My page - topic 1, topic 2, topic 3

பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் சாகுபடி!

Cucumber

கட்டுரை வெளியான இதழ்: மே 2020

சுமைக் குடிலில் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்களில் வெள்ளரியும் ஒன்று. நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரியில், புரதம், கார்ஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்றவையும் அடங்கியுள்ளன. அடர் பச்சை நிறத்தில் ஒரே அளவிலான வெள்ளரிக் காய்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மிக வேகமாக வளரும் வெள்ளரிக்காய், பச்சையாக உண்ணவும், தயிர்த் துவையல் மற்றும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது.

கொடி வகையான வெள்ளரி, சீரான வடிகால் மற்றும் 6.5 அளவில் கார அமிலத் தன்மையுள்ள மணல் கலந்த களிமண்ணில் நன்கு வளரும். 20-25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வெள்ளரியின் முளைப்புத்திறன் அதிகமாகும். பகலில் 21-27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால், வெள்ளரியின் வளர்ச்சியும் மகசூலும் சிறப்பாக இருக்கும். பசுமைக் குடிலில் வெளிப்புற வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருப்பதால் தர்மபுரியும் வெள்ளரி சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது.

பசுமைக் குடிலில் வீரிய ஒட்டு இரகமான மல்டிஸ்டார் வெள்ளரியை சாகுபடி செய்யலாம். இது பெண் பூக்களை மட்டும் உற்பத்தி செய்து விதையில்லாக் கனிகளைத் தருகிறது. சராசரி எடை, அடர் பச்சை நிறம், சீரான உருளை வடிவம் ஆகியன நுகர்வோரை ஈர்க்கின்றன. இந்த இரகத்தைத் தவிர ஸ்ட்லட் எய்ட், பாய்ன்ட்செட் ஆகியவற்றையும் சாகுபடி செய்யலாம்.

உளிக்கலப்பை, கொக்கிக் கலப்பையால் நிலத்தை நன்கு உழுத பிறகு, 4% பார்மால்டிஹைடால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, 50 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் 500 கிராம் சூடோமோனாஸ் புளூரோசன்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடியைச் சேர்த்து மண்ணில் இட வேண்டும். பின்பு வரிசைக்கு வரிசை ஒரு மீட்டர் இடைவெளியும் செடிக்குச் செடி 45 செ.மீ. இடைவெளியும் விட்டு, 12 நாள் நாற்றுகளை நட வேண்டும்.

நடவுக்கு முன்பு முறைப்படி சொட்டுநீர்ப் பாசன முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். நடவு செய்ததும் உயிர்நீர் விட வேண்டும். இதற்கு, 150:18.75:75 கிலோ, தழை, மணி, சாம்பல் சத்து அடங்கிய நீர்வழி உரம் தேவை. இதை நான்கு வளர்ச்சிப் பருவங்களில் பிரித்து இட வேண்டும்.

வெள்ளரிக்கொடி வளர்ந்து கொண்டே இருக்கும். நான்கு மீட்டர் நீளம் வரை வளரும். எனவே, நடவு செய்த ஏழாம் நாளில் இருந்து, செங்குத்தாகத் தொங்க விடப்பட்டுள்ள அகலமான துளைகளைக் கொண்ட வலைகளில் கொடிகளை இழுத்துக் கட்ட வேண்டும். நட்டு 25 நாளில் காய்க்கத் தொடங்கும். முதல் அறுவடை முடிந்ததும் பக்கக் கொடிகள் மற்றும் இலைகளை நீக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.

150 கிராம் எடையுள்ள காய் முழுதாக வளர்ந்த காயாகும். மேலும், இதுதான் முதல் தரமான காயுமாகும். இதை ஒரு செ.மீ. காம்புடனும், அடிப்பகுதியில் இருக்கும் மஞ்சள் பூவுடனும் அறுவடை செய்ய வேண்டும். பிறகு இவற்றை, நிறம் மற்றும் அளவு அடிப்படையில் தரம் பிரித்து, நெகிழி அட்டைப் பெட்டகத்தில் இரு வரிசையாக அடுக்கிச் சந்தைக்கு அனுப்பலாம். ஒரு ஏக்கர் பசுமைக் குடிலில் 60-65 டன் காய்கள் கிடைக்கும்.


முனைவர் செ.ஸ்ரீதரன்,

முனைவர் பா.ச.சண்முகம், முனைவர் ம.சங்கீதா,

வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி-636809.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks