விவசாயிகள் பலவிதத் துணைத் தொழில்களை மேற்கொள்ளலாம். இதுவே, விலை வீழ்ச்சி, பருவநிலைப் பாதிப்பு, போதிய வரவு இல்லாமை போன்ற பல தொல்லைகளில் இருந்து நம்மைக் காக்கும் கவசமாகும்.
குறிப்பாக, சாகுபடிக்கு நேரடியாக, மறைமுகமாக, நன்மை தரும் கால்நடைகளை வளர்ப்பது சிறந்தது.
தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கன்று வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டும் தொழில்கள் பல உள்ளன.
கழிவுகள் கூட மண்வளம் காக்க உதவும். இயற்கை உரம் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபடலாம். மரக் கன்றுகளை வளர்க்கலாம். ஒட்டுண்ணிகள் தயாரிப்பில் ஈடுபடலாம்.
விளை பொருள்களில் இருந்து, ஜாம், ஜெல்லி, ஜூஸ், பொடிகள் தயாரிப்பு, மசாலா, பாதாம் பால், மரவள்ளி சிப்ஸ் தயாரிப்பு என, விதவிதமான தொழில்களைச் செய்யலாம்.
வேளாண்மையில் இலாபமில்லை என்னும் கருத்தைப் பொய்யாக்க, இத்தகைய உத்திகளை, அரசுத் துறைகள் பயிற்சிகள் மூலம் தருகின்றன.
மேலும், இயற்கை விவசாயம் மூலம் விளைந்த பொருள்களை விற்பதற்கு, அதற்கான சான்றைப் பெற்று ஏற்றுமதி செய்து இலாபம் பெறலாம்.
இருக்கும் இடத்தில் வளர்க்க உகந்த தாவரங்களை வளர்க்கலாம். மூலிகைப் பண்ணை அமைக்கலாம்.
சிறந்த மூலிகைகளை வற்றலாக அல்லது பொடியாக மாற்றி விற்கலாம். மாத்திரைக் குப்பிகளில் அடைத்தும் காசு பார்க்கலாம்.
இவ்வகையில், வெந்தயப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, நெல்லி வற்றல், பாகல் வற்றல் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
வல்லாரை, துளசி, முடக்கறுத்தான். ஆடாதோடை, கீழாநெல்லி முதலியவற்றை எப்போதும் விற்கலாம்.
ஒவ்வொரு விவசாயியும் அவரவர் நிலத்தில், ஒவ்வொரு சதுர மீட்டரையும் முறையாகத் திட்டமிட்டு மண் வளத்தைக் காக்க வேண்டும்.
அதன் மூலம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மீட்சி வேளாண்மையை மேற்கொண்டு பல தொழில்களைச் செய்து உயர் இலாபம் பெறலாம். இதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை வங்கிகள் மூலம் பெறலாம்.
தொழில் நுட்பங்களைத் தெளிவாக அறிந்தும், வல்லுநர்களிடம் ஆலோசித்தும் பயனடையலாம்.
சாகுபடியைச் சடங்காகச் செய்யாமல், தேசம் காக்க கிடைத்த நல்ல சேவைத் தொழில் வாய்ப்பாகச் செய்ய வேண்டும்.
முனைவர் பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம்.
சந்தேகமா? கேளுங்கள்!