பயிர்கள், பூச்சி மற்றும் நோய்களால் பெரும் பாதிப்பை அடைகின்றன. குறிப்பாக, தண்டு மற்றும் காய்த் துளைப்பான், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள், வண்டுகள், மாவுப்பூச்சிகள் ஆகியவற்றால் பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சில பூச்சிகள், நோய்களையும் பரப்புகின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் இருந்தாலும், பெரும்பாலும் இரசாயன முறைகளையே உழவர்கள் நாடுகின்றனர்.

நமது நாட்டின் மொத்த சாகுபடிப் பரப்பில், காய்கறிப் பயிர்கள் சாகுபடிப் பரப்பு 3% தான். ஆனால், 13-14% இரசாயன மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. அதனால், காய்கறிகளில் இருக்கும் எஞ்சிய நஞ்சு நம் உடலுக்குள்ளும், காய்கறிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள் உடலுக்குள்ளும் செல்வதால், பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், இந்த வேதி மருந்துகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதுடன், பயிர்களுக்கு நன்மை செய்யும், ஒட்டுண்ணிகள், ஊணுண்ணிகள், மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், குளவிகள், வண்டுகள், சிலந்திகள் ஆகியவற்றையும் அழிக்கின்றன.

தினசரி உணவில் இடம் பெறும் காய்கறிகளில் முக்கியமானவை, கத்தரி, வெண்டை, தக்காளி. ஆண்டு முழுவதும் விளையும் வெண்டையைச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகள், காய்களைத் துளைக்கும் புழுக்கள், தண்டு மற்றும் இலைகளை உண்ணும் பூச்சிகள், வண்டுகள் போன்றவை தாக்கி, சுமார் 20% மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், மஞ்சள் தேமல் நோய், வேரழுகல் நோய், வாடல் நோய் ஆகியனவும் தாக்கிச் சேதங்களை விளைவிக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, இரசாயன மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்து மாறுவதற்கான வழிமுறைகள் உள்ளன.

கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள்

வெண்டையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம். இதற்கு, பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டும் வேர் பாக்டீரியா பயன்படும். மேலும், விதைப்புக்கு முன், ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தை இட வேண்டும். நிலத்தைச் சுற்றி ஆமணக்குச் செடிகளை வளர்க்க வேண்டும். விதைகளை 60×30 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். மண்ணாய்வு முடிவின்படி உரமிட வேண்டும். பூச்சி மற்றும் நோய்களைத் தாங்கி வளரும் இரகங்களை நட வேண்டும். ஏக்கருக்கு 5 மஞ்சள் ஒட்டுப்பொறிகளை வைக்க வேண்டும்.

விதைத்த 30 நாட்கள் கழித்து, ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, மட்கிய 25 கிலோ எருவில் கலந்து நிலத்தில் விதைக்க வேண்டும். இதனால், பூச்சி மற்றும் நோயெதிர்ப்புத் தன்மை பயிர்களில் உருவாகும். பூக்கும் போதும் காய்க்கும் போதும், தாக்கும் வெள்ளை ஈக்களின் பரவல் கட்டுப்படும்; எனவே, மஞ்சள் தேமல் நோயின் தாக்கமும் குறையும்.

மண் மற்றும் வேர்ப் பகுதியிலிருந்து கொண்டு நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை, சூடோமோனாசும், டிரைக்கோடெர்மா விரிடியும் அழிக்கும். பயிர்களில் நோயெதிர்ப்புச் சக்தியைத் தூண்டும். மண்ணிலுள்ள சத்துகளைப் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும். பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டும் வேர் பாக்டீரியாவைப் பயன்படுத்தினால், பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தி, நஞ்சில்லாக் காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்; சுற்றுச் சூழலையும் பாதுகாக்கலாம். 


வெண்டை DHANUSHKODI e1634639335339

முனைவர் வெ.தனுஷ்கோடி,

முனைவர் நூர்ஜஹான் அ.கா.அ.ஹனீப், முனைவர் நா.தமிழ்ச்செல்வன்,

வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி-639115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading