தென்னையைத் தாக்கும் அடித்தண்டழுகல் மற்றும் வேர்வாடல் நோய்!

வேர்வாடல் Coconut root

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021

ற்பக விருட்சம் எனப்படும் தென்னை, முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாகும். இது, பூசணம், பாக்டீரியா, வைரஸ் வைராய்டு என்னும் நச்சுயிரிகள் மற்றும் பைட்டோபிளாஸ்மா ஆகிய நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் நோய்களால் தாக்கப்படுகிறது.

தென்னை கடினத் தன்மை மிக்கதாக இருந்தாலும், நாற்றுப் பருவத்திலிருந்து வளர் பருவம் வரையில், பலவிதமான நோய்கள் இதைத் தாக்குகின்றன. அவற்றுள், அடித்தண்டழுகல் மற்றும் வேர்வாடல் முக்கிய நோய்களாகும். அடித்தண்டழுகல் நோயால் 13 சதமும், வேர் வாடல் நோயால் 35-80 சதமும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

அடித்தண்டழுகல் நோய் (தஞ்சாவூர் வாடல் நோய்)

தமிழ்நாட்டில் இந்நோயின் தாக்குதல் 1903 ஆம் ஆண்டிலிருந்து இருந்தாலும், 1952 ஆம் ஆண்டு தான் இதற்குத் தஞ்சாவூர் வாடல் நோய் எனப் பெயரிடப்பட்டது. கடற்கரையை ஒட்டிய மணற்பாங்கான இடங்கள் மற்றும் கோடையில் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அறிகுறிகள்: இந்த நோயால் பாதிக்கப்பட்ட மரத்தின் அடியிலிருந்து மூன்றடி உயரத்தில் சாறு வடியும். சாறு வடியும் பகுதியை வெட்டிப் பார்த்தால், அழுகியும் நிறம் மாறியும் இருக்கும். ஓலைகள் வெளிர் மஞ்சளாகவும், அடிமட்டைகள் பழுப்பு நிறத்தில் காய்ந்தும் தொங்கும். இதைக் கையால் இழுத்தால் கீழே விழாது. வேர்களும் அதிகளவில் அழுகி, நிறம் மாறி, குறைந்து காணப்படும்.

சில நேரங்களில் அனைத்துக் குரும்பைகளும், இளம் காய்களும் கொட்டி விடும். மேலும், இந்நோய்க்கு உள்ளான மரங்களில், சைலிபோரஸ் என்னும் பட்டைத் துளைப்பான் வண்டின் தாக்குதலும் இருக்கும். மழைக்காலத்தில் அடிமரத்தில் கேனோடெர்மா பூசணத்தின் வித்துகள் காளானைப் போல வளர்ந்திருக்கும். இந்த அறிகுறிகள் அனைத்தும் இருந்தால், அந்த மரம் 6-12 மாதங்களில் இறந்து விடும்.

நோய்க்காரணி: இந்நோய், கேனோடெர்மா லூசிடம் (Ganoderma lucidum) என்னும் பூசணத்தால் ஏற்படும். இது, பூசண வித்துகளைக் காளானில் உற்பத்தி செய்யும். இது, தடித்து, கடினமாக, கருஞ்சிவப்பு மேல்பகுதி மற்றும் வெண்ணிற அடிப்பகுதியுடன் இருக்கும்.

நோய் பரவும் சூழல்: பராமரிப்பற்ற நிலையில் தென்னந்தோப்பு இருத்தல். மணற் பாங்கான, வடிகால் வசதியில்லாத நிலத்தில் தென்னந்தோப்பு இருத்தல். காண்டாமிருக வண்டுகளின் தாக்குதல் இருத்தல்.

நோய் பரவும் விதம்: மண்ணில் நெடுநாட்கள் வாழும் இப்பூசணம், மண்ணிலுள்ள பேசிடிபோஸ்போர் என்னும் பூசண வித்துகள் மூலம் மண் மற்றும் பாசனநீர் மூலம், நோய் தாக்கிய மரத்திலிருந்து நோய் தாக்காத மரத்துக்குப் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: உழவியல் முறைகள்: நோய் தாக்கி இறந்த மரங்கள் மற்றும் நோய் முற்றிய நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். மரங்களைச் சுற்றி வட்டப் பாத்திகளை அமைத்து, தனித்தனியே பாசனம் செய்ய வேண்டும். கோடையில் பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். வாழையை ஊடுபயிராக இட்டு, நோயின் தீவிரத்தைக் குறைக்க வேண்டும். மரத்துக்கு 5 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும்.

உயிரியல் முறை: 50 கிலோ மட்கிய தொழுவுரத்தில் 100 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் கலந்து  மண்ணில் இட வேண்டும்.

இரசாயன முறைகள்: மரத்துக்கு 40 லிட்டர் வீதம் ஒரு சத போர்டோ கலவையை எடுத்து, 2 மீட்டர் வட்டப் பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும். நூறு மில்லி நீருக்கு 2 மில்லி ஹெக்சகோனசோல் வீதம் கலந்து, மூன்று மாதத்துக்கு ஒருமுறை வேர் வழியாக மூன்று  முறை செலுத்த வேண்டும்.

வேர்வாடல் நோய்

தென்னையைத் தாக்கும் நோய்களில் வேர்வாடல் நோயும் முக்கியமான ஒன்றாகும். இந்நோய் 1882 இல் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களைத் தாக்கியிருப்பது முதன் முதலில் தெரிந்தது. இந்நோயால் மரங்கள் சாகா விட்டாலும், மெதுவாகச் சோர்வடைவதால், காய்களின் எண்ணிக்கை மற்றும் தரம் படிப்படியாகக் குறையும்.

இந்நோய், அனைத்து வயது மரங்கள் மற்றும் இரகங்களிலும் மண்ணிலும் காணப்படும். இந்நோய், இளம் மரங்களைத் தாக்கினால் பூக்கும் காலம் தள்ளிப் போகும்; இலையழுகல் ஏற்பட்டுக் காய்களின் எண்ணிக்கை குறைந்து விடும். தொடக்க நிலையில் 35%, முற்றிய நிலையில் 85% மகசூல் இழப்பு உண்டாகும்.

நோய் அறிகுறிகள்: ஓலைகள் முதலில் கீழ்நோக்கி வளைந்து மனிதனின் விலா எலும்பைப் போல இருக்கும். நடுவிலுள்ள ஓலைகள் மஞ்சளாக இருக்கும். ஓலையின் ஓரங்கள் கருகியிருக்கும். இதனால், பலமான காற்று அல்லது மழையின் போது கருகிய பகுதிகள் மரத்திலிருந்து உதிர்ந்து, குச்சிகள் மட்டுமே நீட்டிக் கொண்டிருக்கும். இந்த இரு அறிகுறிகளும் நோய் முற்றிய மரங்களில் காணப்படும்.

மேலும், குருத்துக் கருகல், பூங்கொத்துக் கருகல், மொட்டு உதிர்தல், வேரழுகல், குரும்பை கொட்டுதல், மட்டை மற்றும் தேங்காய்ப் பருப்பின் கனம் குறைதல், எண்ணெய்ச் சத்துக் குறைதல், நீர் மற்றும் தாதுப்புகளை உறிஞ்சும் திறன் பாதித்தல், ஓலைத் திசுக்கள் சுருங்கி இருத்தல் ஆகியனவும் இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

நோய்க்காரணி: இந்நோய் பைட்டோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படும். பைட்டோபிளாஸ்மா உருண்டை, செங்கோல், உருளை, சுருள் போன்ற பல வடிவங்களில் இருக்கும். இந்நோய், ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்துக்கு, தத்துப்பூச்சி, கண்ணாடி இறக்கைப் பூச்சிகள் மூலம் பரவும். இந்தப் பூச்சிகளின் உமிழ்நீர்ச் சுரப்பிகளில், வேர்வாடல் நோய்க்காரணி இருப்பதால், இவற்றின் மூலம் பரவுகிறது.

இந்நோயால் பாதிக்கப்பட்ட மரங்களிலிருந்து பைட்டோபிளாஸ்மா கிருமியைக் கண்ணாடி இறக்கைப் பூச்சிகள் 20 நாட்களிலும், தத்துப்பூச்சிகள் 30 நாட்களிலும் எடுத்துக் கொள்ளும். இந்நோய் மூன்று ஆண்டுகளில் 1-4 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: இந்நோயால் ஓராண்டில் பத்துக் காய்களுக்கும் குறைவாகக் காய்க்கும் மரங்களை வெட்டி அகற்றி, மற்ற மரங்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும். கல்பரக்‌ஷா என்னும் குட்டை, கல்பஸ்ரீ என்னும் மலேயன் பச்சைக் குட்டை, சௌகாட் பச்சைக் குட்டைxமேற்குக் கடற்கரை நெட்டையில் இருந்து கிடைக்கும் வீரிய ஒட்டு இரகத்தையும் நடலாம்.

மரத்துக்கு 50 கிலோ தொழுவுரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 200 கிராம் சூடோமோனாஸ், 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாஷ், ஒரு கிலோ மெக்னீசியம் சல்பேட் வீதம் இட வேண்டும்.

நுண்ணுயிர்க் கலவை 200 கிராம், டிரைக்டோடெர்மா மற்றும் பேசில்லஸ் சப்டிலிஸ் 100 கிராம், தொழுவுரம் 5 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று மாத இடைவெளியில் இட்டு வந்தால், இந்நோயின் தீவிரம் வெகுவாகக் குறையும். இக்கலவையை இட்டு ஒரு மாதம் கழித்து, மரத்துக்கு 75 கிராம் காப்பர் சல்பேட் வீதம் இட வேண்டும்.

கோடையில் வாரம் ஒருமுறை மரத்துக்கு 250 லிட்டர் வீதம் நீரைப் பாய்ச்ச வேண்டும். வடிகால் வசதி இருக்க வேண்டும். வட்டப் பாத்திகளில் தட்டைப்பயறு, சணப்பை, கலப்பக் கோணியம், பியூரேரியா, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை, ஏப்ரல், மே-யில் பயிரிட்டு, பூப்பதற்கு முன் உழுது மண்ணுக்குள் அமுக்கி விட வேண்டும்.

தென்னையின் வயதுக்கேற்ப, வாழை, மிளகு, கோகோ, மஞ்சள், இஞ்சி, கிழங்கு வகைகள், அன்னாசி, காபி, ஜாதிக்காய், மரவள்ளி போன்றவற்றை ஊடுபயிராக இட்டு வருமானத்தைப் பெருக்கலாம்.

நோய்க் காரணியைப் பரப்பும் தத்துப்பூச்சி, கண்ணாடி இறக்கைப் பூச்சியைக் கட்டுப்படுத்த, 20 கிராம் போரேட் குருணை மருந்தை 200 கிராம் மணலுடன் கலந்து அல்லது 250 கிராம் வேப்பம் புண்ணாக்குப் பொடியுடன், அதேயளவு மணலைக் கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இட வேண்டும். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மில்லி டைமெத்தயேட் வீதம் கலந்து ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

வேர் வாடல் நோயுடன் இணைந்து தென்னையைத் தாக்கும் இலையழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி ஹெக்ஸகோனசோல் அல்லது 3 கிராம் மேன்கோசெப் வீதம் கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும்.


வேர்வாடல் E.RAJESWARI

முனைவர் .இராஜேஸ்வரி,

முனைவர் வெ.சிவக்குமார், முனைவர் இரா. ராம்ஜெகதீஷ், முனைவர் சு.பிரணீதா,

தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர், கோவை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading