இயற்கை முறையில் நெல் சாகுபடி!

நெல் NEL

மிழ்நாட்டில் நெல் சாகுபடி மிக முக்கியமானது. நமது நாட்டில் மட்டும் அல்லாது, உலகளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய உணவுப் பொருளாக நெல் உள்ளது.

பூச்சிக்கொல்லி இல்லாத, தரமான சத்து மிகுந்த நெல்லை உற்பத்தி செய்வதற்கு இயற்கை விவசாயம் வாய்ப்பாக இருக்கிறது.

இம்முறையில் உற்பத்தி செய்யப்படும் நெல்லின் தரம் உயர்தல், சந்தையில் கூடுதல் விலை கிடைத்தல், உற்பத்திச் செலவு குறைதல், மண்வளம் பெருகுதல் போன்ற காரணங்களால்,

இப்போது இயற்கை முறை நெல் சாகுபடிக்கு அதிக முன்னுரிமை தரப்படுகிறது.

இயற்கை வழி நெல் சாகுபடியில், செயற்கை உரங்களை, பூச்சிக்கொல்லி மருந்துகளை இடாமல், இயற்கை சார்ந்த உரங்கள் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை மட்டுமே கையாள வேண்டும்.

இயற்கை வேளாண் உத்திகள்

இயற்கை வேளாண்மையில் தரமான சன்ன இரகங்களான வெள்ளைப் பொன்னி, ஆடுதுறை 43, 45, 49, கோ 51 மற்றும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள இரகங்களைப் பயிரிட்டால், நல்ல மகசூலும் கூடுதல் விலையும் கிடைக்கும்.

இதற்கு, இயற்கை சாகுபடியில் விளைந்த விதைகளைத் தான் பயன்படுத்த வேண்டும். விதை நேர்த்தியில் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து விட்டு, உயிர் உரங்கள் மற்றும் தாவரம் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 20 கிராம் அசோஸ் பைரில்லம், 10 கிராம் பாஸ்போ பாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், இளம் பயிரின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, மண் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும்.

நாற்றங்கால் தயாரிக்க, ஒரு சென்ட்டுக்கு 100 கிலோ தொழுவுரம், 50 கிலோ மண்புழு உரம் மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும்.

நடவு வயலில் கடைசி உழவின் போது, ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் வீதம் இட வேண்டும். அல்லது நடவுக்கு முன்பு பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப் பூண்டு, சணப்பை, கொளுஞ்சியை இட வேண்டும்.

இதற்கு, நெல் நடவுக்கு 45 நாட்கள் இருக்கும் போதே, ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் வீதம் விதைத்துப் பசுந்தாள் பயிரை வளர்க்க வேண்டும். இதனால், சுமார் 10 டன் பசுந்தாள் உரம் கிடைப்பதன் மூலம், 50-80 கிலோ தழைச்சத்துக் கிடைக்கும்.

பண்ணையில் காணப்படும் வேம்பு, புங்கன், கிளைரிசிடியா, செஸ்பானியா மற்றும் சூபாபுல் தழைகளையும் வயலில் இட்டு மிதித்து விடலாம்.

பசுந்தாள் உரப்பயிர்களை வளர்க்க முடியா விட்டால், ஏக்கருக்கு 5 டன் மண்புழு உரத்தைப் போடலாம்.

சூடோமோனாஸ் உயிர்ப் பூசணக் கொல்லியை, ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து, 20 கிலோ தொழுவுரத்தில் கலந்து, நடுவதற்கு முன் வயலில் இட வேண்டும்.

நடவு வயலில் அசோஸ் பைரில்லம் பத்துப் பொட்டலம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா பத்துப் பொட்டலம் எடுத்து, 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும்.

அசோலா உயிர் உரத்தை, ஏக்கருக்கு 100 கிலோ வீதம், நடவு செய்த 3-5 நாட்களில் இட்டால், இருபது நாளில் இந்த அசோலா நன்கு வளர்ந்து விடும்.

அப்போது, இந்த அசோலாவை, கோனோவீடர் மூலம் நன்கு அமுக்கி விட்டால், வயலுக்குத் தழைச்சத்து உரம் கிடைக்கும்.

களைக் கருவிகளான கோனோவீடர் அல்லது ரோட்டரி கருவியைக் கொண்டு, நடவு செய்த 15 நாளில் இருந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை களையெடுக்க வேண்டும்.

இதனால் களைகள் குறையும்; மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும்; பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும். ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கை, பயிர்கள் தூர் கட்டும் பருவத்தில் மேலுரமாக இட வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

இயற்கை நெல் சாகுபடியில், பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் ஒரு சவாலாகும். ஆனாலும், இரசாயனப் பூச்சிக்கொல்லி அல்லாத ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைத் தொடக்கத்தில் இருந்து ஒழுங்காகச் செய்தால், பூச்சி மற்றும் நோய்களை வெகுவாகக் கட்டுப் படுத்தலாம்.

கோடையுழவு செய்தால், மண்ணில் இருக்கும் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் அழியும். வரப்பில் உள்ள களைகளை அகற்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சரியான முறையில் பாசனம் வசதி செய்வதுடன், தகுந்த வடிகால் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். தழைச்சத்தை அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் எண்ணிக்கையைக் கண்காணித்து, இவற்றை, இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் விளக்குப் பொறிகளை வைத்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும், இயற்கையில் கிடைக்கும் தாவர வகைப் பூச்சி விரட்டிகள் மற்றும் உயிரியல் பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்த வேண்டும்.

பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம், பால், தயிர், நெய்யைக் கொண்டு தயாரிக்கும் பஞ்சகவ்யாவை, மூன்று சதக் கரைசலாகத் தெளிக்கலாம்.

இக்கரைசல் பயிர் வளர்ச்சி ஊக்கியாக, பூச்சி விரட்டியாகச் செயல்படும். குருத்துப் புழுக்களைக் கட்டுப்படுத்த, ஐந்து சத வேப்பங் கொட்டைச் சாறு கரைசலைத் தெளிக்கலாம்.

இலைச்சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, டிரைக்கோ டெர்மா ஜப்பானிக்கம் என்னும் ஒட்டுண்ணி அட்டையை, ஏக்கருக்கு 2 சி.சி. வீதம், ஒருவார இடைவெளியில் மூன்று முறை கட்ட வேண்டும்.
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்னும் உயிரியல் காரணியை, ஏக்கருக்கு 400 கிராம் வீதம் தெளிக்க வேண்டும்.

தத்துப்பூச்சி மற்றும் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, சரியான அளவில் தழைச் சத்தை இட வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலுமாகப் பாசனம் செய்தல் வேண்டும்.

ஐந்து சத வேப்பங் கொட்டைச் சாறு கரைசல் அல்லது 2 சத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

குலை நோயைத் தடுக்க, வரப்பிலுள்ள களைகளை அகற்ற வேண்டும். தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. குலைநோய்க்கு எதிர்ப்புள்ள கோ.47 நெல்லை சாகுபடி செய்ய வேண்டும்.

சூடோமோனாஸ் 0.2 சதக் கரைசலை, நடவு செய்த 45 ஆம் நாள் முதல், 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

இலையுறை அழுகல், இலையுறைக் கருகல், பாக்டீரியா இலைக்கருகல் ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்த, சூடோமோனாஸ் 0.2 சதவீதக் கரைசலை, நடவு செய்த 45 நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

ஐந்து சத வேப்பங் கொட்டைக் கரைசல் அல்லது 2 சத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

வேப்பம் புண்ணாக்கை, ஏக்கருக்கு 50 கிலோ வீதம் இட வேண்டும். இருபது சதப் பசு சாணக் கரைசலை, நோய் தென்படும் போது, 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

இயற்கை வேளாண்மையில் நெல் சாகுபடி செய்யும் போது, தொடக்கத்தில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

ஆனால், தொடர்ந்து இயற்கை முறையில் சாகுபடி செய்தால் மண்வளம் மேம்பட்டு மகசூல் அதிகமாகும்.

மேலும், உற்பத்திச் செலவு குறைந்து நிகர இலாபம் கூடும்; சுற்றுச்சூழலும் காக்கப்படும்.


நெல் DR.P.MURUGAN

முனைவர் பெ.முருகன், உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading