தற்போது தமிழகத்தில் விவசாயம் செய்யப்படும் சுமார் 5.58 மில்லியன் எக்டர் நிலத்தில், பாதிக்கும் மேற்பட்ட நிலம், அதாவது, சுமார் 2.31 மில்லியன் எக்டர் நிலம், தரிசு நிலமாக அல்லது வானம் பார்த்த மானாவாரி நிலமாகவே உள்ளது.
குறைந்த அல்லது நீர் ஆதாரம் இல்லாத, வளம் குறைந்த மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம், உழவர் பெருமக்கள் ஆண்டு முழுவதும் நிரந்தர வருவாய் பெற முடியாமல் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
எனவே, நிரந்தர வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களின் துயர்களைத் துடைத்து, வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, வரும் 12 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்த நேரத்தில், ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றியும், அதைச் செயல்படுத்தும் விதம் பற்றியும், குறிப்பாக, மானாவாரி மற்றும் தரிசு நிலங்களுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றியும் நன்கு அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது, விவசாயத்தில், ஒரு பண்ணைத் தொழிலை மட்டும் செய்யாமல், ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பண்ணைத் தொழில்களைச் சேர்த்துச் செய்வதாகும்.
இதன் சிறப்பு, ஒரு பண்ணைத் தொழிலின் கழிவுப் பொருள், மற்றொரு பண்ணைத் தொழிலுக்கு இடுபொருளாக மாறும். இதனால், குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கும் நீர் வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி, ஆண்டு முழுவதும் நல்ல வருவாயைப் பெற முடியும்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில், கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் அதிகளவில் உள்ளன.
வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பை முக்கியமாகக் கொண்டுள்ள நம் நாட்டில், நூறு கோடி டன்னுக்கும் மேலான, விலங்கின மற்றும் தாவரக் கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கின்றன.
இவ்வகையில், விவசாயிகளின் நிலப்பரப்பு, பாசன வசதி, வடிகால் வசதி மற்றும் பொருளாதார நிலைகளை ஆராய்ந்து, பல்வேறு மானாவாரி அல்லது தரிசுப் பகுதிக்கான ஒருங்கிணைந்த பண்ணைய மாதிரிகள் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளன.
தானியப் பயிர்களுடன் ஆடு வளர்ப்பு: இங்கே, ஊடுபயிர் முறையில் தீவன மரங்கள் வளர்ப்பு, பழ மரங்களுக்கு இடையில் தீவனப் புற்கள் உற்பத்தி ஆகியன கவனத்தில் கொள்ளத் தக்கவை.
தீவன மரங்களுடன் ஆடு வளர்ப்பு மற்றும் பழ மரங்களுடன் கூடிய வேளாண் காடுகள் போன்றவை, மானாவாரி மற்றும் தரிசு நிலங்களுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணைய முறையாகும்.
மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் கால்நடை வளர்ப்பு மிகுந்த பயனைத் தரும். அதிலும், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு, எருமை மாடு வளர்ப்பு போன்றவை மிகுந்த இலாபத்தைத் தரும்.
நமது நாட்டில் வீட்டுக்கு ஒன்று அல்லது சில என்னும் நிலையை மாற்றி, கால்நடைப் பண்ணையை, இலாபம் தரும் தொழிலாகச் செய்யத் தொடங்கி உள்ளனர் என்பது பெருமைக்கு உரிய செய்தியாகும்.
இது, மக்களுக்குத் தேவைப்படும் விலங்கினப் புரதத் தேவையைச் சரி செய்வதுடன், விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறை மேம்பட உதவுகிறது.
பெருகி வரும் மக்கள் தொகை, நவீனமயம், தொழிற் சாலைகள், குடியிருப்பு ஆக்கிரமிப்பு ஆகியவற்றால், கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் மற்றும் இயற்கையான மேய்ச்சல் நிலங்கள், நாளுக்கு நாள் குறையத் தொடங்கி உள்ளன.
இந்நிலையால், ஏற்கெனவே நாட்டில் நிலவும் தீவனப்பற்றாக் குறை மேலும் உயர்ந்து உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
நமது நாட்டில் ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உற்பத்தித் திறன் இல்லாததற்கு மிக முக்கியக் காரணம், தீவனப் பற்றாக்குறை இருப்பதும், முறையான தீவன நிர்வாகம் இல்லாததும் தான்.
மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் செம்மறியாடு வளர்ப்பு, சிறந்த இலாபம் தரும் தொழிலாகும்.
இந்த நிலங்களில் பயிர் வளர்ப்புடன் மரவகைத் தீவனப் பயிர்களாகிய சூபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காய்ப் புளி, வேம்பு, வாகை, அகத்தி, சித்தகத்தி, ஆச்சான், உதியன், பூவரசு, கல்யாண முருங்கை போன்ற மர வகைகளைத் திட்டமிட்டு நட்டு வளர்க்கலாம்.
இவற்றின் தழை மற்றும் காய்களில் புரதமும் தாதுப்புகளும் நிறைவாக உள்ளன. மற்ற தீவனங்களில் உள்ளதை விட, மரத் தழைகளில் சத்துகள் நிறைய உள்ளன.
மேலும், மரவகைத் தீவனங்களுடன், தானியவகை அல்லது புல்வகைத் தீவனப் பயிர்களைக் கலந்து ஆடுகளுக்கு அளிப்பதன் மூலம், அடர் தீவனச் செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனைப் பெருக்கலாம்.
மானாவாரிக்கு ஏற்ற சோளம் மற்றும் முயல் மசால் உற்பத்தி: மானாவாரியில் தானிய உற்பத்திக்காகச் சோளம், கம்பு போன்ற பயிர்களை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்கிறோம்.
இப்பயிர்கள் அறுவடை முடிந்த பிறகு, அந்த நிலம் பயிரில்லாத நிலமாகக் கிடக்கிறது. இதற்குப் பதிலாக, சோளம், கம்பு போன்ற பயிர்களுடன், ஏக்கருக்கு 5.5 கிலோ வீதம் முயல் மசால் விதைகளை விதைத்து விடலாம்.
இதில், சோளப்பயிர் மிக விரைவாக வளரும். முயல் மசால் அதைவிடக் குறைவான வளர்ச்சியுடன் இருக்கும். இந்நிலையில், சோளப்பயிர் அறுவடை முடிந்ததும், வெய்யில் நேரடியாகக் கிடைப்பதால் முயல் மசால் நன்கு செழித்து வளரும்.
இப்பயிரை நன்கு முற்றவிட்டு அறுவடை செய்தால், கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனம் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.
மேலும், முயல் மசால் விதைகள் அந்த நிலத்திலேயே விழுந்து கிடக்கும். அவை, அடுத்தாண்டு மழையில் நிலத்தை உழுது சோளத்தைப் பயிரிடும் போது, நன்கு முளைத்து வளர்ந்து பசுந்தீவனத்தைத் தரும்.
இம்முறையில், ஒருமுறை விதைத்த முயல் மசால் 2-3 ஆண்டுகள் வரை மீண்டும் மீண்டும் வளர்ந்து பசுந்தீவனத்தை அளிக்கும். அத்துடன், முயல் மசால் மூலம் மண்ணில் நிறுத்தப்பட்ட தழைச்சத்தால், சோள மகசூல் கூடும்.
மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற மர ஊடுபயிர் முறை: மானாவாரி நிலங்களில் தீவன மரங்களை, குறிப்பிட்ட இடைவெளியில் கிழக்கு மேற்காக நீளவாக்கில் நெருக்கமான ஊடுபயிராக வளர்த்து, அவற்றுக்கு இடையில் பயிரிடுவதை மர ஊடுபயிர் சாகுபடி என்கிறோம்.
இது மட்டுமின்றி, மானாவாரி நிலங்களில் மண்ணரிப்பைத் தடுத்து, ஈரத்தைக் காக்கும் வகையில், உயிர் வரப்புகளை அமைக்கலாம்.
மேலும், நிலத்தைச் சுற்றி முள்கம்பி வேலியை அமைப்பதற்குப் பதிலாக, கால்நடைத் தீவனம் மற்றும் விறகைத் தரும் மரங்களை நட்டு, உயிர் வேலி அமைக்கலாம்.
மானாவாரியில் வேம்புடன் செம்மறியாடு வளர்ப்பு: மானாவாரியில் 5 மீட்டர் இடைவெளியில் நடப்பட்ட வேப்ப மரங்களின் ஊடே, தீவனச் சோளத்தைப் பயிரிட்டு, எக்டருக்கு 4.2 டன் சோளத் தட்டையைப் பெறலாம்.
இந்தத் தட்டையுடன் தினமும் 150 கிராம் கலப்புத் தீவனம் மற்றும் வேப்பிலையைச் சேர்த்துத் தரலாம். இதனால், தினமும் 45 கிராம் வீதம் ஆடுகளின் எடை கூடிக்கொண்டே இருக்கும்.
கிளைரிசிடியா இலைகளையும் சேர்த்துக் கொடுத்தால், தினமும் 58 கிராம் வரை உடல் எடை கூடும்.
மானாவாரியில் பழமரங்களுடன் கூடிய வேளாண் காடுகள்: மானாவாரி எனப்படும் தரிசு நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை 2.5 ஏக்கரில் அமைத்தால், அதில், குறைந்தது 2 ஏக்கரில் தானியப் பயிர்கள் மற்றும் பழ மரங்களை வளர்க்கலாம்.
பழ மரங்களில் கொய்யா, மாதுளை, சப்போட்டாவை, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் வளர்க்கலாம்.
முல்லை மேய்ச்சல் முறையிலான வேளாண் காடுகளை, ஆடுகளின் தீவன மரங்களான சூபாபுல், கிளைரிசிடியா, கல்யாண முருங்கை மற்றும் கொழுக்கட்டைப் புல், முயல் மசால் போன்ற புல் மற்றும் பயறுவகைப் பசுந்தீவனங்கள் உள்ள வகையில் அமைக்கலாம்.
இத்தகைய முல்லை மேய்ச்சல் நிலங்களில் தெளிப்பு நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தலாம்.
மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணைய நடைமுறைச் செலவினமாக ஒரு இலட்சம் ரூபாய் வரை செலவு செய்தால், குறைந்தது 2-3 இலட்சம் ரூபாய் இலாபம் ஈட்ட இயலும்.
மானாவாரிப் பகுதியில் பண்ணைக் குட்டைகளை அமைத்து, மீன்களை, முயல்களை வளர்ப்பதன் மூலம், கூடுதலாக வருமானம் ஈட்ட முடியும்.
மானாவாரியில் சப்போட்டா, கொய்யா மரங்களுடன் பசுந்தீவனம் வளர்ப்பு: இம்முறையில் சப்போட்டா அல்லது கொய்யாத் தோப்பில் கோ.4 தீவனப் புல்லை, கொழுக்கட்டைப் புல்லை இணைத்தும்;
நிலத்தைச் சுற்றிச் சூபாபுல், கிளைரிசிடியா, அகத்தி போன்ற குறு மரங்களை வளர்த்தும்; புரதச் சத்துமிக்க கோழி மசால் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம்.
இதில், 6-12 மாதச் செம்மறி ஆடுகளை வளர்த்தால், அவற்றின் எடை தினமும் 53 கிராம் மற்றும் 44 கிராம் அளவில் கூடிக்கொண்டே இருக்கும்.
மேலும், கினியாப் புல்லை கொய்யா அல்லது சப்போட்டா மரங்களுக்கு ஊடே பயிரிட்டால், எக்டருக்கு 48 டன் பசும்புல்லும், புளியந் தோப்பில் தீவனக் கொள்ளுப் பயிரைப் பயிரிட்டால், 5-8 டன் பசுந்தீவனமும் கிடைக்கும்.
இதைப் போலவே, மானாவாரியில் மாமரங்களுக்கு இடையில், நிலக்கடலை அல்லது தீவனக் கொள்ளு அல்லது தீவனச் சோளத்தைப் பயிரிட்டதில், எக்டருக்கு 190, 207 மற்றும் 234 கிலோ அளவில் புரதச்சத்து மிக்க பசுந்தீவனம் கிடைத்தது தெரிய வந்துள்ளது.
மானாவாரியில் மாமரங்களுடன் காராமணியைப் பயிரிட்டால், எக்டருக்கு 170 கிலோ புரதச்சத்து மிக்க 3.25 டன் காராமணி தீவனப் பயிர் கிடைக்கும். இதன் மூலம் 10-12 செம்மறி ஆடுகளை ஆண்டு முழுவதும் வளர்க்கலாம்.
முனைவர் வி.சங்கீதா, முனைவர் நேதாஜி மாரியப்பன், முனைவர் மு.புனிதாவதி, வேளாண்மை அறிவியல் நிலையம், பெரம்பலூர். முனைவர் பெ.மோகனா, ஆராய்ச்சியாளர், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னை.
சந்தேகமா? கேளுங்கள்!