My page - topic 1, topic 2, topic 3

தரிசு நிலத்தில் மூங்கில் வளர்ப்பு!

ண்ணையும் மனிதனையும் மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைப்பவை மரங்கள்.

இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும்;

சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும்.

தரிசு நிலங்களில் மூங்கில், சவுக்கு, முள்ளில்லா மூங்கில், குமிழ், கருவேல், வேம்பு, இலவம், தீக்குச்சி மரம், புளிய மரம், முந்திரி, சவுண்டல் போன்ற மரங்கள் நன்கு வளரும்.

இவற்றில், மூங்கில் மரம் மற்ற மரங்களை விட வேகமாக வளரும். நடவு செய்த நாளில் இருந்து 4-5 ஆண்டுகளில் பலனுக்கு வந்து விடும்.

குறைந்த முதலீடு போதும். சாதாரண நிலத்திலும் நன்றாக வளரும். மண்ணரிப்பைத் தடுக்கும். வேளாண் காடுகளுக்கு ஏற்ற மரம். மூங்கிலின் எல்லாப் பாகங்களுமே பயன் மிக்கவை.

இதைப் பயிரிட, பருவமழை பெய்வதற்கு முன் நிலத்தை நன்றாக உழ வேண்டும்.

பிறகு, குழிக்குக் குழி மற்றும் வரிசைக்கு வரிசை 5 மீட்டர் அல்லது 6 மீட்டர் இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும்.

குழியின் நீளம், அகலம், ஆழம் ஒரு அடி இருக்க வேண்டும்.

அடுத்து, குழிக்கு 10 கிலோ தொழுவுரம், 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 50 கிராம் வேம், 25 கிராம் அசோஸ் பயிரில்லம், 50 கிராம் டிஏபி, 50 கிராம் பொட்டாசு வீதம் கலந்து நிரப்ப வேண்டும்.

மழை பெய்து குழிகள் நன்றாக நனைந்ததும், மூங்கில் நாற்றுகளை நட வேண்டும்.

மூங்கில் நாற்றுகள் வளரத் தொடங்கியதும், ஆண்டுதோறும் குழிக்கு, 15 கிலோ தொழுவுரம், 100 கிராம் டிஏபி, 50 கிராம் பொட்டாஷ் வீதம் எடுத்துத் தூரைச் சுற்றி இட வேண்டும்.

இதனால், நிறையப் போத்துகளுடன் நன்கு வளரும். மூங்கில் தூர்களை முதல் ஆண்டிலிருந்தே பராமரிக்க வேண்டும்.

சரியாகப் பராமரிப்பு இருந்தால், கழிகள் நேராக வளர்ந்து நமக்கு அதிகமான இலாபத்தைத் தரும்.

பக்கக் கிளைகளை, வளைந்த கிளைகளை அகற்றி விட வேண்டும்.

மண்ணரிப்பு ஏற்படும் பகுதிகளில், தூர்களில் மண்ணை அணைத்தால், அதிகமான கழிகள் உண்டாகும்.

மேலும், முதல் ஆண்டில் மூன்று முறையும் இரண்டாம் ஆண்டில் இரண்டு முறையும் களைகளை அகற்ற வேண்டும்.

இப்படி, மூங்கில் வளர்ப்பில் சரியான கவனத்தைச் செலுத்தினால், மூன்று ஆண்டுக்குப் பிறகு அறுவடை செய்யத் தொடங்கலாம்.

3-4 ஆம் ஆண்டில், ஒரு தூரிலிருந்து 5-6 கழிகளை, 7-8 ஆம் ஆண்டில் ஒரு தூரிலிருந்து 8-10 கழிகளை, 10 ஆம் ஆண்டில் ஒரு தூரிலிருந்து 15 கழிகள் வீதம் அறுவடை செய்யலாம்.


முனைவர் பெ.முருகன், இணைப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், கள்ளக்குறிச்சி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks