கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014
தோட்டக்கலைப் பயிர்களில் கொடிவகைக் காய்கறிப் பயிர்களான, பாகற்காய், புடலங்காய், பீர்க்கன் காய்ப் பயிர்களைப் பயிரிட்டு அதிக இலாபம் பெறலாம். இவ்வகைக் காய்களில் நீர்ச்சத்து அதிகளவில் உள்ளது. குறிப்பாக 100 கிராம் பீர்க்கன் காயில் 95.2 கிராமும், 100 கிராம் புடலையில் 94.6 கிராமும், 100 கிராம் பாகற்காயில் 92.4 கிராமும் நீர்ச்சத்து உள்ளது. மேலும், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப்புகளும், பீட்டா கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம் போன்ற உயிர்ச் சத்துகளும் அடங்கியுள்ளன.
வளர்ச்சிக் காலத்தில் இந்தப் பயிர்களை நோய்கள் தாக்குகின்றன. இதனால், மகசூல் குறைவதுடன் இலாபமும் குறைகிறது. எனவே, இந்தப் பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
அடிச் சாம்பல் நோய்
அறிகுறிகள்: முதலில் இளம் பச்சை நிறப் பகுதிகளுடன் கரும் பச்சை நிறப் பகுதிகள் இலையின் மேற்புறத்தில் தோன்றும். ஈரமான காலத்தில், கீழ்ப் பகுதியிலும் மங்கிய ஊதா நிறப் பூசண வளர்ச்சி காணப்படும், பிறகு, இலைகள் காய்ந்து விடும்.
கட்டுப்படுத்துதல்: செடிக்குச் செடி போதுமான அளவு இடைவெளி இருக்க வேண்டும். நீர் நன்கு வடியக் கூடிய மற்றும் காற்றோட்டமான நிலமாக இருக்க வேண்டும். இந்த நோய் தாக்கினால், மேங்கோசெப் 0.2 சதம் அல்லது குளோரோ தேலோனில் 0.2 சதம் அல்லது டைபோலடான் 0.2 சதம் அல்லது பைடோனில் 0.2 சதக் கரைசலை, பத்து நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய்
அறிகுறிகள்: வறண்ட நிலைகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படும். வெள்ளை அல்லது பழுப்புநிற மாவு வளர்ச்சி இலைகளில் தோன்றும், பிறகு, தண்டுகளிலும் காணப்படும். தீவிரத் தாக்குதலின் போது, செடிகள் பலவீனமாகி, குட்டையான வளர்ச்சியுடன் காணப்படும். பூக்கள் மற்றும் காய்ப்பிடிப்புக் குறைந்து காணப்படும்.
கட்டுப்படுத்துதல்: ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி டைநோகாமர் அல்லது 0.5 கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். தாமிரம் மற்றும் கந்தகத் தூளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தேமல் நோய்
அறிகுறிகள்: இந்த நோய் வந்தால் புதிய இலைகள் கிண்ணம் போன்று வளைந்திருக்கும். மேலும், இலைகளில் தீவிரத் தேமலும், பச்சை மற்றும் கரும் பச்சை நிறத் திட்டுகளும் மாறி மாறிக் காணப்படும். செடிகள் குட்டையான வளர்ச்சியுடன் தோன்றும்.
கட்டுப்படுத்துதல்: இது, அசுவினி மூலம் பரவும் நோய் என்பதால், இப்பூச்சியின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, ஒரு லிட்டர் நீருக்கு 0.5 மில்லி இமிடகுளோபிரிட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
முனைவர் காயத்ரி சுப்பையா, முனைவர் பா.குமாரவேல்,வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுர மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!