பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!

ஒட்டுண்ணி HP 18a25db4463930d5113aca966cb1b8f0

பூச்சிகளை அழிக்கும் ஒட்டுண்ணிகள் என்பவை, ஊண் வழங்கி அல்லது விருந்தோம்பி என்னும் வேறொரு பூச்சியின் உடலின் மேல் அல்லது உடலுக்குள் பாதுகாப்பாக வாழும்; அந்த உடலின் பாகங்களை உண்டு, முடிவில் அதைக் கொல்லும்.

இந்த ஒட்டுண்ணிகள் தமது வாழ்விடமாக விளங்கும் பூச்சிகளின் வெவ்வேறு வளர்ச்சிப் பருவங்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றின் மேல் முட்டைகளை ஒட்ட வைத்து விடும்.

இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள், பூச்சிப் பீடைகளைத் தாக்கி, அவற்றை உண்டு அழித்து விடும்.

எண்பது சத ஒட்டுண்ணிகள், ஹைமெனோப்டிரா, டிப்டிரா ஆகிய வரிசைகளில் உள்ளன. அவை, குளவி இன ஒட்டுண்ணிகள், ஈ இன ஒட்டுண்ணிகள் எனப்படும்.

ஒட்டுண்ணிகள் பெரும்பாலும் உருவத்தில் சிறியதாக இருக்கும். சில ஒட்டுண்ணிகளை உருப்பெருக்கி மூலம் தான் பார்க்க முடியும்.

ஒட்டுண்ணிகளுக்கு, முட்டை, புழு, கூண்டுப்புழு, வளர்ந்த பூச்சி என நான்கு வளர்ச்சிப் பருவங்கள் உண்டு. இவற்றில், புழுப் பருவம் மட்டுமே பூச்சிகளைத் தாக்கி அழிக்கக் கூடியது.

நன்கு வளர்ந்த பூச்சிகள், பூக்களின் தேன், மகரந்தப் பொடி ஆகியவற்றை உண்டு வாழும்.

முட்டை ஒட்டுண்ணிகள், முட்டை- புழு ஒட்டுண்ணிகள், புழு ஒட்டுண்ணிகள், கூண்டுப்புழு ஒட்டுண்ணிகள் என ஒட்டுண்ணிகள் நான்கு வகைப்படும்.

பெரும்பாலும் பூச்சிகளின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிப் பருவத்தில் மட்டும் தாக்கும் ஒட்டுண்ணி, வேறொரு வளர்ச்சிப் பருவத்தில் அதைத் தாக்குவதில்லை.

ஒட்டுண்ணி, தான் தாக்கும் பூச்சியின் வளர்ச்சிப் பருவத்தில் அதன் உடலின் மேற்பரப்பில் அல்லது திசுக்களில், தனது கொடுக்குப் போன்ற முட்டையிடும் கருவி மூலம் முட்டைகளை இடும்.

அவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள், அந்தப் பூச்சியின் திசுக்களை உண்டு, அதை அழித்து விடும்.

இப்படி, தாக்கப்பட்ட பூச்சியின் உடலுக்குள் வாழ்க்கையை முடிக்கும் ஒட்டுண்ணிகள், உள் ஒட்டுண்ணிகள் என்றும், பூச்சியின் மேற்பரப்பில் இருந்து கொண்டு, அதை அழிக்கும் ஒட்டுண்ணிகள் வெளி ஒட்டுண்ணிகள் என்றும் அழைக்கப்படும்.

தாக்கப்பட்ட பூச்சியில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் பூச்சி மட்டும் வெளி வந்தால், அது தனித்து வாழும் ஒட்டுண்ணி (Solitary parasitoid) எனப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகள் வெளி வந்தால், அவை இணைந்து வாழும் ஒட்டுண்ணி (Gregarious parasitoid) எனப்படும்.

ஓட்டுண்ணிகள் தமது உணர் கொம்புகளின் நுகர்வு மற்றும் தொடு உணர்வு; முட்டையிடும் கருவியின் உணர்வு; தாம் தாக்கும் பூச்சிகளின் உமிழ்நீர் மற்றும் கழிவின் வாசனை ஆகியவற்றின் மூலம், அப்பூச்சிகளை அடைந்து, அவற்றின் மேல் முட்டைகளை இடும்.

முட்டை ஒட்டுண்ணிகள்

முட்டை ஒட்டுண்ணிகளில் டிரைக்கோ கிரம்மா, டெலினோமஸ், டெட்ராஸ் டைக்கஸ் போன்ற இனங்களைச் சேர்ந்த பூச்சிகள் முக்கியமானவை.

டிரைக்கோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணிகள் என்பவை, ஹைமெனோப்டிரா வரிசையில், டிரைக்கோ கிரம்மாட்டிடியே குடும்பத்தைச் சேர்ந்த குளவியைப் போன்ற சிறிய பூச்சிகள்.

இவை சுமார் 0.5 மி.மீ. அளவில், பழுப்பு நிறத்தில், சிறிய இறக்கைகளுடன் இருக்கும். இவற்றின் வாழ்க்கை சுமார் ஏழு நாட்களில் மட்டைக்குள் முடிந்து விடுவதால், குறுகிய காலத்தில் பல தலைமுறைகள் தோன்றக் கூடும்.

டிரைக்கோ கிரம்மா ஒட்டுண்ணிகள், கரும்பைத் தாக்கும் இளம் குருத்துப் புழு மற்றும் இடைக்கணுப் புழு; பருத்திக் காய்ப்புழு; நெல் மற்றும் சோளத்தைத் தாக்கும் தண்டுத் துளைப்பான்;

கத்தரி, தக்காளியைத் தாக்கும் காய்த் துளைப்பான் உள்ளிட்ட அனேகப் பூச்சிகளின் மட்டைகளைத் தாக்கி அழிக்கும்.

கரும்பு இடைக்கணுப் புழுவைக் கட்டுப்படுத்த, நட்ட நான்காம் மாதத்தில் இருந்து ஆறு முறை, 15 நாள் இடைவெளியில், ஒவ்வொரு முறையும் ஏக்கருக்கு 16,000- 18,000 ஒட்டுண்ணிகள் வீதம் விட வேண்டும்.

டெலினோமஸ் மற்றும் டெட்ராஸ் டைக்கஸ் முட்டை ஒட்டுண்ணிகள், நெல், கரும்பு, பயறு, பருத்தி போன்ற பயிர்களைத் தாக்கும் தண்டுத் துளைப்பான் பூச்சிகளின் முட்டைகளைத் தாக்கி அழிக்கும். இவை பெரும்பாலான நிலங்களில் ஓரளவு இயற்கையாகவே இருக்கும்.

முட்டை- புழு ஒட்டுண்ணிகள்

இவை, முதலில் முட்டைகளைத் தாக்கும். பிறகு, முட்டைகளில் இருந்து புழுக்கள் வெளிவரும் போது அவற்றையும் தாக்கி அழிக்கும்.

பிரக்கானிடியே குடும்பத்தைச் சேர்ந்த கிலோனஸ் பிளாக்பர்னி (Chelonus blackburni) என்னும் ஒட்டுண்ணி, பருத்தியைத் தாக்கும் புள்ளிக் காய்ப்புழு, பருத்தி இளம் சிவப்புக் காய்ப்புழு, உருளைக் கிழங்கு துளைப்பான் ஆகியவற்றின் முட்டைகள் மற்றும் புழுக்களை அழிக்கும்.

இந்த ஒட்டுண்ணி சற்றுப் பெரியதாக, கறுப்பு நிறத்தில், வயிற்றுப் பகுதியில் மஞ்சள் நிறப் பட்டைகளுடன் இருக்கும்.

ஏக்கருக்கு 16,000 ஒட்டுண்ணிகள் வீதம், 15 நாட்களுக்கு ஒருமுறை, பூச்சிகளின் நடமாட்டம் தெரிந்ததும் வெளியிட வேண்டும்.

புழு ஒட்டுண்ணிகள்

இவை, பூச்சிகளின் புழுப் பருவத்தை மட்டுமே தாக்கி அழிக்கும். இவற்றில், பிரக்கானிட், பெத்திலிட், சால்சிட், இக்நியூமோனிட் போன்ற குளவி இரக ஒட்டுண்ணிகள், டாக்கினிட் என்னும் ஈக்கள் இரக ஒட்டுண்ணிகள் முக்கியமானவை.

பிரக்கானிட்: இந்த ஒட்டுண்ணியின் உடல் மிகவும் மென்மையானது. பழுப்பு நிறத்தில், சிவப்பு எறும்பைப் போல இருக்கும். இதன் வாழக்கைச் சுழல் 10-14 நாட்கள் ஆகும்.

இந்த ஒட்டுண்ணிகள் தாக்கும் பூச்சிகளின் நடமாட்டம் தெரியும் போது, இவற்றை ஏக்கருக்கு 1800- 2000 வீதம், 15 நாட்களுக்கு ஒருமுறை விட வேண்டும்.

இவை, பருத்தியைத் தாக்கும் புள்ளிக் காய்ப்புழு, இளஞ் சிவப்புக் காய்ப்புழு, பச்சைக் காய்ப்புழு, புரோட்டீனியா புழு, நிலக்கடலை இலைச் சுருட்டுப் புழு,

தென்னைக் கருந்தலைப் புழு, நெல், கரும்பு, சோளம் மற்றும் காய்கறிப் பயிர்களைத் தாக்கும் துளைப்பான்களைப் புழுப் பருவத்தில் தாக்கி அழிக்கும்.

பெத்தலிட்: இந்த ஒட்டுண்ணி சிறிய எறும்பைப் போல, கறுப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும்.

இது, நிலக்கடலை இலைச் சுருட்டுப் புழு, காவடிப்புழு, பருத்தி பச்சைக் காய்ப்புழு, புரோட்டீனியா புழு மற்றும் தென்னைக் கருந்தலைப் புழுவைக் கட்டுப்படுத்தும்.

தென்னைக் கருந்தலைப் புழுவைக் கட்டுப்படுத்த, மரம் ஒன்றுக்குப் பத்து வீதம் கூண்டுப்புழு ஒட்டுண்ணிகளைச் சேர்த்து விட வேண்டும்.

சால்சிட்: இந்த ஒட்டுண்ணி மிகவும் சிறியது. இதன் வயிற்றுப் பகுதி வளைவாக இருக்கும். பின்னங் கால்களின் தொடைப்பகுதி தடித்து இருக்கும்.

முட்டையிடும் கருவி நேராகவும், நீளமாகவும் இருக்கும். லெப்பிடோப்டிரா, டிப்டிரா, கோலியோப்டிரா வரிசைகளைச் சேர்ந்த பூச்சிகளின் புழுக்களைத் தாக்கி அழிக்கும்.

இக்நியூமோனிட்: இந்த ஒட்டுண்ணி சற்றுப் பெரிதாக இருக்கும். உணர் கொம்புகள், கால்கள், முட்டையிடும் மற்றும் கொட்டும் கருவி ஆகியன, நன்கு உருப்பெற்று நீளமாக இருக்கும்.

செடிகளின் திசுக்களில் இருந்து கொண்டு சேதம் செய்யும் தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு, இலை மடக்குப்புழு ஆகியவற்றைத் தாக்கி அழிக்கும்.

தனது உறுதியான முட்டையிடும் கருவி மூலம், பயிரின் மேற்புறத்தைத் துளைத்து, உட்புறத்தில் மறைந்திருக்கும் புழுக்களின் மேல் முட்டைகளை இடும்.

இவற்றின் வாழ்க்கைக் காலம் 18-23 நாட்களாகும். தென்னைக் கருந்தலைப் புழு, கரும்பு நுனிக் குருத்துப் புழு ஆகியவற்றை நன்கு கட்டுப்படுத்தும்.

டாக்கினிட்: இந்த ஒட்டுண்ணிகள் தனித்து வாழும். ஒரு ஊண் வழங்கிப் புழுவில் ஒரு ஒட்டுண்ணி மட்டுமே இருக்கும். சற்றுப் பெரிதாக இருக்கும் இது, வேகமாகப் பறக்கும்.

இதன் வாழ்க்கைக் காலம் 18-24 நாட்கள். இந்த ஒட்டுண்ணி முட்டைகள், தாய்ப் பூச்சியின் வயிற்றிலேயே பொரிந்து இளம் புழுக்கள் வெளிவரும்.

இந்தப் புழுக்கள், சற்று ஊர்ந்து செல்லும் நிலைக்கு வந்ததும், தாய்ப்பூச்சி அவற்றை, ஊண் வழங்கிப் புழுக்கள் இருக்கும் செடிக்கு அருகில் வைத்து விடும்.

உடனே, ஒட்டுண்ணிப் புழு ஊர்ந்து சென்று, ஊண் வழங்கிப் புழுவை அடைந்து, அதைத் தாக்கி, உட்சென்று, திசுக்களை உண்டு வளரும்.

முழுதாக வளர்ந்ததும் வெளியில் வந்து, ஊண் வழங்கிப் புழுவின் மேல் சிவப்பு நிறத்தில், சிறிய விதை போன்ற கூண்டுப் புழுவாக மாறும்.

இந்தப் பிரிவில் ஸ்டர்மியாப்சிஸ் ஒட்டுண்ணி முக்கியமானது. ஏக்கருக்கு 5 பெண் ஈக்கள் வீதம், 15 நாள் இடைவெளியில் விட வேண்டும். கரும்பு இளங் குருத்துப் புழுவை இது நன்கு கட்டுப் படுத்தும்.

முக்கியப் புழு ஒட்டுண்ணிகளும் தாக்கப்படும் பூச்சிகளும்

ஹைமேனோப்படிரர் வரிசையில், குடும்பம்: பிரக்கானிடியே குடும்பத்தைச் சேர்ந்த பிராக்கான் பிரவிகார்னிஸ் புழு ஒட்டுண்ணி, தென்னைக் கருந்தலைப் புழுக்களைத் தாக்கும்.

பிரக்கான் கிரீனி என்னும் புழு ஒட்டுண்ணி, கத்தரித் தண்டு மற்றும் காய்த் துளைப்பான்களைத் தாக்கும்.

பிரக்கான் ஹெபெட்டர் ஒட்டுண்ணி, ஆமணக்குத் தண்டுத் துளைப்பானைத் தாகும்.

பிரக்கான் ஒட்டுண்ணி இனங்கள், நெல் குருத்துப் புழுக்களைத் தாக்கும்.

கிலோனஸ் இனங்கள், நெல் குருத்துப்புழு, கரும்பு நுனிக் குருத்துப் புழு, புரோட்டீனியா புழுக்களைத் தாக்கும்.

இக்நியூமோனிடியே குடும்பத்தைச் சேர்ந்த ஐசோடோமியா ஜாவன்சிஸ் ஒட்டுண்ணி, நெல் குருத்துப் புழு, கரும்பு நுனிக் குருத்துப் புழுவைத் தாக்கும்.

எரிபோரஸ் ட்ரோகான்டரேட்டஸ் ஒட்டுண்ணி, தென்னைக் கருந்தலைப் புழுக்களைத் தாக்கும்.

கூண்டுப்புழு ஒட்டுண்ணிகள்

இவை, யூலோ்பிட் மற்றும் இக்நியூமோனிட் பிரிவைச் சேர்ந்தவை. இவை புரோட்டீனியா புழு, பருத்தியைத் தாக்கும் அமெரிக்கன் காய்ப்புழு, ஆமணக்குக் காய்ப்புழு, தென்னைக் கருந்தலைப் புழு,

புடல், பருத்தி, நெல் போன்ற பயிர்களைத் தாக்கும் இலை மடக்குப்புழு ஆகியவற்றின் கூண்டுப் புழுக்களைத் தாக்கி அழிக்கும். ஒரு கூண்டுப் புழுவிலிருந்து 30-50 ஒட்டுண்ணிகள் வெளிவரும்.

முக்கியக் கூண்டுப்புழு ஒட்டுண்ணிகளும், தாக்கப்படும் பூச்சிகளும்

யூலோ்பிடியே குடும்பத்தைச் சேர்ந்த டெட்ராஸ்ட டைக்கஸ் அய்யாரி (Tetrastichus ayyari) என்னும் கூண்டுப்புழு ஒட்டுண்ணி,

கரும்பில் இளங் குருத்துப் புழு, இடைக்கணுப் புழு, நுனிக் குருத்துப் புழு மற்றும் சோளத் தண்டுத் துளைப்பான் ஆகியவற்றைத் தாக்கும்.

டீரைக்கோஸ் பைலஸ் பியூப்பிவோரா (Trichospilus pupivora) என்னும் கூண்டுப்புழு ஒட்டுண்ணி, தென்னைக் கருந்தலைப் புழுக்களைத் தாக்கும்.

இக் நியூமோனிடியே குடும்பத்தை சேர்ந்த, ஐசோட்டிமா ஜாவன்சிஸ்(Isotima javensis) என்னும் கூண்டுப்புழு ஒட்டுண்ணி,

கரும்பில் இளம் குருத்துப் புழு, இடைக்கணுப் புழு, நுனிக் குருத்துப் புழு ஆகியவற்றைத் தாக்கும்.


ஒட்டுண்ணி DR.K.GOVINDHAN

கு.கோவிந்தன், சி.சிவக்குமார், பி.சி.பிரபு, ப.பரசுராமன், மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி – 635 112.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading