பயறு வகைகளில் புதிய இரகங்களும் அவற்றின் சிறப்புகளும்!

பயறு வகை HP 79e7a895107a419d7a180f057af3003f

க்களுக்குத் தேவையான புரதம், பயறு வகைகளில் இருந்தே பெருமளவில் கிடைக்கிறது. ஆனால், நமது நாட்டில் பயறு வகைகள் உற்பத்தி, மக்களின் தேவையை ஈடு செய்யும் அளவில் இல்லை.

எனவே, தேவையான பயறு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக நமது நாட்டின் உற்பத்தி, நம் மக்களின் தேவையைச் சரி செய்யும் அளவில் உயர்ந்துள்ளது.

எனவே, பயறு வகைகள் இறக்குமதி குறைந்துள்ளது. இதற்குக் காரணம், அதிக மகசூலைத் தரும் இரகங்கள் மற்றும் நோயெதிர்ப்பு மிக்க புதிய இரகங்களை விவசாயிகள் பயிரிடுவது தான்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில், பயறு வகைகளில் புதிய இரகங்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் 1900 ஆம் ஆண்டுக்குப் பிறகே அதிகமானது.

மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவுப் பயிர்களின் உற்பத்தியும் பெருக வேண்டிய தேவை ஏற்பட்டது.

முதலில், கூட்டுத் தேர்வு முறையில் புதிய இரகங்கள் உருவாக்கப் பட்டன.

ஆனால், அவற்றின் உற்பத்தித் திறன் நிலையாக இல்லாததால், பயிர்களின் மகரந்தச் சேர்க்கை முறைக்கேற்ப, பயிர் இனப்பெருக்க முறைகளைத் தேர்வு செய்து புதிய இரகங்கள் உருவாக்கப் பட்டன.

குறிப்பாக, பெரும்பாலான பயறு வகைகள், தன் மகரந்தச் சேர்க்கைப் பயிர்களாக இருப்பதால், தொடக்கத்தில் தூய வரிசைத் தேர்வு முறை பின்பற்றப்பட்டது.

தானியப் பயிர்களுக்கு அடுத்தபடியாக, 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகே பயறு வகைகளில் புதிய இரகங்கள் வெளியிடப் பட்டன.

தற்போது சூழ்நிலை மற்றும் பருவத்துக்கு ஏற்ற புதிய இரகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

பெரும்பாலான பயறு வகைகளின் பிறப்பிடம் நமது நாடே என்பதாலும், தன் மகரந்தச் சேர்க்கைப் பயிர்களாக இருப்பதாலும், தொடக்கக் காலத்தில் இயல்பான வேறுபாடுகளைப் பயன்படுத்தி, தூயவழித் தேர்வு முறை மூலம், இரகங்கள் வெளியிடப்பட்டன.

அடுத்து, 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சடுதி மாற்றம் மற்றும் இனக்கலப்பு முறையில் இரகங்கள் வெளியிடப்பட்டன.

இனக்கலப்பு முறையில், சிறந்த பண்புகளைக் கொண்ட இரண்டு இரகங்களைக் கலப்புச் செய்து,

அவற்றின் பண்புகளை மறு சேர்க்கையின் மூலம் ஒன்று சேர்த்து, சிறந்த செடிகளை ஒவ்வொரு தலைமுறையிலும் தேர்வு செய்து, புதிய இரகங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த இனப்பெருக்க முறைக்குப் பரம்பரை சார்ந்த இனப்பெருக்க முறை (Pedigree method of breeding) என்று பெயர்.

பெரும்பாலான இரகங்கள் இந்த முறையில் உருவாக்கப் பட்டவை தான்.

தமிழகத்தில், உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் தட்டைப் பயற்றில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் பின்பற்றிய, பயிர் இனப்பெருக்க முறைகளையும், வெளியிட்ட இரகங்களையும் இங்கே காண்போம்.

தமிழகத்தில் பயறுவகை இனப்பெருக்கத் துறையின், துவரைக்கான ஆராய்ச்சி, அப்போது துவரை அதிகமாக விளைந்த சேலம் மாவட்டத்தில், சேலம் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

1952 இல் வெளியிடப்பட்ட சேலம் 1 என்னும் இரகம் தான் முதன் முதலில் வெளியிடப்பட்ட துவரை இரகம்.

இது, 180 நாட்கள் வயதுள்ள நீண்ட கால இரகம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சாகுபடியில் பிரபலமாக இருந்த இரகம்.

அடுத்து, கோவையில் நடைபெற்ற ஆராய்ச்சி மூலம், 120 நாட்கள் வயதுள்ள கோ.1 என்னும் குறுகிய காலத் துவரை இரகம் வெளியிடப் பட்டது.

பிறகு, 1979 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில், பயறு வகைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் மூலம் தொடங்கப் பட்டது.

இதைப்போல, கோவை ஆராய்ச்சி நிலையம், பாசிப்பயறுக்கான முன்னோடி ஆராய்ச்சி நிலையமாக விளங்குகிறது.

இங்கிருந்து தான் கோ.1 என்னும் பாசிப்பயறு இரகம் முதன் முதலாக 1952 ஆம் ஆண்டில் வெளியானது. இது, கோயம்புத்தூர் உள்ளூர் இரகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.

இதுவே அதிக வயதுள்ள (135 நாட்கள்) இரகமாகும். ஆடுதுறையில் இருந்து நெல் தரிசுக்கு ஏற்ற ஆடுதுறை 1 என்னும் இரகம் 1966 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

இது, ஆடுதுறை உள்ளூர் இரகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வம்பனில் இதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன.

பல்லாண்டுகள் வளரக்கூடிய பி.எஸ்.ஆர் 1 என்னும் பட்டாணித் துவரை இரகம், 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

உளுந்து ஆராய்ச்சிக்கான முன்னோடி நிலையமாக, ஆடுதுறை ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

ஏனெனில், அப்போதைய தஞ்சாவூர் மாவட்டமாக விளங்கிய, தற்போதைய தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில், நெல் தரிசில் உளுந்து சாகுபடி என்பது, மிக முக்கியப் பயிராக இருந்துள்ளது.

தமிழகத்தில் இன்றளவும் இந்த மாவட்டங்களில் தான் பெருவாரியாக உளுந்து பயிரிடப்படுகிறது.

ஆடுதுறை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தான் ஆடுதுறை 1 என்னும் முதல் உளுந்து இரகம் 1965 ஆண்டில் வெளியிடப் பட்டது. இது, ஆடுதுறை உள்ளூர் இரகத்தில் இருந்து உருவாக்கப் பட்டது.

இதற்கடுத்து, அதிகமான ஆராய்ச்சிகள் கோவை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டன.

தட்டைப் பயறுக்கான ஆராய்ச்சி, 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் கோவையில் தொடங்கப்பட்டது.

அதன் பயனாக இங்கிருந்து 1970 ஆம் ஆண்டில் கோ.1 என்னும் முதல் தட்டைப்பயறு இரகம் வெளியிடப் பட்டது. இதன் வயது 135 நாட்கள்.

அடுத்தபடியாக வம்பன் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நிறைய இரகங்கள் இருந்தாலும், பருவத்துக்கு ஏற்ற, அதிக மகசூலைத் தரும் இரகங்களை அறிந்து பயிரிடுவதற்கு, அவற்றைப் பற்றிய தகவல்கள் மிக மிக அவசியம்.

எனவே, கடந்த பத்து ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இரகங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகளை இப்போது பார்க்கலாம்.

உளுந்து: கோ.6

வெளியிட்ட ஆண்டு 2010. பெற்றோர், டி.யு.xவி.பி.20. வயது: 60-65 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி.

விளைச்சல் எக்டருக்கு 773 கிலோ. ஒன்று போல் முதிரும். தீர்மானமான வளர்ச்சி. காய்கள் வெடிக்காது. மஞ்சள் தேமல் நோயை மிதமாக எதிர்க்கும்.

வம்பன் 6

வெளியிட்ட ஆண்டு 2011. பெற்றோர், வம்பன்1 x விக்னா முங்கோவர் சில்வஸ்டிரிஸ். வயது: 65-70 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி, தை, மாசி, சித்திரை.

விளைச்சல் மானாவாரியில் எக்டருக்கு 850 கிலோ, இறவையில் 890 கிலோ, சராசரி எக்டருக்கு 871 கிலோ.

ஒன்று போல் முதிரும். தீர்மானமான வளர்ச்சி. காய்கள் வெடிக்காது. மஞ்சள் தேமல் நோயை எதிர்க்கும் தன்மை மற்றும் காய்ப்புழுவை மிதமாக எதிர்க்கும் தன்மை.

எம்.டி.யு.1

வெளியிட்ட ஆண்டு 2014. பெற்றோர், ஏ.பி.டி.2003 x வி.பி.ஜி.66. வயது: 75 நாட்கள். பட்டம்: புரட்டாசி.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 900 கிலோ. ஒன்று போல் முதிரும். தீர்மானமான வளர்ச்சி. காய்கள் வெடிக்காது. மஞ்சள் தேமல் நோயை மிதமாக எதிர்க்கும். அதிக மாவு கிடைக்கும்.

வம்பன் 8

வெளியிட்ட ஆண்டு 2016. பெற்றோர், வம்பன்3 x வி.பி.ஜி. 04-008. வயது: 70-75 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி, தை, மாசி, சித்திரை.

விளைச்சல், மானாவாரியில் எக்டருக்கு 988 கிலோ, இறவையில் 871 கிலோ, சராசரி 790 கிலோ.

ஒன்று போல் முதிரும். தீர்மானமான வளர்ச்சி. காய்கள் வெடிக்காது. மஞ்சள் தேமல் நோயை எதிர்க்கும். இலைச் சுருட்டு நோய், சாம்பல் நோயை மிதமாக எதிர்க்கும். அதிக மாவுக்கட்டு இருக்கும்.

ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பயிரிடலாம்.

வம்பன் 10

வெளியிட்ட ஆண்டு 2019. பெற்றோர், வம்பன்1 x யு.எச்.04-04. வயது: 70-76 நாட்கள். பட்டம்: புரட்டாசி.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 1130 கிலோ. ஒன்று போல் முதிரும். தீர்மானமான வளர்ச்சி. காய்கள் வெடிக்காது.

மஞ்சள் தேமல் நோயை எதிர்க்கும். இலைச் சுருட்டு நோய், சாம்பல் நோயை மிதமாக எதிர்க்கும். அதிக மாவுக்கட்டு இருக்கும்.

ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகத்தில் புரட்டாசிப் பட்டத்தில் பயிரிடலாம்.

வம்பன் 11

வெளியிட்ட ஆண்டு 2020. பெற்றோர், பி.யு.31 x கோ.6. வயது: 70-75 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி, தை, மாசி, சித்திரை.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 891 கிலோ. ஒன்று போல் முதிரும். தீர்மானமான வளர்ச்சி. காய்கள் வெடிக்காது.

மஞ்சள் தேமல் நோயை எதிர்க்கும். இலைச் சுருட்டு நோய், சாம்பல் நோயை மிதமாக எதிர்க்கும். அதிக மாவு கிடைக்கும்.

கா.7

வெளியிட்ட ஆண்டு 2021. பெற்றோர், வம்பன்5 x விக்னா முங்கோ வர் சில்வர்டிரிஸ் 22/10. வயது: 70-75 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 880 கிலோ. ஒன்று போல் முதிரும். தீர்மானமான வளர்ச்சி, காய்கள் வெடிக்காது.

மஞ்சள் தேமல் நோயை எதிர்க்கும். இலைச் சுருட்டு நோய், சாம்பல் நோயை மிதமாக எதிர்க்கும். புரதம் 22.3 சதம் இருக்கும். விதை எடை அதிகம்.

பாசிப்பயறு: கோ.7

வெளியிட்ட ஆண்டு 2006. பெற்றோர், எம்.ஜி.ஜி 336 x கோ.ஜி.ஜி 902. வயது: 60-65 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 837 கிலோ. ஒன்று போல் முதிரும். தீர்மானமான வளர்ச்சி, காய்கள் வெடிக்காது.

மஞ்சள் தேமல் நோயை மிதமாக எதிர்க்கும். காய்கள் நன்றாகத் தெரியும் செடி அமைப்பு.

கோ.8

வெளியிட்ட ஆண்டு 2013. பெற்றோர், கோ.ஜி.ஜி 923, ஒவி.சி.6040எ. வயது: 55-60 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 845 கிலோ. மிகக் குறைந்த வயது. ஒரே சீராக முதிரும். தீர்மானமான வளர்ச்சி.

மஞ்சள் தேமல் நோயை மிதமாக எதிர்க்கும். அசுவினி, மாவுப் பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் தன்மை கொண்டது.

மக்காச்சோளம், துவரையில் சொட்டுநீர்ப் பாசனத்தில் ஊடுபயிராகப் பயிரிட ஏற்றது.

வம்பன் 4

வெளியிட்ட ஆண்டு 2019. பெற்றோர், பி.டீ.எம். 139 x பீ.பீ. 2664. வயது: 65-70 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி, மார்கழி, தை, சித்திரை.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 1024 கிலோ. அதிக விளைச்சல் தரும். பலமுறை பூக்கும்.

மஞ்சள் தேமல் நோய், இலைச் சுருட்டு நோய், சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் தன்மை கொண்டது.

திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறில் அதிகப்பட்ச மகசூலாக 2,710 கிலோ கிடைத்தது. புரதம் 23.5 சதம்.

வம்பன் 5

வெளியிட்ட ஆண்டு 2022. பெற்றோர், வம்பன் 2 x எம்.எல். 1451. வயது: 65-70 நாட்கள்.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 878 கிலோ. சிவகங்கை மாவட்டம், நட்டரசன் கோட்டையில் அதிகளவு மகசூல் 1,189 கிலோ எடுக்கப் பட்டது.

அதிக மகசூல் கிடைக்கும். பலமுறை பூக்கும். காய்கள் வெடிக்காது.

மஞ்சள் தேமல் மற்றும் இலைச்சுருள் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. புரதச்சத்து 22.85 சதம். மிகச் சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டது.

துவரை: வம்பன் 3

வெளியிட்ட ஆண்டு 2004. பெற்றோர், வம்பன் 1 x குல்பர்கா. வயது: 110-120 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி, மாசி.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 1,300 கிலோ. அதிக விளைச்சல் கிடைக்கும். மலட்டுத் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் மிக்கது. காய்ப்புழுவை மிதமாக எதிர்க்கும்.

கோ.8

வெளியிட்ட ஆண்டு 2017. பெற்றோர், ஏ.பி.கே.1 x எல்.ஆர்.ஜி.51. வயது: 170-180 நாட்கள். பட்டம்: ஆடி.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 1,600 கிலோ. அதிக விளைச்சல் கிடைக்கும். மலட்டுத் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் மிக்கது. காய் ஈ, காய்ப் புழுவை மிதமாக எதிர்க்கும்.

தட்டைப்பயறு: கோ (சிபி)7

வெளியிட்ட ஆண்டு 2002. பெற்றோர், கோ.4 இன் சடுதி மாற்றம். வயது: 70-75 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி.

விளைச்சல் மானாவாரியில் எக்டருக்கு 1,600 கிலோ, சராசரி மகசூல் 1,000 கிலோ. அதிக விளைச்சல் கிடைக்கும். தீர்மானமான செடி வளர்ச்சி. அதிகப் புரதம்.

வம்பன் 3

வெளியிட்ட ஆண்டு 2018. பெற்றோர், டி.எல்.எஸ் 38 x வி.சி.பி. 16-1. வயது: 75-80 நாட்கள். பட்டம்: ஆடி, புரட்டாசி.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 1,013 கிலோ. அதிக விளைச்சல் கிடைக்கும். தீர்மானமான செடி வளர்ச்சி. புரதம் 25.22 சதம். பல நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கு, காய்த் துளைப்பானுக்கு எதிர்ப்புத் தன்மை.

கொள்ளு: பையூர் 2

பெற்றோர், கோ.1 இன் சடுதி மாற்றம். வயது: 105-110 நாட்கள்.

விளைச்சல் எக்டருக்குச் சராசரியாக 870 கிலோ. அதிக விளைச்சல். பழுப்பு நிற விதைகள். அதிக எடை.

எனவே, விவசாயப் பெருமக்கள், இங்கே கூறியுள்ள பயிர்கள் மற்றும் அவற்றின் தற்போதைய இரகங்களில், தங்கள் பகுதிக்கேற்ற பயிர்கள் மற்றும் இரகங்களைப் பயிரிட்டால் நல்ல பலனைப் பெறலாம்.


பயறு வகை DR.P.SHANTHI

முனைவர் .சாந்தி, முனைவர் கே.நெல்சன் நவமணிராஜ், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை.

முனைவர் ம.உமாதேவி, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை, கோயம்புத்தூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading