இலை வாழை சாகுபடி!

வாழை unnamed file 2 09db8c9aa6f624bc466b3745f07d2303

ந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழை சாகுபடி உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 80 ஆயிரம் எக்டரில் வாழை பயிராகிறது. இதன் மூலம் இந்தியாவில் வாழை சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

உலகிலுள்ள முக்கிய வாழை இரகங்களைப் பயிரிடுவதற்கு ஏற்ற தட்ப வெப்பம் தமிழ்நாட்டில் நிலவுவதால், பல வாழை இரகங்கள் இங்கே பயிராகின்றன.

இலைவாழை

தமிழகத்தில் இலைக்காக மட்டுமே குறிப்பிட்ட சில இடங்களில் வாழை பயிரிடப் படுகிறது. மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் வாழையிலை அதிகளவில் பயனில் உள்ளது.

சுகாதார நோக்கிலும் வாழையிலையில் உணவைச் சாப்பிடுவது நல்லது. அதன் மூலம் பீனால் என்னும் சத்து உடலில் சேர்கிறது.

எனவே, வாழையைப் பழத்துக்காக மட்டுமின்றி, இலைக்காகவும் சாகுபடி செய்தால் அதிக இலாபம் பெறலாம்.

திருச்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களில், முதல் பயிர் பழத்துக்காகவும், மறுதாம்புப் பயிர் இலைக்காகவும் பயிரிடப் படுகின்றன.

கோவை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், பழத்துக்காக மட்டும் வாழை பயிரிடப்படுகிறது.

தலைவாழை அறுவடை முடியும் வரை, பக்கக் கன்றுகளின் இலைகளை விற்று வருவாயைப் பெருக்கலாம். வாழையைப் பழத்துக்காக சாகுபடி செய்வதை விட, இலைக்காகப் பயிரிட்டால் அதிக வருமானம் கிடைக்கும்.

இரகங்கள்

இலைக்காகப் பயிரிடப்படும் வாழை இரகங்களில் பூவன் (மஞ்சள் வாழை) வாழை தான் முதலிடம் பெறுகிறது. இலைக்காகப் பயிரிடப்படும் மொத்தப் பரப்பில் சுமார் 70 சதம் பூவன் வாழையாகும்.

இதன் இலைகள் மென்மையாக, எளிதில் கிழியாமல் இருக்கும். நெடுந் தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்றதாகவும் இருக்கும். இதற்கடுத்து, கற்பூரவல்லியும் மொந்தன் வாழையும் தலா 15 சதப் பரப்பில் பயிரிடப் படுகின்றன.

மண் வகை

நல்ல வடிகால் வசதியுள்ள நிலமே வாழைக்கு அடிப்படைத் தேவை. மணல், வண்டல், குறுமண் கலந்த நிலங்களும் வாழையைப் பயிரிட ஏற்றவை.

நீருள்ள இடங்களில் ஆண்டு முழுவதும் வாழையைப் பயிரிடலாம். இருப்பினும், தோட்டக்கால் நிலங்களில், டிசம்பர், ஜனவரியில் வரும், மார்கழி தைப் பட்டமும், ஜூலை ஆகஸ்ட்டில் வரும், ஆனி ஆடிப் பட்டமும் வாழை நடவுக்குச் சிறந்தவை.

இடைவெளி

பழத்துக்காக சாகுபடி செய்தால் 7×7 அடி இடைவெளி அவசியம். இவ்வகையில், ஏக்கருக்கு 888 கன்றுகள் தேவைப்படும். இலைக்காக என்றால், 4.5×4.5 அடி இடைவெளி தேவை. இவ்வகையில், 2,150 கன்றுகள் தேவைப்படும்.

அதிகக் கன்றுகளை நடுவதும், இலைவாழை சாகுபடியில் கூடுதல் வருவாய் கிடைக்கக் காரணமாகும்.

கன்றுத் தேர்வும் நேர்த்தியும்

மூன்று மாத வயதுள்ள ஈட்டியிலைக் கன்றுகளே நடவுக்குச் சிறந்தவை. நடும் போது வாழைக் கிழங்கின் எடை 1.5-2 கிலோ இருக்க வேண்டும். மூன்று கிலோவுக்குள் இருக்கலாம்.

கற்பூரவல்லி மற்றும் மொந்தன் வாழையை, பனாமா வாடல் நோய் தாக்கும். எனவே, முன்தேர்வு செய்வதும், இந்நோய் தாக்காத மரங்களில் இருந்து கன்றுகளைத் தேர்வு செய்வதும் அவசியம்.

கன்றுகளை நடுமுன், கிழங்கிலுள்ள வேர்கள், அழுகிய மற்றும் நூற்புழுக்கள் தாக்கிய பகுதிகளை நீக்கிவிட வேண்டும். நூற்புழுக்கள் தாக்கியிருந்தால் கருஞ்சிவப்பு நிறத்தில் அழுகிய பகுதிகள் தென்படும்.

நூற்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வாழைக் கிழங்குகளைக் களிமண் குழம்பில் நனைத்து எடுத்து, கன்று ஒன்றுக்கு 40 கிராம் கார்போபியூரான் குருணை மருந்து வீதம் இட்டு நட வேண்டும்.

இப்படி, கன்றுகளை நேர்த்தி செய்தால், நூற்புழுக்கள் தாக்காமல் இருப்பதுடன், கிழங்குக் கூன் வண்டுகள் மற்றும் முடிக்கொத்து நோயைப் பரப்பும் அசுவினி, வாழையின் மூன்று மாதங்கள் வரை தாக்காமல் இருக்கும்.

இயற்கை முறை வாழை சாகுபடியில், கன்றுக்கு 2-3 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இடலாம்.

நிலத் தயாரிப்பும் நடவும்

நிலத்தை நன்கு உழுத பின்பு ஒன்றரைக் கன அடியில், குழிகளை எடுக்க வேண்டும். பிறகு, குழிக்குப் பத்து கிலோ வீதம் நன்கு மட்கிய தொழுவுரத்தை, மேல் மண்ணோடு கலந்து இட வேண்டும்.

கன்றுகளை நட்ட பின்பு அவற்றைச் சுற்றி மேல் மண்ணைப் போட்டு அழுத்தி விட வேண்டும்.

தோப்பை அழிக்கும் போது, கன்றுகளைப் பிரிப்பவர்கள் மலிவாகத் தரும் எடை குறைந்த கன்றுகளை வாங்குவது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வது போலாகும்.

இலை வாழை என்றாலும் சத்துகள் தேவை. ஆனால், மிகக் குறைந்த அளவே உரம் தேவை.

உரமிடல்

முதலில், நடும் போது குழிக்கு 10 கிலோ தொழுவுரம் இட வேண்டும். நட்ட மூன்றாம் மாதம் 100 கிராம் யூரியா வீதம் இட வேண்டும்.

நட்ட ஒன்பதாம் மாதம் 10 கிலோ தொழுவுரம் மற்றும் 100 கிராம் யூரியா வீதம் இட வேண்டும்.

நட்ட 15 ஆம் மாதம் 10 கிலோ தொழுவுரம், 100 கிராம் யூரியா வீதம் இட வேண்டும். நிலத்தின் வளத்தைப் பொறுத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும்.

பாசனம்

கன்றுகளை நட்டதும் பாசனம் அவசியம். பிறகு, நட்ட நான்காம் நாள் பாசனம் வேண்டும். அடுத்து, வாரம் ஒருமுறை பாசனம் கொடுத்தால் போதும்.

இருப்பினும், நீர்ப் பற்றாக்குறை நேராமல் இருக்க, பாசன அறிக்கை தயாரிப்பது நல்லது

பின்செய் நேர்த்தி

களையெடுத்த பிறகு உரத்தை இட வேண்டும். பிறகு, மண்ணை அணைத்துப் பாசனம் தர வேண்டும். ஒவ்வொரு மரத்திலும் நான்கு பக்கக் கன்றுகள் வரை விடலாம்.

இலை அறுவடை

நடவு செய்த ஆறு மாதங்கள் வரை இலைகளை அறுக்கக் கூடாது. அதற்குப் பிறகு இலைகளை அறுக்கத் தொடங்கலாம். 18 மாதம் முதல் 24 மாதம் வரை, ஒருநாள் விட்டு ஒருநாள் இலைகளை அறுவடை செய்யலாம்.

குளிர் காலத்தில் இலை வளர்ச்சிச் சற்றுக் குறைவதால், 2-3 நாட்கள் இடைவெளி விட்டு அறுக்கலாம். முழுவதும் விரியாத, ஆனால் நன்கு வளர்ந்த இலைகள் விரிவதற்கு முதல் நாளே அறுவடை செய்யலாம்.

பருவக் காலத்தைப் பொறுத்து, ஒரு இலை உற்பத்தியாக, 7-15 நாட்கள் தேவைப்படும்.

பூவன் இரகத்தில் 8-9 மாதங்களில், மரத்துக்கு 32-36 இலைகள் உற்பத்தி ஆகும். ஒரு இலை 4-5.5 அடி நீளம் இருக்கும். இலைவாழை சாகுபடியில் ஒரு ரூபாய் செலவு செய்தால், 3-3.5 ரூபாய் வருமானம் பெறலாம் என்பது நம்ப முடியாத உண்மை.

பயிர்ப் பாதுகாப்பு

இலையைத் தாக்கும் இலைப்புள்ளி நோயை, பூசணக்கொல்லி மருந்தைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

அதிகம் தாக்குண்ட இலைகளை அகற்றிய பின், ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மான்கோசெப் அல்லது ஒரு கிராம் கார்பென்டசிம் வீதம் கலந்து, இலைகள் நனையும்படி, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

மருந்துக் கரைசலுடன் ஒட்டும் திரவத்தைச் சேர்த்துத் தெளித்தால், முழுப்பலன் கிடைக்கும்.

இலைவாழை சாகுபடியில் இடைவெளியைக் குறைத்து அதிகக் கன்றுகளை நடலாம். இதில், திருட்டு, காற்று, மழை, புயல் போன்ற ஆபத்துகள் இல்லை.

உரச்செலவு குறையும். நட்டு ஏழாம் மாதம் முதல் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.

மேலும் விவரம் பெற, 98420 07125 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


வாழை JD Dr.Elangovan

முனைவர் பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading