My page - topic 1, topic 2, topic 3

கோடை நெல் சாகுபடி!

மிழகத்தில் பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கோடைக் காலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை நெல் சாகுபடி ஜனவரி மாத்தில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. இந்தப் பருவத்தில் மிகவும் குறுகிய கால நெல் இரகங்கள் மட்டும் சாகுபடி செய்யப்படும். சில பகுதிகளில் நடவு செய்யாமல் நேரடியாகவே விதைப்பு செய்யப்படுகிறது.  இதனால், சாகுபடிக் காலத்தை வெகுவாகக் குறைக்க முடியும். நடவுச் செலவையும் தவிர்க்கலாம். மேலும், நேரடி நெல் விதைப்பில் பல்வேறு தொழில் நுட்பங்களைக் கையாண்டு அதிக மகசூலைப் பெறலாம்.

நிலம் தயாரித்தல்

கோடை நெல் சாகுபடியில் அதிக மகசூலைப் பெறுவதற்கு உழவு மிகவும் முக்கியம். களைகளை அழிக்கவும், ஈரப்தத்தை நன்கு உறிஞ்சி வைக்கவும், கட்டிகள் இல்லாமல் நிலம் பொலபொலப்பாக இருந்து விதைகள் நன்கு முளைக்கவும், 4-5 முறை உழ வேண்டும். கடைசி உழவின் போது தொழுவுரம் அல்லது மட்கிய எருவை, எக்டருக்கு 12.5 டன் வீதம் இட வேண்டும். மேலும், 750 கிலோ தொழுவுரத்தில் 60 கிலோ சூப்பர் பாஸ்பேட்டைச் சேர்த்து அடியுரமாக இட வேண்டும். இதனால், பயிரின் முளைப்புத்திறன் அதிகமாகும். வேர் வளர்ச்சியும் சிறப்பாக அமைந்து பயிரைச் செழிப்பாக வளர்க்கும்.

இரகங்கள்

கோடை நெல் சாகுபடிக்கு குறுகிய கால நெல் இரகங்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய இரகங்கள்:  கோ.54. வயது 115 நாட்கள். எக்டருக்கு 6,350 கிலோ நெல் கிடைக்கும். இந்த இரகம் புகையான், குலைநோய், இலையுறைக் கருகல் நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும். அமைலோஸ் என்னும் மாவுப்பொருள் குறைவாக இருப்பதால் சமைப்பதற்கு ஏற்றது.

ஏடிடீ 55. இதன் வயது 115 நாட்கள். எக்டருக்கு 5,930 கிலோ நெல் கிடைக்கும். இந்த இரகம் குலைநோய், இலையுறை அழுகல் மற்றும் இலைச்சுருட்டுப் புழுக்களின் தாக்கத்தை மிதமாகத் தாங்கி வளரும்.

விதை நேர்த்தியும் விதைப்பும்

எக்டருக்கு 60 கிலோ விதைகள் தேவைப்படும். இவற்றை 10-12 மணி நேரம் நீரில் ஊற வைத்து எடுத்து, சாக்குப் பைகளில் வைத்துக் கட்டி, விதைகள் முளைக்கும் வரை இருட்டறையில் 24 மணி நேரம் வைக்க வேண்டும். அடுத்து இந்த விதைகளை விதைப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் கார்பென்டசிம்  வீதம் கலந்து விதைக்க வேண்டும். நேரடியாக விதைக்கும் போது, மெல்லிய கண்ணாடி அளவில் நிலத்தில் நீர் இருக்க வேண்டும். விதைத்த 14-21 நாட்களில் பயிர்களைக் களைதல் மற்றும் பாடு நிரப்புதல் செய்ய வேண்டும்.  சரியான இடைவெளியில் பயிர்களைப் பராமரித்தால் தான் அதிக உற்பத்தியைப் பெற முடியும்.

உர மேலாண்மை   

நடவு முறையில் இடுவதைப் போலவே நேரடி விதைப்பிலும் உரங்களை இட வேண்டும். எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 60 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து, விதைத்த 21 நாளில், தூர்ப் பிடிக்கும் பருவத்தில், பூங்கதிர் உருவாகும் பருவத்தில் மற்றும் கதிர் வெளிவரும் பருவத்தில் இட வேண்டும்.

மணிச்சத்து முழுவதையும் தொழுவுரத்தில் கலந்து அடியுரமாக இட வேண்டும். எக்டருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை 50 கிலோ மணலில் கலந்து அடியுரமாக இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டிஏபி வீதம் கலந்து, 65 மற்றும் 80 நாளில், கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் தெளிக்க வேண்டும். இதனால், நெல்மணிகள் திரட்சியாக உருவாகி அதிக எடையைத் தரும்.

களை மேலாண்மை

நேரடி நெல் விதைப்பில் களை மேலாண்மை மிகவும் முக்கியமாகும். களை முளைப்பதற்கு முன், பிரிட்டிலாகுளோர் களைக்கொல்லியை எக்டருக்கு 750 கிராம் வீதம் எடுத்து, விதைத்த 8 ஆம் நாளில் தெளிக்க வேண்டும்.  அதன் பிறகு 40 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

நீர் மேலாண்மை

விதைத்த முதல் வாரத்தில் மண் நனைய நீர் பாய்ச்சினால் போதும். பயிர்கள் வளர வளர 5 செ.மீ. உயரம் வரை வயலில் நீரை நிறுத்தலாம்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

பயிர்ச் சுழற்சி முறையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதனால், பூச்சிகள் பெருகுவதைத் தடுக்கலாம். 4-5 முறை உழவு செய்ய வேண்டும். இதனால் கூண்டுப் புழுக்களை அழித்து அந்துப் பூச்சிகள் உருவாகாமல் தடுக்கலாம். வரப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதவும் பூச்சிகள் பெருகுவதைக் குறைக்க உதவும்.

நோய்கள் வராமலிருக்க, பூசணக் கொல்லியில் விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். பௌர்ணமி நாளில் விளக்குப் பொறியை வைத்து, பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைத்து, தண்டுத் துளைப்பான், இலைச்சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். தழைச்சத்தை ஒரே நேரத்தில் இடாமல் நான்கு பங்குகளாகப் பிரித்து இட வேண்டும்.

புகையான், இலைச்சுருட்டுப் புழுக்கள் போன்றவை வழக்கமாகத் தாக்கும் பகுதிகளில் நாற்றுகளை நெருக்க நடக்கூடாது. மேலும், எட்டு அடிக்கு ஒரு அடி வீதம் பட்டம் விட்டு நட வேண்டும். இதனால், பயிர்ப் பராமரிப்பு முறைகளை எளிதாகக் கையாள முடியும்.

அறுவடை

இலைகள், தண்டுகள் போன்றவை வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். 80 சத நெல் மணிகள் முற்றியிருக்கும். இந்தச் சூழலில், அறுவடை செய்வதற்குப் பத்து நாட்களுக்கு முன்பே பாசனத்தை நிறுத்தி விட வேண்டும. அறுவடை செய்த பிறகு, நெல் மணிகளின் ஈரப்பதம் பத்து சதம் வரும் வரை, வெய்யிலில் நன்கு காய வைக்க வேண்டும். பிறகு, சாக்குப் பைகளில் சேமித்து வைக்க வேண்டும்.


பொ.மகேஸ்வரன்,

எம்.அருண்ராஜ்,  சி.சபரிநாதன்,

சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையம், தேனி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks