கட்டுரை வெளியான இதழ்: மே 2021
உயர் விளைச்சலைத் தரும் இன்றைய நெல் இரகங்கள், பெருகியுள்ள மக்களுக்கு உணவளிப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டாலும், அன்றைய பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நம் பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றிய பொய்யான கருத்துகளை உடைத்தால் தான், அவற்றின் அரிய பயன்களை இன்றைய சூழலிலும் பயன்படுத்தலாம் என்பதை நாம் உணர முடியும். ஆகவே, நம் பாரம்பரிய நெல் இரகங்களின் மீதுள்ள உண்மைக்கு மாறான தகவல்களை முதலில் பார்ப்போம்.
உயர் விளைச்சலைத் தராது
இது ஓரளவுக்கு உண்மையைப் போலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் சத்துகள் இல்லாத சக்கையாய் உயர் விளைச்சல் நெல் இரகங்களை அதிகளவில் உற்பத்தி செய்வதைவிட, குறைவாக எடுத்துக் கொண்டாலும், சத்தும் சக்தியும் மிகுந்த பாரம்பரிய நெல் இரகங்களைச் சற்றுக் குறைவான மகசூலுடன் உற்பத்தி செய்வது ஒன்றும் பாதகமான செயலல்ல.
இந்தப் பாரம்பரிய நெல் இரகங்களைக் கொண்டு தான் தஞ்சைத் தரணியை நெற்களஞ்சியமாக நம் முன்னோர்கள் வைத்திருந்தனர். தஞ்சையில் விளையும் அரிசியை வைத்துத் தமிழகத்துக்கே சோறு போடலாம் என்றும், தமிழகத்தில் விளையும் அரிசியை வைத்து இந்தியாவுக்கே சோறு போடலாம் என்றும் கூறக் கேட்டுள்ளோம். மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, நம் முன்னோர்கள் யானை கட்டிப் போரடித்தார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.
நீர்ப் பற்றாக்குறை இருந்தால் முடியாது
உண்மையில் இன்றைய உயர் விளைச்சல் நெல் இரகங்கள் தான் குறைந்த நீரில் வளர முடியாமல் சுணங்கி விடுகின்றன. நிலத்தில் நீரை அதிகளவில் நிறுத்தி, செல்லப் பிள்ளைகளாக வளர்க்கும் உயர் விளைச்சல் இரகங்கள் நீர்ப் பற்றாக்குறையால் வாடி வெதும்பி விடுகின்றன. ஆனால், நம் பாரம்பரிய நெல் இரகங்கள் அப்படியில்லை.
பாரம்பரிய நெல் இரகங்களான மட்டக்கார், கட்டச்சம்பா, புழுதிக்கார், சொர்ணவாரி, வாடன் சம்பா, பிசினிக்களர் பாளை ஆகியன, நீர் கிடைக்கும் போது நன்கு செழித்து வளரும். நீர் குறையும் போது தளர்ந்து போகாமல் தாங்கியும், மீண்டும் நீர் கிடைத்ததும் சிறப்பான மகசூலைத் தரும். ஆக, பாரம்பரிய நெல் இரகங்கள் வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புள்ளவை.
எளிதில் நிலத்தில் சாய்ந்து சேதமாகும்
பாரம்பரிய நெல் இரகங்கள் இன்றைய உயர் விளைச்சல் இரகங்களை விட அதிக உயரமுள்ளவை தான். ஆனால், அவை அதிகக் காற்றாலும் மழையாலும் எளிதில் சாய்ந்து விடும் என்று கூறிவிட முடியாது. அவற்றின் தண்டு வலிமை, கடும் புயலிலும் நின்று பேசும் விதமாகவே இருக்கும். எ.கா: கம்பச்சம்பா இரகம், புயல் மற்றும் சுறாவளியைத் தாங்கி நிமிர்ந்து நிற்கும். மடு முழுங்கி இரகம் அதிக நீரைத் தாங்கி வளரும். சம்பா மாசணம் இரகம் ஏரிப் பகுதியில் நன்கு வளரும்.
இயற்கை வேளாண்மை முறையையே சார்ந்திருக்கும்
இன்றைய உயர் விளைச்சல் இரகங்கள் கூட இயற்கை முறையில் நன்கு வளர்ந்து அதிக விளைச்சலைத் தரவல்லவை தான். ஆகவே, செயற்கை இடுபொருள்களை அள்ளிக்கொட்டி, செலவைப் பெருக்கி, இலாபத்தைக் குறைக்கும் நவீன வேளாண்மையை விட, குறைந்த செலவில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் இரகங்களைச் சிறப்பாக வளர்த்து, அதிக இலாபத்தைப் பெறலாம்.
அதைப் போல, இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப விரும்பாதவர்கள், பாரம்பரிய நெல் இரகங்களை நவீன முறையில் வளர்த்து அதிக மகசூலை எடுக்கலாம். ஆக, நவீன வேளாண்மைக்கும் இயற்கை வேளாண்மைக்கும் ஏற்றவை நம் பாரம்பரிய நெல் இரகங்கள்.
வயது அதிகம்
அதிக வாழ்நாட்களைக் கொண்ட பாரம்பரிய நெல் இரகங்கள் இருப்பதைப் போல, குறைந்த நாட்களில் விளையும் இரகங்களும் உண்டு. எ.கா: அறுபதே நாட்களில் அறுவடைக்கு வருவது அறுபதாம் குறுவை. நவீன உயர் விளைச்சல் நெல் இரகங்களில் அறுபது நாட்களில் அறுவடைக்கு வரும் இரகமே கிடையாது. காட்டுக் குத்தாலம், கொன்னக் குறுவை, குள்ளக்கார், அறுபதாம் கொடை ஆகியனவும் குறுகிய காலத்தில் விளையக் கூடியவை தான். இவற்றை ஆண்டுக்கு ஐந்து முறை பயிரிடலாம்.
நவீன பாசுமதி இரகத்தைப் போன்றவை இல்லை
உண்மையில், நம் பாரம்பரிய நெல் இரகங்களில் மிக இலேசான வாசம் இருக்கும். அவற்றைச் சமைத்து உண்ணும் போது அதிகச் சுவையாக இருக்கும். பாரம்பரிய நெல் இரகங்களில் வாசமிக்க இரகங்களும் உண்டு. எ.கா: மாம்பூ வாசகன், இலுப்பைப்பூ வாசகன், வாழைப்பூ வாசகன், மகிழம்பூ வாசகன், சீரகச் சம்பா, மல்லிகைச் சம்பா, மைசூர் சம்பா, கற்பூர வாசகன் ஆகிய இரகங்கள் தனித்தனி வாசத்துடன் இருக்கும்.
களர் உவர் நிலங்களில் விளையாது
இதுவும் ஆதாரமற்ற கூற்று தான். உண்மையில் இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளால் நம் நிலமும் நீர் வளமும் களர் உவர் நிலையை அடைந்துள்ளன. இந்தச் சூழலில் இரசாயன உரங்களை இடாமல் இயற்கை முறையில், களர் உவர் நிலம், களர் உவர் நீரில் விளையும் பாரம்பரிய இரகங்கள் உள்ளன. அவை: களர் சம்பா, உவர் சம்பா, கல்லுருண்டை, குழியடிச்சான்.
மக்கள் விரும்புவதில்லை
மக்கள், எந்த ஒரு மாற்றத்தையும் உடனே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், போதிய விழிப்புணர்வைக் கொடுத்து விட்டால் அதற்கு மாறி விடுவார்கள். இன்றைய இரசாயன வேளாண்மைச் சூழலில், நீரிழிவுக்கும், புற்று நோய்க்கும் ஆட்பட்டுள்ள பெரும்பாலான மக்கள் அவற்றிலிருந்து மீள, அதிகளவில் இராசயன மருந்துகளை விருப்பமே இல்லாமல் தான் எடுத்து வருகிறார்கள். சத்தும் சக்தியும் மிக்க நமது காட்டுயானம் போன்ற நெல் இரகங்கள் இவர்களின் நோய்களைக் குணப்படுத்த உதவும் என்று எடுத்துச் சொன்னால் உடனே ஏற்றுக் கொள்வார்கள்.
இத்தகைய விழிப்புணர்வை தமிழகத்தில் உள்ள பல்வேறு இயற்கை மருத்துவ அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய நெல் இரகங்கள் அதிகளவில் தேவை. ஆகவே, இயற்கை விவசாயிகள் இந்த அமைப்புகளுக்குத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொடுத்தால் அவை மக்களைச் சென்றடையும்.
ஆகவே, பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றிய தவறான கருத்துகளை மாற்றிக் கொள்வோம். இனி, நம் பாரம்பரிய நெல் இரகங்களை ஏன் பயிரிட வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கவை
இன்றைய உயர் விளைச்சல் இரகங்களில் அதிக மகசூலை எடுப்பதற்காக, பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நிலம் மலடாகிறது; நீர் விஷமாகிறது; மனித இனம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறது. ஆனால், பாரம்பரிய நெல் இரகங்கள் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாவதில்லை. குறிப்பாக, செம்பாளை, குருவிக்கார், குதிரைவால் சம்பா, கம்பச்சம்பா போன்றவை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களைத் தாங்கும் சக்தி மிக்கவை.
புறச்சூழல்களைத் தாங்கி வளரும்
உயர் விளைச்சல் இரகங்கள் அதிக மகசூலைத் தந்தாலும், புறச்சூழல்கள் மாறும் போது விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால், பாரம்பரிய நெல் இரகங்கள் பலதரப்பட்ட சூழல்களையும் தாங்கி வளரும். குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்ற நெல் இரகங்களும் நம்மிடம் உண்டு.
எ.கா: களர் நிலத்துக்குக் களர் சம்பா, உவர் நிலத்துக்கு உவர் சம்பா, அதிக நீரில் விளைய மடு முழுங்கி மற்றும் தலைஞாயிறு. ஏரிப் பகுதிக்குச் சம்பா மசாணம், புயல் மற்றும் சூறாவளியைத் தாங்கி விளைய, கம்பச்சம்பா, மிகக் குறுகிய காலத்தில் விளைய, காட்டுக் குத்தாலம், கொன்னக் குறுவை, குள்ளக்கார், அறுபதாம் குறுவை, அறுபதாம் கார்.
பல்வேறு பருவங்களுக்குப் பல்வேறு வயதுள்ள இரகங்கள்
பாரம்பரிய நெல் இரகங்களில், குறுவைக்கு ஏற்ற குறுகிய கால இரகங்கள் ஒட்டுக் கிச்சலி, வெள்ளைக் குருவிக்கார். சம்பாவுக்கு ஏற்ற மத்திய கால இரகங்கள் வெள்ளைப் பொன்னி, சேலம் சம்பா, கண்டகச் சம்பா, சீரகச் சம்பா, கிச்சடிச் சம்பா, கருத்தக்கார். நீண்ட கால இரகங்கள் மாப்பிள்ளைச் சம்பா, வாடன் சம்பா, கவுனி. மிக நீண்ட கால இரகம் நீலச்சம்பா.
காட்டுயானத்தைப் பயிரிட்டால், அடுத்த போகத்தில் மண்ணில் விழுந்து கிடைக்கும் நெல் மணிகளே விளைந்து விடும். இதனால், முன்பட்டம் காட்டுயானமாக இருந்தால், பின்பட்டத்தில் உழவு போன்ற வேலையைச் செய்யாமல், குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற முடியும்.
ருசியும் தரமும் அதிகமாக இருக்கும்
பாரம்பரிய நெல் இரகங்கள் சத்தும் சுவையும் மிக்கவை. வடித்த கஞ்சியும் ருசியாக இருக்கும். பழைய சாதமும் ருசியாக இருக்கும். இட்லி, தோசை, இடியாப்பம் என எல்லாப் பலகாரங்கள் செய்யலாம். சோறு மிகச் சுவையாக இருக்கும். நான்கு நாட்களுக்குக் கூடக் கெடாது.
அரிசியின் சேமிப்புத் தன்மையும் அதிகமாக இருக்கும். உயர் விளைச்சல் அரிசியைப் பழைய சாதமாகச் சாப்பிட்டால் சுவையே இருக்காது. ஆனால், பாரம்பரிய அரிசிச் சோற்றை, அதன் ருசிக்காகவே பழைய சோறாக வைத்திருந்து சாப்பிடலாம்.
சத்துகள் அதிகமாக இருத்தல்
பாரம்பரிய நெல் வகைகளில், புரதம், இரும்பு, கால்சியம், நார்ச்சத்து ஆகியன நிறைந்துள்ளன. நோயின்றி வாழ உயிர் மற்றும் தாதுச் சத்துகள் மிகுந்த உணவை எடுக்க வேண்டும். இயற்கை முறையில் விளையும் பாரம்பரிய நெல்லில் இந்த உயிர் மற்றும் தாதுச் சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றின் விதைத்தோலை நீக்காமல் கைக்குத்தல் முறையில் அரிசியை எடுப்பதால், முழு மாவுச்சத்துள்ள நல்ல உணவு முறைக்கு மாறுகிறோம்.
நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. இதுதான் ஆதி நோய் என்பதும் மற்றதெல்லாம் அதிலிருந்து வரும் மீதி நோய்கள் என்பதும் நம் முன்னோர் கூற்று. அதைப் போலவே, நீரிழிவு உள்ளவர்கள் நார்ச்சத்துள்ள அரிசியைச் சாப்பிட்டால், அது சீராக, மெதுவாகச் செரித்து, சர்க்கரையை இரத்தத்தில் மெதுவாகச் சேர்க்கும். இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் அதிகப் பசியுணர்வும், படபடப்பும் குறையும்.
மருத்துவக் குணங்கள் அதிகம்
பாரம்பரிய நெல் இரகங்கள் பலவற்றில் மருத்துவக் குணங்கள் மிகுதியாக உள்ளன. எ.கா: சர்க்கரை நோய்க்குக் காட்டுயானம், சிவப்புக் குடவாழை. கர்ப்பிணிகளுக்கு ஊட்டம் தருவதற்குப் பூங்கார். வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆற மாப்பிள்ளைச் சம்பா.
சுகப்பிரசவம் நிகழக் கவுனி. நாய்க்கடி விஷம் இறங்க கறுப்புக்கவுனி. பித்த வெப்பம் அகல அன்னமகிழம் மற்றும் இலுப்பைப்பூ சம்பா. தொழுநோய், யானைக்கால் நோய்க்குக் கருங்குறுவை. சளி, இருமல், காய்ச்சல் நீங்க நவரை அரிசிக்கஞ்சி.
தோள்பலம் பெறக் கல்லுருண்டை. தாது விருத்தியும் பலமும் பெறக் காடைச்சம்பா, குறுஞ்சம்பா. பாலுணர்வுப் பெருகச் சண்டிக்கார். மூலநோய், மஞ்சள் காமாலை குணமாகக் கருத்தக்கார். தேகச் செழிக்கக் கிச்சிலிச் சம்பா. மூன்றுவித தோஷம் நீங்கக் கோடைச்சம்பா. குழந்தை பெற்ற தாய்க்குக் பத்திய கஞ்சி வைக்கச் சூரக்குறுவை.
ஒற்றை நாற்று நடவுக்கு ஏற்றவை
ஒற்றை நாற்று முறையில் நட்டு நன்கு தூர் கட்ட வைத்து அதிக மகசூலைப் பெற முடியும். பாரம்பரிய நெல் இரக நாற்றுகள் அனைத்தும் அழுத்தமாக இருப்பதால், அவற்றை இலகுவாகப் பரித்து ஒவ்வொரு நாற்றாக நட முடியும். மேலும், இந்த நாற்றுகள் அதிகச் சேதமின்றி விரைந்து வேரூன்றி வளரும். நடவுக்குக் குறைவான ஆட்களே போதும். ஆகவே, குறைந்த விதை மற்றும் ஆட்கூலிச் செலவில் அதிக மகசூலைப் பெற முடியும்.
வைக்கோல் புரட்சியை அளிக்கும்
பாரம்பரிய நெல் இரகங்கள் அதிக உயரமாக வளர்ந்தாலும் எளிதில் சாய்வதில்லை. எனவே, இந்த இரகங்கள் தானியத்தை மட்டுமின்றி, பெருமளவில் வைக்கோலையும் தரும். இதனால், கால்நடை வளர்ப்பிலும் சிறக்க முடியும்.
எலி வெட்டு அதிகம் இருக்காது
பாரம்பரிய நெல் இரகங்களின் அடித்தண்டு கெட்டியாக இருப்பதால், இதை எலிகளால் எளிதில் வெட்டி எடுத்துச் செல்ல முடியாது. இதனால், எலிப் பெருக்கம் கட்டுப்படும். மகசூல் இழப்பையும் பெருமளவில் தவிர்க்கலாம்.
மாற்று ஏற்பாடாக விளங்கும்
எதிர்பாராத சூழலில் காணாமல் போகும் உயர் விளைச்சல் இரகங்களுக்கு மாற்றாகப் பாரம்பரிய நெல் இரகங்கள் விளங்கும். ஒரே விதமான மரபணுத் தொகையைக் கொண்ட உயர் விளைச்சல் நெல் இரகங்கள், எதிர்பாராத புறச்சூழல் வளர்ப்பில் முற்றிலுமாக அழிந்து போக வாய்ப்புள்ளது.
அப்போது, பாரம்பரிய நெல் இரகங்கள் நல்ல மாற்றாக விளங்கும். பூச்சி மற்றும் நோய்களை எதிர்க்கும் சக்தியுள்ள பாரம்பரிய நெல் இரகங்கள் மூலாதாரமாக விளங்கும். களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற புதிய நெல் இரகங்களை உருவாக்கவும் உதவும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும், கால மாற்றத்தின் கட்டாயமாகும். மாற்றத்துக்கு ஏற்ப மாறுவதே நிலைப்பதற்கு உரிய குணம். ஆகவே, வேண்டாத பழையன கழித்து, வேண்டிய பழையன பாதுகாத்தல் நமது கடமை. அதைப் போலக் காலத்துக்கு ஏற்ப, புதியன ஏற்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
முனைவர் அ.அனுராதா,
உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம்.
முனைவர் வே.கிருஷ்ணன், பேராசிரியர், பண்டித ஜவகர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி, காரைக்கால்.
சந்தேகமா? கேளுங்கள்!