My page - topic 1, topic 2, topic 3

குண்டுமல்லி சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர்.

குண்டுமல்லி, முல்லை, ஜாதிமல்லி ஆகிய மலர்கள் அதிக வாசனையைத் தரக்கூடியவை. மேலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் மலர்களுமாகும். பெண்களால் விரும்பிச் சூடப்படும் மலர்களாக மட்டுமின்றி, அனைத்து விசேஷங்களுக்கும் தேவைப்படும் மலர்களாகவும் உள்ளன. மல்லிகையில், அனைத்துக் காலங்களிலும் பூக்கும் சிறப்பு குண்டுமல்லிக்கு மட்டுமே உள்ளது; அதிக இலாபத்தைத் தரக்கூடிய மலராகவும் உள்ளது. இந்தக் குண்டுமல்லி சாகுபடியைப் பற்றி இங்கே காணலாம்.

தமிழகத்தில் மலர் சாகுபடியில், மணம் வீசும் குண்டுமல்லி முக்கிய இடம் வகிக்கிறது. செடி நடவு, பராமரிப்பு, அறுவடை எளிதாக இருப்பதால் மல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். விளைச்சல் அதிகமாகும் போதும், விளைச்சலில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் திருமண முகூர்த்த நாட்களில், ஒரு கிலோ 1000 ரூபாய் வரை விற்க வாய்ப்பு உள்ளது. குண்டுமல்லி விவசாயிகள் தினமும் வருவாயைப் பெறலாம்.

குண்டுமல்லி இரகங்கள்

ஓரடுக்கு, ஈரடுக்கு, இருவாச்சி, இராமநாதபுரம் உள்ளூர் இரகங்களான அர்க்கா, ஆராதனை.

மண் மற்றும் தட்ப வெட்பநிலை

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றது. களர் உவர் நிலம் சாகுபடிக்கு ஏற்றதல்ல. மண்ணின் அமில காரத்தன்மை 6-8 இருக்க வேண்டும். குண்டுமல்லி அதிக மழையைத் தாங்கி வளரும் வெப்ப மண்டலப் பயிராகும்.

பருவம்

ஜூன் மற்றும் நவம்பர் மாதம் செடி நடவுக்கு ஏற்ற காலமாகும். எக்டருக்கு 6,400 செடிகள் தேவைப்படும். குண்டுமல்லிச் செடிகளைப் பதியம் மூலம் உற்பத்தி செய்யலாம். குண்டுமல்லிச் செடிகள், வேர்விட்ட குச்சிகள் மற்றும் பதிய முறையில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2-3 முறை நன்கு உழ வேண்டும். பிறகு, 30 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளை, வரிசைக்கு வரிசை 1.25 மீட்டர் இடைவெளியில் தோண்ட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் நன்கு மட்கிய உரம் 20 கிலோவை இட்டு, குழிகளின் மத்தியில் செடிகளை நட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும்.

சத்து மேலாண்மை

மல்லிகைச் செடிக்கு 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து, 120 கிராம் சாம்பல் சத்தைத் தரக்கூடிய இரசாயன உரங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து இட வேண்டும். கவாத்து செய்த பிறகு ஒரு முறையும், ஜூன், ஜூலை மாதத்தில் இன்னொரு முறையும் செடிகளைச் சுற்றிப் போட்டு மண்ணுடன் கலந்துவிட வேண்டும்.

கவாத்து செய்தல்

தரை மட்டத்தில் இருந்து 50 செ.மீ. உயரத்தில் நவம்பர் மாத இறுதியில் கவாத்து செய்ய வேண்டும். நோயுள்ள, உலர்ந்த குச்சிகள் மற்றும் வளர்ந்த கிளைகளை வெட்டி, செடி முழுவதும் சூரிய ஒளி நன்கு படும்படி செய்ய வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

சிலந்திப் பூச்சிகள்: இவை, இலைகளைக் கடித்துச் சேதப்படுத்தும். இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 0.2 சத நனையும் கந்தகக் கரைசலைச் செடிகளில் தெளிக்க வேண்டும்.

நூற்புழுக்கள்: மண் மாதிரி எடுத்து, நூற்புழுக்களின் தாக்குதலைக் கண்காணிக்க வேண்டும். நோயுற்ற செடிகளின் இலைகள், வெளிர் மஞ்சளாக மாறி, பிறகு கருகி விடும். இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 10 கிராம் டேபிள் குருணை மருந்தை, வேருக்கு அருகில் இட்டு, நீரைப் பாய்ச்ச வேண்டும்.

இலைகள் மஞ்சள் நிறமாதல்: இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாகவும், வேரழுகல் மற்றும் வேர்ப்புழு தாக்குதலாலும், இலைகள் மஞ்சளாக மாறுகின்றன. இதைத் தடுக்க, ஒரு லிட்டர் நீரில், 5 கிராம் பெரஸ் சல்பேட் கரைசலை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

வேரழுகல்: இந்நோயின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, 0.25 சத காப்பர் ஆக்சி குளோரைடு கரைசலை, செடிகளைச் சுற்றியுள்ள மண்ணில் ஊற்ற வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தில், குண்டுமல்லியைப் பயிரிட்டால், இந்நோய் வராமல் தடுக்கலாம்.

அறுவடை

மல்லிகைச் செடிகள், நடவு செய்த முதல் ஆண்டில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூக்கத் தொடங்கும். அடுத்த ஆண்டில் சீரான உற்பத்தி இருக்கும். காலை முதல் நன்கு வளர்ந்த மொட்டுகளை அறுவடை செய்ய வேண்டும்.


முனைவர் இரா.பூர்ணியம்மாள், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி மாவட்டம். முனைவர் கி.ஆனந்தி, வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks