துவரை, தென்னிந்தியாவில் பயிரிடப்படும் முக்கியப் பயறு வகையாகும். தானிய வகைகளில் இருப்பதை விட, பயறு வகைகளில் மூன்று மடங்கு புரதம் கூடுதலாக உள்ளது.
பயறு வகைகளில் ஒன்றான துவரை, தமிழ்நாட்டில் 42 ஆயிரம் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 44 ஆயிரம் டன் துவரை கிடைக்கிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் பயறுவகைத் துறை மூலம், அதிக மகசூல், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் கோ.8 என்னும் உயர் விளைச்சல் துவரை இரகம் 2017 ஆண்டில் வெளியிடப்பட்டது. இதைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம்.
இந்தத் துவரை இரகம் ஏ.பி.கே.1 மற்றும் எல்.ஆர்.ஜி. 41 இரகத்தை ஒட்டுச் சேர்த்து உருவாக்கப் பட்டது. இது, 170-180 நாட்களில் விளையக் கூடியது.
ஆடிப் பட்டத்தில் விதைக்க ஏற்றது. மானாவாரியில் எக்டருக்கு 1,600 கிலோ மகசூலையும், இறவையில் 1,800 கிலோ மகசூலையும் தரவல்லது.
சிறப்புகள்
விதைகள் திரட்சியாக இருக்கும். நூறு விதைகளின் எடை 10.2 முதல் 11.4 கிராம் வரை இருக்கும். புரதம் 23 சதம் இருக்கும்.
மலட்டுத் தேமல் நோய் மற்றும் வேரழுகல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி மிக்கது. பச்சைக் காய்ப்புழு மற்றும் புள்ளிக்காய்ப் புழுக்களை மிதமாகத் தாங்கி வளரக் கூடியது.
உழவியல் நுட்ங்கள்
நிலத் தயாரிப்பு: நிலத்தை நன்கு ஆழமாக உழுது, எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் வீதம் இட வேண்டும். அல்லது கடைசி உழவுக்குப் பிறகு, மட்கிய தேங்காய் நார்க்கழிவை இட்டு பாத்திகளை அமைக்க வேண்டும்.
மண்வளம் குறைவாக உள்ள நிலத்தில் 90×30 செ.மீ. இடைவெளி, மண்வளம் நிறைந்த நிலத்தில் 120-150×30 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம். எக்டருக்கு 15 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதை நேர்த்தி: விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
அல்லது 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் வீதம் கலந்து நேர்த்தி செய்யலாம். முதலில், ரைசோபியத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
உயிர் உர விதை நேர்த்தி: பூச்சிக் கொல்லியில் நேர்த்தி செய்த விதைகளை, ரைசோபியம் பாக்டீரியா சி.ஆர்.ஆர். 6 உடன் நேர்த்தி செய்ய வேண்டும்.
இந்த இரண்டு நேர்த்திக்கான இடைவெளி 24 மணி நேரம் இருக்க வேண்டும். செம்மண் நிலத்தில் விதைத்தால், வி.ப.ஆர்.1 ரைசோபியத்தில் நேர்த்தி செய்ய வேண்டும்.
அதாவது, எக்டருக்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத் தயாரிப்பான சி.ஆர்.ஆர்.6 ரைசோபியம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் வீதம் எடுத்து, ஆறிய கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
அல்லது எக்டருக்கு 25 கிராம் தூள் ரைசோபியம் மற்றும் பூசணத்தை, பாலிமர் கொண்டு கலந்து நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.
விதை நேர்த்தி செய்ய இயலாத நிலையில், விதைப்பதற்கு முன்பு, 2 கிலோ விதைக்கு 2 கிராம் ரைசோபியம், 2 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 2 கிராம் சூடோமோனாஸ் வீதம் எடுத்து, 25 கிலோ தொழுவுரம், 25 கிலோ மணலில் கலந்து விதைக்கலாம்.
உர நிர்வாகம்
மண் பரிசோதனை செய்யாத மானாவாரி நிலத்தில் விதைப்பதற்கு முன், எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச் சத்தை அடியுரமாக இட வேண்டும்.
இறவை நிலத்தில் 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 40 கிலோ கந்தகச் சத்தை அடியுரமாக இட வேண்டும்.
மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட்டாக இடவில்லை எனில், ஜிப்சம் மூலம் கந்தகச் சத்தை இட வேண்டும். இறவையில், எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் (ZnSO4) வீதம் இட வேண்டும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நுண்ணுரக் கலவையை, எக்டருக்கு 5 கிலோ வீதம் எடுத்து, ஊட்டமேற்றிய தொழுவுரமாக இட வேண்டும்.
ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க, நுண்ணுரக் கலவை மற்றும் தொழுவுரத்தை 1:10 வீதம் சேர்க்க வேண்டும்.
ஈரப்பத அழுத்தத்தைத் தணிக்க இலைவழி ஊட்டம்: ரபி பருவ உளுந்துப் பயிரில் அதிக மகசூலைப் பெற, 2 சத பொட்டாசியம் குளோரைடு (KCl) மற்றும் 100 பி.பி.எம். போரானை, இலைவழி ஊட்டமாக மத்திய காலத்தில் அளிக்க வேண்டும்.
பயறுவகைப் பயிர்களுக்கான தழைச்சத்தை அங்ககப் பொருள்கள் மூலம் அளிக்கலாம். அதாவது, ஒரு எக்டருக்குத் தேவையான தழைச்சத்தில் பாதியை அங்ககப் பொருள்கள் மூலம் இடலாம்.
இதற்கு, 850 கிலோ மண்புழு உரம் ஏற்றதாகும். மண்ணில் கார அமிலத் தன்மை 6.0 க்கும் குறைவாக உள்ள நிலையில், சுண்ணாம்புச் சத்தை அடியுரமாக இட வேண்டும்.
களை நிர்வாகம்
களை முளைக்கு முன், விதைத்த மூன்றாம் நாளில், ஏக்கருக்கு 750 கிராம் பென்டி மெத்தலின் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து, தட்டை விசிறி நுண்குழல் பேக்பேக் அல்லது நேப்சாக் அல்லது ராக்கர் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, விதைத்த 30-35 நாளில் கைக்களை எடுக்க வேண்டும். களைக் கொல்லியைத் தெளிக்காத நிலையில், விதைத்த 20 மற்றும் 35 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
ஆள் பற்றாக்குறை இருந்தால், விதைத்த மூன்றாம் நாளில், ஏக்கருக்கு 750 கிராம் பென்டி மெத்தலினைத் தெளிக்க வேண்டும்.
தொடர்ந்து, 15 நாளில் களைகள் முளைத்து 2-3 இலைகளாக உள்ள போது, ஏக்கருக்கு 24 கிராம் இமாசிதாபயர் வீதம் தெளிக்க வேண்டும்.
அடுத்து, 20 ஆம் நாளில் ஏக்கருக்கு 20 கிராம் குயிசலோபாப் இதைல் வீதம் தெளித்து, பரந்த இலை மற்றும் புல்வகைக் களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இரண்டும் இருந்தால், ஏக்கருக்கு 24 கிராம் இமாசிதாபயர், 20 கிராம் குயிசலோபாப் இதைலைக் கலந்து, களைகள் முளைத்து 2-3 இலைகளாக உள்ள போது, அதாவது, 15-20 நாளில் தெளிக்க வேண்டும்.
விதைத்த மூன்றாம் நாள், களை முளைக்கு முன், ஏக்கருக்கு 400 கிராம் மெட்டலா குளோர் வீதம் தெளிக்க வேண்டும். தொடர்ந்து விதைத்த 40 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்ததும் மற்றும் மூன்றாம் நாளும் பாசனம் செய்தல் அவசியம். மண் மற்றும் கால நிலையைப் பொறுத்து, பத்து நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும்.
பூக்கும் போதும், பிஞ்சுகள் உருவாகும் போதும், நீர் மிகவும் அவசியம். எந்த நிலையிலும் நிலத்தில் நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சத்துக் குறைகள் (துவரை, பாசிப்பயறு, உளுந்து, தட்டைப்பயறு)
துத்தநாகம்: விதைத்த ஒரு மாதத்தில் அறிகுறிகள் தென்படும். துளிர் மற்றும் நடுப்பகுதியில் உள்ள இலைகளில் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதி வெளுத்து இருக்கும். வெளுத்த பகுதி மற்றும் இலைகளின் அடிப்பகுதியில் கரும் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும்.
இரும்பு: இலைகளில் பச்சைய அளவு குறையும். இலை நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதி வெளுத்து இருக்கும். இரும்புச் சத்துக் குறையால், புதிதாக வரும் துளிர் இலைகளும் வெளுத்து விடுவதால், தழைச்சத்துப் பற்றாக் குறையில் இருந்து பிரித்து அறிவது கடினம்.
பயிர் வினையியல்: பயிர்கள் பூக்கும் போது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகப் பயறு அதிசயத்தை, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்து இலைகளில் தெளித்தால், பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரும்; பூக்கள் உதிர்தல் குறைந்து மகசூல் கூடும்.
பயிர்ப் பாதுகாப்பு
பூச்சி மேலாண்மை: 2.5 செ.மீ. தண்டில் 20 அசுவினிகள் இருப்பது; காய்ப் புழுக்களால் 10 சதவீதக் காய்கள் பாதிக்கப்பட்டு இருப்பது; ஒரு செடியில் 5 இறகுப் பூச்சிப் புழுக்கள் இருப்பது; ஒரு செடியில் 3 புள்ளிக்காய்ப் புழுக்கள் இருப்பது பொருளாதாரச் சேத நிலையைக் குறிக்கும்.
அசுவினியைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு, மீத்தைல் டெமட்டான் 25 ஈ.சி. 500 மி.லி. அல்லது டைமெத்தயேட் 30 ஈ.சி. 500 மி.லி. வீதம் எடுத்துத் தெளிக்கலாம். காய்ப் புழுவைக் கட்டுப்படுத்த, 9 வரிசை துவரை, ஒரு வரிசை சூரியகாந்தி வீதம் விதைக்க வேண்டும்.
பச்சைக் காய்ப் புழுவைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 12 இனக் கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைக்க வேண்டும். எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் வீதம் வைக்க வேண்டும்.
புழுக்கள் மற்றும் கொப்புள வண்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். எக்டருக்கு ஹெலிக்கோ வெர்பா நச்சுயிரியை 3×10 12 வீதம் எடுத்து, 0.1, ஒட்டும் திரவத்தில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.
எக்டருக்கு 2.5 கிலோ அசாடி ராக்டின் 0.03 WSP அல்லது 2.5 லிட்டர் பென்பூயூ ரோகார்ப் 40% EC. அல்லது 150 மி.லி. குளோர் ஆன்டரனி லிப்ரோல் 18.5% SC. அல்லது 1250 மி.லி. குளோர் பைரிபாஸ் 20% EC.
அல்லது 220 கிராம் ஏமாமெக்டின் பென்சோயேட் 5% SG. அல்லது ஒரு லிட்டர் எதியான் 50% EC. அல்லது 100 மி.லி. ப்ளுபென்டமைடு 39.95% SC. அல்லது 350 மி.லி. இன்டாக்சாகார்ப் 14.5% SC.
அல்லது 600 மி.லி. லுபனுயூரான் 5.4% EC. அல்லது 750 கிராம் மீதோமைல் 40% SP. அல்லது 625-1250 மி.லி. மோனோ குரோட்டோபாஸ் 36% SL.
அல்லது 1400 மி.லி. குயினால்பாஸ் 25% EC. அல்லது 125 மி.லி. ஸ்பைனோசேட் 45% EC. அல்லது 625 கிராம் தயோடிகார்ப் 75% WP. அல்லது 2% வேப்ப எண்ணெய்க் கரைசல்.
காய் நாவாய்ப் பூச்சியைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. டைமெத்தயேட் 30% EC. அல்லது 500 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25% EC. மருந்தைத் தெளிக்கலாம்.
நோய் மேலாண்மை: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது 4 கிராம் கார்பென்டாசிம் அல்லது 4 கிராம் திரம் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
புசோயூரியம் ஆக்ஸிஸ் போரம் வகை யுடும் புசேரி ப்யூசோ என்னும் வாடல் நோய் மற்றும் ரைசோக்டோனியா படாடிகோலா மாக்ரோ போமினா பாசியோலினா என்னும் வேரழுகல் நோயை, உயிரியல் முறையில் கட்டுப்படுத்த,
எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது 2.5 கிலோ டிரைக்கோ டெர்மா ஆஸ்பரிலம் வீதம் எடுத்து, நன்கு மட்கிய 50 கிலோ தொழுவுரம் அல்லது மணலில் கலந்து, விதைத்த 30 நாட்கள் கழித்து இட வேண்டும்.
இரசாயன முறையில் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட இடத்தில், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்த கரைசலை ஊற்ற வேண்டும்.
மலட்டுத் தேமல் நோய்: அசிரியா கஜானி என்னும் நச்சுயிரியால் இந்நோய் வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்ற வேண்டும்.
நோயின் அறிகுறி தெரிந்ததும், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. பினாசாகுயின் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இருவாரம் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.
நூற்புழு மேலாண்மை: ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் மற்றும் 5 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி வீதம் கலந்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
அறுவடை
காய்கள் 80% முதிர்ந்ததும் செடிகளை அறுவடை செய்ய வேண்டும். 2-3 நாட்களுக்குக் குவியலாக வைக்க வேண்டும். பிறகு, உலர்த்தி விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.
சேமிப்பு
விதைகளை 10 சத ஈரப்பதம் வரும் வரை காய வைக்க வேண்டும். வண்டுகள் தாக்காமல் இருக்க, 100 கிலோ விதைக்கு ஒரு கிலோ வேப்ப எண்ணெய் அல்லது ஊக்குவிக்கப்பட்ட களிமண் வீதம் கலந்து சேமிக்க வேண்டும்.
இதுவரை கூறியுள்ள முறைகளைக் கையாண்டு, கோ.8 துவரையை விவசாயப் பெருமக்கள் பயிரிட்டால், அதிக விளைச்சல் மற்றும் வருவாயைப் பெறலாம்.
முனைவர் ஆ.தங்கஹேமாவதி, பயறுவகைத் துறை, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம். கோயம்புத்தூர் 641 003.
சந்தேகமா? கேளுங்கள்!